Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-இத்தாலி தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-இத்தாலி தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


 

மாண்புமிகு இத்தாலிப் பிரதமர் பேராசிரியர் கிஸிப்பே கான்ட்டே, எனது அமைச்சரவை சகா டாக்டர் ஹர்ஷ்வர்தன், இந்த தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள இத்தாலி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பெரியோர்கள், தாய்மார்கள் அனைவருக்கும்

வாழ்த்துக்கள், வணக்கம்.

இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கு இத்தாலியிலிருந்து வருகை புரிந்துள்ள நமது விருந்தினர்களுக்கு குறிப்பாக, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இது 24-வது தொழில்நுட்ப உச்சிமாநாடு ஆகும்.  மதிப்புமிகு பிரதமர் பேராசிரியர் கான்ட்டே-யுடன் இந்த உச்சிமாநாட்டின் பங்களிப்பு நாடு என்ற முறையில், இத்தாலியின் பங்கேற்பு நமக்கு மிகுந்த பெருமிதம் தரும் விஷயமாகும்.

இந்த நிகழ்வுக்கு முன் பிரதமர், பேராசிரியர் கான்ட்டே-யுடனான எனது சந்திப்பின்போது, நாங்கள் விரிவாக உரையாடியிருக்கிறோம். இந்தியாவுடனான உறவுகளுக்கு அவரின் ஆர்வம் மற்றும் உறுதிப்பாடு எனது தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. 

இந்தியா-இத்தாலி இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டதன் 70-வது ஆண்டு இது என்பதும் நமக்கு முக்கியமானதாகும். மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலான ஒத்துழைப்பில் 40 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதன் மூலம், சாதனை நிகழ்த்தியுள்ள ஆண்டாகவும் இது இருக்கிறது. இதனால், பிரதமர் பேராசிரியர் கான்ட்டே-யின் இந்தியப் பயணம், இந்த சமயத்தில் வாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நண்பர்களே,

தொழில்நுட்பம் என்பது அனைத்து நிலைகளிலும் பரவலாக இருக்கின்ற சகாப்தத்தில் நாம் இருக்கிறோம். அது இல்லாமல் வாழ்வது, கற்பனை செய்ய இயலாதது. ஏதாவது ஒரு வகையில், ஏறத்தாழ ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இன்று தொழில்நுட்பத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், தொழில்நுட்பத் துறையில் விரைவான மாற்றம் நடைபெற்று வருகிறது.  இதனுடைய வேகம், விண்கல்லின் வேகத்தைப் போல் இருக்கிறது. சமூகத்தின் கடைசி மனிதருக்கும் தொழில்நுட்பத்தின் பயன்கள் கிடைக்கின்றன.  புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. மாறிவரும் தொழில்நுட்பம் காரணமாக, அனைத்து நாடுகளுக்கு முன்னாலும் சவால்கள் நிறைந்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை. இருப்பினும், இது புதிய வாய்ப்புகளுக்கான பல கதவுகளையும் திறந்திருக்கிறது.

சமூகநீதி, அதிகாரமளித்தல், அனைவரையும் உள்ளடக்குதல், திறமையான நிர்வாகம், வெளிப்படைத் தன்மை ஆகியவற்றுக்கான ஒரு வழியாக தொழில்நுட்பத்தை இந்தியா மாற்றியிருக்கிறது. அரசின் சேவைகளை கடைசி எல்லையில் உள்ளவர்களுக்கும் கிடைக்கச் செய்வதை தொழில்நுட்பம் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறோம். குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரிவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வசதிகளை பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும். வாழ்க்கையை எளிதாக்க தொழில்நுட்பம் என்பதை முக்கியமான வழியாக நாங்கள் கருதுகிறோம்.

 

நண்பர்களே,

உலகிலேயே மிகப் பெருமளவில் ஒன்றாக நேரடி பணப்பயன் திட்டத்தை இந்தியாவில் இன்று செயல்படுத்தி வருகிறோம். அரசின் நலத்திட்டப் பயன்களை வங்கிக் கணக்குகள் மூலம் பயனாளிகள் இப்போது பெற்று வருகிறார்கள். பிறப்புச் சான்றிதழாக இருந்தாலும், முதியோர் ஓய்வூதியமாக இருந்தாலும் இணையவழியாக இப்போது பெற முடியும். 300-க்கும் அதிகமான மையங்கள் மற்றும் மாநில அரசு சேவைகள் உமாங் எனும் செயலி மூலம் ஒரே தளத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகள் தற்போது அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சுமார் 25 லட்சம் (இரண்டரை மில்லியன்) பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. நாடுமுழுவதும் உள்ள 3 லட்சத்திற்கும் அதிகமான பொதுசேவை மையங்கள் பல கிராமங்களில் இணைய சேவைகளை வழங்குகின்றன.

கடந்த நான்காண்டுகளில் இந்தியாவில் ஒரு ஜி.பி டேட்டாவின் விலை 90 சதவீதத்திற்குமேல் குறைந்துவிட்டது.  இந்தியாவில் இவ்வளவு மலிவாக டேட்டா கிடைப்பது, நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் கிடைக்கிறது என்பதை நிரூபித்துள்ளது.

நண்பர்களே,

ஐ.டி மென்பொருள் ஆளுமைகளின் அடையாளத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல இந்தியா தற்போது முன்னோக்கிச் செல்கிறது. அறிவியல் உணர்விலிருந்து தொழில்நுட்ப உணர்விற்கு இந்தியா பாய்ச்சல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

நாடுமுழுவதும் இளைஞர்களின் ஒன்றிணைப்பை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்டுள்ள அடல் கண்டுபிடிப்பு இயக்கம் நான்காவது தொழில்புரட்சியில் பலமான தூணாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களை அமைத்திருப்பதன் மூலம், எதிர்காலத்  தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்ப உணர்வு மேம்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் அனைத்து முயற்சிகளின் விளைவாக, உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) உலக புதிய கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் நாங்கள் 21-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறோம். இதுதவிர, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சுற்றுச் சூழல் பாதிப்பில்லாத தொழில்துறையைக் கொண்டிருப்பதற்கும் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்ற புதிய கண்டுபிடிப்புகளில் தரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டம் இதற்கு மிகப் பெரிய உதாரணமாகும். இத்தாலியும் அதன் வெற்றியை உணர்ந்துள்ளது.

இத்தாலியையும், உலகின் மற்ற பல நாடுகளையும் போல, இந்தியா இன்று உலகிலேயே மிகவும் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்வெளிக்குச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்வதை அவை நிரூபித்து வருகின்றன.

நண்பர்களே,

நான்காவது தொழில் புரட்சி பற்றி உலகம் விவாதித்து வரும் வேளையில், தொன்மையான நாகரீகங்களைக் கொண்ட இந்தியாவும், இத்தாலியும் இன்று அறிவியல் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு மட்டுமின்றி, சவால்களை திறமையுடன் கையாள்வதற்கும் உதவி செய்யும்.

நண்பர்களே,

உலகில் விரைவாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இன்று விளங்குகிறது. இந்தியாவின் பரந்து விரிந்த உள்நாட்டுச் சந்தை, இளைய தலைமுறை தொழில்நுட்பத்தின் மாசில்லாத் தன்மை, புதிய கண்டுபிடிப்பு  ஆகியவை உலகத்தின் வளர்ச்சியை வலுவாக கொண்டு செல்வதாக இருப்பது நிச்சயம்.

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளமான பாரம்பரியத்தை இத்தாலி கொண்டிருக்கிறது. உற்பத்தித் துறையில் மிகச் சிறந்த தரத்தில் உலகின் எண்ணத்தக்க ஒன்றாக அது இருக்கிறது. எனவே, உயர்தரமான ஆராய்ச்சியிலும், உலக சவால்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை முன்வைப்பதிலும் இந்தியாவும், இத்தாலியும் ஒன்றுபட்டு தங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.

மனிதகுல நலனுக்கும் தூய்மையான சுற்றுச் சூழலுக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் அறிவியல் தொழில்நுட்பத்தில் இருநாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இப்போது மிக முக்கியமான முன்னுரிமையாக இருப்பதற்கு இதுவே காரணம். தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இருநாடுகளின் அறிவியல் சமூகமும், வணிகத் தலைவர்களும் ஒருங்கிணைத்திருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நமது வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை பாதுகாக்க, புதுப்பிக்கவல்ல எரிசக்தி, சுற்றுச் சூழல் அறிவியல், நரம்பு மண்டல அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நாம் விரிவான ஒத்துழைப்பைக் கொண்டிருக்கிறோம். 

நண்பர்களே,

இந்த ஒத்துழைப்பின் பாதையை பலப்படுத்துவதற்கும் அப்பால், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் பயன்கள் சோதனைக் கூடங்களுக்குள் மட்டுமே நின்றுவிடாமல், இவற்றின் பயன்கள் சமூகத்தையும், பொதுமக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நமது இலக்கையும் கூட உறுதி செய்ய வேண்டும். எனவே, “அறிவியல் அனைவருக்குமானது, தொழில்நுட்பம் உள்ளூருக்கானதாக இருக்க வேண்டும்” என்று நான் எப்போதும் கூறிவருகிறேன்.

நமது வரலாற்றுப்பூர்வமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக அறிவியல் மற்றும் பாரம்பரிய ஆராய்ச்சித் திட்டத்தை (SHRI) இந்தியாவில் நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.  வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவிடங்களைப்  பாதுகாப்பதற்கும், புதுப்பிப்பதற்குமான தொழில்நுட்பம் தொடர்பாக தீர்வுகளை காண்பது இதன் நோக்கமாகும். தொழில்நுட்பம், சுற்றுலா, வரலாறு என்ற மூன்றின் கலவைதான் ஷ்ரி (SHRI) ஆகும்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதன் மூலம் வளர்ச்சியின் புதிய வேகம் உறுதி செய்யப்படும் என்று நான் நம்புகிறேன். இவை நமது இருதரப்பு உறவுகள் மேம்பாட்டிலும் முக்கியமான பங்கு வகிக்கும். இதுவே, இந்த தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் முக்கியமான அம்சமாகும்.

இருநாடுகளுக்கும் இடையே, தொழில்நுட்பப் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது, கூட்டுத் தொழில் முயற்சிகள், சந்தையை எளிதாக அணுகுதல் ஆகியவற்றிற்கு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உச்சிமாநாடு உதவும் என்று நான் நம்புகிறேன். நமது நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இது உறுதியாக முக்கியப் பங்களிப்பைச் செய்யும்.

நண்பர்களே,

இந்தியா-இத்தாலி இடையே இருதரப்பு தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டத்தின் அடுத்தகட்டத்தை இன்று அறிமுகம் செய்யும் அறிவிப்பை வெளியிடுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது, நமது தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், புதிய பொருட்களையும், முன்மாதிரிகளையும் இடையூறின்றி உருவாக்குவதற்கு உதவும். “எவ்வாறு என்பதை அறிதல்” என்பதை “எவ்வாறு என்பதைக் காட்டுதல்” என மாற்றுவது இக்காலத்தின்  தேவையாகும்.

இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை பலப்படுத்துவதற்கு பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, சி.ஈ.ஓ அமைப்பை உருவாக்க நாங்கள் ஒத்துக் கொண்டிருக்கிறோம். இத்துடன் இருநாடுகளுக்கு இடையேயான முதலீடுகளை இருவழியில் விரிவுபடுத்தி வணிகத்தை எளிதாக்குவதற்கான தடைகளைத் தாண்டுவதற்கு துரிதப் பாதை முறையை உருவாக்க பொதுக்கருத்து எட்டப்பட்டுள்ளது. 

வாழ்க்கை முறைக்கு உதவும் பொருட்களை வடிவமைப்பதில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும், இத்தாலியும் ஒப்புக் கொண்டிருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தோல் பொருட்கள், போக்குவரத்து மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

இந்த முன்னேற்றத்தோடு கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, வாழ்க்கை அறிவியல், புவி சார்ந்த ஆபத்துகள் போன்ற தெரிவு செய்யப்பட்ட துறைகளில், திறன் அடிப்படையில் இந்திய-இத்தாலிய சிறப்பு மையங்கள் அமைக்கப்படுவதற்கும் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த உயர்தரப் பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்கள், கூட்டாக செயல்படுவது மட்டுமின்றி, இந்தத் துறைகளில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதும் இவற்றின் நோக்கமாக இருக்க வேண்டும்.

நண்பர்களே,

இந்த தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் வெற்றிக்குப் பாடுபட்ட அனைத்து அமைப்பாளர்களுக்கும் நான் மனமார்ந்த பாராட்டுக்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடன் கூட்டு நாடாக இணைவதற்கு ஒப்புக் கொண்ட இத்தாலிய அரசுக்கும், நான் உண்மையிலேயே நன்றிக்குரியவனாக இருக்கிறேன். உங்கள் அனைவரின் பங்களிப்பும், பங்கேற்புமே இந்த உச்சிமாநாடு வெற்றியடைவதற்கு முக்கியமானவை ஆகும்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்புமிக்க பங்கேற்பை வழங்கியதற்காக பிரதமர், பேராசிரியர் கான்ட்டே-க்கு எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய-இத்தாலிய கூட்டுப் பங்காண்மைக்கு அவர் தமது தனிப்பட்ட ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் உறுதிப்பாட்டையும், மதிப்புமிக்க அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்.

மிக்க நன்றி.

******