Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அக்டோபர் மாதம் 25ம் தேதியன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம்


எனதருமை நாட்டு மக்களே,

உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். மீண்டும் மனதின் குரல் வாயிலாக உங்கள் அனைவரோடும் உரையாடும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இன்று இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 5வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் விளையாடப்படுகிறது.. இந்த 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கு காந்தி மண்டேலா தொடர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொடர் சுவாரசியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இரு அணிகளும் தலா இரண்டு பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆகையால், இறுதிப் போட்டி மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

இன்று நான் ஆல் இண்டியா ரேடியோவின் கண்ணூர் நிலைய நண்பர்களுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மனதின் குரலைத் தொடங்கிய வேளையில் பலர் அதோடு தங்களை இணைத்துக் கொண்டு வந்தார்கள், அதில் கேரளத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ச்ரத்தா தாம்மனும் ஒருவர். கண்ணூர் நிலையம் அவரை ஒரு முறை நிலையத்துக்கு அழைத்து, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது; இதில் கணிசமான அளவு கருத்துக்கள் பரிமாற்றம் நிகழ்ந்தது. 12ம் வகுப்பே படித்துக் கொண்டிருக்கும் ச்ரத்தாவின் விழிப்புணர்வைக் கண்டு கண்ணூர் வானொலி நிலையம் பாராட்டி ஊக்கப்படுத்தியது, அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்ணூர் வானொலி நிலையத்தின் இந்தச் செயல்பாடு எனக்கே கூட கருத்தூக்கம் அளிக்கும் வகையில் அமைந்தது. நாடு முழுவதிலும் இருக்கும் வானொலி நிலையங்களும் இதைப் போலவே தங்கள் பகுதிகளில் இந்த வகையில் விழிப்புணர்வையும் செயலாக்கத்தையும் செய்தால், மக்களின் கவனம் அவர்கள் பால் திரும்பும், மக்கள் பங்களிப்பை முன்னிறுத்தி நாட்டை நிர்வாகம் செய்யும் நமது எண்ணத்துக்கும் புதிய ஒரு சக்தி பிறக்கும். ஆகையால் நான் கண்ணூர் வானொலி நிலையத்தின் அனைத்து தோழர்களுக்கும் என் இதய பூர்வமான பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மீண்டும் ஒரு முறை இன்று கேரளம் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். கேரளத்தின் சித்தூர் பகுதியைச் சேர்ந்த தூய மேரி upper primary பள்ளி மாணவிகள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இந்தக் கடிதம் பல வகைகளில் விசேஷம் நிறைந்தது. ஒன்று, இந்த மாணவிகள் தங்கள் கட்டைவிரல் மைப் பதிவு செய்து பாரத மாதாவின் திருவுருவத்தை ஒரு மிகப் பெரிய துணியில் வரைந்திருந்தார்கள். பாரத அன்னையின் திருவுருவப்படத்தை, பாரத வரைபடத்தை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கட்டைவிரல் மைப் பதிவுகளைக் கொண்டு இந்தப் படத்தை ஏன் வரைந்திருக்கிறார்கள் என்று முதலில் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் எழுதியிருந்த கடிதத்தைப் படித்த பின்னர், அவர்கள் எத்தனை பெரிய குறியீட்டுச் செய்தியை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. இந்த மாணவிகள் ஏதோ பிரதருக்கு மட்டுமே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அப்படிச் செய்யவில்லை; அவர்கள் தங்கள் பகுதி மக்களுக்கும் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதைச் செய்திருக்கிறார்கள். அவர்களின் குறிக்கோள் உடல் உறுப்புக்கள் தானம் பற்றியது. அவர்கள் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். உடல் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெருக வேண்டும் என்பதற்காகவும், இந்த தானம் இயல்பான செயல்பாடாக அமைய வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் பல இடங்களுக்கும் சென்று நடனம் வாயிலாக இதை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்த மாணவிகள் தங்கள் கடிதத்தில், நீங்கள் உங்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் பற்றி குறிப்பிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மஹாராஷ்ட்ராவின் சுமார் 80 வயது மிக்க வசந்த் ராவ் சுடுகே குருஜி நெடுங்காலமாக ஒரு இயக்கத்தையே நடத்தி வந்திருக்கிறார். அவர் உடல் உறுப்பு தானத்தை ஒரு விழாவாகவே கொண்டாட வேண்டும் என்று கூறுகிறார். இப்போதெல்லாம் எனக்குத் தொலைபேசி மூலமாகவும் பல செய்திகளும் தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.

தில்லியைச் சேர்ந்த தேவேஷ் அவர்களும் கூட இப்படி ஒரு செய்தியை எனக்கு அனுப்பி இருக்கிறார். தில்லியிலிருந்து தேவேஷ் பேசுகிறேன் – உடல் உறுப்பு தானம் குறித்து அரசு எடுத்து வரும் முயற்சிகளும் அது குறித்த கொள்கைத் திட்டங்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டிய இந்த வேளையில் நாட்டுக்கு இந்த வகையில் பலத்த ஆதரவு தேவையாக இருக்கிறது. சீனா போன்ற நாடுகள் உடல் உறுப்பு தான விஷயத்தில் மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கிறார்கள். அரசு மேற்கொண்டிருக்கும் பத்து லட்சத்துக்கு ஒரு உடல் உறுப்பு தானம் என்ற இலக்கு பாராட்டுக்குரியது

இந்த விஷயம் மிகவும் மகத்துவம் நிறைந்தது என்று எனக்குப் படுகிறது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2 ½ இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுநீரகம், இருதயம் மற்றும் கல்லீரல் உறுப்பு தானம் தேவைப்படுகிறது. ஆனால் 125 கோடி மக்கள் கொண்ட நாட்டில் நம்மால் வெறும் 5000 உடல் உறுப்பு மாற்றுகளை மட்டுமே செயல்படுத்த முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் கண்களுக்கு ஒளி கொடுப்பது தேவையாக இருக்கிறது. ஆனால் நம்மால் வெறும் 25000 பேர்களுக்கு மட்டுமே கண்ணொளி கொடுக்க முடிகிறது. 4 பேர்களுக்கு கண்களின் அவசியம் இருக்கையில் நம்மால் ஒருவருக்கு மட்டுமே அப்படிக் கொடுக்க முடிகிறது. சாலை விபத்தில் மரணமடைய நேர்ந்தால், உடலின் உறுப்புக்களை தானமாக அளிக்கலாம். சட்ட சிக்கல்கள் இந்த விஷயத்தில் சில இருக்கின்றன என்பது எனக்கு விளங்குகிறது. மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சில மாநிலங்கள் இது தொடர்பான நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்தி, இதை முடுக்கி விடும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன். பல சமூக அமைப்புக்கள், பல அரசு சாரா சேவை நிறுவனங்கள் இந்தத் துறையில் பாராட்டுதற்குரிய பணிகளை ஆற்றி வருகிறார்கள். உடல் உறுப்பு தானத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் national organ and tissue transplant organization, தேசிய உடலுறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, NOTO நிறுவப்பட்டிருக்கிறது. ஒரு 24 மணி நேரமும் இயங்கும் helpline 1800 11 4770 என்ற எண் வாயிலாகவும் சேவை அளிக்கப் படுகிறது. நம் முன்னோர்களே கூட தேன த்யக்தேன புஞ்ஜீதா என்று அல்லவா முழங்கி இருக்கிறார்கள்! அதாவது தியாகம் செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியைத் தான் அவர்கள் தேன த்யக்தேன புஞ்ஜீதா என்ற மந்திரச் சொற்கள் வாயிலாக கூறியிருக்கிறார்கள். கடந்த நாட்களில் தில்லியின் ஜி.பி.பந்த் மருத்துவமனையில் ஒரு ஏழை நடைபாதை வியாபாரியின் மனைவியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்த கல்லீரல் சிறப்பு ஏற்பாடுகள் செய்த பிறகு லக்னௌவிலிருந்து தில்லிக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது, ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது. இதை நாமனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். உடல் உறுப்பு தானம் மஹா தானம் – தேத த்யக்தேன புஞ்ஜீதா என்ற உண்ர்வை நாம் பயில வேண்டும். இந்த விஷயத்துக்கு நாம் கண்டிப்பாக பலம் அளிக்க வேண்டும்.

எனது பிரியமான நாட்டு மக்களே,

இப்போது தான் நாம் நவராத்திரி மற்றும் விஜயதசமி புனித நாட்களைக் கொண்டாடி இருக்கிறோம். சில நாட்களுக்குப் பின் நாம் தீபாவளிப் பண்டிகையையும் கொண்டாட இருக்கிறோம். ஈத், விநாயக சதுர்த்திப் பண்டிகைகளையும் கொண்டாடினோம். ஆனால் இதற்கிடையில் நாடு ஒரு மிகப் பெரிய விழாவைக் கொண்டாட இருக்கிறது. இது நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமிதத்தையும், மகிழ்வையும் அளிக்கக் கூடியது. வரவிருக்கும் அகோபர் மாதம் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் இந்திய ஆப்பிரிக்க மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்திய மண்ணில் இப்படி ஒரு பெரிய அளவிலான மாநாடு நடைபெறுவது என்பது இது தான் முதல் முறை. 54 ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் யூனியன்களின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கெடுக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவுக்கு வெளியே நடைபெறும் ஆப்பிரிக்க நாடுகளின் மிகப் பெரிய அளவிலான மாநாடுகளில் இது ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய ஆப்பிரிக்க நாடுகளின் உறவு மிகவும் ஆழமானது. இந்தியாவின் மக்கள் தொகை அளவுக்கு ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் தொகையும் இருக்கிறது. நம் இரண்டு நாடுகளின் மக்கள் தொகையையும் கணக்கெடுத்தால் உலகின் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இருக்கிறது. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒரே பூபாகமாக இருந்திருக்கிறது என்றும் பின்னர் இவை இந்தியப் பெருங்கடலால் இரு பாகங்களாயின என்றும் கூறப்படுகிறது. நமக்கிடையில் பெருமளவு ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்தியாவின் வன விலங்குகளுக்கும், ஆப்ரிக்காவின் வனவிலங்குகளுக்கும் பல ஒப்புமைகளைக் காண முடியும். இயற்கை வளங்களிலும் பெரும் ஒப்புமை இருக்கிறது. சுமார் 27 இலட்சம் இந்தியர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் பல ஆண்டுகளாகவே வசித்து வருகிறார்கள். இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் ஆகிய துறைகளில் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் விட, ஆப்பிரிக்க நாடுகளின் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளிப்பதில் இந்தியா மிகப் பெரிய பங்காற்றி வருகிறது. மனித வள மேம்பாடு, திறன் வளர்த்தல் ஆகியவற்றில் 25000க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பெற்றிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் தலைவர்களாக இருப்பவர்கள் இந்தியாவில் கல்வி பெற்றவர்களாகவே விளங்குகிறார்கள். பாருங்கள், நமக்கிடையில் எத்தனை நெருக்கமான சம்பந்தம் இருக்கிறது!! அந்த வகையில் பார்த்தால், இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பொதுவாக ஒரு மாநாடு நடைபெறும் போது, பல நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடுகிறார்கள்; இந்த மாநாட்டிலும் அப்படி நடக்கும் என்பது உண்மை தான் என்றாலும், இந்த முறை நாடுகளின் மக்களும் இணைய வேண்டும் என்பதே நமது முயற்சியாக அமையும். இந்த முறை இந்திய அரசு, குறிப்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு மிக சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. CBSEயுடன் இணைக்கப் பட்ட பள்ளிகள் அனைத்தின் மாணவர்களுக்கு இடையே கவிதை எழுதுதல், அவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துதல் போன்றவற்றில் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 1600 பள்ளிகள் இதில் பங்கெடுத்தன, இதில் இந்தியாவுக்கு வெளியே இருக்கும் பள்ளிகளும் கலந்து கொண்டன. பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் இந்திய ஆப்பிரிக்க தொடர்புகள் குறித்த தகவல்கள் பற்றி எழுதியிருந்தார்கள். இன்னொரு பக்கம் மஹாத்மா காந்தி அவர்களின் பிறப்பிடமான போர்பந்தரில் Memories of Mahatma, காந்தியடிகளின் நினைவலைகள் என்ற தலைப்பிலான மொபைல் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. இது வட மாநிலங்கள் வழியாக புது தில்லிக்கு அக்டோபர் மாதம் 29ம் தேதி வர இருக்கிறது. பல இலட்சம் பள்ளி மாணவர்கள் இந்தக் கண்காட்சியைக் கண்டார்கள், கிராமத்து மக்கள் பார்த்தார்கள், ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான தொடர்பில் அண்ணல் காந்தியடிகளின் பங்களிப்பு என்னவாக இருந்தது, இந்த இரண்டு நிலப்பகுதி மக்கள் மனங்களில் அவரது தாக்கம் எப்படிப் பட்டதாக இருந்தது என்பதையெல்லாம் மக்கள் தெரிந்து கொண்டார்கள், புரிந்து கொண்டார்கள். இந்தப் போட்டியில் பல சிறப்பான பங்களிப்புகள் இடம் பெற்றிருந்தன. ஒரு கவிதை என் மனதைக் கொள்ளை கொண்டது, இது எனக்கு பிடித்தமாக இருக்கிறது, அதனால் இதை உங்களுக்குப் படித்துக் காட்ட விரும்புகிறேன். சின்னச் சின்ன ஊர்களில் இருக்கும் குழந்தைகள் கூட எத்தனை புத்திசாலித் தனமாக இருக்கிறார்கள் பாருங்கள். இவர்களின் கண்ணோட்டம் எத்தனை விசாலமாக இருக்கிறது, எத்தனை ஆழமாகச் சிந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் நம்மால் இதில் காண முடியும். உத்திர பிரதேசத்தின் முஸஃபர்நகரைச் சேர்ந்த கரிமா குப்தா இந்த போட்டியில் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார், சிறப்பாக எழுதியிருக்கிறார்.

ஆப்பிரிக்காவில் நீல நதி, ஆனால் கடலின் பெயரோ சிவப்பு
பரந்து பட்ட இந்தத் தீவில் வாழும் இந்தியர்கள் மனதில் மகிழ்வு
சிந்து சமவெளி நாகரீகம் பாரதத்தின் அடையாளம் என்றால்,
நீல நதியும் கார்த்தேஜும் ஆப்பிரிக்க கலாச்சார அடையாளம்.
காந்தியடிகள் தொடக்கி வைத்தார், ஆப்பிரிக்காவிலிருந்தூ பேரியக்கம்
அனைவரையும் கவர்ந்திழுத்தார், மனங்கள் மீது வாகை சூடினார்.
ஜோனஸ்பர்க்கோ, கிங்கஸ்டனோ, ஜிம்பாப்வேயோ, சாடோ,
அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிலும், கிடைக்கும் நமது ஆலூ சாட்.
எழுத என்னமோ என்னிடத்திலே, வரிகள் உள்ளன பல்லாயிரம்,
ஆப்பிரிக்க காடுகளிடத்திலே, எனக்கு உள்ள அன்பு ஏராளம்.

கவிதை என்னமோ மிகவும் நீண்டதாக இருக்கிறது, இதில் நான் உங்களுக்கு சில பகுதிகளை மட்டுமே படித்துக் காட்டினேன். நடைபெறவிருப்பது இந்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான மாநாடு. ஆனால் இங்கே இருக்கும் மக்களை இணைக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. நான் கரிமாவுக்கும், இப்போட்டியில் பங்கெடுத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும், 1600க்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்களுக்கும், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று சான்ஸத் ஆதர்ஷ் கிராம் யோஜனா, நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதன் பின்னர் பல உறுப்பினர் நண்பர்கள் இந்தப் பணியை நிறைவேற்றி இருக்கிறார்கள். இதில் அவர்கள் முழு மனதோடு ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த மாதம் போபாலில் ஒரு கருத்துப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், இந்த மாதிரி கிராமத் திட்டம் நிறைவேற்றப்படும் கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் என அனைவருமாக இணைந்து மாதிரி கிராமத் திட்டம் பற்றி ஆழ்ந்த கலந்தாய்வு நடத்தினார்கள். இதன் மூலமாக பல வகையான புதிய கருத்துக்கள் வெளிப்பட்டு, அவை ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தன. சில விஷயங்களை நான் கண்டிப்பாக உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். ஜார்க்கண்ட ஒரு வகையில் அதிக பழங்குடியினர் வசிக்கும் பகுதி. துரதிர்ஷ்டவசமாக அது மாவோ தீவிரவாதிகள், குண்டு கலாச்சாரம், படுகொலைகள் ஆகியவையே ஜார்க்கண்ட் பற்றி நாம் பேசும் போது நினைவுக்கு வருபவை. இந்த இடது சாரி தீவிரவாதிகளின் பாதிப்பினால் பல பகுதிகள் நாசமாகி இருக்கின்றன. ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த, நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பணியாற்றி இருக்கும் நமது மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கரிய முண்டா அவர்கள் பழங்குடி மக்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார். அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பர்ஸி கிராம பஞ்சாயத்தை மாதிரி கிராமமாக அமைக்கத் தேர்வு செய்தார். அந்தப் பகுதி இடது சாரி தீவிரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அங்கே அரசு இயந்திரம் சரிவர செயல்பட முடியாத நிலை இருப்பதோடு, மருத்துவர்கள் கூட சென்று சேர முடிவதில்லை. அவர் அங்கு செல்ல ஆரம்பித்தார், மக்கள் மனதில் நம்பிக்கை ஒளியை ஏற்றினார், அரசு அமைப்புகளில் உயிரூட்டம் கொடுக்க முயற்சிகள் மேற்கொண்டார், அதிகாரிகளை அங்கு வந்து பணியாற்ற ஊக்கமளித்தார். நீண்ட காலமாக புறக்கணிப்பில் உழன்று கொண்டிருந்த அந்தப் பகுதியில் வளர்ச்சியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நாட்டத்தை ஏற்படுத்தினார். மாதிரி கிராமத் திட்டத்தில் கட்டமைப்பு வசதிகளைத் தவிர, மக்கள் மனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வெற்றிகரமான முயற்சி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் இந்த பர்ஸி கிராமத்தில் ஏற்பட்டது. மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் கரிய முண்டா அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போன்ற ஒரு தகவல் எனக்கு ஆந்திர மாநிலத்திலிருந்தும் கிடைத்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக் கஜபதி ராஜு அவர்கள் மாதிரி கிராமத் திட்டத்தில் முழுவீச்சில் ஈடுபட்டார். அவர் ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் இருக்கும் த்வாராபுடி கிராம பஞ்சாயத்தை மாதிரி கிராமத் திட்டத்துக்காகத் தேர்வு செய்தார். மற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவர் இது தொடர்பாக சிறப்பான ஒரு புதுமையை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் அங்கே இருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு பணியைச் செய்ய ஒப்படைத்தார். ஏனென்றால் கிராமங்களில் இருக்கும் புதிய தலைமுறைக்கு கல்வி பெறும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ஆனால் கிராமத்தின் மூத்த தலைமுறையினர் கல்வியறிவு வாய்க்கப் பெறாத நிலை நிலவுகிறது. அவர் மேல் வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோரை இந்த வகுப்பில் படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பள்ளி அந்த வகையில் காலை வேளையில் மாணவர்களுக்கும், மாலை நேரங்களில் அவர்களின் பெற்றோருக்கும் கல்வி அளிப்பதாக அமைந்தது. சுமார் 550 கல்வியறிவில்லாத மூத்த குடிமக்களுக்கு இதே பிள்ளைகள் படிப்பு சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு எழுத்தறிவை ஏற்படுத்தினார்கள். பாருங்கள், சமுதாயத்தில் எந்த பட்ஜெட்டும் இல்லாமல், சுற்றறிக்கை இல்லாமல், வேறு எந்த சிறப்பு வசதியும் இல்லாமல் வெறும் மன உறுதிப்பாட்டின் மூலமாகவே மட்டும் எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது! இது தான் த்வாராபூடி கிராம பஞ்சாயத்து நமக்கு அளிக்கும் பாடம்.

இதே போலவே வடகிழக்கில் இருக்கும் மிஸோரம் மாநிலத்தைச் சேர்ந்த நமது மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் CL ருவாலா அவர்கள் க்வாலாஹிலங்க் கிராமத்தை மாதிரி கிராமத் திட்டத்துக்காக தேர்ந்தெடுத்தார். அங்கே அவர் ஒரு சிறப்பான பணியை ஆற்றினார். இந்த கிராமம் கரும்பு உற்பத்திக்காகவும், கரும்பு விழாவுக்காகவும் பெயர் பெற்றது. ருவாலா அவர்கள் இந்த கிராமத்தில், மார்ச் மாதம் 11ம் தேதியன்று கரும்புத் திருவிழாவைத் தொடக்கினார். அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் இதிலே பங்கெடுத்தார்கள். பொதுவாழ்வில் ஈடுபட்ட மூத்தோர், அந்தப் பகுதியைச் சார்ந்த அரசுத் துறை அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டார்கள். கரும்பு மகசூல் அதிகம் விற்பனையாக வேண்டும் என்பதை முன்னிறுத்தும் வகையில் கண்காட்சியும் நடைபெற்றது. எப்படி கிராமங்களை பொருளாதார செயல்பாடுகளின் மையக்களமாக ஆக்குவது, கிராமங்களின் விளைபொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது, மாதிரி கிராமத் திட்டத்தோடு ஒரு சுயசார்புடைய கிராம அமைப்பை ஏற்படுத்துவது என்ற முயற்சிகளுக்காக ருவாலா அவர்கள் உண்மையிலேயே பாராட்டுதல்களுக்கு உரிமையானவர் தான்.

எனதருமை சகோதர சகோதரிகளே,

மனதின் குரல் ஒலிக்கும் வேளையில் தூய்மை பற்றிய கருத்துக்கள் இடம் பெறவில்லை என்றால் அது எப்படி? மும்பையிலிருந்து சவிதா ராய் அவர்கள் ஒரு தொலைபேசிச் செய்தியை அனுப்பி இருக்கிறார்கள். தீபாவளி பண்டிகையின் போது, நாம் ஒவ்வொரு ஆண்டும் நமது வீடுகளை சுத்தம் செய்கிறோம். இந்த தீபாவளியின் போது நமது வீடுகளை மட்டும் சுத்தம் செய்யாமல், நமது வெளிப்புறச் சூழல்களையும் தூய்மைப் படுத்துவதோடு, இந்தத் தூய்மையான நிலையை நீடித்திருக்கச் செய்ய வேண்டும். இவர் சரியான விஷயத்தில் நம் கவனங்களை ஈர்த்திருக்கிறார். எனதருமை நாட்டு மக்களே, நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு, நமது நமது நாட்டில் குறிப்பாக ஊடகங்கள் ஒரு இயக்கம் நடத்தின. தீபாவளிக்குப் பிறகு எங்கெல்லாம் பட்டாசுகள் கொளுத்தப்பட்டு இருந்தனவோ, அவற்றையெல்லாம் காட்டினார்கள். இது சரியல்ல என்று கூறினார்கள். அனைத்து ஊடகங்களும் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்படுத்தினார்கள் இதன் விளைவாக, தீபாவளிக்குப் பிறகு தன்னிச்சையாகவே ஒரு தூய்மைப் படுத்தும் இயக்கம் நடந்தது. பண்டிகைகளுக்கு முன்பாக நாம் தூய்மை பற்றி எந்த அளவுக்கு முயற்சி மேற்கொள்கிறோமோ, அதே போல பண்டிகைகளுக்குப் பிறகும் கூட இதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற உங்கள் கருத்து சரியானது தான். இப்படி நமது செயல்பாடு ஒவ்வொரு பொது நிகழ்ச்சியின் போதும் இருக்க வேண்டும். நான் இன்று இந்தியாவின் அனைத்து ஊடகங்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் தூய்மையான பாரதம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த வேளையில் இந்தியா டுடே குழுமம் ஏற்பாடு செய்திருந்த சஃபாயி கிரி என்ற நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் நல்வாய்ப்புக் கிட்டியது. அவர்கள் Clean India விருதுகளை வழங்கினார்கள். பல வகையான செயல்பாடுகள் இடம் பெற்றிருந்ததை என்னால் அறிய முடிந்தது. சில பேர்கள் தங்கள் வாழ்கையை இந்தக் குறிக்கோளுக்காகவே மாற்றியமைத்துக் கொண்டிருப்பதையும். நமது நாட்டில் சில இடங்கள் எப்படி மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது தொடர்பான விஷயங்கள் அனைத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. அதைப் பார்த்து விட்டு நான் இந்தியா டுடே குழுமத்தின் போற்றுதலுக்கு உரிய இந்த வேலைக்கு அவர்களுக்கு என் இதய பூர்வமான பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டேன். தூய்மையான பாரதம் இயக்கம் தொடங்கப் பட்டதிலிருந்து ஆந்திர மாநிலத்திலிருந்தும் தெலங்கானா மாநிலத்திலிருந்தும் வெளிவரும் ஈ டிவி, ஈ நாடு அரும் பணிகளை ஆற்றி வருகின்றன. குறிப்பாக ராமோஜி ராவ் அவர்களின் வயது அதிகம் இருந்தாலும், அவரது உற்சாகம் எந்த இளைஞனுக்கும் குறைவானதாக இல்லை. அவர் தூய்மை இயக்கத்தை தனது தனிப்பட்ட இலக்காகவே ஆக்கிக் கொண்டிருக்கிறார். ஈ டிவி வாயிலாக தொடர்ந்து கடந்த ஓராண்டுக்காலமாக அவர் தூய்மை தொடர்பான வேலைகளுக்கு ஊக்கமளிக்கிறார், அவரது செய்தித் தாள்களில் இது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன, அவர் ஆக்கபூர்வமான பணிகளில் மட்டுமே தனது கவனத்தை செலுத்துகிறார். அவர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த சுமார் 55 முதல் 56000 பள்ளிகளின் 51 இலட்சம் குழந்தைகளை தூய்மையான பாரதம் இயக்கத்தில் இணைத்திருக்கிறார். பொதுவிடங்களாகட்டும், இரயில் நிலையங்களாகட்டும், வழிபாட்டு தலங்களாகட்டும், மருத்துவமனைகளாகட்டும், பூங்காக்களாகட்டும், பல இடங்களில் தூய்மை பற்றிய இயக்கத்தை நடத்தி வருகிறார். இந்த செய்திகளே கூட, தூய்மையான இந்தியாவை அமைப்பதில் வலு சேர்க்கிறது. ABP News சேனல் ’இந்தியா எனது நாடு’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியைத் தொடக்கி இருக்கிறது. மக்கள் மத்தியில் தூய்மை பற்றிய விழிப்புணர்வு எந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை முன்னிறுத்தும் வகையில் நாட்டு மக்கள் மனங்களில் தூய்மை பற்றிய எண்ணத்தை விதைத்தார்கள். NDTV தூய்மையான இந்தியா உருவாகும் என்ற வகையிலான இயக்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. தைனிக் ஜாகரண் செய்தி அமைப்பும் கூட தொடர்ந்து இந்த இயக்கத்தை முன்னிறுத்தி வந்திருக்கிறது. ZEE குழுமத்தார், india tv நிறுவனத்தாரும் தூய்மையான இந்தியா என்ற பிரச்சாரம் தொடக்கி இருக்கிறார்கள். நமது நாட்டில் பல சேனல்கள், பல செய்தித் தாள்கள் இருக்கின்றன. நேரக் குறைபாடு இருப்பதால் நான் அனைவரின் பெயர்களையும் கூறமுடியவில்லை என்றாலும், ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தை கொண்டு சென்றார்கள். ஆகையால் சவிதா ராய் அவர்களே, நீங்கள் அளித்திருக்கும் ஆலோசனையை இன்று நாடு முழுவதும் தனதாக்கிக் கொண்டிருக்கிறது, அதை முன்னெடுத்துச் சென்று கொண்டும் இருக்கிறது.

மேகாலயாவின் நமது ஆளுனர் ஷண்முகநாதன் அவர்கள் எனக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில் மாவல்யன்னோங் கிராமம் பற்றி தெரிவித்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே இந்த கிராமம் தூய்மையை ஒரு முனைப்பாகவே கொண்டு செயல்பட்டு வருகிறது, ஒவ்வொரு தலைமுறையும் தூய்மை விஷயத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். சில ஆண்டுகள் முன்பாக, இந்த கிராமத்துக்கு ஆசியாவின் மிகத் தூய்மையான கிராமம் என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது என்று ஆளுனர் அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார். நமது நாட்டின் தொலைவான வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த மேகாலயா மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமம் தூய்மை விஷயத்தில் பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது என்ற இந்த தகவல் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அங்கே இருக்கும் குடிமக்களுக்கு தூய்மை என்பது இயல்பான ஒன்றாகவே மாறி விட்டது. கிராமத்தின் கலாச்சாரமாகவே இது ஆகி விட்டது. நமது நாடு கண்டிப்பாக தூய்மையாக ஆகும் என்பதற்கு இவை போன்ற நிகழ்வுகள் தானே நமக்கெல்லாம் நம்பிக்கையை அளிக்கிறது. இது நாட்டு மக்களின் முயற்சியின் பலனாக பரிமளிக்கும். 2019ம் ஆண்டு நாம் காந்தியடிகளின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாங்கள் எங்கள் பாரத மாதாவை தூய்மைக்கேட்டிலிருந்து விடுவித்து விட்டோம் என்று 125 கோடி நாட்டு மக்களும் மார்தட்டி பெருமிதத்தோடு முழங்கலாம்.

எனதருமை நாட்டு மக்களே,

நான் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பேசும் போது, ஊழல் நாட்டில் மலிந்து விட்டது என்று தெரிவித்திருந்தேன். மிகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் சின்னச் சின்ன வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, சிபாரிசுக்காக அவர்கள் ஏராளமான கஷ்டங்களைப் பட வேண்டி இருக்கிறது, இடைத் தரகர்களின் கும்பல் அவர்களிடமிருந்து பணத்தைச் சுரண்டுகிறது, வேலை கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் பணம் பறி போகிறது என்பன போன்ற பல செய்திகளை நாம் கேட்க நேர்கிறது. இதைப் பார்த்த பின்னர் என் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது. சின்னச் சின்ன வேலைகளுக்கு நேர்முகத் தேர்வுக்கான அவசியம் என்ன? ஓரிரு நிமிடங்களில் ஒருவரின் திறனைத் தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு மனோதத்துவவியலார் உலகில் இருப்பார் என்று நான் கேள்விப்பட்டதில்லை. இந்த எண்ணத்தால் உந்தப்பட்டு, சிறிய மட்டங்களிலான வேலைகளுக்கு ஆள் எடுக்கும் போது, நேர்முகத் தேர்வு என்ற முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவித்தேன். எனதருமை இளைய நண்பர்களே, இது தொடர்பாக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விட்டது, மத்திய அரசின் டி பிரிவு, சி பிரிவு மற்றும் பி பிரிவுகளின் non gazetted, அரசிதழ்ப் பதிவு பெறாத அலுவலர்களுக்கான தேர்வுகளில் இனி நேர்முகத் தேர்வு இடம் பெறாது. இது 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி அமலுக்கு வரும். இப்போது நடைபெற்றுவரும் செயல்பாடுகளில் நாங்கள் எந்தக் குறுக்கீடும் செய்யப் போவதில்லை. ஆனால் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் இது அமலாக்கம் பெறும். என் அனைத்து இளைய சமுதாய நண்பர்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

கடந்த பட்ஜெட்டில் நாங்கள் ஒரு மகத்துவம் நிறைந்த அறிவிப்பைச் செய்திருந்தோம். நமது நாட்டில் தங்கம் ஒரு வகையில் சமுதாயத்தின் ஒரு அங்கமாகவே ஆகி இருக்கிறது. தங்கம் பொருளாதார பாதுகாப்புக்கான ஒரு ஊடகமாக கருதப்படுகிறது. சங்கடங்கள் வரும் நேரத்தில் தங்கமே கை கொடுக்கிறது. இது சமுதாய வாழ்வியலில் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வரும் ஒரு பாரம்பரியம். தங்கத்தின் மீதான நாட்டத்தை யாராலும் கட்டுப் படுத்த முடியாது என்பதே என் கருத்து. ஆனால் தங்கத்தை பயனற்ற வகையில் தேக்கி வைப்பது இன்றைய காலகட்டத்தில் உகந்ததாக இருக்காது. தங்கம் ஒரு ஆற்றலாக பரிமளிக்க முடியும். தங்கம் பொருளாதார சக்தியாக மாறும் திறன் உடையது. தங்கம் நாட்டின் பொருளாதாரச் சொத்தாக மாற முடியும். ஒவ்வொரு இந்தியனும் இந்த முறையில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். பட்ஜெட்டில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை இந்த தீபாவளி பண்டிகையின் போதும் அதற்கு முன்பாக வரும் தந்தேரஸ் பண்டிகை நாள் அன்றைக்கும் மக்கள் சிறப்பான வகையில் தங்கம் வாங்குகிறார்கள். இவற்றுக்கு முன்பாகவே நாங்கள் இந்த மகத்தான திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க இருக்கிறோம். gold monetization scheme தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். இதன்படி நீங்கள் உங்கள் தங்கத்தை வங்கியில் செலுத்தி, எப்படி உங்கள் முதலீட்டுத் தொகைக்கு வட்டியைப் பெறுகிறீர்களோ, அதே போல வங்கியில் சேமிக்கப்படும் தங்கத்துக்குமான வட்டியை நீங்கள் பெறலாம். முன்பெல்லாம் தங்கத்தை லாக்கர்களில் வைத்திருப்பார்கள். லாக்கருக்கான வாடகையை நாம் செலுத்த வேண்டியிருக்கும். இப்போதோ தங்கம் வங்கியில் இருக்கும், ஆனால் பணத்தை வங்கி வட்டி வாயிலாக உங்களுக்கு அளிக்கும். இப்போது சொல்லுங்கள் நாட்டு மக்களே, தங்கம் பணம் கொழிக்குமா இல்லையா? பயனில்லாத வகையில் பூட்டி வைக்கப்பட்ட தங்கம் ஆயுள் முழுக்க சக்தியாக மாறுமா மாறாதா? இந்த வேலையைத் தானே நாம் செய்ய வேண்டும்? இதில் நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு அளியுங்கள். வீட்டில் தங்கத்தை வீணாக வைத்திருக்காதீர்கள். அதன் பாதுகாப்பும், வட்டியும் என இரண்டு லாபங்கள், இதன் பயனைத் தவற விடாதீர்கள்.

இரண்டாவது விஷயம். சவரன் தங்கப் பத்திரம் வாயிலாக உங்கள் கைகளில் தங்கக் கட்டிகள் கிடைக்காது. ஒரு காகிதம் மட்டுமே கிடைக்கும். ஆனால் அந்தக் காகிதத்தின் மதிப்பு தங்கத்தின் மதிப்புக்கு ஈடாகவே இருக்கும். என்று நீங்கள் அந்தக் காகிதத்தைத் திரும்பச் செலுத்துகிறீர்களோ, அன்றிருக்கும் தங்க விலைக்கு ஏற்றபடி உங்களுக்கு பணம் அளிக்கப்படும். இன்று நீங்கள் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சவரன் தங்கப் பத்திரத்தை வாங்கி இருந்தால், 5 ஆண்டுகள் கழித்து அந்தப் பத்திரத்தைத் திரும்பச் செலுத்தினால், அன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் விலை 2500 ரூபாயாக இருந்தால், அந்தக் காகிதத்துக்கு பதிலாக உங்களுக்கு 2500 ரூபாய்கள் கிடைக்கும். இதையும் நாங்கள் ஆரம்பிக்க இருக்கிறோம். இதனால் நாம் தங்கம் வாங்க வேண்டி இருக்காது, தங்கத்தைப் பாதுகாக்க வேண்டியிருக்காது, காகிதத்தை யாரும் களவாடவும் மாட்டார்கள். அடுத்த வாரத்தில் பாதுகாப்பை அளிக்கும் இந்தத் திட்டத்தையும் நான் நாட்டு மக்களுக்கு கண்டிப்பாக சமர்ப்பிக்க இருக்கிறேன். நாங்கள் தங்க நாணயத்தையும் வெளியிட இருக்கிறோம். அசோக சக்கரம் உடைய தங்க நாணயம். நாம் சுதந்திரம் பெற்று சுமார் 70 ஆண்டுக்காலம் நிறைவடைந்திருக்கிறது; ஆனாலும் நாம் இது வரை அந்நிய நாட்டுத் தங்க நாணயத்தையே பயன்படுத்தி வந்திருக்கிறோம், அல்லது அயல்நாட்டு தங்கக் கட்டிகளையே பயன்படுத்தி வந்திருக்கிறோம். நமது நாட்டுக்கே உரித்தான சுதேசிக் குறியீடு ஏன் இருக்கக் கூடாது? ஆகையால் வரும் வாரத்தில் தந்தேரஸ் புனித நாளுக்கு முன்பாக, 5 கிராம்கள், 10 கிராம்கள் அசோக சக்கரம் பொறித்த இந்திய தங்க நாணயம் வெளியிடப்படும். இதனோடு கூட 20 கிராம்கள் தங்கக் கட்டிகளும் மக்களுக்கு அளிக்கப்படும். இந்த புதிய திட்டம் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும், இதில் உங்கள் முழு ஒத்துழைப்பும் எனக்குக் கிட்டும் என்று எனக்கு கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது.

எனதருமை நாட்டு மக்களே,

அக்டோபர் மாதம் 31ம் தேதி இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த தினம். ஒரே பாரதம், உன்னதமான பாரதம் என்பதற்கு கருத்துருவாக விளங்கிய படேல் அவர்களைப் பற்றி சிந்திக்கும் போது, ஒட்டு மொத்த இந்தியாவும் மனதில் உதிக்கும். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காக இந்த மகத்தான மனிதர் மிகப் பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறார். இரும்பு மனிதர் என்ற தன் பெயருக்கு ஏற்ற வகையில் அவர் செயல் பட்டிருக்கிறார். சர்தார் அவர்களுக்கு நாம் அவசியம் நமது பணிவான அஞ்சலிகளை உரித்தாக்குவோம். பூகோள ரீதியாக இந்தியாவை ஒன்றுபட்ட நாடாக அவர் ஆக்கியிருந்தாலும், இந்தியாவை ஒரே நாடாக்க வேண்டும் என்ற அவரது கனவு, அந்த ஒற்றுமை மந்திரம் நிரந்தரமாக நமது எண்ணம், நடைமுறைகள், வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் உருப்பெற வேண்டும். இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு; பல நெறிகள், பல வழிமுறைகள், பல மொழிகள், பல இனங்கள், பல சூழல்கள் என ஏராளமான வேற்றுமைகள் நிறைந்தது நமது நாடு. இந்த வேற்றுமைகள் தாம் நமக்கு அழகு சேர்க்கின்றன. இந்த வேற்றுமைகள் மட்டும் இல்லையென்றால், எந்த அழகு நமக்கு பெருமிதம் அளித்து வந்துள்ளதோ, அது நமக்கு கிட்டாமல் போகும். ஆகையால், வேற்றுமைகள் மட்டுமே ஒற்றுமைக்கான மந்திரம். அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவைதாம் வளர்ச்சியின் வேர்கள். கடந்த பல ஆண்டுகளாக அக்டோபர் மாதம் 31ம் தேதியன்று ஒற்றுமை ஓட்டம் நடை பெற்று வந்துள்ளது. அதில் பங்கெடுக்கும் நல்வாய்ப்பு முன்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. இந்த முறையும் பல்வேறு பகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், மக்கள் உற்சாகத்தோடு ஒற்றுமை ஓட்டத்துக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருவதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றுமை ஓட்டம் தான் உண்மையில் வளர்ச்சியை நோக்கிய ஓட்டம். இன்னொரு வகையில் இதை கூற வேண்டுமானால், வளர்ச்சி ஓட்டத்துக்கான உத்திரவாதம் தான் ஒற்றுமை ஓட்டம். வாருங்கள், சர்தார் அவர்களுக்கு நம் பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்வோம். ஒற்றுமை மந்திரத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

எனதருமை சகோதர சகோதரிகளே,

நீங்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகைக்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள். வீட்டில் தூய்மைப்பணி செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும், புதிய பொருட்களை வாங்கிக் கொண்டிருப்பீர்கள், தீபாவளி புனித நன்னாள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடப் படுகிறது. தீபாவளி புனித நன்னாளை முன்னிட்டு நான் உங்கள் அனைவருக்கும் என் எண்ணற்ற நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் தீபாவளி நாட்களின் போது ஏதும் விபத்துக்கள் நேரா வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். பட்டாசுகளை வெடிக்கும்போதும், தீபங்களை ஏற்றும் போதும், கவனமாக இருங்கள். தீபாவளிப் பண்டிகையின் ஆனந்தத்தில் திளையுங்கள், ஆனால் யதேச்சையாகக் கூட நமது குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் பெற்றோரிடம் குறிப்பாக கேட்டுக் கொள்கிறேன். மேலும் தூய்மைப் படுத்துவதை நாம் செய்தே ஆக வேண்டும்.

எனதருமை நாட்டு மக்களே,

தீபாவளிக்கு அடுத்த நாள் நான் பிரிட்டன் நாடு செல்லவிருக்கிறேன். இந்த முறை எனது பிரிட்டன் நாட்டுப் பயணம் மிகவும் சுவாரசியம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு சிறப்பான காரணம் உண்டு. சில வாரங்கள் முன்பாக மும்பையில் பாபா சாஹேப் அம்பேட்கர் உடலுக்கு எரியூட்டப்பட்ட இடத்தில் ஒரு சிறப்பான நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டச் சென்றிருந்தேன். லண்டனில் பாபா சாஹேப் அம்பேட்கர் வசித்து வந்த இல்லம் இப்போது இந்தியாவுக்குச் சொந்தமாகி இருக்கிறது. 125 கோடி மக்களுக்கு கருத்தூக்கம் அளிக்கக் கூடிய இடமாக அது ஆகி இருக்கிறது. அதை முறைப்படி தொடக்கி வைக்கவே நான் அங்கே செல்லவிருக்கிறேன். தாழ்த்தப்பட்டவர்களாகட்டும், ஒடுக்கப்பட்டவர்களாகட்டும், உரிமை மறுக்கப் பட்டவர்களாகட்டும், வஞ்சிக்கப்பட்ட இனத்தவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கட்டும், இடர்பாடுகளைத் தங்கள் வாழ்வில் சந்தித்து வரும் எந்த ஒரு இந்தியராகட்டும், அவர்களுக்கு எல்லாம் பாபா சாஹேப் அம்பேட்கரின் இந்த பவனம் மன உறுதிப்பாடு திடமாக இருந்தால், சங்கடங்களைக் கடந்து கூட தங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும், கல்வியறிவு பெற முடியும் என்பதற்கு இந்த இடம் கருத்தூக்கம் ஏற்படுத்தும் வகையில் அமையும். இந்த இடத்தில் அமர்ந்து தான் பாபா சாஹேப் அம்பேட்கர் கடுமையாக உழைத்தார். இந்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி, சமுதாயத்தின் பாதிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த அயல் நாடுகளில் படிக்கச் செல்லும் புத்திசாலிக் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை அளிக்கின்றன. இந்திய அரசும் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த புத்திகூர்மையுடைய பிள்ளைகளுக்கு ஊக்கம் அளிக்கிறது. பிரிட்டனில் நமது பிள்ளைகள் படிக்கச் செல்லும் போது, பாபா சாஹேப் அம்பேட்கரின் இந்த நினைவகம், அவர்களுக்கு யாத்திரைத் தலமாக அமையும், கருத்தூக்கம் ஏற்படுத்தும் நிலையமாக ஆகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாழ்கையில் முடிந்தவரை கற்றலும், பின் நாட்டுக்காக வாழ்தலும் – இது தானே பாபா சாஹேப் அம்பேட்கர் அளிக்கும் செய்தி. அவர் வாழ்ந்தல்லவா காட்டினார்! எனது பிரிட்டன் யாத்திரை எனக்கு சிறப்பான உற்சாகத்தை ஏற்படுத்துகிறது, இந்த விஷயம் பல ஆண்டுகளாகவே தீர்க்கப்படாமல் இருந்து வந்துள்ளது, இப்போது அந்த பவனம் 125 கோடி இந்திய மக்களின் சொத்தாக ஆக வேண்டும், அது பாபா சாஹேப் அம்பேத்கரின் நினைவுகளைத் தாங்கியதாக அமைய வேண்டும், அப்போது என்னைப் போன்றவர்களுக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும், நினைத்துப் பாருங்கள். லண்டனில் மேலும் ஒரு வாய்ப்பு எனக்கு கிட்ட இருக்கிறது. அது பகவான் பசவேஸ்வரின் மூர்த்தியை திறந்து வைப்பது தான். பல ஆண்டுகளுக்கு முன்பாக பகவான் பஸவேஸ்வர் ஜனநாயகத்துக்காகவும், பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுதலுக்காகவும் ஆற்றியிருக்கும் பணிகள், எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம். லண்டனில் பகவான் பஸவேஸ்வரின் திருவுருவச் சிலை உலக மக்களுக்கு சமர்ப்பிக்கப் படுதல் என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் மகான்களின் சிந்தனையோட்டம் எப்படி இருந்திருக்கிறது, எத்தனை தொலைநோக்குப் பார்வை அமைந்திருந்தது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. இது போன்ற ஒரு நிகழ்வு இணையும் போது, நாட்டு மக்கள் அனைவரின் மனங்களும் குதூகலத்தில் நிரம்புகிறது.

எனதருமை நாட்டு மக்களே,

மனதின் குரலோடு நீங்கள் அனைவரும் இணைந்து வந்துள்ளீர்கள். தொலைபேசி வாயிலாக, mygov.in வாயிலாக உங்கள் ஆலோசனைகள் எனக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. பின்னர் உங்கள் கடிதங்களைக் கொண்டு ஆல் இண்டியா ரேடியோவில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன, அரசு அதிகாரிகளை வரவழைத்து விவாதங்கள் நடத்தப்படுகின்றன, சிலர் தங்கள் பிரச்சனைகளைப் பற்றி எழுதும் போது அவற்றுக்கான தீர்வுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்தியா போன்ற நாட்டில் பல மொழிகளை நாம் கற்கத் தேவையாக இருக்கிறது. சில மொழிகளைக் கற்கும் பேறு எனக்குக் கிட்டியிருந்தாலும், இத்தனை மொழிகளையும் என்னால் கற்க முடியவில்லை என்பது உண்மை தான். ஆனாலும் கூட ஆல் இண்டியா ரேடியோ இந்த மனதின் குரலை ஒவ்வொரு மாநில மொழியிலும் இரவு 8 மணிக்கு ஒலிபரப்பி வருகிறது. அதில் குரல் வேறு ஒருவருடையதாக இருக்கலாம், ஆனால் கருத்து என் மனதினுடையதாக இருக்கிறது. உங்கள் மொழியில், உங்கள் மனங்களில் நுழைய இரவு 8 மணிக்கு நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன். நமது உறவு எத்தனை அருமையாக மலர்ந்திருக்கிறது பாருங்கள். கடந்த முறை ஓராண்டுக் காலம் நிறைவடைந்திருந்தது; இன்று நாம் புதிய ஆண்டில் கால் பதிக்கிறோம்.

எனதருமை நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு முறை நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்!!

•••••