பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அடிப்படை குறைப்பு மற்றும் வருவாய் மாற்றத்தை (base erosion and profit sharing – BEPS) தவிர்ப்பதற்காக வரி தொடர்பான நடவடிக்கைகளை அமல்படுத்தும் வகையிலான பல்வேறு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு/ஜி20-ன் நடவடிக்கையால் இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெப்ஸ் திட்டம் என்பது, வரி விதிகளில் உள்ள வேறுபாடுகளையும், இடைவெளியையும் மாற்றுவதற்காக செயற்கையாக வருவாயை குறைந்த வரி அல்லது வரியில்லாத (குறைந்த அல்லது பொருளாதார நடவடிக்கைகள் இல்லாத) பகுதிகளுக்கு மாற்றுவதாகும். இதன் காரணமாக, குறைந்த வரி அல்லது ஒட்டுமொத்தமாக தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தப்படாத நிலை ஏற்படும்.
பெப்ஸ் இறுதித் திட்டத்தின்கீழ், பெப்ஸ் பிரச்சினையை ஒருங்கிணைந்த முறையில் எதிர்கொள்ள 15 நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெப்ஸ் இறுதி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரி ஒப்பந்தங்களில் மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இது கடும் சுமையை ஏற்படுத்தும். நேர விரயமும் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பெப்ஸ் வழிமுறைகளை அமல்படுத்துவதற்காக அனைத்து இருதரப்பு வரி ஒப்பந்தங்களிலும் விரைவில் மாற்றங்கள் செய்யப்படும். பல நாடுகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை வடிவமைப்பதற்காக கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
பின்னணி:
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள், ஜி20, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD), பெப்ஸ் கூட்டமைப்புகள் மற்றும் பிற ஆர்வமுள்ள நாடுகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவில் இந்தியாவும் ஒரு அங்கமாக உள்ளது. பல நாடுகளை உள்ளடக்கிய உடன்பாட்டை இறுதிசெய்வதற்காக ஒவ்வொரு நாடும், சமமான அளவில் மே 2015 முதல் சமமான மதிப்புடன் பணியாற்றி வருகின்றன. உடன்பாட்டின் அனைத்து அம்சங்களையும், அதனுடன் இணைந்த விளக்க அறிக்கையையும் உயர்நிலைக் குழு, 2016-ம் ஆண்டு நவம்பர் 24-ல் இறுதிசெய்தது.
உடன்பாட்டை மீறுவதை தடுப்பதற்காக குறைந்தபட்சம் இரண்டு தரநிலைகளை இந்த உடன்பாடு செயல்படுத்துகிறது. மேலும், பரஸ்பர உடன்பாட்டு வழிமுறைகளின் மூலம், பிரச்சினைக்கு தீர்வுகாணப்படுகிறது. இந்த உடன்பாடு, நேரடியாக அனைத்து வரி உடன்பாடுகளின் அம்சங்களை ஒரே உடன்பாட்டின் மூலம் திருத்துவதைப் போன்று இருக்காது. அதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள வரி உடன்பாடுகளுடன் செயல்படுத்தப்படும். பெப்ஸ் வழிமுறைகளை செயல்படுத்துவதற்கு செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும்.
பல்வேறு நாடுகள் அடிப்படையில், பெப்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதில், இந்த உடன்பாடு நிலைத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இந்த உடன்பாட்டில், சில நாடுகளின் விருப்பத்தின்பேரில், குறிப்பிட்ட சில உடன்பாடுகளை சேர்க்காமல் விடுவதற்கும், சில வழிமுறைகளை அல்லது வழிமுறைகளின் பகுதியை விட்டுவிடுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டில், கையெழுத்திடுவதற்கான நடவடிக்கைகள் டிசம்பர் 31, 2016-ல் தொடங்கியது. முதலாவது கூட்டு கையெழுத்து நிகழ்ச்சியை பாரீஸில், ஜூன் 7, 2017-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கையெழுத்திடுவது என்பது, இந்த உடன்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்கான முதலாவது நடவடிக்கை ஆகும். ஒப்புதல் அளித்தபின் தான், இந்த உடன்பாடு கட்டுப்படுத்துகிறது. இந்த உடன்பாட்டின்படி, மாற்றம் செய்யப்படும் உடன்பாடுகள், விலக்கு கோரப்படும் உடன்பாடுகள் ஆகியவற்றின் பட்டியல், நாடுகள் தேர்வுசெய்யும் வழிமுறை ஆகியவற்றை கையெழுத்திடும்போது அல்லது ஒப்புதல் அளிப்பதற்கான கருத்தை தெரிவிக்கும்போது அறிவிக்க வேண்டும்.
இந்த உடன்பாட்டில், இந்தியா கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஜூன் 2017-ல் உடன்பாட்டில் கையெழுத்திடும் நிகழ்ச்சியின்போது, ஒப்பந்தத்துக்கு கட்டுப்படும் வரி உடன்பாடுகள் மற்றும் விலக்கு கோரும் உடன்பாடுகளின் பட்டியல் ஆகியவற்றை தெரிவிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. ஒப்புதல் அளிப்பதற்கான ஆவணத்தை அளிக்கும்போது, இந்த இறுதிப்பட்டியல்கள் சமர்ப்பிக்கப்படும்.
பல நாடுகளுக்கு இடையேயான உடன்பாட்டில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியா ஏற்கனவே மேற்கொண்ட வரி உடன்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பெப்ஸ் வழிமுறையின் பயன்கள் விரைவாக செயல்பாட்டுக்கு வரும். அத்துமீறலுக்கு எதிரான பெப்ஸின் பலன்களை இந்தியாவுடன் உடன்பாடுகளை மேற்கொண்ட நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதன் மூலம், வருவாய் இழப்பை தடுக்க முடியும். அதாவது, உடன்பாடு அத்துமீறல் மற்றும் பேஸ் எரோஷன் மற்றும் வருவாய் மாற்ற உத்திகள் மூலம், வருவாய்க்கு வரிவிதிக்கப்படும். பொருளாதார நடவடிக்கைகள் மூலம் வருவாய் கிடைக்கும். மேலும், மதிப்பு உருவாகும்.