பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-போர்த்துகல் இடையே வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த உடன்பாட்டின்படி, இந்தத் துறைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம், தாவரங்கள் மற்றும் அதுதொடர்பான பொருட்கள் வர்த்தகம், பயிர்கள் பாதுகாப்பு தொடர்பான தகவல் பரிமாற்றம், பயிற்சித் திட்டங்கள், கருத்தரங்குகள், வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்கள் பயணத் திட்டம் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய கூட்டுப் பணிக் குழு அமைக்கப்படும். தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை இந்தக் குழு கண்காணிக்கும். மேலும், வேளாண் ஒத்துழைப்புக்கான வலுவான பரிந்துரைகளை அளித்தல், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குதல், வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிவகைகள் ஆகியவை குறித்தும் இந்தக் குழு ஆய்வுசெய்யும்.
இந்த உடன்பாடு, கையெழுத்தாகும் தேதியன்று செயல்பாட்டுக்கு வரும். அதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். மேலும், உடன்பாட்டை ரத்துசெய்ய விரும்பினால், உடன்பாடு காலாவதி ஆவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே உரிய தூதரக வழியில் எழுத்து மூலம் நோட்டீஸ் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த உடன்பாடு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு தானாகவே நீட்டிக்கப்படும்.