Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹரியானா-வில் நடைபெற்ற ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை


சர் சோட்டு ராம் என்று நான் கூறுவேன்

அமர் ரஹே! அமர் ரஹே! என்று நீங்கள் அனைவரும் இரண்டு முறை கூற வேண்டும்

சர் சோட்டு ராம்! அமர் ரஹே! அமர் ரஹே!

சர் சோட்டு ராம்! அமர் ரஹே! அமர் ரஹே!

சர் சோட்டு ராம்! அமர் ரஹே! அமர் ரஹே!

சர் சோட்டு ராம்! அமர் ரஹே! அமர் ரஹே!

 

நாட்டின் எல்லையை பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களை உருவாக்குவதில் முன்னோடியாக உள்ள ஹரியானா மண்ணுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்; இங்கு நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு அளித்துவரும் விவசாயிகளும் உள்ளனர் மற்றும் விளையாட்டுத் துறையில் அதிக எண்ணிக்கையில் பதக்கங்களை வென்ற தலைசிறந்த வீரர்களும் உள்ளனர். நாட்டின் பெயரையும், மரியாதையையும் முன்னெடுத்துச் செல்வதில் ஹரியானா மக்களுக்கு இணையே கிடையாது.

ஹரியானா ஆளுநர் திரு.சத்யதேவ் நாராயண் ஆர்யா அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு.சவுத்ரி பிரேந்திர சிங் மற்றும் திரு.கிருஷ்ண பால் குர்ஜார் அவர்களே, ஹரியானா-வின் பிரபலமான முதல்வர் திரு.மனோகர் லால் அவர்களே, ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் திரு.சத்பால் மாலிக் அவர்களே, இந்த மண்ணின் மகனும், இமாச்சலப்பிரதேசத்தின் ஆளுநருமான திரு.ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, ஹரியானா மாநில அமைச்சரும், என்னுடன் ஏற்கனவே பணியாற்றியவருமான சகோதரர் திரு.ஓ.பி.தன்காத் அவர்களே, எம்எல்ஏ திரு.சுபாஷ் பராலா அவர்களே, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த எனது அன்பு சகோதர, சகோதரிகளே.

தீனபந்து சோட்டு ராம் அவர்களின் சிலையை உங்களிடம் ஒப்படைப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். எனக்கு இதைவிட பெரிய மகிழ்ச்சி தரக்கூடியதாக வேறு எது இருக்க முடியும்?

நண்பர்களே,

சாம்ப்லா பகுதி விவசாயிகளின் தீர்க்கதரிசியும், அவர்களின் குரலாக ஒலித்தவருமான ராஹ்பாரே ஆசம் தீனபந்து சவுத்ரி சோட்டு ராமின் மிகப்பெரும் சிலையை திறந்துவைக்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்ததை, உண்மையிலேயே மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, சவுத்ரி சோட்டு ராம் அவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நான் பார்வையிட்டேன். அருங்காட்சியகத்துடன் உள்ள ஹரியானா மாநிலத்தின் மிக உயரமான இந்த சிலை, ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள சாம்ப்லா பகுதியின் மற்றொரு அடையாளமாக மாறியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் விவசாயிகளின் தீர்க்கதரிசி சர் சோட்டு ராம் அவர்களின் உயரமான சிலையை அக்டோபர் மாதத்தில் திறந்துவைக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன். உலகின் மிகப்பெரும் சிலையை அக்டோபர் 31-ம் தேதி, அதாவது, சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தன்று திறந்துவைக்கும் வாய்ப்பை நான் பெற உள்ளேன். இரு பெரும் தலைவர்களும் விவசாயிகளாக இருந்தவர்கள்; விவசாயிகளுக்காகவும், விவசாயிகளை நாட்டுடன் இணைப்பதற்கும் பணியாற்றியவர்கள். இரண்டாவது சிறப்பம்சம் என்பது, சிலையை வடிவமைத்த திரு.சூட்டர் அவர்கள். 90 வயதைத் தாண்டிவிட்டாலும், இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதே சூட்டர் அவர்கள்தான், சர்தார் வல்லபாய் படேலின் உலகின் மிக உயரமான சிலையையும் வடிவமைத்தார். ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

காலத்துக்கு காலம், இதுபோன்ற மாபெரும் மனிதர்கள், நமது நாட்டில் பிறந்து, தங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சமூகத்துக்கு சேவையாற்றவும், நாட்டிற்கான பாதையை வழிகாட்டவும் அர்ப்பணிக்கின்றனர். அதிக அளவில் வறுமை, பற்றாக்குறை, பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகள் உள்ளன; ஆனாலும், இதுபோன்ற மனிதர்கள், ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொள்வதுடன், தங்களது வாழ்க்கையை தியாகம் செய்து, சமூகத்தை வலுப்படுத்தி வருகின்றனர். இந்த ஹரியானா மண்ணில் சவுத்ரி சோட்டு ராம் அவர்கள் பிறந்தது என்பது, நம் அனைவருக்கும் பெருமை அளிக்கக் கூடிய விஷயம்.

இந்தியாவை மறுகட்டமைப்பதில் முக்கியப் பங்குவகித்த சமூக சீ்ர்திருத்தவாதிகளில் ஒருவர் சவுத்ரி சோட்டு ராம் அவர்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், சமூகத்தில் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வலுவான குரலாக அவர் ஒலித்தார். சமூகத்தை பிளவுபடுத்திய அல்லது எந்த வகையான பாகுபாடுகளையும் ஏற்படுத்திய வலுவான சக்திகளுக்கு எதிராக துணிவுடன் போராடினார். விவசாயம், விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சிறு வணிகர்கள் எதிர்கொண்ட சவால்களை நெருங்கி அணுகியதுடன், அதனை புரிந்துகொண்டு, அந்த சவால்களுக்கு தீர்வுகாண முயற்சி மேற்கொண்டார்.

நண்பர்களே,

சோனிபட்-டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ரயில் பெட்டி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட உள்ள இந்த நாளில், சோட்டு ராம் அவர்களின் ஆத்மா மகிழ்ச்சியடையும்.

இந்தத் தொழிற்சாலை, ரூ.500 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில், ஒவ்வொரு ஆண்டும் பயணிகள் ரயில்களின் 250 பெட்டிகள் பழுதுபார்க்கப்படுவதுடன், நவீனமயமாக்கப்பட உள்ளது. இந்த ரயில் பெட்டி தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இந்த பயணிகளின் பெட்டிகளை பராமரிப்புக்காக தொலைதூரங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை முடிவுக்கு வரும். இது இந்தப் பகுதியில் ஓடும் ரயில்களில் பயணிகளுக்கான பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். பொதுமக்களும் தங்களுக்கு ஏற்ற வசதியான பெட்டிகளைப் பெறுவார்கள்.

சகோதர, சகோதரிகளே,

இந்த தொழிற்சாலையானது, சோனிபட்-டுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த ஹரியானா-வுக்கும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த உதவும். பழுதுபார்ப்பதற்கான உபகரணங்களை சிறு தொழிலதிபர்களிடம் வாங்குவார்கள். இதன்மூலம், சிறு தொழிலதிபர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் தேவை என்பது, இருக்கைகளுக்கான உறைகள், மின் விசிறிகள், மின்சார உபகரணங்கள், பெட்டிகளுக்கான மற்ற கருவிகள் ஆகியவையாக இருக்கும். இந்தப் பணிகளை மேற்கொள்ளும் புதிய வாய்ப்புகளை சிறு தொழிலதிபர்கள் பெறுவார்கள்.

இங்குள்ள பல்வேறு இளைஞர்களுக்கு இந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதை யூகித்துப் பாருங்கள். இந்த தொழிற்சாலையின் மற்றொரு பலன் என்பது – இந்த தொழிற்சாலையின் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், ரயில் பெட்டிகளை பழுதுபார்க்கும் துறையில், உள்ளூர் அளவில் நிபுணத்துவம் பெற்றவர்களை உருவாக்குவார்கள். அதாவது, பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பல்வேறு வகையான வல்லுநர்களை இங்கு உருவாக்குவார்கள். எதிர்காலத்தில், இங்கு உருவாகும் வல்லுநர்கள், தங்களது திறனை, நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் வழங்குவதன் மூலம், நாடு பயனடையும்.

நண்பர்களே,

ஹரியானாவில் பல ஆண்டுகள் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன். இங்கு கட்சிப் பணியில் நான் ஈடுபட்டிருந்தபோது, ஒவ்வொரு நாளும், சர் சோட்டு ராம் அவர்களின் பெருமைகளை யாராவது ஒருவர் மூலமாக கேட்பேன். அவரைப் பற்றி நான் படித்தது மற்றும் கேள்விப்பட்டது அனைத்துமே, சமூகத்துக்காக பணியாற்ற விரும்புபவர்கள் மற்றும் சவால்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும். ரோதக் நகரில் சவுத்ரி அவர்கள் ஒரு நாள் பேசும்போது – என்னைப் பொருத்தவரை, விவசாயி என்பவர், வறுமையின் அடையாளமாக மட்டுமல்லாமல், ஆங்கிலேய ராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராக கொடியை உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்கும் வீரராக தெரிகிறார் என்று கூறினார். இவையெல்லாம், சர் சோட்டு ராம் அவர்களின் வார்த்தைகள்.

நண்பர்களே,

இந்திய ராணுவத்தில் சேவையாற்றும் ஒரு நபர் கூட இல்லாத, எந்தவொரு கிராமமும் ஹரியானாவில் கிடையாது. நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் மற்றும் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற உணர்வை உருவாக்கியதன் பெருமை அனைத்தும், தீனபந்து சோட்டு ராம் அவர்களையே சாரும். அவர் தான், பெருமளவிலான விவசாயிகளை இந்திய ராணுவத்தில் சேருமாறு ஊக்குவித்தார். முதலாவது உலகப் போரின்போது, இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள், உலக அமைதிக்காக போர் புரிந்தார்கள்.

நண்பர்களே,

தனது வாழ்நாளில் சுதந்திர இந்தியாவை அவரால் காண முடியாமல் போனது. எனினும், இந்தியாவின் தேவைகள், விருப்பங்கள், சவால்கள் ஆகியவற்றை மிகவும் தெளிவாக புரிந்துவைத்திருந்தார். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக எப்போதும்  தனது குரலை எழுப்பினார். இந்த சிந்தனைகளால், அரசியலின் ஒவ்வொரு பிரிவிலும் சர் சோட்டு ராம் அவர்கள் கவுரவிக்கப்பட்டார். சர் சோட்டு ராம் குறித்து சர்தார் படேல் ஒரு முறை கூறியதை வைத்தே, அவரது மேன்மையை புரிந்துகொள்ள முடியும். இதனை நினைத்து ஹரியானா மாநிலத்தின் ஒவ்வொரு நபரும் பெருமைகொள்ள வேண்டும். சர்தார் வல்லபாய் பட்டேல் கூறும்போது, இன்று சவுத்ரி சோட்டு ராம் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், இந்தியாவிலிருந்து பிரிந்தபிறகு, பஞ்சாப் மாநிலம் குறித்து நான் கவலைப்பட்டிருக்க வேண்டியதில்லை. அவரே மாநிலத்தை கவனித்திருப்பார் என்று தெரிவித்தார். இதன்மூலம், சர் சோட்டு ராம் அவர்களின் பலம் மற்றும் திறனை சர்தார் வல்லபாய் படேல் தெளிவாக விளக்கியுள்ளார்.

அவரது ஆதிக்கம், மேற்கு மற்றும் வடஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கும் பெருமளவில் பரவியது. இதன் காரணமாக, ஆங்கில ஆட்சியாளர்களும் கூட, அவருக்கு மதிப்பளிக்காமல் இருக்கத் தயங்கினார்கள். நூறு முறை சிந்தித்தார்கள். சவுத்ரி சோட்டு ராம் மற்றும் சகுகர் தொடர்பான சம்பவத்தை குறைந்தது 100 முறை நான் கேட்டிருப்பேன். நீங்கள் அனைவரும் இதனை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். கடனை திரும்ப செலுத்துவதற்குப் பதிலாக தலையாரியாக (Patwari) இருக்குமாறு சவுத்ரி சோட்டு ராமை சகுகர் கேட்டுக் கொண்டார். ஆனால், தலையாரியாக இருக்குமாறு தான் கேட்டுக் கொண்ட நபர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தலையாரிகளின் விதியை ஒரு நாள்  முடிவுசெய்வார் என்று சகுகருக்குத் தெரியாது. தனது தகுதி மற்றும் தீவிரப் போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே, பஞ்சாப் மாநிலத்தின் வருவாய்த் துறை அமைச்சராக சவுத்ரி அவர்கள் பொறுப்பேற்றார்.

சகோதர, சகோதரிகளே,

அமைச்சராக இருந்த காலகட்டத்தில், பஞ்சாப் மாநிலத்துக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபட்டார். வருவாய் துறையில் முன்னோடியாக சவுத்ரி விளங்கினார். விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்கினார். இது இன்னும் நமது நிர்வாக அமைப்பின் அங்கமாக உள்ளது. விவசாயிகளுக்கு எளிதில் கடன் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான சட்டங்கள், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மண்டிகள் தொடர்பான சட்டங்களையும் கொண்டுவந்தார். நாம் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தபோதும் கூட, இந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், விவசாயிகளின் நலன் குறித்து சிந்தித்ததோடு மட்டுமல்லாமல், அதனை நிறைவேற்றுவதற்கான பணிகளிலும் சவுத்ரி அவர்கள் ஈடுபட்டார்கள். வேளாண் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு அவர் ஆதரவு தெரிவித்தார். அந்தக் காலகட்டத்தில், குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். விவசாயிகளுடன் இணைந்து செயல்படுமாறு தொழில் துறையினரை இடையறாது ஊக்குவித்தார். ஒவ்வொருவரும் வேளாண் துறையுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நண்பர்களே,

சோட்டு ராம் அவர்களின் இலக்கு குறித்து பேசிய சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, சவுத்ரி சோட்டு ராம் அவர்கள், மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்ததோடு மட்டுமல்லாமல், இந்த இலக்குகளை நிறைவேற்றுவது குறித்தும் மிகவும் சிறப்பாக தெரிந்துவைத்திருந்தார் என்று கூறினார்.

சகோதர, சகோதரிகளே,

இந்த பக்ரா நங்கல் அணை குறித்த யோசனையை முதல் முறையாக வெளிப்படுத்தியவர் சவுத்ரி அவர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. பக்ரா அணை தொடர்பான ஆவணங்களில் பிலாஸ்பூர் மன்னரும், சவுத்ரி-யும் கையெழுத்திட்டனர். இந்த முடிவின் மூலம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில மக்கள் பலன் பெற்றுவருவதை நம்மால் தெளிவாக காண முடியும். மிகப்பெரும் கனவு அவரிடம் இருந்ததை சிந்தித்துப் பாருங்கள்.

நண்பர்களே,

பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்த மற்றும் ஒவ்வொருவரிடமும் தொலைநோக்கு இலக்கை ஏற்படுத்திய நபர் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் உரிமை. ஒரு மாபெரும் நபரின் அறிவுப்புலமை, வெறும் ஒரு பிராந்தியத்துடன் ஏன் நின்றுவிட்டது என்பதை அறிந்து அடிக்கடி நான் ஆச்சரியப்பட்டதுண்டு. சவுத்ரி அவர்களின் பெருமைகள் வெளிப்படாமல் இருந்தாலும், அவரது வாழ்க்கையிலிருந்து நாட்டில் வாழும் பல்வேறு சந்ததியினரும் பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

நாட்டுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒவ்வொருவரின் பெருமைகளை மீட்டெடுப்பதற்கான பணிகளை நமது அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில், மாபெரும் தலைவர்களை பெருமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வருகிறோம். விவசாயிகள் மற்றும் சிறு தொழிலதிபர்களுக்கு வங்கி சேவைகளை எளிதில் கிடைக்கச் செய்துள்ளோம். இதன்மூலம், கந்துவட்டிக்காரர்களை அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிலை இல்லை. மக்கள் நிதி திட்டத்தின்கீழ், ஹரியானா மாநிலத்தில் சுமார் 66.5 லட்சம் சகோதர, சகோதரிகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதை, அரசு எளிதாக்கியுள்ளது. அண்மையில், இந்திய அஞ்சல் துறையில் பணம் செலுத்தும் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தபால்காரர்களின் உதவியுடன் உங்களுக்கு வீடுகளிலேயே வங்கி சேவை கிடைப்பதை  உறுதிப்படுத்தியுள்ளது.

நண்பர்களே,

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன் குறித்து மட்டுமே முழுமையாக சவுத்ரி அவர்கள் சிந்தித்தது போன்று, நமது அரசும் கூட, விதைகள் முதல் விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் வரை வலுவான அமைப்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளுக்கு, அவர்களது பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கவும்; வானிலையின் கொடுமைகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும்; நவீனரக விதைகள், போதிய உரம் மற்றும் உரிய நீர்ப்பாசன வசதிகளுடன் சிறந்த மண் வளத்தைப் பெறவும் அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது. இதன்மூலம், ஹரியானா பயனடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுமார் 50 லட்சம் விவசாயக் குடும்பங்கள், மண் சுகாதார அட்டைகளைப் பெற்றுள்ளன. தற்போது பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 6.5 லட்சம் விவசாயிகள் இணைந்துள்ளனர். இதில், ரூ.350 கோடிக்கும் மேல் காப்பீட்டுத் தொகையை ஏற்கனவே பெற்றுள்ளனர். 30-40 ஆண்டுகளாக வறண்டுகிடந்த பகுதிகளை நீர் சென்றடைந்துள்ளது. லக்வர் அணைக்காக 6 மாநிலங்களுக்கு இடையே வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது ஹரியானா மாநிலத்துக்கு மிகப்பெரும் அளவில் பயனளிக்கும். சுமார் 80-100 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகளுக்கு, அவர்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு உரிய விலை கொடுக்க வேளாண் பொருள் சந்தை சட்டத்தை சவுத்ரி அவர்கள் உருவாக்கினார்கள். நமது அரசும் கூட, பிரதமரின் ஆஷா (PM-AASHA) திட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவது, Pradhan Mantri Annadata Aay Sanrakshan Abhiyan. இந்தத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு சந்தையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவான தொகையைப் பெற்றால், மீதமுள்ள தொகையை மாநில அரசு வழங்குவது உறுதிப்படுத்தப்படும். அதற்கும் மேலாக, விவசாயிகளுக்கு உற்பத்தி செலவில், குறைந்தபட்சம் 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என்ற நமது வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளோம்.

நண்பர்களே,

நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட 21 முக்கியப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உயர்த்தியுள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் விலை, குவிண்டாலுக்கு ரூ.1,550-லிருந்து ரூ.1,750-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.275-ம், சூரியகாந்திக்கு ரூ.1,300-ம், கம்புக்கு ரூ.500-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே,

இதனை நமது விவசாயிகள் எத்தனை காலமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். தற்போது, இந்தக் கோரிக்கையை நமது அரசு பூர்த்திசெய்துள்ளது.

நண்பர்களே,

ஒருபுறம், ஹரியானா விவசாயிகள் மற்றும் கிராமங்களின் வருமானம் அதிகரிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வருமானமானது மருத்துவ செலவுக்காக செல்வதை தடுப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின்கீழ் (Ayushman Bharat Yojana) உங்களது மாநிலத்தைச் சேர்ந்த மகள் முதலாவதாக பயனடைந்துள்ளார் என்பதற்காக ஹரியானா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்குள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் சிகிச்சை பெற்றுள்ளனர் அல்லது சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை தெரிந்துகொள்வது திருப்தி அளிக்கிறது.

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக, ஹரியானா அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக, ரோதக் பகுதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில், அதன் மகரிஷி தயானந்த் பல்கலைக் கழகமே, தூய்மை தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நண்பர்களே,

ஹரியானா மாநிலத்தில் “பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வியளிப்போம்” இயக்கம் வெற்றிபெற்றிருப்பதைப் பார்த்து, சவுத்ரி அவர்களின் ஆன்மா மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கும். சீர்திருத்தங்கள் குறித்து அவர் குரல் எழுப்பியதோடு மட்டுமல்லாமல், மனநிலையை மாற்றுவதற்கான பிரச்சாரத்தை தனது வீட்டிலிருந்தே தொடங்கினார். நமது சமூகத்தில் மகள்கள் மீது நாம் வைத்திருந்த நிலைப்பாட்டுக்கு எப்போதுமே எதிர்ப்புத் தெரிவித்தார். இதன் காரணமாகவே, சமூகத்திலிருந்து அனைத்துவிதமான அழுத்தங்கள் வந்தபோதும், தனது இரண்டு மகள்களுக்கு எப்போதுமே ஆதரவாக இருந்தார்.

சகோதர, சகோதரிகளே,

இன்று, ஹரியானா மாநிலத்தில் உள்ள சிறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், சர்வதேச அரங்குகளில் நாட்டின் பெருமையை உயர்த்திவருவதையும்; விளையாட்டுத் துறையில் இந்தியாவை உலக சக்தியாக மாற்றுவதற்கு ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் இடையறாது முயற்சி மேற்கொண்டு வருவதையும், நாட்டில் ஏழைகளில் ஏழைகளாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னேறி வருவதையும் பார்க்கும்போது, சவுத்ரி அவர்களின் கனவை நனவாக்குவதில் வேகமாக முன்னேறி வருகிறோம் என்பதை உணர முடிகிறது.  

நண்பர்களே,

நாட்டின் வளர்ச்சிக்கான உத்வேகத்தை ஹரியானா வழங்குகிறது. இந்த வேகம் தொடர்ந்து அதிகரிப்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் பணியாற்ற வேண்டும். இதுவே நம் அனைவருக்கும் சவுத்ரி சோட்டு ராம் அவர்கள் வழங்கிய செய்தி. சமூக நல்லிணக்கத்துக்கும், தேசிய ஒற்றுமைக்கும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட நபருக்கு உண்மையான மரியாதை அளிப்பது என்பது, அவர் கனவு கண்ட, இந்தியாவை, ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதே ஆகும்.

இன்னும் சில தினங்களில் ஹரியானா தினத்தை நாம் கொண்டாட உள்ளோம். அதற்காக, ஹரியானா மாநில மக்களுக்கு முன்கூட்டியே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரும் அளவில் இங்கு வந்துள்ள உங்களுக்கு ஆழ்மனதிலிருந்து எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சர் சோட்டு ராம் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

மிக்க நன்றி!

***