பி.எம்.இந்தியா
செலவினத்தை விட, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளில்தான் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும்
இளைஞர்களின் மனதில் கண்டுபிடிப்பு ஆர்வத்தை தூண்ட வேண்டும்
ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்துவதில் ஆசிரியர்கள் தீவிர பங்குதார்ர்களாக செயல்பட வேண்டும்
ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
“உங்களுக்கும், ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் மகிழ்ச்சிகரமான ஆசிரியர் தின வாழ்த்துகள்!
கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டுடன் பணியாற்றும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் வணக்கம் செலுத்த வேண்டிய நாள் இது. வகுப்பறைகளில் பாடம் நடத்துவதோடு மட்டுமின்றி, தலைசிறந்த வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் ஆசிரியர்கள் திகழ்வதுடன், தங்களிடம் பயிலும் மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியப் பங்களிப்பை ஆற்ற வேண்டும்.
ஆசிரியர்களின் சுயநலமற்ற தன்மை, உலகெங்கும் போற்றப்படுகிறது, நேரம் மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே, மாணவர்கள் புதிய சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை எளிமையான முறையில் கற்றுக்கொள்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
முடிவுகள் பற்றி கவனம் செலுத்துதல்:
இன்று, இந்தியா கல்வித் துறையில் தலைகீழ் மாற்றத்தை சந்தித்து வருகிறது. செலவினத்தில் கவனம் செலுத்தும் வழக்கமான அணுகுமுறையை கைவிட்டு, அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளைப் பற்றி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில், இளைஞர்களின் மனதில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்த கடினமாக பாடுபட்டு வரும் ஆசிரியர்களை காணும்போது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற ஊக்குவிப்பு உணர்வுதான் நமது இளைஞர்கள், தங்களுக்காகவும், நாட்டிற்காகவும் தலைசிறந்த பணியாற்ற வழிவகுக்கிறது.
ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக்கை தடுக்க உதவி:
இந்த ஆசிரியர் தினத்தில், நமது சக ஆசிரியர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக்கை ஒழிக்க, இந்தியா மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்கியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த இயக்கத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு மற்றும் முழுமையான ஒத்துழைப்பை நான் கோருகிறேன். ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக்கால், நமது சுற்றுச் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆசிரியர்கள், மாணவர்களிடம் விளக்கிக் கூறி, இத்தகைய பொருட்களின் பயன்பாட்டை கைவிடுமாறு அறிவுரை கூறினால், மாணவர்களும் உற்சாகமடைந்து, இந்த இயக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொள்வார்கள். இதுவே, நமது பேரன்பிற்குரிய பாபுஜிக்கு (மகாத்மா காந்திக்கு) அவரது 150-வது பிறந்தநாளில் நாம் செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும்.
தலைசிறந்த ஆசிரியரும், வழிகாட்டியுமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனுக்கும், இந்நாளில் எனது மரியாதையை செலுத்துகிறேன். அவரது வாழ்க்கை, மேலும் பலர் ஆசிரியர் பணியில் சேர்ந்து இளைஞர்களின் மனதை வடிவமைப்பதில் உந்துசக்தியாக அமையும்.
மீண்டும் ஒருமுறை ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!”.
——–
ஸ்ரீ/எம்எம்/க