Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகமதாபாதில் முதல் முதலாக அமைக்கப்படும் அதிவேக ரயில் திட்டத்திற்கு கால்கோள் விழாவையொட்டிய பொதுக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

அகமதாபாதில் முதல் முதலாக அமைக்கப்படும் அதிவேக ரயில் திட்டத்திற்கு கால்கோள் விழாவையொட்டிய பொதுக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

அகமதாபாதில் முதல் முதலாக அமைக்கப்படும் அதிவேக ரயில் திட்டத்திற்கு கால்கோள் விழாவையொட்டிய பொதுக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

அகமதாபாதில் முதல் முதலாக அமைக்கப்படும் அதிவேக ரயில் திட்டத்திற்கு கால்கோள் விழாவையொட்டிய பொதுக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


இந்த வரலாற்று நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜப்பான் நாட்டு முக்கியப் பிரமுகர்களே, கலந்துகொண்டுள்ள அனைத்துப் பிரமுகர்களே,

எனது நெருங்கிய நண்பரான திரு. ஆபே சான் அவர்கள் இந்தியாவுக்கு, குறிப்பாக குஜராத் மண்ணுக்கு வருகை தந்திருப்பதற்காக மனமார வரவேற்கிறேன்.

உங்கள் அனைவரையும் பாராட்டுவதில் மன மகிழ்ச்சி அடைகிறேன். உலகத் தலைவரான ஜப்பான் நாட்டுப் பிரதமருக்கு, இந்தியாவின் சிறந்த நண்பருக்கு, எனது நண்பருக்கு அளித்த இனிய வரவேற்புக்கும், நேற்றைய தினம் அளித்த விருந்தோம்பலுக்கும் நான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

அரைகுறைத் தீர்மானத்துடனும் வலுக்கட்டாயமாகக் காணும் கனவுகளுடனும் இருக்கும் எந்த நாடும் முன்னேறாது. தீர்க்கமான கனவுகளால் மட்டுமே நாட்டின் எழுச்சியை, சமூகத்தின் எழுச்சியை, தனி மனிதரின் எழுச்சியை முடிவு செய்ய இயலும். இது புதிய இந்தியா. இதன் பரந்துபட்ட கனவுகளும் அளவற்ற உத்வேகமும் எல்லையற்றவை. இந்தியாவுக்கு எல்லையில்லாத சக்தி இருக்கிறது.

பண்டைய கனவை நனவாக்கும் வகையில் இந்தியா இன்று மிகப் பெரிய, அதி முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. மும்பைக்கும் அகமதாபாதுக்கும் இடையில் அதிவேக ரயில் போக்குவரத்துத் திட்டத்துக்கான கால்கோள் விழாவின் போது, நாட்டின் 125 கோடி மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டுகிறேன். இந்த புல்லெட் ரயில் திட்டம் விரைவான பயணத்துடன் விரைவாகப் பலன்களைத் தரும் திட்டம். வேகமான தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டம் ஆகும். இது வசதியானதும் பாதுகாப்பானதும் ஆகும். இத்திட்டத்தால் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். விரைவான சேவையும் மக்களுக்குக் கிடைக்கும். இது மக்களுக்குச் சாதகமானதும், சூழலுக்குப் பாதுகாப்பானதும் ஆகும். இன்றைய தினம் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நாள் என்பது மட்டுமின்றி உணர்ச்சிபூர்வமான நாளும் ஆகும். ஒரு நல்ல நண்பர் என்பவர் கால எல்லைகளையும் புவியியல் எல்லைகளையும் கடந்து நட்பு காட்டுபவர் ஆவார். கால, தேச எல்லைகளைக் கடந்து இந்தியாவுக்கு எப்படி நெருக்கமானது என்பதை ஜப்பான் நிகழ்த்தியிருக்கிறது. அதற்கு நாட்டிலேயே முதன் முதலாக மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையில் அமையும் அதிவேக ரயில் திட்டம் சிறந்த உதாரணமாகும். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான நல்ல அடையாளமாகவும் திகழ்கிறது.

இன்றைக்குக் கால்கோள்விழா நடைபெறுகிறது என்றால், அதுவும் குறுகிய காலத்தில் நிறைவேறுகிறது என்றால், அதற்கான முழுக் காரணமும் பாராட்டும் எனது சிறந்த நண்பர் திரு. ஆபே சானுக்குச் சேரும். இதில் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் திரு. ஷின்சோ ஆபே இத்திட்டத்தில் எந்தவித தடையும் இருக்கக் கூடாது என்பதை உறுதிசெய்துள்ளார்.

நண்பர்களே,

மனித குல நாகரீகத்தின் மேம்பாடு என்பது போக்குவரத்து வசதிகளின் வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புகொண்டது. ஆசிய நாகரிக வளர்ச்சியைப் பார்த்தால் நமக்கு அது புலப்படும். அன்றைய காலத்தில் கிராமங்களும், நகரங்களும் மக்களும் நதிகளின் கரையோரங்களில் குடியேறினர். அந்தப் பகுதிகள்தான் அபிவிருத்திக்கான இடங்களாக மாறின. அதன் பின் சாலைகளை அமைத்தல் மேம்பாட்டுக்கான வழியாக மாறியதை அடுத்து, எங்கெல்லாம் நெடுஞ்சாலைகளை அமைக்க முடியுமோ அந்த இடங்களில் எல்லாம் நகரங்கள் அமைக்கப்பட்டன. இப்போது, அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சியாக அதிவேக போக்குவரத்துத் தடங்களில்தான் அமையும்.

நண்பர்களே,

போக்குவரத்து முறை, அது ரயில் போக்குவரத்தோ, நீர்வழிப் போக்குவரத்தோ, விமான வழிப் போக்குவரத்தோ நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றுகிறது. இந்தப் போக்குவரத்து முறை நாட்டின் இணைப்புக்கு அடிப்படையாகிறது. இந்த இணைப்பு மக்களுக்குப் பலவகைகளிலும் பலன்களைத் தருகிறது. அமெரிக்க வரலாற்றை அறிந்திருப்போருக்கும் இன்று உலகுக்கும் அந்நாட்டில் ரயில்வே போக்குவரத்து அமைந்த பிறகு பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டது என்பது தெரியும்.

சிறிது நேரத்துக்கு முன் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானில் இருந்த நிலைமை பற்றி நமது நண்பர் ஆபே சான் தெரிவித்தார். என் மிக மோசமான வாழ்க்கை அங்கே இருந்தது! அங்கே என்ன மோசமான வறுமை தாண்டவமாடியது! ஆனால், அந்நாட்டில் 1964ஆம் ஆண்டு புல்லெட் ரயில் திட்டம் தொடங்கியது. அதன் பின் இந்தத் தொழில்நுட்பம் 15 நாடுகளில் மெல்ல மெல்ல பரவியது. ஜப்பானின் பொருளாதாரத்தையே மாற்றியது. அதன் பாதிப்பை ஐரோப்பிய நாடுகள் முதல் சீனா வரையில் காணலாம். அந்த நாடுகளில் எல்லாம் அதிவேக ரயில் போக்குவரத்து பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவருவதில் மட்டுமின்றி சமூக மாற்றங்களைக் கொண்டுவருவதிலும் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.

அதையடுத்து காலம் வெகுவாக மாறிவிட்டது. தேவைகளும் மாறிவிட்டன. எனவே, நமது அணுகுமுறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருவது தவிர்க்க இயலாததாகிவிட்டது. சிறிய முயற்சிகள் குறித்த காலத்துக்குள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக பல வந்துவிட்டன. இந்நிலையில், நிதானமாகச் செயல்படுவதற்கு இது தருணமல்ல. காலம் நமக்காகக் காத்திருக்காது. தொழில்நுட்பம் கடந்த நூறாண்டுகளில் ஏற்படுத்தாத மாற்றங்களை கடந்த 25 ஆண்டுகளிலேயே மாற்றியிருக்கிறது. இந்த மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்துவிட்டால், இன்று அதையும் கடந்து அதிவேக இணைப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அதிவேக இணைப்பு வேகத்தை அதிகரிப்பதுடன், தொலைவையும் குறுக்கிவிடும். பொருளாதார மேம்பாட்டுக்கான புதிய வழிகளையும் திறந்துவிடும்.

நண்பர்களே,

உற்பத்தித் திறனுக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. உற்பத்தித் திறன் இருந்தால், வளர்ச்சி ஏற்படும். அதிவேக இணைப்புடன் கூடிய அதிக உற்பத்தித் திறனை நாம் வலியுறுத்துகிறோம்.

நண்பர்களே,

இந்த சந்தர்ப்பத்தில் ஜப்பானுடன் கொண்ட நட்பில் உள்ள மேலும் ஓர் அம்சத்தைப் பாராட்ட விரும்புகிறேன். இந்தியர்களாகிய நாம், குறிப்பாக குஜராத்திகளாகிய நாம் இன்னும் சொன்னால், அகமதாபாத் வாசிகளான நாம் வெளியே எதையாவது வாங்கினால், அது சந்தைக்கு வரும்போது, அதன் எல்லா அம்சங்களையும் மதிப்பீடு செய்கிறோம். ஒவ்வொரு காசுக்கும் கணக்கு வைத்துக் கொள்கிறோம். லாப நஷ்டத்தைத் தொடர்ந்து கணக்குப் போட்டு வைக்கிறோம். ஒரு மோட்டார் பைக்கை வாங்கும்போது, வங்கியில் கடன் பெற முயலும்போதோ முதலில் 10 வங்கிகளில் ஏறி இறங்குகிறோம். ஒவ்வொரு வங்கிக்கும் குறைந்தது பத்து முறை போய்வருவோம். அவற்றில் எந்த வங்கி குறைந்த வட்டிக்குக் கடன் தருகிறது என்று நுட்பமாக ஆராய்வோம். சில வங்கிகள் 8 சதவீத வட்டிக்குக் கடன் தரும். வேறு சில வங்கிகள் 9 சதவீத வட்டிக்குக் கடன் தரும். எனினும் மீண்டும் கணக்குப் போட்டு, எந்த வங்கி தரும் கடனை அடைக்கும் போது மோட்டார் சைக்கிளுக்காகச் செலுத்தும் மொத்த தொகை என்ன என்றும் அந்த வங்கி எத்தனை ஆண்டுகளுக்குள் தவணையைச் செலுத்தி கடனை அடைக்க வேண்டும் என்று சொல்கிறது என்பதையெல்லாம் கணக்கிடுவோம்.
இவற்றையெல்லாம் மிகவும் நுட்பமாகப் பார்ப்போம். கடன் தரும் வங்கிக்குப் பல முறை சென்று, எவ்வளவு குறைவான செலவில் வாங்க முடியுமோ என்பதை வங்கி அலுவலர்களை களைத்துப் போகும் வகையில் கேட்டுத் தெரிந்துகொள்வோம். “என்னால் 8 சதவீதத்திற்கோ, 9 சதவீதத்திற்கோ கடனை ப் பெற இயலாது. அதைக் குறைப்பதற்கு உதவுங்கள்” என்று கேட்போம். அதில், எந்த வங்கியாவது அரை சதவீதம் வட்டியைக் குறைத்துக் கொண்டாலும் பெரிதாக மகிழ்ந்து கொண்டாடுவோம். இவையெல்லாம் நாம் நன்கு அறிவோம். அதிலும் அகமதாபாத் வாசிகள் மிகவும் அதிகம் அறிந்து வைத்திருப்பார்கள்.

நண்பர்களே,

யாருக்கும் திரு. ஆபே சான் போல ஒரு நண்பர் கிடைத்திருக்க மாட்டார். இந்தியாவுக்குக் கிடைத்தது போல வேறு எந்த நாட்டுக்கும் ஜப்பானைப் போன்ற நட்பு நாடு கிடைத்திருக்காது. யாராவது வட்டியில்லாத கடனை அளிக்க முன்வந்து, அதையும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் அல்ல, ஐம்பது ஆ ண்டுகள் செலுத்தலாம் என்று சொல்வார்களா? யாராவது நம்புவார்களா? யாருக்கும் இதுபோன்ற வங்கி கிடைத்திருக்காது. ஆனால், இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. புல்லெட் ரயில் திட்டத்துக்காக ஜப்பான் 0.1 சதவீதம் மட்டுமே கொண்ட வட்டி விகிதத்தில் ரூ. 88,000 கோடி கடன் உதவியை அளிக்கிறது.

குஜராத்தில் நான் புல்லெட் ரயில் குறித்துப் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் நரேந்திர மோடி எப்போது புல்லெட் ரயில் திட்டத்தைக் கொண்டுவருவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இப்போது புல்லெட் ரயில் திட்டத்தைக் கொண்டுவரும்போது, “எதற்காக புல்லெட் ரயில் கொண்டு வரவேண்டும்?” என்று கேட்கிறார்கள். இது எனக்கு வியப்பாக இருக்கிறது.

சகோதர சகோதரிகளே, இந்த புல்லெட் ரயில் திட்டம் ஜப்பான் இந்தியாவுக்கு அளித்த மிகப் பெரிய பரிசு. இன்னும் சொல்லப் போனால், இந்த மொத்த திட்டமும் சல்லிக் காசு கூட செலவில்லாமல் அமைக்கப்படுகிறது. ஜப்பான் இத்திட்டத்தில் இணைவதற்காகவும், இதை நிறைவேற்றுவதற்காகத் தொழில்நுட்ப உதவியையும் நிதியுதவியையும் அளிக்க முன் வந்ததற்காகவும் நான் மீண்டும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர, சகோதரிகளே, இந்த அதிவேக ரயில் போக்குவரத்து இரு இடங்களுக்கு இடையிலான தூரத்தைக் குறைப்பது மட்டுமின்றி, மக்களுக்கு இடையிலான தூரத்தையும் குறைக்கிறது. இத்திட்டம் நிறைவேறினால்,அகமதாபாத்துக்கும் மும்பைக்கும் இடையில் 2 அல்லது 3 மணி நேரத்தில் பயணம் செய்துவிடலாம். இதை விமானப் பயணத்துடன் ஒப்பிட்டால், புல்லெட் ரயில் பயணம் வேகமானது. விமானப் பயணத்திற்கு இங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் செல்வதற்கான நேரம், அங்கே சில நடைமுறைகளைப் பூர்த்தி செய்வதற்கான நேரம், விமானப் பயண நேரம் விமான நிலையத்திலிருந்து அலுவலகம் செல்லும் நேரம் என அதிக நேரம் ஆகும்.

இது எத்தனை பெரிய மாற்றத்தைக் கொண்டுவருகிறது ! மக்களின் நேரத்தை இது எவ்வளவு மிச்சப்படுத்துகிறது! அது மட்டுமின்றி, அகமதாபாதுக்கும்மும்பைக்கும் இடையில் சாலையில் சென்று வரும் ஆயிரக்கணக்கான வாகனங்களின் போக்குவரத்தையும் குறைக்கும். சுற்றுச்சூழலுக்கும் சாதகமாக அமையும். எரிபொருளை மிச்சப்படுத்தும். எரிபொருளை நாம் இறக்குமதி செய்வதால், அந்நியச் செலாவணியையும் மிச்சப்படுத்தும்.

இந்தத் திட்டத்தின் மூலம் மும்பைக்கும் ஆமதாபாத்துக்கும் இடையில் புதிய பொருளாதார நடைமுறை அமைய இருக்கிறது. இரு நகரங்களுக்கும் இடையிலான மொத்த இடமும் ஒற்றைப் பொருளாதார மண்டலமாக மாறிவிடும். அதிவேக ரயில் போக்குவரத்து போக்குவரத்தை விரைவுபடுத்துவதுடன், வர்த்தகத்தை மேம்படுத்தும், இரு நகரங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பும் உறவும் மேம்படும். மனிதர்கள் இடம்பெயர்வதோ, சரக்குகளை ஏற்றி ச் செல்வதோ மிகவும் எளிதாகிவிடும். இது நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். ஏற்கனவே நான் கூறியதுபோல நாடு புதிய வேகத்தை எட்டும்.

புதிய தொழில்நுட்பம் வந்தால், அது பணக்காரர்களுக்குத்தான் பயன்படும் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. ஆனால், அனுபவத்தில் அது வேறாக இருக்கிறது. புதிய தொழில்நுட்பம் வரும்போது, அது ஏழைகளுக்குச் சக்தி தரக் கூடியதாக அமைந்துவிட்டால், ஏழ்மையை வேகமாக விரட்டிவிடலாம். ஆகையால், அனைவரும் எளிதில் பெறும் வகையில் அதிகமாக தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவதும், அதன் மூலம் நாட்டின் ஏழை மக்களை இணைப்பதும் எங்களது குறிக்கோள் ஆகும். நாட்டில் உள்ள சாதாரண மக்களும் எளிதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிலை உருவானால்தான், தொழில்நுட்பத்தின் பலன் கிடைக்கிறது என்று நான் நம்புகிறேன். ரயில்போக்குவரத்தில் புதிய மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதன் மூலம், நாட்டின் சாமானியனும் புதிய தொழில்நுட்பத்தின் பலன்களை அடையவேண்டும் என்று பாடுபடுகிறோம். இத்திட்டத்தின் மூலம், தொழில்நுட்ப மாற்றத்தினால் ஏற்படும் பலன்களை ரயில்வே துறை அடையும். தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிகர்கள், உற்பத்தியாளர்களுக்குப் பயன் கிடைக்கும். மேலும், இத்தொழில்நுட்பத்தின் பயனாக நவீனமயமாக்கப் படவேண்டிய நமது ரயில்வே “நெட்வொர்க்” இதன் மூலம் பலனடையும்.

நண்பர்களே, புல்லெட் ரயில் திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொள்கிறோம். அதே சமயம் பெரும்பாலான தேவைகளை இந்தியாவிலேயே பெற்றுக் கொள்கிறோம். எனவே, நமது தொழில்நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்த சாதனங்களையே உற்பத்தி செய்யவேண்டும். அத்துடன் அவற்றைச் சரியான நேரத்தில் விநியோகம் செய்யவேண்டும். உற்பத்தியில் பழுதில்லாமல், பாதிப்பில்லாமல் இருப்பதை உறுதி செய்தாக வேண்டும். இது “இந்தியாவில் உற்பத்தி செய்” என்ற குறிக்கோளை உறுதி செய்யும். மேலும், இத்திட்டம் ஆயிரக் கணக்கானோரின் நேரடி வேலைவாய்ப்புக்கும் மறைமுக வேலைவாய்ப்புக்கும் வழிவகுக்கும்.

நண்பர்களே, “புதிய இந்தியாவுக்கு” ஒருங்கிணைந்த போக்குவரத்து முறை நாட்டில் தேவைப்படுகிறது. எனவே, எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் கட்டுமானத்தை அமைத்து வருகிறோம். அது ரயில்போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து அல்லது வான்வழிப் போக்குவரத்து, என எதுவாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் கட்டுமானத் தேவையை வலியுறுத்துகிறோம். அத்துடன் அத்துறைகளில் வேகமாக முன்னேறியும் வருகிறோம். சாலைப் போக்குவரத்து முன்பு இருந்ததை விட வேகமாக அமைவதற்காக சாலைகளை அமைக்கிறோம். ஜிஎஸ்டி வரியின் மூலம் கிடைக்கும் பலன்களும் நாட்டின் போக்குவரத்து நடைமுறையில் காணுவோம். லாரிகளின் தினசரிப் பயண தூரம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் 200 கி.மீ. தூரம் தினமும் பயணம் செய்யும். இப்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்து, சுங்கச் சாவடிகள் நீக்கப்பட்ட பிறகு, இன்று லாரிகள் தினந்தோறும் 250 கி.மீ. தூரம் செல்கின்றன. எனவே, 30 சதவீத லாரி போக்குவரத்து அதிகரிப்புக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதே காரணம். இதன் விளைவாக மக்களுக்குச் சரக்குகள் மலிவான விலையில் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது.

நீர்வழிப் போக்குவரத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதால், அதை மேம்படுத்துவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் அடிப்படையில், வெள்ளப் பெருக்கெடுக்கும் 106 நதிகளை மேம்படுத்தி, நீர்வழிப் பாதையாக்க மேம்படுத்துவது குறித்த நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். விமானப் போக்குவரத்தும் இந்தியாவிற்குப் புதிய முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் விமானப் பயணத்தை மேற்கொள்வோரின் எண்ணிக்கை, உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளது. விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக முதல் முறையாக விமானப் போக்குவரத்துக் கொள்கையை வகுத்துள்ளோம். வான்வழிப் பயணத் திட்டத்தின் (உடான் யோஜனா) மூலம் நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை மாறிவிடும். இத்திட்டத்தின் கீழ் நாட்டின் 70 சிறிய நகரங்கள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம், சாதாரண மக்களும் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம்.

அதைப் போல் தற்போதுள்ள ரயில் போக்குவரத்தையும் மேம்படுத்துவதிலும், நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய ரயில் போக்குவரத்து இணைப்பை அமைப்பதிலும் சமமாக கவனம் செலுத்தி வருகிறோம். ரயில் தண்டவாளங்களை அமைத்தல், இரட்டைப் பாதைகளை அமைத்தல், மின்மயமாக்குதல், ஆகிய பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம். அப்பணிகள் முன்னெப்போதும் இல்லாத அளவு வேகமாக நடைபெற்று வருகின்றன. ரயில்போக்குவரத்துத் துறையில் அரசு முதலீடு செய்வதைப் போல் முன்பு எப்போதுமே முதலீடு செய்யப்பட்டதில்லை. இந்திய ரயில்வேத் துறையின் திறனை அதிகரிப்பதற்கும் சரக்குப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேற்கு மண்டலத்துக்கான அர்ப்பணிக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்துப் பிரிவு (Western Dedicated Freight Corridor) தற்போது மும்பை ஜவஹர்லால் போர்ட் முதல் உத்தரப் பிரதேசம் தாத்ரி வரையில் அமைக்கப்பட்டு வருகிறது. அதைப் போல், கிழக்கு மண்டலத்துக்கான அர்ப்பணிக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்துப் பிரிவு (Western Dedicated Freight Corridor) கோல்கத்தாவிலிருந்து லூதியானா வரையில் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்ற முயன்று வருகிறோம். இத்திட்டங்கள் நிறைவேறிய பிறகு, போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைந்துவிடும். பயணிகளின் போக்குவரத்து நேரம் குறைந்துவிடும். ரயில்போக்குவரத்தின் திறனும் அதிகரித்துவிடும்.

நண்பர்களே, அதிவேக ரயில்போக்குவரத்துத் திட்டம் நவீன ரயில்வே அமைப்பது என்ற தொலைநோக்குத் திட்டத்தின் ஓரு அங்கமாகும். அதன் கால்கோள் விழாவை இன்று நடத்தியிருக்கிறோம் என்பது எனக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது.

எனது அருமை சகோதர சகோதரிகளே, நாட்டு மக்களே, இன்று அதற்கான கால்கோள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற 70ஆவது ஆண்டாகும். சபர்மதி ஆசிரமம் அமைக்கப்பட்டு நூற்றாண்டு கொண்டாடுகிறோம். எனக்கு ஓர் ஆசை உண்டு. எனக்கு கனவுத் திட்டம் உண்டு. திரு. ஆபே சான் கூறியது போல், இதை ரயிலில் பயணம் செய்தபடியே நாங்கள் இருவரும் தொடங்கி வைக்கிறோம். ஜப்பானும் இந்தியாவும் இதுபோன்றவற்றில் உறுதியாக இருந்தால், எதையும் சாதிப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.

இத்திட்டத்துடன் அதிவேக ரயில்போக்குவரத்துக்கான வல்லுநர்களை உருவாக்குவதற்காக அதிவேக ரயில் போக்குவரத்துப் பயிற்சி நிறுவனமும் பரோடாவில் அமைக்கப்பட்டு வருகிறது. இது மிக முக்கியமான திட்டம் என்று கருதுகிறேன். ரயில்போக்குவரத்துக்கு வதோதரா மிக முக்கியமான இடமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இப்போது ஜப்பானும் இணைந்திருக்கிறது. அதிவேக ரயில்போக்குவரத்துச் சேவைக்குத் தேவைப்படும் ஆள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயிற்சி தேவைப்படுகிறது. அதற்கு இந்திய இளைஞர்கள், குறிப்பாக குஜராத் இளைஞர்கள் இதற்கான வாய்ப்பைப் பெறுவர். மனித ஆற்றல் திறன் மேம்பாடு இருக்கும்போது, நாட்டின் பலம் அதிவேக ரயிலை விட பலமடங்காக அதிகரிக்கும். அதற்கான பணி ஜப்பானின் துணையோடு பரோடாவில் மேற்கொள்ளப்படும். இது நவீன ரயில்வே பொறியியல் பணியாகும். இந்திய இளைஞர்கள் அதற்குத் தயாராக இருப்பர். இந்த நிறுவனம் “புதிய இந்தியாவுக்கான” மிகத் திறமைவாய்ந்த மனித ஆற்றலை உருவாக்கும் சவாலை நிறைவேற்றப் போகிறது என்பதை நினைத்துப் பாருங்கள். அதிவேக ரயில்போக்குவரத்து த் திட்டத்திற்கான கால்கோள் நிகழ்வை விட மேம்பட்ட பயிற்சியை நம் நாட்டு இளைஞர்களுக்கு அளிக்கப் போகும் இந்தப் பயிற்சி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியைப் பெரிதாகக் கருதுகிறேன். காரணம், இப்பயிற்சித் திட்டம் 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கான அடித்தளமாக அமையப் போகிறது.

இந்த ரயில் போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவையும் ஜப்பானையும் சேர்ந்த ஊழியர்கள், பிரமுகர்களை நான் மீண்டும் மனமாரப் பாராட்டுகிறேன். அவர்களது முயற்சிகளால்தான் இத்திட்டம் தற்போது இந்த நிலையை அடைந்திருக்கிறது. தற்போது, அடிப்படைப் பணி தொடங்குகிறது. இத்திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே நிறைவேற்றுவோம் என்று நான் திடமாக நம்புகிறேன். அதை நிச்சயமாக செய்து காட்டுவோம்.

ஜப்பான் நாட்டுப் பிரதமரும் எனது இனிய நண்பருமான திரு. ஷின்சோ ஆபே, திரு. ஆபே சான் அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் ரயில் போக்குவரத்து இணைப்பு மிகப் பெரியது. ஜப்பான் நாட்டின் மொத்த மக்கள் தொகை அளவிலானோர் நம் நாட்டில் வாரந்தோறும் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இது மிகப் பெரிய ரயில்போக்குவரத்து இணைப்பாகும். எவ்வளவு பெரிய திறன் கொண்டது! நமக்கு நம்பிக்கை இருக்கிறது. நமக்கு வேகம் இருக்கிறது. உங்களிடம் திறன் இருக்கிறது. இவையெல்லாம் ஒருங்கிணைந்தால், “புதிய இந்தியாவை” உருவாக்குவதற்கான முனைப்பில் முன்னேறிச் செல்வோம்.

மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை அளித்ததற்கும், காட்டிய மரியாதைக்கும் குஜராத் மக்களுக்கு மீண்டும் எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அவர்கள் காட்டிய வரவேற்பும் மரியாதையும் ஜப்பான் பிரதமரின் கண்ணியத்தைப் போற்றும் வகையில் அமைந்திருந்தன. குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளை நான் பாராட்டுகிறேன். இந்த இரு அரசுகளும் தாங்களும் இணைந்து, மத்திய அரசுடனும் ஜப்பான் நாட்டு அரசுடனும் இணைந்து ஒவ்வொன்றாக எல்லாப் பணியையும் விரைவாக நிறைவேற்றியதுடன் எல்லா நடைமுறையையும் சிறந்த வகையில் முன்னெடுத்துச் சென்றுள்ளன. அதனால், குஜராத் முதலமைச்சருக்கும் மகாராஷ்டிர முதலமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகுந்த நன்றிகள்.

****