பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, சர்வதேச எரிசக்தி அமைப்பு மற்றும் கடல் எரிசக்தி அமைப்பு ஆகியவற்றில் அமல்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இணைந்ததை அங்கீகரித்தது. இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த பூமி அறிவியல் கழகம் மற்றும் தேசிய கடல்சார் நிலையம் ஆகியவை அதிகாரபூர்வ அமைப்புகளாக இருக்கும். மத்திய பூமி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இது செயல்படும்.
சர்வதேச எரிசக்தி அமைப்பில் உறுப்பினராவதன் மூலம், இந்தியா உலகெங்கும் உள்ள ஆராய்ச்சிக்கான சிறந்த தொழில்நுட்பங்களால் பயனடையும். இந்தியாவின் மாதிரிகளை சர்வதேச தரத்தின்படி சோதனை செய்ய முடியும். சர்வதேச கல்வி நிலையங்களோடு, கூட்டு சோதனைகளில் இந்தியா ஈடுபடும். இந்தியாவின் ஆராய்ச்சித் திட்டங்கள் இதர நாடுகளோடு சேர்ந்து பரிசோதனை செய்யப்படும்.
பின்னணி :
இந்தியாவின் நீண்ட கடற்கரை மற்றும் மின்சக்தி பற்றாக்குறை, கடல்சார் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஆராய வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. கடல்களின் பன்முகத்தன்மை, கடல்சார் எரிசக்தியை எடுப்பதில் பல சவால்களை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் பார்வையில், கடல்சார் எரிசக்தி கருவிகள் (அலை, சுழல் மற்றும் இழுவை) ஆகியவற்றை வணிக மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டியுள்ளது. வெப்பமண்டல நாடுகளில் கடல் வெப்பம் அதிகமாக உள்ளது. இதனால், கடல் வெப்பத்தை மின்சக்தியாக மாற்றுவது இந்தியா போன்ற நாடுகளுக்கு பெரும் வகையில் பயனளிக்கும். தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிலையம், பூமி அறிவியல் அமைச்சகத்தின் கீழ், கடல் எரிசக்தி மற்றும் கடல்நீரை குடிநீராக மாற்றுவது குறித்து ஆராய்ந்து வருகிறது.
சர்வதேச எரிசக்தி அமைப்பு, 29 உறுப்பு நாடுகளுக்கு மாற்று எரிசக்தி மேம்பாடு, எரிசக்தி கொள்கை மற்றும் சர்வதேச எரிசக்தி தொழில்நுட்பம் ஆகியற்றை வழங்குவதோடு, கொள்கை வகுப்பதிலும் உதவுகிறது. 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கடல் எரிசக்தி அமைப்பு பல்வேறு நாடுகளின் கூட்டுறவோடு, சர்வதேச எரிசக்தி அமைப்பின் வரையறையின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பில் உறுப்பினராகும் இந்தியாவின் முடிவு, ஆராய்ச்சி மேம்பாடு, வளர்ச்சி, மற்றும் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றில் உதவும். மேலும் பல்வேறு வகையான கடல் எரிசக்தியை உருவாக்கவும், கடல் நீரை குடிநீராக மாற்றவும், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கு இது உதவும்.