பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று அரசுமுறைப் பயணமாக பெல்ஜியம், அமெரிக்க, சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கான தனது பயணத்தை துவக்கும் முன்னர் விடுத்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு;
‘‘ மார்ச் 30ஆம் தேதியன்று நான் பிரசல்ஸ் நகரில் பெல்ஜியம் பிரதமர் திரு. சார்லஸ் மைக்கேல் அவர்களை சந்திக்க உள்ளேன். ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான 13வது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிலும் நான் பங்கு கொள்கிறேன்.
பெல்ஜியம் மக்களின் தாங்கு சக்தி, உற்சாக உணர்வு ஆகியவற்றிற்கு நமது வாழ்த்துக்களை தெரிவிக்க வார்த்தைகள் போதாது. பிரசல்ஸ் நகரில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல்களின் பின்னணியில் நாம் அவர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறோம். தங்கள் பேரன்பிற்குரியவர்களை இந்தத் தாக்குதலில் இழந்தவர்களின் ஆழ்ந்த துயரத்திலும் நாம் பங்கேற்கிறோம்.
பெல்ஜியம் நாட்டுடனான நமது உறவுகள் மிக ஆழமானவை என்பதோடு, காலத்தை வென்றதாகவும் அமைகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள நாடுகளில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாக பெல்ஜியம் விளங்குகிறது. அந்த நாட்டின் பிரதமருடனான எனது சந்திப்பு என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக முக்கியமான உறுப்பினரான பெல்ஜியத்துடன் வர்த்தகம், முதலீடு, உயர்தொழில்நுட்பத்தில் பங்கு ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்துவதையே நோக்கமாகக் கொண்டதாகும்.
இத்தருணத்தில் பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேலுடன் இணைந்து இந்திய- பெல்ஜிய ஏரிஸ் [ ஆரியபட்டா நோக்கு அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனம்] தொலைநோக்கியை தொலைதூர முறையில் இயக்கவிருக்கிறேன்.
ஐரோப்பிய ஒன்றியமானது இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தகக் கூட்டாளி என்பது மட்டுமின்றி, இந்தியாவின் ஏற்றுமதி சென்றடையும் மிகப்பெரும் பகுதியாகவும் அமைகிறது. பல்வேறு விதமான துறைகளிலும் பலவகையான தொடர்புகளையும் மேலும் முன்னெடுத்துச் செல்ல இந்த உச்சிமாநாடு உதவு புரியும்.
பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்தியா குறித்த அறிஞர்கள், பெல்ஜிய நாட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மட்டுமின்றி, பெல்ஜிய நாட்டில் உள்ள வம்சாவளி இந்தியர்களில் பரவலானதொரு பிரிவினரையும் நான் சந்திக்க உள்ளேன். அதே போன்று பெல்ஜியம் நாட்டிலுள்ள வைர வியாபாரிகள் சங்கத்தின் குழு உறுப்பினர்களையும் நான் சந்தித்துப் பேச இருக்கிறேன்.
அன்று மாலையே இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாட இருப்பதோடு, அவர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு உரையாற்ற இருக்கிறேன்.
பெல்ஜியத்தைத் தொடர்ந்து, மார்ச் 31ஆம் தேதியன்று நான்காவது அணு ஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்குச் செல்கிறேன்.இந்த உச்சி மாநாட்டில் பல நாடுகளும், உலகளாவிய அமைப்புகளும் பங்கேற்க உள்ளன.
அணு ஆயுத அடிப்படையிலான பயங்கரவாதத்தால் அணுஆயுத பாதுகாப்பிற்கு உருவாகியுள்ள அச்சுறுத்தல் என்ற மிக முக்கியமான பிரச்சினையை இந்த உச்சிமாநாடு விவாதிக்க உள்ளது. உலகளாவிய அணுஆயுத பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள், நடைமுறைகள் பற்றி தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். குறிப்பாக அணு ஆயுத திறனை பெற்றிராத நாடுகளின் கைகளில் அணுசக்தி தொடர்பான பொருட்கள் சென்றடையாத நிலையை உறுதிப்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பர்.
இந்த உச்சிமாநாட்டின்போதே, இருநாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு என்ற நிகழ்ச்சி நிரலை முன்னுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறேன்.
அதே நேரத்தில் லிகோ திட்டத்தோடு தொடர்புடைய விஞ்ஞானிகள் உடனான கலந்துரையாடலையும் நான் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.
ஏப்ரல் 2,3 தேதிகளில் மரியாதைக்குரிய சவூதி அரசர் சல்மான் பின் அப்துலஜிஸ் அல் சவுத் அவர்களின் அழைப்பிற்கிணங்க, சவூதி அரேபியா செல்லவுள்ளேன்.
சவூதி அரேபிய நாட்டுடனான இந்தியாவின் உறவு என்பது தனிச்சிறப்பு மிக்க ஒன்றாகும். இரு நாட்டு மக்களுக்கு இடையே ஆன செறிவான உறவுகள் இதில் மிக முக்கியமான அம்சமாகும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் விரிவாக்கவும், ஆழப்படுத்தவும் சவூதி நாட்டு தலைவர்களுடன் விவாதிக்க நான் திட்டமிட்டுள்ளேன். அப்பகுதியின் நிலைமை குறித்த விவாதங்களும் கூட இந்த நிகழ்ச்சி நிரலில் அடங்கியுள்ளது.
நம்முடைய பொருளாதார ரீதியான உறவுகளும்கூட விரிவடைந்து வருகின்றன. இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய வர்த்தக உறவு கொண்ட நாடாக சவூதி அரேபியா விளங்குகிறது. மேலும் இந்தியாவிற்கு மிகப்பெருமளவில் எண்ணெய் வழங்கும் நாடாகவும் அது திகழ்கிறது.
மரியாதைக்குரிய சவூதி அரசர் சல்மான் பின் அப்துலஜிஸ் அல் சவுத் அவர்களுடனான சந்திப்பு மட்டுமின்றி, அரச குடும்பத்தின் இதர முக்கிய உறுப்பினர்களுடன் நடக்கவுள்ள விவாதங்களையும் நான் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்.
இந்தியா தனது வளர்ச்சிக்காக முன்னுரிமை கொடுத்து வரும் விஷயங்களில் சவூதி நாட்டின் முக்கியமான வணிக நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ரியாத் நகரில் திட்டமிடப்பட்டுள்ள வர்த்தக நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோள்களில் இதுவும் ஒன்றாகும்.
அச்சமயத்தில் ரியாத் நகரில் மாஸ்மாக் கோட்டை, எல் அண்ட் டி நிறுவன தொழிலாளர்களின் குடியிருப்பு வளாகம், டி.சி.எஸ். நிறுவனத்தின் முற்றிலும் பெண்களே நடத்தி வரும் தகவல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றையும் நான் சென்று பார்த்து வர திட்டமிடப்பட்டுள்ளது.‘’
India-EU Summit and strong economic & investment ties with Belgium will be on the agenda during my Brussels visit. https://t.co/g8dBL6yY5t
— Narendra Modi (@narendramodi) March 29, 2016
Nuclear Security Summit will be a key gathering where the world will discuss ways to strengthen global nuclear security architecture.
— Narendra Modi (@narendramodi) March 29, 2016
Will meet world leaders on the sidelines of Nuclear Security Summit & scientists associated with LIGO project. https://t.co/H6n9KKCnWI
— Narendra Modi (@narendramodi) March 29, 2016
My Saudi Arabia visit will deepen our bilateral cooperation. Will also highlight investment opportunities in India. https://t.co/nBnHjeHpng
— Narendra Modi (@narendramodi) March 29, 2016