Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சட்டிஸ்கர் மாநிலத்தில் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவரம் குறித்து சட்டிஸ்கர் மாநில முதல்வருடன் பிரதமர் உயர்மட்ட அளவில் சீராய்வு

சட்டிஸ்கர்  மாநிலத்தில் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவரம் குறித்து சட்டிஸ்கர் மாநில முதல்வருடன் பிரதமர் உயர்மட்ட அளவில் சீராய்வு


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் சட்டிஸ்கர் மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை குறித்து ஆய்வு செய்வதற்கென நடத்தப்பட்ட உயர்மட்ட அளவிலான சீராய்வுக் கூட்டத்திற்கு இன்று தலைமை வகித்தார். சட்டிஸ்கர் மாநில முதல்வர் டாக்டர். ராமன் சிங் அவர்களும் இந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்றார். மத்திய அரசு மற்றும் சட்டிஸ்கர் மாநில மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாநில அரசின் கையிருப்பு அளவை சரிசெய்த பின்னர் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தின் கீழ் சட்டிஸ்கர் மாநிலத்திற்கு ரூ. 835.695 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகையானது 2015-16 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்கான மத்திய அரசின் பங்காக ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ. 249.725 கோடிக்கு மேல் வழங்கப்படுவதாகும். மேலும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 2016-17ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 94.875 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வறட்சி நிலையை சமாளிப்பதற்கான மாநில அரசு மேற்கொண்டுள்ள நீர் சேகரிப்பு முயற்சிகள் குறித்து மாநில முதல்வர் இக்கூட்டத்தில் விளக்கமளித்தார். மொத்தம் 8055 நீர்பிடிப்பு பகுதிகள், விவசாய குளங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட தூர் அகற்றும் பணிகள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 44,181 விவசாய குளங்கள், புதிதாக கட்டப்பட்டுள்ள 9851 நிலத்தடி நீர் புத்துயிர்ப்புக்கான கட்டமைப்புகள் ஆகியவையும் இவற்றில் அடங்கும். வறட்சி நிவாரணமாக மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளில் ஒவ்வொரு கிராமத்திற்கும் குடிநீர் வசதி மற்றும் உணவு தானியங்கள் ஆகியவற்றை வழங்குவதும் அடங்கும். கிராமங்களில் எவருமே பட்டினியால் வாடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு குவிண்டால் அரிசி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார். நீர்பிடிப்பு பகுதிகளை கண்டறியவும், பாசன வசதிக்கு திட்டமிடவும் தொலை உணர்வு தொழில்நுட்பத்தை மாநில அரசு பயன்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

14வது நிதிக்கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்காக மாநில முதல்வர் பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதலாக வழங்கப்பட்ட நிதியின் விளைவாக, போதிய நிதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குழாய் மூலமான குடிநீர் வழங்கும் திட்டமானது மீண்டும் துவங்க முடிந்துள்ளது. தற்போது மாநிலத்தில் குழாய் மூலமான குடிநீர் திட்டங்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன.

அணைக்கட்டுகளை கட்டுவதற்கான மாநில அரசின் திட்டங்கள் குறித்தும், மாநில அரசின் காடு வளர்ப்பு திட்டங்கள் ஆகியவை குறித்தும் மாநில முதல்வர் விளக்கம் கூறினார். 2022ஆம் ஆண்டிற்குள் விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான மாநில அரசின் நடைமுறை திட்டம் குறித்தும் அவர் எடுத்துக் கூறினார்.

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கான தயாரிப்புப் பணிகளை நிறைவேற்றியதற்காக மாநில அரசை பிரதமர் பாராட்டினார். இதர மாநிலங்களும் இதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மாநில அரசும் மத்திய அரசும் ஒன்றிணைந்து செயல்படுவது என்ற உறுதியேற்புடன் கூட்டம் நிறைவடைந்தது.