பி.எம்.இந்தியா

உலகெங்கும் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். உலகெங்கும் இந்திய தூதரகங்கள் அளவில் முதன்முறையாக இதுபோன்ற கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு எதிராக உலக அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க இந்தக் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அசாதாரணமான சூழல்களில், அசாதாரணமான தீர்வுகள் காணப்பட வேண்டியிருப்பதால், இந்த உலகமயமாக்கல் காலகட்டத்திலும், உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டன என்று பிரதமர் கூறினார். இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில், இது தவிர்க்க முடியாத நடவடிக்கையாக உள்ளது. ஆனால், இது பெருமளவில் தொடர் விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும். உலக அளவிலான செயல்பாடுகள் முடக்கப்படுவதால், சர்வதேசப் போக்குவரத்து, நிதிச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இது நீண்டகால அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றார் அவர்.
இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுத்து ஜனவரி மத்தியில் இருந்தே திட்டங்களை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். நோய்த் தொற்றுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைக் குறைத்தல், பிறகு பெருமளவில் அது தொற்றிப் பரவாமல் தடுத்தலில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். உலகில் மிகப் பெரிய அளவில் தனிமைப்படுத்தல் மற்றும் முடக்கநிலை இந்தியாவில் அமல் செய்யப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
நோய்த் தாக்குதல் மையம் கொண்டிருந்த நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை வெளியேற்றி தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பதில், நெருக்கடியான இந்த நேரத்தில், தூதரகத் தலைமை அதிகாரிகள் ஆற்றிய பங்களிப்புகளுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். ஐந்து முக்கிய விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்:
பெய்ஜிங், வாஷிங்டன் டி.சி., டெஹ்ரான், ரோம், பெர்லின், காத்மாண்டு, அபுதாபி, காபூல், மாலே மற்றும் சியோலில் உள்ள தூதரகங்களின் தலைமை அதிகாரிகள் தங்களுடைய கருத்துகளைப் பிரதமருடனும், மற்றவர்களுடனும் பகிர்ந்து கொண்டனர். இந்த நோய்த் தொற்றை எதிர்த்துப் போரிடுவதில் இந்தியா மேற்கொண்டுள்ள உறுதியான முயற்சிகளுக்கு, தங்கள் நாடுகளில் பாராட்டுதல்கள் கிடைத்திருக்கும் தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை, குறிப்பாக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை மீட்டு அனுப்பி வைப்பதில் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி தூதரக தலைமை அதிகாரிகள் சுருக்கமாகக் கூறினர். இந்தியாவுக்கு உதவிகரமாக இருக்கக் கூடிய மருந்து, மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் பிற நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்கான முயற்சிகள் பற்றியும் அவர்கள் தெரிவித்தனர். கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில், பிற நாடுகளில் கற்றுக் கொண்ட பாடங்கள், அங்குள்ள சிறந்த நடைமுறைகள் பற்றி தலைமை அதிகாரிகள் தகவல்களை அளித்தனர். அருகிலுள்ள நாடுகளிலும், சார்க் நாடுகளிலும் கோவிட்-19ஐ எதிர்த்து போரிடுவதற்கு சிறப்பு நிதி உருவாக்கிய இந்தியாவின் முன்முயற்சிகள் பற்றியும், அதற்கு உதவிகள் அளிப்பது பற்றியும் அவர்கள் பேசினர். தங்களுடைய பணிகளுக்கு வழிகாட்டியாக இருந்து, பாராட்டுதல்களை வழங்கியமைக்காக பிரதமருக்கு தூதரக தலைமை அதிகாரிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
நிறைவாக, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் தாயகத்தில் இருந்து தொலைவில் இருந்தாலும், கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் அவர்களும் முழு பங்கேற்பாளர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்தை பிரதமர் வலியுறுத்தினார். அனைத்து இந்தியர்களின் ஒற்றுமையும், விழிப்புநிலையும் தான், தேசத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் உதவிகரமாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
Interacted with heads of our Missions abroad on the COVID-19 situation. We discussed many issues including ways to combat Coronavirus and the role our Missions can play in assisting Indians abroad. https://t.co/f6tPv2cb4R
— Narendra Modi (@narendramodi) March 30, 2020