பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆந்திர மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை குறித்து ஆய்வு செய்வதற்கென நடத்தப்பட்ட உயர்மட்ட கூட்டத்திற்கு இன்று தலைமை வகித்தார். ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்களும் இந்த உயர்மட்ட அளவிலான சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். மத்திய அரசு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநில அரசின் கையிருப்பு அளவை சரிசெய்த பின்னர் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தின் கீழ் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ. 315.95 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகையானது 2015-16 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்கான மத்திய அரசின் பங்காக ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ. 330 கோடிக்கு மேலாக வழங்கப்படுவதாகும். மேலும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 2016-17ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 173.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தடுப்பு அணைகள் கட்டுவது, இறைப்புப் பாசனத் திட்டங்களை மீண்டும் கொண்டு வருவது, வறட்சி நிலையை சமாளிப்பதன் ஒரு பகுதியாக நடமாடும் நீர் தெளிப்பு வசதிகளை வழங்குவது போன்ற மாநில அரசின் முயற்சிகள் குறித்து மாநில முதல்வர் விளக்கமளித்தார். குறு பாசன முறையில் மாநிலத்தின் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர் விளக்கினார். 2022 ஆம் ஆண்டிற்குள் 20 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் குறு பாசன முறையை அறிமுகப்படுத்துவது என மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்துறையில் உலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகச் சிறப்பான செயல்முறைகள் மற்றும் ஆராய்ச்சிகள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குறுபாசன முறையில் மாநில அரசின் முன்முயற்சியை பாராட்டிய பிரதமர் நீர் சேமிப்பு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் உரம், பூச்சிக் கொல்லி ஆகிய இடுபொருட்கள் மற்றும் தொழிலாளர் ஆகிய அம்சங்களில் ஏற்படும் குறைவான தேவை ஆகியவற்றை கணக்கில் கொண்ட வகையில் மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சொட்டு நீர்ப்பாசன முறையின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கம் பற்றிய விரிவானதொரு ஆய்வை மேற்கொள்ள ஒரு செயல்பாட்டுக் குழுவை அமைக்குமாறும் பிரதமர் இத்தருணத்தில் உத்தரவிட்டார்.
வேம்பு மேற்பூச்சு கொண்ட யூரியா, நகர கழிவுகளிலிருந்து உருவாக்கப்படும் கலப்பு உரத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ. 1500 அளவில் நிதியுதவி போன்ற முன்முயற்சிகளை மேற்கொண்டதற்காக மாநில முதல்வர் பிரதமருக்கு தனது பாராட்டுதல்கலை தெரிவித்துக் கொண்டார். இத்தகைய முயற்சிகள் நிலத்தின் வளத்தை மேம்படுத்தும் என்பதோடு, யூரியா போன்ற உரங்களை வேறு பயன்பாட்டிற்காக எடுத்துக் கொள்வதைத் தடுக்கவும் உதவி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
களத்தில் விவசாயம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் பயன்பாடு குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கும் வகையில் எவ்வாறு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த சுருக்கமானதொரு விளக்கத்தையும் முதல்வர் இக்கூட்டத்தில் வழங்கினார். இத்தகைய முயற்சிகளை பெரிதும் பாராட்டிய பிரதமர் அவர்கள் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து பயிர் காப்பீட்டு முறைக்கு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆராய ஒரு செயல்பாட்டுக் குழுவை உருவாக்குமாறும் நித்தி ஆயோக் அமைப்பிற்கு உத்தரவிட்டார்.
மாநில அரசும் மத்திய அரசும் ஒன்றிணைந்து செயல்படுவது என்ற உறுதியேற்புடன் கூட்டம் நிறைவடைந்தது.
During our meeting today, CM @ncbn briefed me on the drought relief measures being undertaken in AP. https://t.co/pThB4qcYwJ
— Narendra Modi (@narendramodi) May 17, 2016
AP has a target 20 lakh hectares for micro-irrigation. I welcome such efforts. We discussed global best practices & research in this field.
— Narendra Modi (@narendramodi) May 17, 2016
There was also a brief presentation by @ncbn on AP’s usage of technology to get real-time updates on water & agriculture from the ground.
— Narendra Modi (@narendramodi) May 17, 2016