Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2019 ஜூன் 26 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் அளித்த பதிலுரை


அனைவரோடும் சேர்ந்து, அனைவரின் வளத்திற்காகவும்” என்ற முழக்கத்துடன் நாங்கள் ஆட்சியைத் தொடங்கினோம். ஆனால் ஐந்து வருட கால தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்குப் பிறகு அந்த முழக்கத்திற்கு மக்கள் மற்றொரு அருமையான வார்த்தையை சேர்த்தார்கள். அதுதான் “அனைவரின் நம்பிக்கை” என்பது.

 

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

 

புதிதாகப் பெற்ற மக்களின் ஆதரவிற்குப் பிறகு முதல் முறையாக மாநிலங்களவையின் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு முன்னால் எனது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. மேலும் அதிகமான நம்பிக்கையுடன் நாட்டிற்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பினை நாட்டு மக்கள் எங்களுக்கு மீண்டும் வழங்கியிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நான் மிகுந்த நன்றியுடையவனாக இருக்கிறேன்.

 

இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்கள் பலரும் அவர்களுக்கேயுரிய வகையில் தங்களது கருத்துக்களை இங்கே எடுத்துரைத்தார்கள். அனைத்து வகையான உணர்வுகளும் இங்கே எதிரொலித்தன. கசப்பு, கேலி, கோபம், ஆக்கபூர்வமான ஆலோசனை ஆகியவற்றோடு கூடவே மக்களின் பாராட்டுக்களும் அவற்றில் அடங்கியிருந்தன.

 

இந்த்த் தேர்தல் உண்மையிலேயே மிகவும் தனித்துவமானதுதான். பல தசாப்தங்களுக்குப் பிறகு, ஓர் அரசு முழுப் பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. அரசியல் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தையே இது சுட்டிக் காட்டுகிறது. இந்தத் தேர்தலில் மட்டுமே இது நடக்கவில்லை. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலுமே, அதில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தாலும் சரி, அரசியல் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை வாக்காளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்பதைக் காண முடிந்தது. இது வலுவான ஜனநாயகத்தின் அறிகுறியாகும்.

 

எனது அமைப்பிற்காக நான் வேலை செய்து வந்தபோது, பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களையும் நான் பார்த்திருக்கிறேன்; மேற்கொண்டும் இருக்கிறேன். அரசியலுக்கு வந்தபிறகு தேர்தலில் போட்டியிடவும், மற்றவர்கள் போட்டியிடும்போது அவர்களுக்கு உதவி செய்யவும் எனக்கு வாய்ப்புக்கள் கிடைத்தன. எனினும் மக்கள் தானாகவே தேர்தலில் போட்டியிடும் சில தருணங்களும் இருந்தன. ஒருவகையில் பார்க்கும்போது 2019 தேர்தல் என்பது கட்சிகளுக்குப் பதிலாக மக்கள் போட்டியிட்ட தேர்தல் எனலாம். அரசின் நற்பணிகள் குறித்த செய்திகளை மற்றவர்களுக்கு மக்கள் தாங்களாகவே எடுத்துச் சென்றனர். பயனடையாதவர்களும் கூட, மற்றவர்கள் இந்த அரசால் பயனடைந்திருக்கும்போது தாங்களும் பயனடையக் கூடும் என்று நம்பினார்கள். இந்தத் தேர்தலில் இத்தகைய நம்பிக்கை குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியது. நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் உள்ள மக்களை சந்திக்கவும், அவர்களின் வாழ்த்துகளைப் பெறவுமான வாய்ப்பினையும் பெற்றவனாக நான் இருந்தேன்.

 

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

 

ஒரு ஜனநாயக உலகத்திற்கு தேர்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு உலகளாவிய மதிப்பும் உள்ளது. இந்த மாபெரும் மக்கள் தீர்ப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டீர்கள்; ஆனால், நாடு தேர்தலில் தோற்று விட்டது என்று கூறுவது குறுகிய எண்ணம் கொண்டது; சிந்தனையின் சீர்குலைவு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியும் ஆகும் என்றே நான் நம்புகிறேன்.

 

இது ஒன்றும் சாதாரண வார்த்தையல்ல. என்றாலும் இது போன்ற விஷயங்கள் மக்களை தீவிரமாக சிந்திக்குமாறு நிர்ப்பந்திக்கும்.  “ஜனநாயகம் தோற்றுவிட்டது; நாடு தோற்று விட்டது” என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்கும்போது நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். வயநாட்டில் இந்தியா தோற்றுவிட்டதா என்ன? ரே பரேலியில் அது தோற்றுவிட்டதா என்ன? பெஹ்ராம்பூர், திருவனந்தபுரம், அமேதியில் எல்லாம் அது தோற்று விட்டதா என்ன? காங்கிரஸ் கட்சி தோற்று விட்டதாலேயே இந்தியா தோற்று விட்டது என்பது எந்த வகையான வாதம்? நாடு என்பது என்ன காங்கிரஸ் கட்சிக்கு சமமானதா? ஆணவத்திற்கும் ஓர் அளவு வேண்டும். எந்தவிதமான ஆணவமும் இருக்கக் கூடாது. அதற்கு அளவு என்பது எதுவும் இல்லை. நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாட்டை 55-60 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ஒரு கட்சி 17 மாநிலங்களில் ஒரே ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதால் நாடே தோற்று விட்டது என்று நம்மால் சொல்ல முடியுமா?  இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வாக்காளர்களின் மனசாட்சியைப் பற்றிய கேள்வி எழுப்புகிறோம் என்றுதான் நான் நம்புகிறேன். எங்களைப் பற்றிய விமர்சனம் என்றால் என்னால் புரிந்து கொள்ள முடியும். ஒரு ஜனநாயகத்தில் அது ஏற்கத்தக்கதும் கூட. ஆனால் நாட்டின் வாக்காளர்களை இதுபோன்று அவமானப்படுத்துவது என்பது மிகவும் வருத்தம் தருவதாக இருக்கிறது.

 

மிகக் கொடுமையான வெயிலில் நீண்ட வரிசையில் வாக்களிப்பதற்காக மக்கள் நின்று கொண்டிருப்பதை நாம் பார்த்தோம். 80-90 வயதான முதியவர்களும் கூட கைத்தடிகளுடன் வாக்களிக்க வந்திருந்தனர். தங்களது தாயார் சமீபத்தில் மரணமடைந்த நிலையிலும் கூட பல தேர்தல் அதிகாரிகளும் தங்கள் கடமையை ஆற்ற வந்திருந்தார்கள். எண்ணற்றவர்களின் கடும்பணிக்குப் பிறகுதான் ஒரு தேர்தல் நிறைவு பெறுகிறது. அத்தகையதொரு நிலையில்தான் நமது நாட்டு வாக்காளர்களை நாம் இவ்வாறு அவமதிக்கிறோம்.

 

இந்த அவதூறு அரசியலில் நாம் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டோம். நமது நாட்டின் விவசாயிகளும் கூட அவமதிக்கப்பட்டார்கள் என்று எங்களிடம் தெரிவித்தார்கள். விவசாயிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று கூட அவர்கள் சொன்னார்கள். ரூ.2,000 திட்டத்தை வைத்துக் கொண்டு விவசாயிகளின் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன என்றும் கூட அவர்கள் சொன்னார்கள். நமது நாட்டு விவசாயிகளை இவ்வாறு அவமதிக்கக் கூடாது என்றுதான் நான் நம்புகிறேன். நாட்டின் விவசாயிகளை நாம் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது. கடும் உழைப்பின் மூலம் உணவுப் பொருட்களை நமது விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். தான் உற்பத்தி செய்யும் உணவு ஏழைக்கா அல்லது பணக்காரருக்கு உணவாகப் போகிறதா என்று அவர்கள் எப்போதுமே கவலைப்படுவதில்லை. அத்தகைய விவசாயிகளைப் பற்றி இத்தகைய வார்த்தைகளை உதிர்ப்பது என்பது 15 கோடி விவசாயிகளை அவமதிப்பதே ஆகும்.

 

ஊடகங்கள் கூட அவமதிக்கப்பட்டதைக் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன். நாம் எங்கே இருக்கிறோம். ஊடகங்களின் மூலமாகவா தேர்தலில் வெற்றி கிடைக்கிறது? ஊடகங்களை விலை கொடுத்து வாங்கிவிட முடியுமா? அப்படியென்றால், அது தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் கூடப் பொருந்த வேண்டும். இந்த அவையில் பேசப்படும் விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. நாம் சொல்கின்றவை பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகி விடலாம். என்றாலும் இந்திய ஜனநாயகத்தின் பெருமையை நாம் நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்புதான் தேர்தல் செயல்பாடுகள். அதனை நாம் விட்டுவிடக் கூடாது.

 

இந்தத் தேர்தல்கள் எவ்வளவு பிரம்மாண்டமானவை என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியும். 10 லட்சம் வாக்குச்சாவடிகள், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், 650 அரசியல் கட்சிகள், 8000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்! இந்த விவரங்களை உலகத்திற்கு முன்னால் நாம் வைக்கும்போது உலகமே ஆச்சரியப்படும்! இந்த தேர்தலில் மிக முக்கியமான ஓர் அம்சம் வெளிப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் நமது சகோதரிகளும் மகள்களும் பாராட்டத்தகுந்த ஒரு வேலையைச் செய்திருக்கிறார்கள்! வழக்கமாக பெண்களை விட ஆண்களே அதிகமாக வாக்களிப்பார்கள். முதல் முறையாக இந்த இரண்டுக்கும் இடையிலான இடைவெளி இப்போது பெருமளவிற்கு நீங்கியிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் சாரமாக இது மாறியிருக்கிறது. இந்த முறை கிட்டத்தட்ட 78 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயமாகும்.

 

அனைத்து வாக்காளர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் செயல்பாடுகளோடு தொடர்புடைய அனைத்து அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், தேர்தல் ஆணையம் ஆகிய அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

 

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றி இங்கே ஏராளமான விவாதங்கள் நடைபெற்றன. புதியதொரு போக்கு இப்போது தொடங்கியிருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மக்களவையில் எங்கள் கட்சிக்கு இரண்டே இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருந்த ஒரு காலமும் இருந்தது. அப்போது நாங்கள் கேலி செய்யப்பட்டோம். மிக மோசமான காலங்களை நாங்கள் கடந்து வந்தோம். இருந்தாலும், எங்கள் கட்சித் தொண்டர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. எங்களது நோக்கங்களின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. நாட்டு மக்களின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. கடுமையான உழைப்புடனும், தியாகத்துடனும் நாங்கள் தயாரிப்புகளைச் செய்தோம். எரிச்சலூட்டும் அந்த நிலையிலிருந்து புதியதொரு நம்பிக்கையுடன் எங்கள் கட்சியை நாங்கள் மீண்டும் உருவாக்கினோம்.

 

வாக்குச்சாவடிகளைக் கண்டு நாங்கள் அழவில்லை. தன்னம்பிக்கை இல்லாதபோது மக்கள் ஏதாவது சாக்குபோக்குகளைத் தேடுவார்கள். தமது தொண்டர்களுக்கு சமாதானம் கூறவும், அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை வழங்கவும் வாக்குப்பதிவு இயந்திரங்களால்தான் நாம் தோற்றுவிட்டோம் என்று சொல்லி அவற்றின் மீது குறை கூறப்படுகிறது.

 

இந்த வகையில் நடப்பதன் மூலம் அரசியல் தொண்டர்களுக்கு நம்மால் உதவிட முடியாது என்றுதான் நான் நம்புகிறேன். மாறாக அது தொண்டர்களுக்கு வருத்தத்தையே ஏற்படுத்தும். அதனால் எந்தவித பயனும் இல்லை. உங்களுக்குத் துணிவிருந்தால் முன்னால் வாருங்கள். தொண்டர்களை தயார்படுத்துங்கள். வரவிருக்கும் தேர்தலில் போட்டி போடுங்கள்.

 

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

 

தேர்தல் செயல்முறையில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 1952-ம் ஆண்டிற்குப் பிறகு தேர்தல் என்பது பல மாதங்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளுடன் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்வது வழக்கமாக இருந்தது. அத்தகைய செயல்முறையை மாற்றி இப்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். இது தொடர்ந்து நடைபெற்று வரும் செயல்முறை ஆகும்.

 

முன்பெல்லாம் தேர்தல் நடந்து முடிந்தபிறகு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, வன்முறையின் அளவு, கைப்பற்றப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை என்பது போன்ற தலைப்புச் செய்திகளுடன் பத்திரிக்கைகள் வெளிவருவது வழக்கம். ஆனால் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்களின் விளைவாக அதிகரித்துள்ள வாக்குப்பதிவு பற்றிய விவரங்கள்தான் செய்தியாக உள்ளன. இது மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும். இதற்கு முன்பு வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, கொள்ளையடிப்பது என்பது வழக்கமான ஒரு விஷயமாக இருந்தது. குற்றங்களில் ஈடுபடுவோர்தான் தங்கள் கைகளில் அதிகாரத்தை வைத்திருந்தார்கள். தேர்தல் நடைமுறை மேலும் ஜனநாயகப்பூர்வமானதாக மாறிய பிறகு அவர்கள் தோல்வியை சந்திக்கத் தொடங்கினார்கள். அதனால்தான் வாக்குப் பெட்டிகள் இருந்த காலத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

 

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

 

இன்று இந்த அவையில் இருந்து நாட்டிற்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். 1977-ம் ஆண்டில்தான் முதன்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றிய விவாதம் தொடங்கியது. அந்த நேரத்தில் நாங்கள் அரசியலில் அடையாளம் தெரியாதவர்களாகத்தான் இருந்தோம். இந்த இயந்திரங்கள் முதலில் 1982-ம் ஆண்டில்தான் பயன்படுத்தப்பட்டது. 1988-ம் ஆண்டில் கூட நாங்கள் அரசியல் களத்தில் முன்னால் இருக்கவில்லை. அந்த நேரத்தில் இருந்த தலைவர்கள் இதே அவையில் இருந்துதான் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளித்தனர். அவர்கள்தான் இதற்கான சட்டத்தை வகுத்தார்கள். மேலும் 1992-ம் ஆண்டில் காங்கிரஸின் தலைமையில்தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. நீங்கள் அடிக்கடி இதை நாங்கள்தான் செய்தோம்; அதை நாங்கள்தான் செய்தோம் என்று சொல்வதைப் போல இதுவும் கூட நீங்கள் செய்ததுதான். ஆனால் நீங்கள் தோற்று விட்டீர்கள். அதனால்தான் நீங்கள் அழுகிறீர்கள்.

 

நமது நாட்டில் இதுவரையில் சுமார் 113 சட்டமன்றத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இங்கு இருக்கும் கட்சிகளில் கிட்டத்தட்ட அனைத்திற்குமே இதே வாக்கு இயந்திரங்களின் உதவியுடன் ஆட்சிக்கு வருவதற்கோ அல்லது ஆட்சியில் பங்கு பெறுவதற்கோ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மக்களவைக்கு நான்கு தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தத் தேர்தல்களிலும் கூட ஆட்சிக்கு வந்த கட்சிகள் மாறியிருக்கின்றன. பல்வேறுபட்டவர்களும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் இன்று தோற்றுவிட்டதற்காக அவர்கள் அதே வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது குறை கூறுகிறார்கள். 2001-ம் ஆண்டிற்குப் பிறகு பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த பல்வேறு வழக்குகள் நடைபெற்றிருக்கின்றன. அனைத்து விசாரணைகளுக்குப் பிறகு அனைத்து நீதிமன்றங்களுமே வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு சொல்லியிருக்கின்றன.

 

2017-ம் ஆண்டிலும் கூட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி பெரும் கூச்சல் எழுந்தது. அப்போது தேர்தல் ஆணையம் இதை எதிர்ப்பவர்கள் முன்னுக்கு வந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறானவை என்று நிரூபிக்க வேண்டும் என்று சவால் விடுத்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி அழுது கொண்டிருப்பவர்களில் ஒரே ஒரு கட்சி கூட தேர்தல் ஆணையத்திடம் செல்லவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் சென்றார்கள் என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை அவர்கள் குறை கூறவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளவே அவர்கள் முற்பட்டார்கள். குறைந்தபட்சம் அவர்களாவது தேர்தல் ஆணையத்திடம் சென்றார்கள். சந்தேகப்பட்ட மற்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் அழைப்பிற்குப் பிறகும் கூட அங்கே செல்லவில்லை.

 

உள்நோக்கம் கொண்ட சில குழுக்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சலசலப்பை எழுப்பத் தொடங்கியபோது, எமது கட்சியைச் சேர்ந்தவர்களில் சிலரும் கூட வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று நம்பத் தொடங்கினார்கள். எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரும் கூட கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். என்றாலும் நாங்கள் தீவிரமாக உண்மையைத் தேட முயற்சித்தோம். தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ளவும் நாங்கள் முயற்சித்தோம். சரியான பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

 

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

 

அதன்பிறகு தாங்கள் அளித்த வாக்கை வாக்காளர்களே சோதித்து அறிந்து கொள்வதற்கான இயந்திரம் செயல்படத் தொடங்கியது. ஒரு சிலர் உச்சநீதிமன்றத்திற்கு அடிக்கடி சென்று தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க முயற்சித்தனர். ஒவ்வொரு நாள் மாலையும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்குச் சென்று சச்சரவை எழுப்புவதும் ஊடகங்களில் ஒரு சில தலைப்புச் செய்திகளைப் பெறுவதுமாக இருந்தனர். இது வாக்காளர்களின் மனதில் நம்பிக்கையின்மையை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியே ஆகும். தாங்கள் அளித்த வாக்கை வாக்காளர்களே சோதித்து அறிந்து கொள்வதற்கான இயந்திரத்தின் கதி என்னவாயிற்று? எல்லாவிதமான ஊகங்களுக்குப் பிறகு அந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் வலிமையை மேம்படுத்துவதாக ஆகின. அதன் விளைவைத்தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள்.

 

காங்கிரஸ் கட்சியைப் பார்த்து நான் வியப்படைகிறேன். பலப்பல ஆண்டுகள் நீங்கள் ஆட்சி செய்திருக்கிறீர்கள். இந்தியாவின் முக்கிய கட்சியாக நீங்கள் இருந்தபோதிலும், எங்களின் இந்த வெற்றியை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை. பல ஆண்டுகள் நீங்கள் வெற்றியை ஈட்டி வந்த போதிலும் உங்களின் தோல்வியை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆரோக்கியமானதொரு வளர்ச்சிக்கான அறிகுறியாக இதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்குமே அதற்கேயுரிய இடம், முக்கியத்துவம், மரியாதை எல்லாம் இருக்க வேண்டும். நமது தோல்வியை ஏற்றுக் கொள்வதில்லை; வெற்றியையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 1952-ம் ஆண்டிலிருந்து தேர்தல் செயல்முறைகளில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வந்துள்ளது. எதிர்காலத்திலும் கூட அதே போன்ற சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

 

ஒரேயடியாக ஒரு நாடு ஒரே தேர்தல் என்பதற்கு ஆதரவாக நாங்கள் இல்லை என்று கூறுவது சரியல்ல என்றுதான் நான் நம்புகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் நான் தனியாக சந்தித்தேன். அவர்கள் அனைவருமே இந்த நோயிலிருந்து விடுபட்டாக வேண்டும் என்றே கூறினார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடைபெற வேண்டும். இரண்டு மாதங்களுக்கு தேர்தல் திருவிழா நடக்கலாம். அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்களின் வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

 

அவர்கள் ஒவ்வொருவருமே அதே விஷயத்தைத்தான் சொன்னார்கள். வெளிப்படையாக ஒரு நிலைபாட்டை எடுப்பது கடினமாகக் கூட இருக்கலாம். இது இன்றைய தேவை இல்லையா? குறைந்தபட்சம் நாட்டில் ஒரே ஒரு வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டுமல்லவா? துரதிர்ஷ்ட வசமாக நாட்டில் எத்தனை தேர்தல்கள் இருக்கின்றனவோ அத்தனை வாக்காளர் பட்டியல்கள் இருக்கின்றன. பெருமளவிலான பணம், நாட்டு மக்களின் கடுமையான உழைப்பு ஆகியவை அதில் அடங்கி இருக்கின்றன.

 

மாநிலங்களும் மத்திய அரசும் ஒன்றுசேர்ந்து இத்தகைய சட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம். அதன் விளைவாக எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் ஒரே வாக்காளர் பட்டியல் மட்டுமே இருக்க வேண்டும். அது பஞ்சாயத்து அளவில் இருந்து உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் யாருமே பட்டியலில் இருந்து விடுபட மாட்டார்கள். ஒவ்வொரு வாக்கிற்கும் மதிப்பு உள்ளது. வெறும் 30-40 வாக்குகளில் கூட ஒருவர் தோல்வி அடையலாம். அதைப் போன்றே வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு மையங்களும் கூட முன்பாகவே தீர்மானிக்கப்பட வேண்டும். இதன் மூலம் தேர்தல் நாளன்று வாக்குச் சாவடியை தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே தேர்தல் செயல்முறையில் சீர்திருத்தங்கள் என்பவை கட்டாயமானவை. இந்தச் சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

 

 

முன்பு நமது நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நடைமுறை அமலில் இருந்தது. நீங்கள் அனைவரும் அதன் பயன்களைப் பெற்றீர்கள். சிலர் அர்த்தமற்ற வாதங்களை முன்வைக்கலாம். ஒரே சமயத்தில் வாக்காளர்கள் எப்படி முடிவு செய்ய முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒடிசா தான் மிகப் பெரிய உதாரணம். ஒடிசா அவ்வளவாக வளர்ச்சி அடைந்த மாநிலம் அல்ல. அந்த மாநில வாக்காளர்கள் இரண்டு வாக்குகள் அளித்துள்ளனர் – மக்களவைக்கு ஒன்று, சட்டப்பேரவைக்கு ஒன்று. அதாவது வாக்காளர்கள் ஒரே சமயத்தில் இரண்டு வாக்குகள் அளிக்க முடியும் என்று அர்த்தமாகிறது. அந்த அளவுக்கு அவர்களுக்குத் தெளிவான சிந்தனை உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல்களில் சில இடங்கள் பிஜு ஜனதா தளத்துக்குச் சென்றன. சில மக்களவைத் தொகுதி இடங்கள் பா.ஜ.க.வுக்கு கிடைத்தன. அந்தப் பக்குவம் நமது வாக்காளர்களுக்கு உண்டு. நாம் அதைக் குறைத்து மதிப்பிட்டு, மரியாதைக் குறைவு செய்கிறோம்.

ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடந்தால் மாநிலக் கட்சிகள் அழிந்துவிடும் என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். ஒரே சமயத்தில் தேர்தல் நடந்த இடங்களில் எல்லாம், அங்கு மாநிலக் கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன. நீங்கள் வரலாற்றை திருப்பிப் பார்க்கலாம். ஆந்திராவில் மாநிலக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. ஒடிசாவிலும் மாநிலக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. நாட்டு வாக்காளர்களின் புத்திசாலித்தனத்தில் சந்தேகம் கொள்ள வேண்டாம். எந்தவொரு முயற்சியும் வரவேற்கப்பட வேண்டும். ஒவ்வொரு முயற்சியிலும் நமது பங்கை நாம் அளிக்க வேண்டும். ஆனால், ஆரம்பத்தில் நாம் கதவை மூடினால், எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும்? வாக்காளர்களின் சிந்தனைத் தெளிவு குறித்து நாம் சந்தேகப்படக் கூடாது என்பது என்னுடைய கருத்து.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மட்டும் தான் அவர்கள் எதிர்க்கிறார்களா என்று சில நேரங்களில் நான் ஆச்சர்யப்படுவது உண்டு. இல்லை! `எதிர்க்கட்சி என்பதை’ அதே அர்த்தத்தில் நாம் எடுத்துக் கொண்டுவிட்டோம் என்று கருதுகிறேன். எதிர்க்கட்சி என்பது எதிர்ப்பதற்கான கட்சி. இந்த அவையில் உள்ள அறிவார்ந்த உறுப்பினர்கள் பலர், நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சாத்தியமற்றது என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது. ஏழைகள் எப்படி டிஜிட்டல் செயல்பாட்டுக்கு மாற முடியும்? அவர்கள் எப்படி செல்போன் வைத்திருக்க முடியும்? என்பது போல பல உரைகள் இருந்தன. நாம் அதை எதிர்த்தோம்.

சில உறுப்பினர்கள் ஆதாரை எதிர்த்தார்கள். நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, ஆதார் என்பது பெரிய விஷயம் ! ஆதார் அடிப்படையில் பணியாற்ற நாங்கள் முயற்சிக்கும் போது, அது தொந்தரவானது! அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று ஆதாரை தடுக்கப் பார்த்தார்கள். நாம் நவீன இந்தியாவாக மாற, புதிய இந்தியாவாக மாற விரும்பினால், தொழில்நுட்பத்தில் இருந்து நாம் விலகியிருக்க முடியுமா? பாதுகாத்துக் கொள்வது என்பது தொழில்நுட்பத்தின் தேவை. ஆனால், இதில் இருந்து நாம் தப்பி ஓடிவிட முடியுமா?

ஜி.எஸ்.டி., மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், டிஜிட்டல் வி- மேப், எல்லாமே எதிர்க்கப்பட்டன. எல்லாவற்றிலும் எதிர்மறையான நிலை! கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலங்களவையில் அரசுக்கு தடங்கல்களை ஏற்படுத்தி வந்த அனைத்து கட்சிகளையும், வாக்காளர்கள் தண்டித்துள்ளனர். இப்போது மாநிலங்களவையின் அனைத்து நடவடிக்கைகளையும் வாக்காளர்கள் கவனிக்கிறார்கள். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கட்சிகள் எப்படி செயல்பட்டன என்பதை வைத்து, வாக்களிக்கும் போது அவர்கள் முடிவு செய்கிறார்கள். இந்தத் தேர்தலில் அது தெரிந்திருக்கிறது. அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

புதிய இந்தியா என்ற சிந்தனைக்கு எதிர்ப்பு இருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அதற்கு என்ன காரணம்? உங்களுடைய ஐந்து கருத்துகள் சரியாக இருக்கின்றன, மற்ற எல்லாம் தவறாக இருக்கின்றன என்று கூறுங்கள் பார்க்கலாம்.

புதிய இந்தியா என்பது இந்தியாவை வளர்ச்சி அடையச் செய்வது; ஆனால் இதை அமெரிக்காவோ, வேறு எந்த நாடுமோ செய்யவில்லை என்று சிலர் கூறக்கூடும். ஆகவே நாம் அதை செய்யக் கூடாது என்பார்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட்டுவிடுங்கள். நமது நாட்டின் வரலாறு 5000 ஆண்டுகள் பழமையானது. நாம் மகத்தான பாரம்பரியம் மற்றும் மாண்புகளைக் கொண்ட மக்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட்டுவிடுங்கள். உலகிற்கு நாம் ஓர் உதாரணத்தை உருவாக்க வேண்டும்.

125 கோடி மக்கள் ஏன் பெரிதாகக் கனவு காணக் கூடாது? 10 விஷயங்கள் சரியானதல்ல என்று நாம் கூறலாம். ஆனால் குறைந்தபட்சம் ஐந்து விஷயங்கள் சரியானவையாக இருக்கும். அந்த ஐந்து விஷயங்களில் நாம் முயற்சிகள் எடுப்போம். நமது நாட்டு மக்களை நம்பிக்கையற்ற, உதவாக்கரை நிலைமைக்குத் தள்ளிவிடும் பாவத்தை நாம் செய்ய வேண்டாம். அதில் நாம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். ஆனால், பழைய இந்தியா தான் வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக நாம் கூறலாமா? செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சரவை முடிவு கிழிக்கப்பட்ட பழைய இந்தியாவை நாம் விரும்புகிறோமா? இந்திய கடற்படையை சுற்றுலாவுக்குப் பயன்படுத்திய பழைய இந்தியாவை நாம் விரும்புகிறோமா? கடற்படை, ராணுவம், விமானப் படைகளில் ஊழல்கள் அல்லது துக்கடா  கும்பலை ஆதரிக்கும்   பழைய இந்தியாவை நாம் விரும்புகிறோமா ? அந்த இந்தியாவையா நாம் விரும்புகிறோம்?

ரயில் பயணச் சீட்டு வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பழைய இந்தியாவை நாம் விரும்புகிறோமா அல்லது இடைத்தரகர்கள் இல்லாமல் ரயில் முன்பதிவு செய்வதை சாத்தியமாக்கும் இந்தியாவை விரும்புகிறோமா? சமையல் எரிவாயு இணைப்புகள் பெறுவதற்கு எம்.பி.க்களின் வீடுகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த அல்லது பாஸ்போர்ட்டுக்கு மாதக் கணக்கில் காத்திருந்த பழைய இந்தியாவை விரும்புகிறோமா? இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியமான இந்தியாவை அல்லது பியூன்கள், ஓட்டுநர்கள், வாட்ச்மேன் பணிகளுக்கு நேர்காணல்கள் நடத்தி, அதன்பேரில் ஊழலில் ஈடுபடும் பழைய இந்தியாவை விரும்புகிறோமா? பழைய காலத்துக்குத் திரும்பிச் செல்ல இந்த நாட்டு மக்கள் அறவே விரும்பவில்லை. தங்கள் கனவுகள் நிறைவேற புதிய இந்தியா உருவாக வேண்டும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடிமகனின் இந்தக் கனவுகளை நிறைவேற்ற நாம் உறுதியான முயற்சிகள் எடுக்க வேண்டும்.

முன்பு, குத்துவிளக்கு ஏற்றுதல், ரிப்பன்கள் வெட்டுதல், திட்டங்களை அறிவித்தல் ஆகியவை தான் அரசின் பணிகளாகக் கருதப்பட்டன.

முன்பு ஏழைகளுக்காக வீடுகள் கட்டப்பட்டன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் வீடுகள் கட்டப்படவில்லையா? அவர்கள் கட்டினார்கள். நாங்களும் கட்டினோம். புதிதாக நாங்கள் என்ன செய்தோம் என்று நீங்கள் கேட்பீர்கள். புதிய விஷயம் என்னவென்றால் – நீங்கள் 5 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகள் கட்டினீர்கள். நாங்கள் 5 ஆண்டுகளில் 1.5 கோடி வீடுகள் கட்டினோம். எனவே, ஆட்சி நிர்வாக முறையை நாங்கள் எளிமைப்படுத்தி இருப்பதாக நான் நம்புகிறேன். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகிவிட்ட பிறகும், சுதந்திர இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றுவதில் அலட்சியம், அதிகாரம், அழுத்தம் ஆகியவை தடைகளை ஏற்படுத்தி வந்திருப்பதை நாம் காண்கிறோம். சில மக்கள் குறைபாடுகளுடன் வாழ்ந்தாக வேண்டிய சூழ்நிலையில் சிலவற்றை அரசாங்கம் செய்தது. அதிகாரத்தால் சிலர் வெறுப்படைந்தனர். சிலர் அழுத்தங்களுக்கு ஆட்பட்டு, தவறான பாதையில் சென்றனர்.

நாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சியில் உள்ள குறைபாடுகள் பற்றி அரசு நிச்சயமாக யோசிக்க வேண்டும். அதிகாரம் மற்றும் அழுத்தத்தால் சாமானிய மக்கள் நசுக்கப்படாத வகையில் அரசு சிந்திக்க வேண்டும். நாங்கள் அதுபோன்ற அணுகுமுறையை பின்பற்றி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில் பணியாற்றி வருகிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லை. சமையல் எரிவாயு அல்லது கழிப்பறை வசதி கிடையாது. அவர்கள் பெரிய சீர்திருத்தம் பற்றிப் பேசினார்கள். ஆனால் சிறிய சீர்திருத்தங்கள் மூலம் நாட்டில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிறிய விஷயங்களை அவமானமாக நாம் கருதக் கூடாது. நாம் உயர்வானவர்களாக இருக்கக் கூடாது. சாதாரண மக்கள் மத்தியில் சிறிய இடத்தில் இருந்து நாம் உருவாகி இருக்கிறோம். அந்த சாமானிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது, பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். அதனால் தான் அதுகுறித்து நாங்கள் பணியாற்றத் தொடங்கினோம்.

விளம்பரமும் விழிப்புணர்வுப் பிரச்சாரமும்

திரு. ஆசாத் அவர்களே, நீங்கள் சுகாதார அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். சில சமயங்களில் விளம்பரத்துக்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கும் இடையில் நாம் வித்தியாசத்தைக் காட்டியாக வேண்டும். மனப்போக்கு மாற்றம் பற்றிப் பேசும் விளம்பரத்தை அரசின் விளம்பரமாகக் கருதக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளைக் கழுவுங்கள் என்று பிள்ளைகளுக்குக் கூற விரும்பினால், அதற்கு ஒரு பிரச்சார இயக்கத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான செலவுகளை அரசு ஏற்கிறது என்றாலும், அது அரசின் விளம்பரம் கிடையாது. நீங்கள் சுகாதார அமைச்சராக இருந்தபோது, பெரிய நோய் பாதிப்பு ஏற்பட்டபோது, தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள் எனஅறு நீங்களும் விளம்பரங்கள் செய்தீர்கள். நீங்கள் `பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்பதை விளம்பரம் என்று சொல்வது சரியானதாக இருக்காது.

ஆனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மக்கள் ஓர் இடத்தில் இருந்து மண் எடுத்து வேறு இடத்தில் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பது உண்மையில் வலி மிகுந்ததாக இருக்கிறது. மூன்று நெடிய ஆண்டுகளாக விளம்பரம் செய்யப்பட்டாலும், மனப்போக்கு மாற்றத்துக்கான பிரச்சார இயக்கமாக இது இல்லை. ஒரு தலைமையை உருவாக்குவதற்காக அரசின் செலவில் விளம்பரங்கள் அளிக்கப்பட்டன. நாடு அதை ஒருபோதும் மறக்காது. சாப்பிடுவதற்கு முன்பு கைகளைக் கழுவுங்கள் என்று மக்களை கேட்டுக் கொள்வது பழக்கவழக்க மாற்றம் பற்றியது. விளம்பரத்துக்கும், விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாடு எப்படி மாற்றத்தை சந்திக்கும்?

தடுப்பூசி போடுதல் மற்றும் பாதுகாப்பான தாய்மைக்கு முன்னுரிமை அளித்தல்

ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த விஷயத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களும் எனக்கு பாராட்டு தெரிவித்தார்கள். தங்களுடைய தொகுதியைச் சேர்ந்த நோயாளிகளுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யுமாறு அவர்கள் எனக்குக் கடிதங்கள் எழுதும் போதெல்லாம், ஏழைகள் விஷயத்தில் விதிமுறை புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று நான் கூறுவேன்; அவர்களுக்கு நூறு சதவீத உதவி அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுவேன். இதற்காக ஏறத்தாழ அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் என்னிடம் வருவது வழக்கம்.

தங்கள் தொகுதியில் உள்ள ஏழை நோயாளிகளுக்கு உதவி கேட்டு பிரதமருக்குக் கடிதம் எழுதும் எம்.பி.க்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சக்தி பற்றி தெரியும். இப்போது, எந்த எம்.பி.யும் இதுபோன்று எனக்குக் கடிதங்கள் எழுதுவதில்லை. ஏனென்றால், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஏழைகள் பயன் பெறுகிறார்கள்; எனவே, பிரதமர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியதில்லை  என்று அவர்கள் அறிந்துள்ளனர். இது பெரிய மாற்றம். இதுவரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 30 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.

நாம் மக்களின் பிரதிநிதிகள். நாம் மக்களை சந்திக்கிறோம். நான் எதிர்மறையான விஷயத்தை அல்லது ஏதும் குறைபாட்டைக் கண்டால், அதை என் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என மக்களிடம் சொல்கிறேன்; நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை சரி செய்வோம். நாம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை வெற்றிகரமாக்கினால், நாட்டில் ஏழை மக்களுக்கு உண்மையான உதவி செய்வதாக இருக்கும். நடுத்தர வர்க்கத்தில் அடியெடுத்து வைக்கும் ஏழை ஒருவருடைய 20 ஆண்டு சேமிப்பை ஒரு நோய் கரைத்துவிட முடியும். இது மனிதாபிமானத் திட்டம். எனவே தயவுசெய்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைக் குற்றம் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பிகாரில் மூளைக்காய்ச்சல் பற்றி இங்கு நாம் விவாதித்தோம். அது நம் எல்லோருக்கும் வலி மிகுந்த மற்றும் அவமானகரமான விஷயம். ஒரு சமூகமாக, ஓர் அரசாக கடந்த ஏழு தசாப்தங்களாக நாம் எந்த தோல்விகளை சந்தித்திருந்தாலும், அவை எல்லாவற்றையும் விட மிகப் பெரிய தோல்விகளில் இதுவும் ஒன்று. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் நிலைமை சற்று மேம்பட்டிருப்பதை நான் பார்த்தேன், இருந்தாலும் அதற்கு நான் பெருமைப்படவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைவருக்கும் நோய்த் தடுப்பூசி போடுதல் மற்றும் பாதுகாப்பான தாய்மைக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இந்த வலிமிகுந்த சூழ்நிலையில் நான் மாநில அரசுகடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக சுகாதாரத் துறை இணை அமைச்சரை நான் அனுப்பியிருக்கிறேன். சத்துணவாக இருந்தாலும், பாதுகாப்பான தாய்மையாக இருந்தாலும், அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயன்களாக இருந்தாலும், இவை பற்றி நாம் அதிகம் விளம்பரம் செய்தால், இதுபோன்ற நெருக்கடிகளை அதிகம் தவிர்க்க முடியும். இப்போது ஒரு மாநிலத்தில் இந்த நோய் தாக்கியுள்ளது. நாளை வேறொரு மாநிலத்துக்கு அது பரவக்கூடும். நாம் ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை நாம் காப்பாற்ற முடியும்.

உயர் லட்சியம் கொண்ட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

 அனைவரோடும் சேர்ந்து, அனைவரின் வளத்திற்காகவும்” என்பது வெறும் அரசியல் கோஷம் அல்ல. நமது நாட்டில் சில பகுதிகள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. உயர்லட்சியம் தேவைப்படும் 112 மாவட்டங்களை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக சில மாநிலங்கள் அதற்கு அச்சம் கொள்கின்றன. இதில் அரசியல் எங்கே இருக்கிறது என எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. நான் குஜராத்தில் இருந்தபோது, ஒருவரை கட்ச் பகுதிக்கு இடமாறுதல் செய்தால், நான் தண்டித்துவிட்டதாக அவர் கவலைப்படுவது வழக்கம். எந்த அதிகாரிக்கும் அங்கு செல்ல விருப்பம் கிடையாது. இப்போது நாட்டில் வேகமாக வளரும் மாவட்டங்களில் ஒன்றாக கட்ச் மாறியுள்ளது. நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த மனோநிலையை மாற்றுவதற்கு நாம் இளம் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும். இந்த மாநிலங்களுடன் நான் பேசியுள்ளேன். இளம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு, இந்த 112 மாவட்டங்களும் தினமும் கண்காணிக்கப் படுகின்றன. சில அம்சங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அனைவரோடும் சேர்ந்து, அனைவரின் வளத்திற்காகவும்” என்பதன் மூலம்,, பின்தங்கிய மாவட்டம் எதுவாக இருந்தாலும், அதன் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நான் சொல்ல வருகிறேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் நாங்கள் கவனம் செலுத்தினோம். நல்லதொரு சூழ்நிலை அங்கு உருவாக்கப் பட்டுள்ளது. அதற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. தேசத்துக்கும் எனக்கும் வடகிழக்குப் பகுதி மிக முக்கியமானதாக உள்ளது. எனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சர்கள் கட்டாயமாக அங்கு செல்ல வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. மாநிலத் தலைநகர்களில் மட்டுமின்றி, ஏதாவது அல்லது வேறு மாவட்டத்தில் ஓர் இரவு தங்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது. நாட்டில் அனைத்துப் பகுதிகளும் புவியியல் ரீதியாக நல்ல வளர்ச்சி காண வேண்டும் என்பது தான்  “அனைவரோடும் சேர்ந்து, அனைவரின் வளத்திற்காகவும்” என்ற முயற்சியில் எனது சிந்தனையாக உள்ளது.

மக்களின் உயர் விருப்பங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூர்த்தி செய்தல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் கடினமாக முயற்சிகள் செய்தோம் என்பது நிதர்சனமான உண்மை. அதன் பலன்கள் பெரிய அளவில் வெளியில் தெரிகின்றன. ஆனால் இப்போது தேவைகள் என்பதைத் தாண்டி, உயர் லட்சியங்களை நிறைவேற்றுவது என்ற நிலைக்கு நாடு மாறியுள்ளது. நாம் அதிர்ஷ்டசாலிகள் என்று நான் நம்புகிறேன். நாட்டில் அரசியல், சமூக, தொழில், கல்வி போன்ற விஷயங்களில், குடிமக்கள் அனைவருக்கும் உயர்விருப்பம் உள்ளது என்பதால் நாம் அதிர்ஷ்டசாலிகள். மனிதர்களான நமக்கு உயர் லட்சியங்கள் இருக்கும்போது, பணிகள் உத்வேகம் பெற்று, வளர்ச்சிப் பணிகள் துரிதமாக நிறைவேற்றப் படுகின்றன. இவையனைத்தும் அதிர்ஷ்டகரமான தருணங்கள். எனவே, சாமானிய மக்களின் உயர் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் நம்முடைய ஒவ்வொரு முடிவும் அமையும் வகையில் செயல்பட வேண்டியது நமது பொறுப்பாக உள்ளது.

கழிவறைகள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்து கிண்டலடிக்கும் அளவுக்கு எதிர்மறை கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புகள் தெரிவிக்கும் நிலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் போன்ற அம்சங்கள் குறித்தும் கூட, நாட்டில் எதிர் கருத்துக்களை பார்த்து வருகிறோம். வெளிநாடுகளுக்கு செல்வதைப் போல, இதுபோன்ற செயல்களுக்கும் நாம் கோரிக்கை விடுக்க வேண்டியுள்ளது.

மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும், இந்திய மக்கள் எடுத்த முடிவுகளை குறைத்து மதிப்பிட முயற்சி மேற்கொள்ளக் கூடாது. மதிப்புமிகு தலைவர் அவர்களே, இதனை 5 ஆண்டுகளாக நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, தலைவர் அவர்களே, மக்கள், தங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் பொறுப்பை, மக்களவையில் முழுப் பெரும்பான்மையுடன் எங்களிடம் வழங்கியுள்ளனர். மாநிலங்களவையின் கூட்டாட்சி கட்டமைப்பும் கூட, எங்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதையே குறிப்பிடுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் அளவுக்கான பொருளாதாரமாக மாற்றும் எதிர்பார்ப்புடன், புதிய இந்தியா என்ற கனவுடன் நாங்கள் முன்னேறி வருகிறோம்.

2014-ம் ஆண்டுவரை, இந்தியா 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருந்தது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இது 2.80 டிரில்லியன் பொருளாதாரமாக மாறியுள்ளது. சுதந்திரமடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, இது 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறியது. எனினும், 5 ஆண்டுகளில் இரண்டு மடங்கை நெருங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது. 5 ஆண்டுகளில் பகுதி அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்றால், வரும் 5 ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். இரண்டாவதாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு 5 டிரில்லியன் டாலர்கள் என்ற இலக்கை ஏன் நிர்ணயித்தோம் என்று நாம் கேள்வி எழுப்பக் கூடாது. அதற்கு மாறாக, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்காக ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

நாம் எந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ளோமோ, அங்கெல்லாம், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடுமையாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். நீங்கள் எந்த மாநிலத்திலெல்லாம் ஆட்சியில் உள்ளீர்களோ, அங்கேயும் நீங்கள் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், 5 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விரைவில் மாறும். இதனால், ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைவோம்! எனவே, நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருங்கள். உங்களது பேச்சுக்களைக் கேட்க தயாராக உள்ளோம். உங்களது யோசனைகளை ஏற்றுக் கொள்கிறோம். உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளோம். ஏனெனில், நாங்கள் நாட்டை வழிநடத்த வேண்டும். மேலும், அதன் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும். எனவே, இந்த சிந்தனைகளுடன் நாம் அனைவரும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மேலும் சில கருத்துக்களை நான் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. கும்பலாக அடித்துக் கொலை செய்தல் மற்றும் கும்பல் வன்முறையின் மையமாக ஜார்க்கண்ட் மாறிவிட்டதாக இந்த அவையில் தெரிவிக்கப்பட்டது.

மதிப்புமிகு தலைவர் அவர்களே,

இளைஞர்கள் கொல்லப்படுவதைப் பார்த்து, நாம் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளோம். தாக்குதல் நடத்துவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்! ஆனால், ஜார்க்கண்ட் மாநிலத்தை மட்டும் குறைகூறுவது சரியா? அங்கு யாரும் நல்ல செயலைச் செய்வதை நாம் கண்டுபிடிப்பதில்லை. அத்துமீறுபவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். மேலும், சட்டரீதியாக அவர்களை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரையும் குறைகூறி, நாம் அரசியல் செய்ய முடியும். ஆனால், நிலைமையில் மாற்றம் ஏற்படாது. எனவே, ஜார்க்கண்டை குறைகூட நம்மில் யாருக்கும் உரிமை கிடையாது.

குற்றம் நடைபெற்றால், அதற்கு நீதி வழங்கும் திறனை அரசியல்சாசனம், சட்டம் மற்றும் கட்டமைப்பு பெற்றுள்ளது.

நல்ல தீவிரவாதம் மற்றும் கெட்ட தீவிரவாதத்துக்கு இடையேயான வேறுபாடு, உலகுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட், மேற்குவங்கம் அல்லது கேரளா என எதுவாக இருந்தாலும், வன்முறை சம்பவங்களை மதிப்பிட ஒரே அளவீடு இருக்க வேண்டும். அப்போது மட்டுமே, வன்முறையை நம்மால் தடுக்க முடியும் மற்றும் வன்முறையை தூண்டிவிடுபவர்கள், பாடம் கற்றுக் கொள்வார்கள்.

இந்த ஒரு கருத்தில், தேசமே ஒத்த நிலைப்பாட்டில் உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை சிந்தித்து, தங்களது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுவதற்கு பல்வேறு பகுதிகள் உள்ளன. அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது நமது அரசியல்சாசன கடமை என்று நான் நம்புகிறேன். அதேநேரத்தில், மனிதநேயத்தின் மீது பரிவுகாட்ட வேண்டியது நமது பொறுப்பு. நாம் இதனை மறுக்க முடியாது. இதே உணர்வுடன் நாம் முன்னோக்கி செல்வோம்.

அனைவருடனும் இணைவோம், அனைவரும் வளர்ச்சி பெறுவோம் என்ற மந்திரத்திலிருந்து நாங்கள் தொடங்கினோம்; 5 ஆண்டுகள் இடைவிடாது அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால், மற்றொரு வார்த்தையை மக்கள் சேர்த்துள்ளனர் – அது அனைவருக்குமான நம்பிக்கை. 

ஆனால், நமது குலாம் நபி ஆசாத் அவர்களால் இதனை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அனைத்தையும் அரசியல் கண்ணாடி கொண்டு பார்க்கும் வரை, மூட்டமாகவே தெரியும். இந்த அரசியல் கண்ணாடிகளை அகற்றிவிட்டு, நாம் பார்க்கத் தொடங்கினால், நம்மால் சிறப்பான எதிர்காலத்தைப் பார்க்க முடியும்.

 

இங்கு ஏராளமான உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சில நேரங்களில் இதனை செய்தித்தாள்கள் வெளியிடுகின்றன. இருந்தாலும், செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டங்களில், நான் பொதுப்படையாக பார்க்கும்போதெல்லாம், எனது கோபத்தை நான் வெளிப்படுத்துகிறேன். சூழ்நிலைகளை மேம்படுத்த நான் முயற்சி மேற்கொள்கிறேன். சுயேட்சை வேட்பாளர் நமது வேட்பாளராக மாறிவிட்டார் என்றும், வெற்றிபெறுவதற்கு உதவுகிறார் என்றும் பல்வேறு புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் நாம் பெற்றுள்ளோம். இது சில கட்சிகளின் வரலாறு. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் கூட தோல்வியடைகிறார். இது தனிநபர் அரசியல். பாபா சாகேப் அம்பேத்கரைக் கூட தோற்கடிக்க அவர்கள் முயற்சித்தார்கள். எனவே, பாடம் நடத்துவதற்கு முன்னதாக, அவர்கள் தங்களுக்குள் பார்க்க வேண்டும்.

 

எதை வேண்டுமானாலும் மற்றும் அனைத்தையும் பேசுவதற்கு உரிமம் பெற்றுள்ள அளவுக்கு பொது வாழ்வில் நாங்கள் ஒன்றும் மிகப்பெரியவர்கள் இல்லை. இதனையே எனது கட்சி உறுப்பினர்களுக்கும் நான் தெரிவிக்கிறேன். யாருக்கும் எதனையும் தெரிவிப்பதற்கு நமக்கு உரிமை கிடையாது. நமது எல்லைக்குள் இருந்துகொள்வதுடன், பொது வாழ்க்கைக்கான விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். குறிப்பாக, இதுபோன்ற செயலை செய்வது நல்லது இல்லை என்று, எனது கட்சித் தொண்டர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

அசாம் ஒப்பந்தத்தில் தேசிய குடிமக்கள் பதிவை ராஜீவ் காந்தி அரசு ஏற்றுக் கொண்டது. பின்னர், உச்சநீதிமன்றம் தலையிட்டது. நாங்கள் இதனை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியே செயல்படுத்தி வருகிறோம். உடன்பாட்டை மேற்கொண்டதற்காக பாராட்டுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, பாராட்டுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள். அதன்பிறகு, பகுதியளவு உண்மையை அனைவருக்கும் நீங்கள் தெரிவிக்கலாம். ஆனால், இது நடைபெறவில்லை. குறைந்தபட்சம், சில விவகாரங்களையாவது நீங்கள் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவு குறித்து அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவை செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்களுக்கு இது வாக்கு வங்கி அரசியல் கிடையாது. இது நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் வளமான எதிர்காலம் குறித்த கேள்வி. நாங்கள் இதனை செய்வோம் !

 

சர்தார் வல்லபாய் படேல் குறித்து இங்கு குறிப்பிட்டார்கள். நான் இதனை மகிழ்ச்சியாக உணர்கிறேன். நாட்டின் முதலாவது பிரதமராக சர்தார் அவர்கள் இருந்திருந்தால், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் ஏற்பட்டிருக்காது என்று இன்னும் நாங்கள் நம்புகிறோம். ஆனால், இதனை காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். சர்தார் அவர்கள் முதல் பிரதமராக இருந்திருந்தால், நாட்டில் உள்ள கிராமங்கள் இன்று எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொண்டிருக்காது. இன்று நாடு மாறுபட்ட கோணத்தில் இருந்திருக்கும். இதுவே எங்களது சிந்தனை. இது தவறாகக் கூட இருக்கலாம். நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சராக காங்கிரஸால் நியமிக்கப்பட்ட சர்தார் அவர்கள், 500-க்கும் மேற்பட்ட மாகாணங்களை ஒருங்கிணைத்தார் என்ற உண்மையில் இரு மாறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. அவர் காங்கிரஸுக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். மேலும், காங்கிரஸுக்காகவே தனது உயிரைத் துறந்தார்.

 

குஜராத்தில் நடைபெறும் தேர்தல்களின்போது, சர்தார் அவர்களின் சுவரொட்டிகளைக் காண முடியும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல்களில் எங்கும் காண முடியவில்லை. அவர் உங்களது கட்சியைச் சேர்ந்தவர். அவருடன் உங்களுக்கு என்ன பிரச்னை? இன்று காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது என்னவென்றால், உலகின் மிகப்பெரிய சிலையான, ஒற்றுமையின் சிலை அமைந்திருக்கும் பகுதிக்கு சென்று, சர்தார் அவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள் என்பதுதான். குஜராத்தில் குலாம்நபி அவர்கள் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

 

பழைய விதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவரத்தை நான் இங்கு தெரிவிக்க அனுமதியுங்கள். விமான நிலையம் அல்லது அணை இருக்கிறது என்றால், அங்கு “புகைப்படம் எடுக்க அனுமதியில்லை” என்ற பலகை இருக்கும். இன்று, விண்வெளியில் இருந்தவாறே, வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தின் எண் பலகையைக் கூட புகைப்படமாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளோம். ஆனால், பழைய சட்டங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. திக்விஜய் சிங் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது, சர்தார் சரோவர் அணை நிரம்பி வழிந்தால், அந்தப் பகுதிக்கு செல்ல மக்களை அனுமதிக்கவில்லை. நான் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, இந்த விதியை மாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். மக்கள் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும். அதன் பிறகு, நுழைவுக்கட்டணத்தை வசூலிக்க முடிவுசெய்தேன். இதன்மூலம், மக்களுக்காக சிறந்த வாகன நிறுத்துமிடத்தை அமைக்க முடியும். அதன்பிறகு, 5 லட்சமாவது பார்வையாளர் கவுரவிக்கப்பட்டார். 5 லட்சமாவது பயணியாக, பாரமுல்லாவிலிருந்து புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதி வந்தனர். அவர்களை நாங்கள் கவுரவித்தோம். எந்த அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டன என்பதைப் பாருங்கள். எனவே, ஒற்றுமையின் சிலை அமைந்திருக்கும் பகுதியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தை உங்களால் நடத்த முடியும் என்று நான் கூறுகிறேன். அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். தேசத்தின் நாயகர்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.

 

நீர் சேமிப்பிலிருந்து புனல் மின்சாரம்:

 

சமீபத்திய நாட்களில், நான் நீர் ஆய்வை நடத்தினேன். நீர் தொடர்பான பிரச்னைகளை ஏறத்தாழ 226 மாவட்டங்கள் எதிர்கொண்டு வருகின்றன. நான் ஒவ்வொருவரையும் ஒன்று திரட்டினேன். நீர் சேமிப்பில் மாற்றத்தை ஏற்படுத்த நீங்களும் உதவ வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நீருக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க முடியும்? அந்தப் பணிகளுக்கு நிதியை எவ்வாறு அளிக்க முடியும்? இந்தப் பிரச்னையிலிருந்து நாட்டை மீட்டெடுப்போம். நீர் தொடர்பான விவகாரங்கள் மற்றும் சேமிப்பு குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இதன்மூலமே, நீர் பிரச்னைகளிலிருந்து எதிர்கால சந்ததியினர் பாதுகாக்கப்படுவார்கள். எனவே, ஜல்சக்தி அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கியுள்ளோம். இது நீரை சேமிப்பதற்கான வழியில் பணியாற்றும்.

 

நான் முன்னதாகவே கூறியது போல, நாட்டை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக நாம் மாற்ற வேண்டும். திவாலாதல் சட்டம் தொடர்பாக இங்கு விரிவான விவாதம் நடத்தப்பட்டது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், கடன்மீட்பு மற்றும் திவாலாதல் விதிகள் ஆகியவற்றை கொண்டுவந்ததன் மூலம், வங்கிகளுக்கு ரூ.3 லட்சம் கோடி பணம் திரும்ப வந்துள்ளது. இந்த சூழலில் சாதகமான செயலைப் பார்க்க வேண்டும். இதற்கான தீர்வுகளைக் கண்டறிய நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இந்த முயற்சிகளுக்கான பலனை, விரைவில் நாம் அடைவோம் என்று நான் நம்புகிறேன். ஒருங்கிணைந்த கூட்டாட்சி குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. நமது அரசியல்சாசனத்தை வடிவமைத்தவர்கள், நீண்டகால கனவுடன் கூடிய திட்டத்தை வழங்கியுள்ளார்கள் என்று நான் நம்புகிறேன். இதன்மூலம், நாட்டை ஒருங்கிணைத்து நாம் முன்னேற முடியும்.

 

ஒருங்கிணைந்த போட்டி நிறைந்த கூட்டாட்சி முறை – மாநிலங்களுக்கு இடையே போட்டிகளை ஏற்படுத்தும் சூழலை உருவாக்க இது அவசியமானது. NARA என்ற மந்திரத்துடன், அதாவது, பிராந்திய விருப்பங்களுடன் கூடிய தேசிய இலக்கு என்ற மந்திரத்துடன் நாம் முன்னேற வேண்டும். ஆனால், ஒற்றுமையாக இருக்கக் கூடிய விவகாரங்கள் இருக்க முடியாதா? என்பதே கேள்வி. இது செயல்படுத்த முடியாததா? நாம் அனைவரும் ஒருமித்த செயல்பாட்டுடன் பணியாற்றும் சூழலை உருவாக்க முடியாதா?

 

காந்தியின் 150-வது ஆண்டு, சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு ஆகியவை இதுபோன்ற வாய்ப்புகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சிகளில் நாம் ஒவ்வொருவரும் கைகோர்த்து செயல்பட முடியாதா? கூட்டாட்சி கட்டமைப்பின் ஒரு அங்கமாக மாநிலங்களவை இல்லையா? நாம் சுதந்திரமான பிரிவா? இல்லை! இதே அமைப்பின் ஒரு அங்கமாக நாம் உள்ளோம். மக்களவை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது.

 

எங்களுக்கு போதிய எண்ணிக்கை இல்லை என்பதற்காக நீங்கள் தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வருவீர்களா? எங்களை அவமானப்படுத்துவதால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்று எனக்குப் புரிகிறது. ஆனால், நாட்டின் நிலை என்ன? நான் யாரையும் குறைகூறவில்லை. நான் பகுப்பாய்வு மட்டுமே செய்கிறேன்.

 

கடந்த 5 ஆண்டு காலத்தில், நிறைவடையும் தருவாயில் உள்ள பல்வேறு பணிகளை நிறுத்தியுள்ளோம். மாநிலங்களவையில் நிறைவேறாததால், காலாவதியான மசோதாக்கள், மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. மீண்டும் பணிகளை மேற்கொள்வதால் பெருமளவில் செலவு ஏற்படுகிறது; வரி செலுத்துவோரின் பணம் இதற்கு செலவிடப்படுகிறது. நாடாளுமன்றத்தின் அதிக அளவிலான நேரம் வீணடிக்கப்படுகிறது. நமது மாநிலங்களவையால் கூட மசோதாக்களை நிறைவேற்ற முடியும். ஏனெனில், இது ஆரோக்கியமான கூட்டாட்சி அமைப்பின் ஒரு அங்கமாக உள்ளது. கூட்டாட்சி கட்டமைப்பு உணர்வுடனேயே முன்னோக்கி செல்ல வேண்டியது இதன் பொறுப்பு.

 

எங்களுடன் நீங்கள் ஒத்துப்போகிறீர்களா அல்லது இல்லையா என்பது உங்களது விருப்பம். ஆனால், நாம் அனைவரும் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். நான் ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். பிரணாப் அவர்கள் மிகவும் முக்கியமான விஷயத்தை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்கள். அதாவது, “பெரும்பான்மையானவர்கள் ஆட்சி செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள், சிறுபான்மையினர் எதிர்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்,” என்று கூறினார். இந்த விவகாரத்தில் இரண்டு கருத்துக்கள் இருக்கும் என்று நான் கருதவில்லை. ஆனால், முன்னாள் குடியரசுத் தலைவர் மேலும் கூறும்போது, “தடையை ஏற்படுத்தும் வாய்ப்பை யாரும் பெறவில்லை,” என்றார். இதே கருத்துடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலமே, கூட்டாட்சி கட்டமைப்பு, உண்மையான உணர்வுடன் பணியாற்றும். மாநிலங்களின் பிரதிநிதியாக மாநிலங்களவை உள்ளது. மாநிலங்களின் விருப்பங்கள் உங்கள் மூலம் வெளிப்பட வேண்டும். உங்களது கட்சி என்ற நிலைப்பாட்டுக்கு மேலாக, உங்களது மாநிலத்தின் நலனுக்காக உங்களது குரலை உயர்த்த வேண்டும்.

 

இந்தியா போன்ற நாடுகளில், ஒரே நேரத்தில் அனைத்தையும், அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவது என்பது சிரமமானது. சில மாநிலங்கள் முன்னதாகப் பெறலாம். மற்ற மாநிலங்கள் தாமதமாகப் பெறலாம். சில மாநிலங்கள் பெறாமலேயே போகலாம். இது நடைபெறும். இதற்கு முன்னதாகவும் இது நடந்துள்ளது. எனினும், அவையில் அதிக அளவிலான உறுப்பினர்கள் உள்ளார்கள் என்பதற்காக அவையின் நடவடிக்கைகளை நிறுத்துவது சரியா? கடந்த முறை அவை நடவடிக்கைகள் முடிவடைந்தபோது, ஆனந்த் சர்மா அவர்களும், குலாம்நபி ஆசாத் அவர்களும், சிலவற்றை நாம் செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். சில மாநிலங்களின் பிரச்சினை இருக்கும். ஆனால், சில எம்.பி.க்கள் அல்லது மற்ற எம்.பி.க்கள் அவையின் நடவடிக்கைகளை தடுக்கின்றனர்; இது சரியானது இல்லை.

 

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து அவையை நடத்த வேண்டும் மற்றும் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் நம்புகிறேன். காந்தியின் 150-வது ஆண்டு மற்றும் 75-வது சுதந்திர தினம் ஆகியவை ஊக்குவிப்பு மையமாக இருப்பதாக நான் நம்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றாக தலைமைப்பண்பை ஏற்று, முன்னோக்கி வருமாறு மக்களை கேட்டுக் கொள்ளவும், சிலவற்றை செய்யவும் அதுவே உகந்த நாளாக இருக்கும். மக்களின் பணி மற்றும் பொறுப்புணர்வை நம்மால் விழித்தெழச் செய்ய முடியும். இதன்மூலமே, ஒவ்வொருவரும் சிலவற்றை தியாகம் செய்ய முன்வருவார்கள். பள்ளிகளில் சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை கழுவுமாறு மாணவர்களுக்கு கற்பித்தால், அதனை செயல்படுத்த முடியும். காந்தி 150 குறித்து விதிகளை நம்மால் உருவாக்க முடியும். எனது வாழ்க்கையில் புதிதாக சிலவற்றை செய்ய நான் முடிவுசெய்துள்ளேன். “நான் சிறுவன், இருந்தாலும் உணவை வீணாக்க மாட்டேன்,” என்பது போன்ற தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள முடியும்.

 

நமது பூமித் தாயின் ஆரோக்கியத்துக்காக யூரியாவை 10 சதவீதம் குறைவாக பயன்படுத்துவது என நமது விவசாயிகள் முடிவு செய்ய முடியும். 1942 முதல் 1947-ம் ஆண்டு வரையான காலத்தைப் பாருங்கள். இதுபோன்ற சிறிய செயல்கள் மூலம், ஒவ்வொருவரையும் பொறுப்புள்ள குடிமக்களாக மகாத்மா காந்தி அவர்கள் மாற்றினார்கள். நாம் புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. மகாத்மா காந்தி அவர்கள் காட்டிய வழியில் நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். நாட்டுக்காக சிலவற்றை செய்ய, நாம் முடிவு செய்ய முடியும். பணியின் உணர்வை நாம் தட்டியெழுப்ப வேண்டும். புதிய இந்தியாவைக் கட்டமைக்க நாம் ஒவ்வொருவரும் தனித்தனி மாதிரிகளை கொண்டிருக்கலாம். ஆனால், நாட்டை பழைய முறையில் நம்மால் வைத்திருக்க முடியாது. நாட்டின் இளைஞர்கள், தங்களது கனவுகளுக்கு ஏற்ப புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்.

 

இங்கு நடைபெறும் விவாதத்தில் கிடைக்கும் சிறந்த கருத்துக்களைப் பயன்படுத்த முடியும் மற்றும் நாட்டின் நலனுக்காக சில நடவடிக்கைகளை நம்மால் எடுக்க முடியும் என்று நம்புகிறேன்.

 

இந்த விவாதத்தில் பங்கெடுத்துள்ள ஒவ்வொருவருக்கும் மீண்டுமொருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உரைநிகழ்த்திய மேதகு குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

 

நன்றி!