Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆதார் அட்டை வழங்குதல் மற்றும் வங்கிக் கணக்கில் நேரடி மானியம் செலுத்தும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பிரதமர் ஆய்வு செய்தார்.

ஆதார் அட்டை வழங்குதல் மற்றும் வங்கிக் கணக்கில் நேரடி மானியம் செலுத்தும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பிரதமர் ஆய்வு செய்தார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், திங்களன்று நடைபெற்ற உயர்நிலை கூட்டத்தில், ஆதார் அட்டை வழங்குதல் மற்றும் வங்கிக் கணக்கில் நேரடி மானியம் செலுத்தும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

இரண்டு மணி நேரம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மக்களுக்கு பயன்கள் சென்று சேரும் வகையில் ஆதார் எண்கள் உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஆதார் அட்டை எண்களை மத்திய அரசின் தரவுகளோடு இணைப்பது, பயனாளிகளை அடையாளம் காண்பதில் உள்ள முறைகளை நெறிப்படுத்துவது ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. 2015-16 நிதியாண்டில், 30 கோடி பயனாளர்களுக்கு ரூ.61,000 கோடி நேரடி மானியம் செலுத்தும் திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. இதில் ரூ.25,000 கோடி, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழும், ரூ. 21,000 கோடி, சமையல் எரிவாயு மானியத்தின் கீழும் வழங்கப்பட்டுள்து.

நேரடி மானியம் செலுத்தும் திட்டத்தின் மூலம், பல்வேறு நலத்திட்டங்களில் குறிப்பிடத்தக்க சேமிப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, 1.6 கோடி போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு, அதன் மூலம், 10,000 கோடி சேமிக்கப்பட்டது. சமையல் எரிவாயு மானிய திட்டத்தில் 3.5 கோடி போலிப் பயனாளிகள் பெயர் நீக்கப்பட்டு, அதன் மூலம் மட்டும் 2014-15ம் ஆண்டில் மட்டும் ரூ.14,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், 2015-16ம் ஆண்டில் ரூ.3000 கோடி (10 சதவிகிதம்) சேமிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நேரடி மானிய திட்டத்தால் பயனடைந்துள்ளன.

அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் எவ்விதத் தவறும் இல்லாத வழிமுறையை கண்டறிய வேண்டும் என்றார் பிரதமர். புதிய திட்டங்களை செயல்படுத்துவதால், பயனாளிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட துறைகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். திட்டங்களுக்கான மென்பொருளை செயல்படுத்துவதற்கு முன்பாக, போதுமான வகையில் சோதிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

என்.ஜி.ஓ.க்களை அடையாளம் காண்பதற்காக உருவாக்கப்பட்ட புதிய திட்டம் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. 71,000க்கும் அதிகமான என்.ஜி.ஓ.க்கள், நிதி ஆயோக் நடத்தும் என்.ஜி.ஓ.க்களுக்கான தர்ப்பன் இணையதளத்தில் பதிவு செய்துள்ளன.

***