பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் இடையே, தேசிய உட்கட்டமைப்பு நிதிக்கு நீண்டகால முதலீட்டுக்காக 11 பிப்ரவரி 2016 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
தேசிய உட்கட்டமைப்பு முதலீட்டு நிதியின் முக்கிய நோக்கம், உட்கட்டமைப்பு திட்டங்களின் மூலமாக பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துதல், வணிகரீதியில் பலனளிக்கக் கூடிய திட்டங்களில் முதலீடு செய்தல், பணிகள் நின்று போன திட்டங்கள் உள்பட, பங்குதாரர்களை சேர்த்து முதலீடு செய்தல் ஆகியவை.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் ஆகிய நாடுகளிடையே கையெழுத்திடப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட்டுகள், இந்தியாவின் முக்கியமான கட்டுமானத் திட்டங்கள், மற்றும் கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றுக்கு வெளிப்படையான உயர் நிலை திட்ட வடிவமைப்பை உருவாக்கும்.
இரு தரப்பையும் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டு, இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் குறித்து விவாதித்து, ஒப்பந்தத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.
பின்னணி :
ஜூலை 2015ல், மத்திய அமைச்சரவை, தேசிய உட்கட்டமைப்பு முதலீட்டு நிதியம் உருவாக்க ஒப்புதல் அளித்தது. செபி வரையறைகளின்படி, இந்த முதலீட்டு நிதியம் மாற்று முதலீட்டு நிதி பிரிவு 2ஆக ஆங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பாரதப் பிரதமர் 16-17 ஆகஸ்ட் 2015ல் ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கு விஜயம் செய்தபோது, இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ஐக்கிய அரபு எமிரேட்டுகள் – இந்திய உட்கட்டமைப்பு முதலீட்டு நிதியம் அமைப்பதென்றும், 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டி, இந்தியாவில் ரயில்வே, துறைமுகம், சாலைகள், விமான நிலையங்கள், தொழிற்பூங்காக்கள் ஆகியவற்றை கட்டமைக்க இந்த நிதி பயன்படுட்ததப்படும் என்று இரு நாட்டுத் தலைவர்களின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.