Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கலாச்சார நல்லிணக்கத்திற்கான தாகூர் விருது வழங்கும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

கலாச்சார நல்லிணக்கத்திற்கான தாகூர் விருது வழங்கும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


கலாச்சார நல்லிணக்கத்திற்கான தாகூர் விருது பெற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜ்குமார் சிங்காஜித் சிங், ராம் சுதார், சாயானாத் ஆகியோரை கௌரவிப்பது, கலை, கலாச்சாரம், ஞானம் ஆகியவற்றை கௌரவிப்பதாகும்.

ரவீந்திரநாத்தின் பாடல்கள், ஒட்டுமொத்த இந்தியாவின் வண்ணங்களைக் காட்சிப்படுத்துகின்றன. மேலும், அவை மொழிகளின் எல்லைக்கு அப்பாற்பட்டவை. நாட்டுப்புற கலைகளும், பாரம்பரிய நடனங்களும் நாட்டின் கலாச்சாரத்திற்கான சிற்பிகள் என்று குருதேவ் கருதினார். சாந்திநிகேதனுக்கு ஒருவர் பயணம் செய்தால், இந்த உண்மையை உணர முடியும். மணிப்புரி நடன ஆசிரியர் நாபகுமார் சிங்கா அவர்களால் மிகவும் கவரப்படுவார்.

இன்று தாகூர் விருது வழங்கி கௌரவிக்கப்படும் ராஜ்குமார் சிங்காஜித் சிங், இந்த வளமான கலாச்சாரத்தின் பிரதிநிதியாவார். மணிப்புரி நடனத்தை பிரபலப்படுத்துவதற்கு ராஜ்குமார் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். மணிப்புரி நடன பாரம்பரியத்தின் மூலம் கலாச்சார நல்லிணக்கத்தைப் பிரபலப்படுத்துவதில் அவர் முக்கியமான பங்களிப்புச் செய்துள்ளார். இந்த விருது பெறும் அவருக்கு நல்வாழ்த்துகள்.

நண்பர்களே,

எந்தவொரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவானாலும், இருநாடுகளின் பிரதமர்கள் பங்கேற்பதைக் காண்பது மிகவும் அபூர்வமாகும். குருதேவின் மீது கொண்டுள்ள அன்பு, மதிப்பு காரணமாக விஸ்வபாரதி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் என்னுடன் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் பங்கேற்றுள்ளார்.
குருதேவின் ‘அமர் சோனார் பங்ளா‘ பாடல் பங்களாதேஷின் அடையாளமாகும். இதுவே அந்நாட்டின் தேசிய கீதம். இந்தியா மற்றும் பங்களாதேஷின் பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்த கலாச்சார பாரம்பரியம் சாய்நாத் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது. சாயாநாத்தின் மனிதாபிமான கலாச்சார பண்புகள் குருதேவின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இந்த கௌரவிப்புக்காக அவரை நான் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

குருதேவின் பணிகளும், போதனைகளும் காலத்திற்கும், இடத்திற்கும் அப்பாற்பட்டவை. மனித குலத்தை பாதுகாப்பதற்கு அவரது கருத்துகளை இன்று வலுப்படுத்த வேண்டிய அவசியமுள்ளது. உலகின் தற்போதைய சவால்களை கருத்தில் கொண்டு இந்நாளிலும் மிகவும் பொருத்தமான குருதேவ் படைப்புகளை வாசித்து, அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

குருதேவின் பாடல் வரிகளுடன் எனது உரையை நான் நிறைவு செய்கிறேன்.

குருதேவ் அவர்கள் இவ்வாறு எழுதினார்
நான் உறங்கி, கனவு கண்டேன் வாழ்க்கை மகிழ்ச்சியானது என
நான் விழித்து, பார்த்தேன் சேவை என்பதுதான் வாழ்க்கை என
நான் செயல்பட்டேன், பின்பற்றினேன், சேவையே மகிழ்ச்சி என
சேவை உணர்வோடும், நமது பணிகளை தொடர்வோம். நாட்டின் கலாச்சார வளத்தை மேம்படுத்த நாம் தொடர்ந்து பணியாற்றுவோம். இந்த எதிர்பார்ப்புடன் உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமது நேரத்தை ஒதுக்கி, இந்த விழாவில் பங்கேற்றுள்ள மாண்புமிகு அதிபருக்கும், நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவரது பங்கேற்பால், இந்த விழாவின் சிறப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விருதின் மூலம் உணர்வுகளை மீட்டெடுக்கும் சிறப்பான பணியை செய்துள்ள துறைக்கு பொறுப்பான பாய் மகேஷ் ஷர்மாவையும் நான் பாராட்டுகிறேன்.

மிக்க நன்றி.

*****