Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே நீர்வள மேலாண்மைத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், இந்தியாவின் நீர்வளங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பித்தல் அமைச்சகத்துக்கும், நெதர்லாந்து அரசின் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் இடையில், நீர்வள மேலாண்மை குறித்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) ஒப்புதல் அளித்தது.

நீர்வள மேலாண்மை மற்றும் மேம்படுத்தும் துறையில் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச அளவுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு அரசுகளும் பணியாற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட துறைகளில் அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வது மற்றும் ஒத்துழைப்பு மூலமாக இதைச் செய்யலாம். இதில் நீர்வளங்களை செம்மையாகப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், ஆற்றுப்படுகை மேலாண்மை, முடிவெடுப்பதில் உதவக் கூடிய முறைமைகள், பாசனப் பகுதி மேலாண்மை, நீரின் தரம் குறித்த பிரச்சினைகள் மற்றும் வீணாகும் நீரை மறுசுழற்சி செய்தல் மற்றும் புதிய சிந்தனை முயற்சியால் சலுகை ஏற்பாடுகள் மூலம் மறு பயன்பாடு போன்றவையும் அடங்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான ஒத்துழைப்பின் அம்சம், ஆய்வுப் பயணங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கையெழுத்திட்ட நாடுகளின் நிபுணர்களின் கூட்டங்கள் மூலமாக அறிவு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதை மேம்படுத்துவதையும் உள்ளடக்கியதாக இருக்கும். இது கூட்டு ஆராய்ச்சி மற்றும் திறன் உருவாக்கல் திட்டங்கள் / பயிற்சியை மேம்படுத்துதல் மற்றும் பயிற்சிக் குழுக்களை பரிமாற்றம் செய்து கொள்வது, கல்வி சார்ந்த தேவைகளுக்கான இதர செயல்பாடுகள் மற்றும் அவைசார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை ஊக்குவிப்பதாக இருக்கும்.  தொடர்புடைய ஒத்துழைப்புத் திட்டங்களில் பரஸ்பர பங்கேற்பு மற்றும் / அல்லது தொடங்கி வைத்தல், அரசு மற்றும் தனியார் பங்களிப்புகளை ஊக்குவித்தலை இது மேம்படுத்தும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதைக் கண்காணிப்பதற்கு கூட்டு பணிக் குழு ஒன்று அமைக்கப்படும்.

நீர்வளங்களைக் கையாள்வதில் மத்திய மற்றும் மாநில அரசு முகமைகளின் தொழில்நுட்ப திறன் மற்றும் நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்துவதில் இந்த இருதரப்பு ஒப்பந்தம் பலன் தருவதாக இருக்கும். குறிப்பாக ஆற்றுப்படுகை மேலாண்மை, கங்கை உள்ளிட்ட நதிகள் மாசுபடுதலைத் தடுத்தல், வெள்ள மேலாண்மை, நீரின் தரம் மற்றும் நீரை பயன்படுத்துவது போன்ற விஷயங்களில் இது பயன்தரும்.

பின்னணி

நீர்வளங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பித்தல் அமைச்சகம், நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மையில் மற்ற நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. கொள்கை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் பகிர்தல், பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்குகள்  நடத்துதல், நிபுணர்கள் பரிமாற்றும், ஆய்வுப் பயணம் போன்றவற்றின் மூலம் இவை செய்யப்படும். ஆற்றுப்படுகை மேலாண்மை திட்டமிடுதல் / ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை, மாசுபடுதல் தடுப்பு, முடிவெடுத்தலில் உதவும் முறைமைகள், பாசனப் பகுதி மேலாண்மை, நீரின் தரம், வீண்டும் நீரை மறுசுழற்சி செய்தல் மற்றும் மறுபயன்பாடு போன்றவற்றில் நெதர்லாந்து தரப்பில் உள்ள வெற்றியைக் கருத்தில் கொண்டு, அவர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தால் பயன்பெறும் வகையில், நெதர்லாந்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

 

*****