பி.எம்.இந்தியா
அசாமில் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 9.15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தோலா – சதியா பாலமான இந்தியாவின் மிக நீளமான பாலத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
பிரதமராக பதவியேற்ற மூன்றாவது ஆண்டில் அவர் பங்கேற்கும் முதலாவது நிகழ்ச்சியாகும் இது.
இந்தப் பாலம் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திற்கு இடையிலான இணைப்பை விரிவுபடுத்துவதுடன் பயண நேரத்தையும் வெகுவாக குறைக்கும்.
பாலம் திறக்கப்படுவதைக் குறிக்கும் வகையில் கல்வெட்டு ஒன்றைத் திறந்து வைத்த பிரதமர் அந்த பாலத்தில் சில நிமிடங்கள் நடந்ததுடன் பயணமும் மேற்கொண்டார்.
பின்னர் தோலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர், இந்தப் பாலம் திறக்கப்படுவது, இந்தப் பகுதி மக்களின் நீண்ட கால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகக் கூறினார்.
உள்கட்டமைப்பு என்பது வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்றும் மக்களின் கனவு மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதில்தான் மத்திய அரசின் முயற்சிகள் உள்ளன என்றும் பிரதமர் கூறினார். இந்தப் பாலம் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் இணைப்பை விரிவுபடுத்துகிறது என்றும் பொருளாதார வளர்ச்சிக்கான கதவுகளைப் பெரிய அளவில் திறந்து விட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும், இந்த விஷயத்தில் இந்தப் பாலமும் ஒரு அம்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பாலம் சாமானிய மனிதர்களின் வாழ்வுகளில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் கூறினார். நீர்வழிப்பாதைகளை உருவாக்குவதிலும் இந்த அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
வட கிழக்கு மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு இடையே இணைப்பை விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும், இதற்கான பணிகள் பெரிய அளவில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வட கிழக்கில் சிறந்த இணைப்பு இந்தப் பகுதியை தென் – கிழக்கு ஆசியப் பொருளாதாரத்துடன் இணைக்கும் என்றார்.
வட கிழக்கில் உள்ள அதிக சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் பிரதமர் பேசினார். தோலா – சதியா பாலத்திற்கு புகழ்பெற்ற இசை வித்தகர், பாடலாசிரியர் மற்றும் கவிஞர் மறைந்த திரு. பூபேன் ஹசாரிகாவின் பெயரைச் சூட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
****
Futuristic infrastructure that will power India's growth....PM at the Dhola-Sadiya Bridge during his Assam visit. pic.twitter.com/w8T14p4dNc
— PMO India (@PMOIndia) May 26, 2017