பி.எம்.இந்தியா
வேளாண்மையில் ஒத்துழைப்புக்காக இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துக்கும், பாலஸ்தீன அரசின் வேளாண்மை அமைச்சகத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த மே மாதத்தில், பாலஸ்தீன வெளிநாடுகள் விவகாரத் துறை அமைச்சரின் இந்தியப் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், வேளாண் துறை ஆய்வு, பாலஸ்தீன கால்நடை சேவைகள் மற்றும் விலங்குகள் நலன் துறையில் திறனை வலுப்படுத்துவது உள்ளிட்ட கால்நடைத் துறை, நீர்ப்பாசனம், வானிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அளிக்கும். மேலும், பயிர்கள், மண் ஊட்டச்சத்து போன்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். விவசாயப் பயிர்களின் தூய்மை மற்றும் விவசாயப் பயிர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கான சட்டத் திருத்தம், தாவரங்கள் பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு, நவீன நீர்ப்பாசன தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அனுபவங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பயிற்சி மற்றும் திறனை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், ஒப்பந்தத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேளாண் வழிகாட்டி குழு அமைக்கப்படும். ஒத்துழைப்புக்கான திட்டத்தையும் வழிகாட்டி குழு வகுக்கும்.
****