பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி லிஸ்பனுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது இந்தியா-போர்த்துகல் விண்வெளி கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கும், கூட்டான ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தங்கள் போர்த்துகல் நாட்டுடனான இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டணியை வளர்த்தெடுப்பதாகவும், அசோரஸ் தீவுக்கூட்டங்களில் அமைந்துள்ள அட்லாண்டிக் சர்வதேச ஆய்வு மையம் என்ற நவீன மையமொன்றை உருவாக்கவும் உதவும்.
பெருங்கடல்களைக் கடந்தும், வளர்ந்து-வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கு உதவி செய்யும் வகையில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் அறிவு ஆகியவற்றுக்கான மையமாகவும் இந்த மையம் செயல்படும். ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்புகளுக்கு இடையிலான சர்வதேச வலைப்பின்னலும் இதன் மூலம் உருவாக்கப்படும். ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் பகிர்வுச் சூழலை வழங்குவதும், பருவ நிலை, பூமி, விண்வெளி மற்றும் கடல்பகுதிகள் ஆகிய துறைகளில் புதிய ஆராய்ச்சிகளை வளர்த்தெடுப்பதுமே இதன் நோக்கமாகும்.
விண்வெளியைப் பொறுத்தவரையில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மிக நுண்ணிய, மிகச் சிறிய விண்கலங்களை உருவாக்குவதில் ஒத்துழைப்பு மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடல்சார் அறிவியலைப் பொறுத்தவரையில் அட்லாண்டிக் கடலின் வான்வெளி மண்டல மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் குறித்தும் பருவ மழை உள்ளிட்டு பருவநிலையோடு அவற்றின் தொடர்புகள் ஆகியவை குறித்து இந்தியா ஆய்வுகளை மேற்கொள்ளவும் இது வழிவகுக்கும்.
*****