Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமரின் உரை

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமரின் உரை

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமரின் உரை

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமரின் உரை

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமரின் உரை


மேதகு அதிபர் கனி அவர்களே, மேதகு தலைமை செயல் அலுவலர் டாக்டர் அப்துல்லா அவர்களே, மாண்புமிகு சபாநாயகர் மற்றும் மேஷரோன் ஜிர்காவின் தலைவர் வோலேசி ஜிர்கா அவர்களே, இரு அவைகளின் மாண்புமிகு உறுப்பினர்களே,

எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால், பால்க் பிராந்தியத்தின் புகழ்பெற்ற மகனும், மனித குலத்தின் புகழ்பெற்ற கவிஞருமான ஜலாலுதீன் ரூமி “வார்த்தைகளை உயர்த்துங்கள், குரலை உயர்த்தாதீர்கள். மழைதான் மலர்களை தரும். இடி அல்ல” என்று கூறினார். இந்த மாபெரும் நிலத்தின், உயர்ந்த தேசத்தின் ஞானம் இதுதான்.

கவிதையும், அழகும், மரியாதையும், பெருமையும், பெருந்தன்மையும், அற்புதமான நட்புணர்வும், சுதந்திரத்துக்கான வேட்கையும் உள்ள தேசம் இது. இந்த அற்புதமான தேசத்தில் ஆப்கானிய மக்கள், வாக்குகளாலும் விவாதங்களாலும் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயித்துள்ளார்கள். துப்பாக்கியாலும் வன்முறையாலும் அல்ல. ஜிர்காவின் பாரம்பரியத்தில் அபிரிதமான நம்பிக்கை உள்ள மக்கள், ஜனநாயகத்தின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்கள். குறைந்த அளவுள்ள மக்களை தோற்கடிக்கக் கூடிய சவாலை எதிர்த்து இந்த சாதனையை புரிந்துள்ளார்கள். தங்கள் எதிர்காலத்தையும் வாழ்வையும் தியாகம் செய்த எண்ணிலடங்கா பெயர் தெரியாத ஆப்கானியர்களால் இது சாத்தியப்பட்டுள்ளது.

இந்த தேசத்தை தனது ஞானத்தாலும், இருண்ட காலத்திலிருந்து ஒரு உறுதியோடும் இந்த தேசத்தை முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் தலைமையேற்று வழிநடத்தியுள்ளார். அதிபர் கனி மற்றும் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் அப்துல்லா ஆகியோர் தேர்ந்த ராஜதந்திரியாகவும், சிறந்த தேசபக்தராகவும் நடந்துள்ளனர்.

மாண்புமிகு உறுப்பினர்களாகிய நீங்கள், வன்முறையை எதிர்கொண்டு, இந்த பாராளுமன்றத்தில் மக்களின் நம்பிக்கையை பெற்று இந்த இடத்தை பெற்றுள்ளீர்கள்.

மாண்புமிகு உறுப்பினர்களே, இந்தியாவின் 1.25 பில்லியன் மக்களின் சார்பாக, உங்களின் சாதனைகளை பாராட்டி, நமது நட்பின் அடிப்படையில், எதிர்காலத்தில் துணை நிற்பதற்காக இங்கே நிற்கிறேன்.

இந்த அற்புதமான ஆப்கானிய பாராளுமன்றத்தை, ஜனநாயகத்தின் கோவிலை, இந்த நேரத்தில் அதிபர் கனியோடு சேர்ந்து நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

உயர்ந்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளை விட ஒரு சிறப்பான நாளை நாம் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. 11 ஆண்டுகளுக்கு முன்னால், அதிபர் கர்சாய் அவர்களோடு சேர்ந்து இந்த அற்புதமான திட்டத்தை அவர் உருவாக்கினார். இந்த வளாகத்தில் ஒரு பகுதிக்கு அடல் அவர்களின் பெயரை நீங்கள் வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

நமது மக்களின் உழைப்பாலும், நமது தலைவர்களின் தொலைநோக்கு பார்வையாலும், இந்த பாராளுமன்ற வளாகம் நம்மை இணைத்துள்ளது.

அடல் வளாகம் நம்மை உணர்வுகளால் இணைக்கிறது. ஏனென்றால், பஷ்டோவில் அடல் என்றால் கதாநாயகர் என்று பொருள். இந்தியில் அடல் என்றால் உறுதி என்று பொருள். இது ஆப்கானிஸ்தானின் உணர்வுகளையும், நமது நட்பையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒரு தேசமாகவும், ஒரு ஜனநாயகமாகவும், உங்களின் முன்னேற்றத்துக்கு இந்த பாராளுமன்ற வளாகம் ஒரு காணிக்கை. உணர்வுகள், மற்றும் மதிப்பீடுகளுக்கும், நமது சிறப்பான உறவுக்கும் இது ஒரு அடையாளமாக விளங்குகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

வரலாற்றைப் போல நமது உறவு பழமையானது. இந்து குஷ் மலைப்பகுதியில் இருந்து, கைபர் கணவாய் வரை, துறவிகள், வணிகர்கள், மன்னர்கள் ஆகியோர் தங்கள் அறிவாலும், கலாச்சாரத்தாலும், மதத்தாலும், வணிகத்தாலும், சாம்ராஜ்யங்களாலும் நம்மை இணைத்துள்ளார்கள். மாறி வரும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு காலத்தில் நாம் ஒன்றாக இருந்துள்ளோம். போர்களை சந்தித்துள்ளோம். ஆனால், கடந்த காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் வளமாக்கியுள்ளோம்.

பாமியான் மற்றும் அய்நாக் புத்த சின்னங்களாலும், டெல்லியில் உள்ள பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்களாலும், நமது கலாச்சாரம், கலை, மொழி, இலக்கியம், உணவு, விழாக்கள் போன்றவற்றில் நமது காலங்கடந்த உறவின் தடயத்தை பார்க்கிறோம். மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான காந்தாரி ஆப்கானிஸ்தான் எங்களுக்கு வழங்கிய பரிசு.

மௌரிய சாம்ராஜ்யத்தின் சாதனைகளாலோ,அல்லது ஷேர்ஷா சூரியின் சாதனைகளாலோ நம்மிடையே ஏற்பட்டுள்ள இணைப்பை நாம் இப்போது புதுப்பிக்கிறோம். கவிஞர் அகமது ஷா துராணியின் வரிகள் ஒரு ஆப்கானிய அரசரின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. ” ஆப்கான் மலைப்பகுதியை நினைக்கையில் நான் டெல்லியின் அரியணையை மறக்கிறேன்”.

ஒவ்வொரு இந்தியர் மற்றும் ஆப்கானியரின் இதயத்தில் ஒருவருக்கொருவர் அளவில்லா அன்பு இருக்கிறது. நாம் நமது கலாச்சாரம், திரைப்படம், இசை, கவிதை, உணவு மற்றும் விழாக்களை நேசிக்கிறோம். தற்போது நாம் இருவரின் கிரிக்கெட்டையும் ரசிக்கிறோம்.

ஆப்கானின் தேசிய கிரிக்கெட் அணி, டெல்லி அருகே உள்ள மைதானத்தில் அடுத்த வருட உலகக் கோப்பைக்காக பயிற்சி எடுத்து வருகிறது. சமீபத்தில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில், ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய ஆப்கான் அணிக்கு எனது பாராட்டுக்கள். கல்வி, ஆரோக்கியம் அல்லது குடும்பம், வீடு போன்றவற்றிற்கான இயல்பான இடமாக இந்தியாவை ஆப்கானியர்கள் தேர்ந்தெடுப்பது மகிழ்ச்சி தருகிறது.

இந்திய சுதந்திர போராட்டத்துக்கு ஆப்கானியர்கள் அளித்த ஆதரவை நினைவு கூர்கிறோம். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான் வரலாற்றில் முக்கியமான பங்கை வகிக்கிறார். எல்லை தாண்டிய இந்திய அரசு முதன் முதலாக நூறாண்டுகளுக்கு முன், மகாராஜா மகேந்திர பிரதாப் மற்றும் மௌலானா பரக்கத்துல்லா ஆகியோரால் காபூலில் தொடங்கப்பட்டது. ராஜா அமானுல்லா, ஒரு முறை, இந்தியா விடுதலை பெறாத வரை, ஆப்கானிஸ்தான் விடுதலை பெறாது என்று சரியாக சொன்னார்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

நமது சகோதரத்துவத்தின் உணர்வு இது. புதிய நூற்றாண்டில் ஒரு புதிய பயணத்தை துவங்கும் உங்களோடு நாங்கள் பயணிக்கிறோம். நமது கூட்டணியால், ஊரக சமூகங்களுக்கு பள்ளிகள் கிடைத்துள்ளது. சிறிய நீர் பாசனம் கிடைத்துள்ளது. சுகாதார மையங்கள் கிடைத்துள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பல பகுதிகளை ஒன்றிணைக்கும் சாலைகளை கட்டியுள்ளோம். ஆப்கானிய வீடுகளுக்கு ஒளியேற்றும் மின் நிலையங்களை அமைத்துள்ளோம். கல்வி, மருத்துவ ஆலோசனை மற்றும் தகவல் தொடர்பை வழங்கும் செயற்கை கோள்களை படைத்துள்ளோம். பாதுகாப்புப் படைகள் எளிதில் நகர்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

நாம் இருவரும் இணைந்து உருவாக்கும் அமைப்புகளால், விவசாயத்தை மீட்டெடுக்க முடிகிறது. ஆப்கானில் சுரங்கத் தொழிலை கட்டமைக்க முடிகிறது. காபூலில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த முடிகிறது.

ஒரு நாட்டுக்கு அதன் மனிதவளத்தை விட முக்கியமானது எதுவும் இருக்க முடியாது. எங்களது உதவித் தொகை திட்டங்களும், பயிற்சி முகாம்களும் ஆப்கானிய இளைஞர்களை நவீன கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை வளர்த்துக் கொள்ள உதவி செய்கின்றன. எங்களின் பயிற்சியால், ஆப்கானிய பாதுகாப்புப் படைகள் தங்கள் திறனை வளர்த்து தேசத்தை பாதுகாக்க முடிகிறது.

சல்மா அணையிலிருந்து விரைவில் தண்ணீரும், மின்சாரமும் வர உள்ளன. ஸ்டார் மாளிகை உங்களின் விலையில்லா பாரம்பரியத்துக்கு சான்றாக விளங்கும். வருடந்தோறும் 1000 ஆப்கானிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை என்ற திட்டம் தொடரும். விவசாய அறிவியலுக்காக வழங்கப்படும் உதவித் தொகைக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. போரில் உயிரிழந்த ஆப்கானிய பாதுகாப்புப் படையினரின் குழந்தைகளுக்கு 500 உதவித் தொகை திட்டத்தை இன்று அறிவிக்கிறேன்.

நீங்கள் உங்கள் நாட்டை மீளக் கட்டும் உங்கள் முயற்சியில் நாங்கள் உறுதுணையாக நின்றது போல, நீங்கள் எங்கள் மக்களை உங்கள் மக்கள் போல பாதுகாத்துள்ளீர்கள். தினந்தோறும் அச்சுறுத்தல்களை நாங்கள் சந்தித்தாலும், உங்கள் மத்தியில் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம். இந்திய விருந்தினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உயிர் துறந்த ஒவ்வொரு ஆப்கானியருக்கும், எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே பெருமையோடு பணியாற்றும், இந்திய தூதரக அதிகாரிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய மற்றும் ஆப்கானியர்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் இங்கே இருக்கக் கூடாது என்று சிலர் விரும்புகிறார்கள். நாங்கள் இங்கே இருப்பதில் ஒரு மோசமான சதித்திட்டம் இருப்பதாக சிலர் கருதினார்கள். நமது சிறந்த நட்புணர்வால் சிலருக்கு வருத்தம் ஏற்பட்டது. சிலர் நம்மை அச்சுறுத்தவும் செய்தனர். ஆனால், உங்களின் நம்பிக்கையால் நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்கள் நட்பின் நேர்மையையும், உறுதியையும் நீங்கள் ஒருபோதும் சந்தேகித்ததில்லை. நமது நட்பின் பலனை நீங்கள் தற்போது பார்க்கிறீர்கள்.

எங்களை பார்ப்பதால் நீங்கள் எங்களை கணிக்கிறீர்கள். மற்றவர்கள் கூறுவதை வைத்து அல்ல. மர்மமான இந்திய தூதரகங்களைப் பற்றி கூறுவதை வைத்தும் அல்ல. இந்தியா இங்கே போட்டி போடுவதற்காக வரவில்லை. மாறாக எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக வந்துள்ளது. மோதலுக்கு அடித்தளம் அமைக்க வரவில்லை. வாழ்வை புதுப்பிப்பதற்காக வந்துள்ளது. ஒரு தேசத்தை அழிப்பதற்காக அல்ல. இந்தியர்களும், ஆப்கானியர்களும், ஒருவருக்கொருவர் ஆதரவாகவே இருந்துள்ளார்களே தவிர, ஒருவருக்கொருவர் எதிராக அல்ல.

வரலாற்றின் முக்கிய இடத்தில் நாம் இருந்துள்ளோம். போட்டியின் அங்கமாக உங்களை ஒருபோதும் மாற அனுமதிக்க மாட்டீர்கள் அல்லது மற்றவர்களின் விருப்பத்திற்காக இருக்க மாட்டீர்கள் என்பதை வரலாறு உணர்த்துகிறது. ஏனெனில் நீங்கள் கவிஞர் குஷால் கான் கட்டக் கூறியபடி, ஒரு தேசத்தின் பெருமையும், புகழும், அவர்கள் வாழும் வாழ்க்கையால் ஏற்படுகிறது என்பதற்கேற்ப வாழ்ந்து வருகிறீர்கள்.

ஆப்கானிஸ்தான் தனது வளமையான எதிர்காலத்தை கட்டமைக்க, அதன் நிர்வாகத்தை சீராக்கி, வளர்ச்சிப் பாதையில் செல்ல, இந்தியா துணை நிற்கும். நமது நட்புணர்வினால் ஏற்பட்ட கடமையின் காரணமாக இதை செய்கிறோம். மேலும் இந்தப் பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இதை செய்கிறோம்.

ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு, அதன் அருகாமையில் உள்ள நாடுகளின் உதவி அவசியம் என்பதை நாங்கள் அறிவோம். இந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் இதர நாடுகள் நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து, இந்த பொது நோக்கத்துக்காக நமது பொதுவான எதிர்காலத்துக்காக பாடுபட வேண்டும்.

ஆப்கானிஸ்தான் எப்போது அமைதியின் மையமாகவும், புதிய யோசனைகளுக்கான மையமாகவும், வணிகம், எரிசக்தி மற்றும் முதலீட்டுக்கான மையமாகவும் மாறுகிறதோ, அப்போது நாம் அனைவரும் சேர்ந்து முன்னேற முடியும். இதனால்தான் நமது இணைப்பை மேம்படுத்தவதற்காக, கடல் மற்றும் நில வழியாக, ஈரானின் சாபாஹர் வழியாக இணைப்பை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். இதனால்தான், தெற்காசியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பாகிஸ்தான் பாலமாக அமையும் என்று நம்புகிறோம்.

மத்திய ஆசியா இந்தப் பகுதியில் வளத்துக்கான சக்தியை அளிக்கும். மீண்டும் ஒரு காபுலிவாலா இந்திய மனங்களை வெற்றி பெறுவார். இந்தியாவில் ஆப்கானிஸ்தானின் பழங்களை சுவைக்க முடியும். இந்திய பொருட்களை வாங்க ஆப்கானியர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்காது. அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் பகுதியின் வரலாறாக இதுவே இருந்து வந்திருக்கிறது. அதுவே எதிர்காலத்துக்கான பாதையாகவும் மாற வேண்டும்.

ஆப்கானியர்கள் வீரத்தோடு தங்கள் நாட்டை பாதுகாக்கும் அதே வேளையில், தீவிரவாதம் எல்லை தாண்டி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். தீவிரவாதத்துக்கான ஊற்றுகள் அழிக்கப்பட வேண்டும். முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும். தீவிரவாதமும் வன்முறையும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கக் கூடாது. ஆப்கானிஸ்தானின் தேர்வுகளை அது தீர்மானிக்கக் கூடாது. ஏனென்றால், இங்கே பற்றவைக்கப்படும் தீயை இந்த எல்லைக்குள் அடக்க முடியாது.

ஆப்கானியர்கள் தங்கள் சுதந்திரத்தை பாதுகாக்கும் அதே நேரத்தில், தங்கள் அண்டை நாடுகளோடு அமைதியை பேணும் ஞானத்தையும் பெற்றுள்ளார்கள். தங்களுக்குள் அமைதியை உருவாக்கும் உரிமையும் ஆப்கானியர்களுக்கு வேண்டும்.

காபூல் ஆற்றில் ஏராளமான ரத்தம் ஓடியுள்ளது. இந்த மலைப்பகுதியை ஏராளமான சோகம் இருட்டாக்கியுள்ளது. வரையற்ற யுத்தத்தினால், பல கனவுகள் எரிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் பஷ்டூன்களாகவோ, உஸ்பெக்குகளாகவோ, தாஜீக்குகளாகவோ, ஹஸாராக்களாகவோ இருக்கலாம். நீங்கள் இஸ்லாமியராகவோ, இந்துவாகவோ, சீக்கியராகவோ இருக்கலாம். ஆனால், நீங்கள் அனைவரும் ஆப்கான் என்ற நாட்டின் பெருமையான குடிமக்களாக ஒன்றுபட்டு நிற்கிறீர்கள்.

நீங்கள் மதத்தின் பெயராலும், அடையாளத்தின் பெயராலும் போரிட்டிருக்கலாம். ஆனால், தற்போது அமைதியின் பெயரால் ஒன்றுபட வேண்டிய தருணம் இது.

ஒரு அறிவார்ந்த ஆப்கானியர் சொன்னது போல, ஒரு கசப்பு விதையினால் உருவான மரத்துக்கு வெண்ணையும், சர்க்கரையும் கொடுத்து வளர்த்தாலும், அது கசப்பான பழத்தையே தரும்.

பன்மைத்துவம் மற்றும் பல தரப்பு நம்பிக்கைகளைக் கொண்ட பாரம்பரியத்தை நீங்கள் கொண்டுள்ளீர்கள்.

வெளியிலிருந்து போர் தொடுப்பவர்கள், இந்த கட்டிடத்துக்கும் இந்த அரங்கத்துக்கும் வந்தடைய வேண்டும். துப்பாக்கியால் எல்லைகளை பிடிப்பவர்கள், வாக்குகளினால் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். வீடுகளை அழித்தவர்கள் இப்போது இந்த தேசத்தை கட்ட வேண்டும். ஏனென்றால் இது உங்கள் நாடு. இவர்கள் உங்கள் மக்கள். இது உங்கள் விதிகளின்படி, உங்கள் அறிவின்படி, உங்கள் முறைகளின்படி, உங்கள் சகோரத்துவத்தோடு கட்டப்பட வேண்டும். மற்றவர்களின் விருப்பங்களாலும் கணக்குகளாலும் அல்ல.

கடந்த 15 ஆண்டுகளாக நீங்கள் அடைந்துள்ள முன்னேற்றம் அமைதியாலும் பேச்சுவார்த்தையாலும் காக்கப்பட வேண்டும். அது ஒவ்வொரு ஆப்கானியருக்கும் இடம் அளிக்க வேண்டும். அனைவரின் விருப்பங்களுக்கும் இடமளிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தனக்கான உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது என்று உணர்ந்து தன் எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்க வேண்டிய தேசமாக மாற வேண்டும். ஆப்கானியர்கள் தங்கள் எதிர்காலத்துக்கான பொறுப்பை எடுத்துக் கொள்கையில், உலகம் அவர்களோடு இணைந்து நின்று அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

அயல் தேசத்திலிருந்து வந்த ஒரு ராணுவ வீரன், கேள்விப் பட்டே இராத ஒரு ஒரு ஆப்கானிய கிராமத்தில் தனக்கு பரிச்சயம் இல்லாத மக்களுக்காக தன் உயிரை ஈந்ததற்காகவும், மற்றவர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளும் வாழ்வுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த ஆப்கானியர்களுக்காகவும் நாம் இதை செய்ய வேண்டும்.
கால எல்லை இல்லாமல் நாம் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஏனென்றால், பழைய தீவிரவாதத்தின் மேகங்கள் இந்தப் பிரதேசத்தை கருமையாக்கிக் கொண்டிருக்கையிலேயே, புதிய தீவிரவாதத்தின் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. ஆப்கானியர்கள் தங்களது எதிர்காலத்துக்காக மட்டும் போராடவில்லை. ஒரு பாதுகாப்பான உலகத்துக்காக போராடுகிறார்கள்.

ஆப்கான் மக்களின் பன்முகத்தன்மையையும், அவர்களின் வளமையான பாரம்பரியத்தையும் நாம் அனுபவிக்கையில், உலகம் வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக இருக்கும். இந்தப் பகுதியில் மற்றும் உலகெங்கும் உள்ள ஆப்கானியர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. அவர்களின் தியாகங்கள் வீணாகக் கூடாது. நம்பிக்கையின் ஜோதி அணையக் கூடாது. இவ்வுலகில் காலடி எடுத்து வைக்கும் எந்தப் பெண்ணும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருளில் தள்ளப்படக் கூடாது. எந்த மகனும் துப்பாக்கியேந்தி தூர தேசத்தில் புகலிடம் தேடக் கூடாது. எந்தத் தாயும் இப்பூமியில் குழந்தையை கொண்டு வரத் தயங்கக் கூடாது. எந்தத் தலைவரும் ஆப்கான் சுதந்திரம் குறித்து பேசி நண்பர்களை தேர்ந்தெடுத்தற்காக சகோதரர்களை இழக்கக் கூடாது. மசூதியில் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கக் கூடிய எவரும் மதத்தின் பெயரால் கொல்லப்படக் கூடாது. எந்த முதியவரும் தன் இளமைக்காலம் போரில் வீணாகி விட்டதே என்று தன் பேரக் குழந்தைகளுக்கும் அதே எதிர்காலம் என்று கருதக் கூடாது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் ஐடி என்றால் தகவல் தொழில்நுட்பம் என்று கருதி அதில் எதிர்காலத்தை காண வேண்டும். ஐடி என்றால் சர்வதேச தீவிரவாதம் அல்ல. ஏனெனில் உலகில் உள்ள எல்லா இளைஞர்களையும் போல, 21ம் நூற்றாண்டு ஆப்கானிய இளைஞர்களுக்கானது. இது இந்தியா பூண்டுள்ள உறுதி.

உங்கள் துன்பம், எங்கள் வலி. உங்கள் கனவு எங்கள் கடமை. உங்கள் வலிமை எங்கள் நம்பிக்கை. உங்கள் துணிவு எங்களின் ஊக்கம். எல்லாவற்றிற்கும் மேல், உங்கள் நட்பு எங்களுக்கு பெருமை.

இந்தி சினிமாவின் புகழ்பெற்ற பதான் பாத்திரமான ஷேர் கான் ஜன்ஸீர் படத்தில் பாடியது போல “யாரி ஹை இமான் மேரா யாரு மேரி ஜிந்தகி” நட்பு எனது நம்பிக்கை. நண்பன் எனது வாழ்க்கை. இதுவே ஆப்கான் மற்றும் இந்தியர்களுக்கான மதம்.

உங்கள் இல்லங்களில் நம்பிக்கை திரும்பும், பள்ளிகளில் சிரிப்பொலி கேட்கும், வீதிகளில் வாழ்க்கை மலரும், நகரங்களில் வளங்கள் உருப்பெறும், சமுதாயத்தில் ஒற்றுமை விளங்கும் தேசத்தில் அமைதி நிலவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

உங்களில் எல்லா பயணங்களிலும் இந்தியா உடனிருக்கும்.

நன்றி. இந்த பெருமையான தருணத்தை அளித்ததற்கு மீண்டும் நன்றி.

***