பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 2016 மே மாதம் 20 – ந் தேதி கையெழுத்தான இந்திய கணிணி அவசரகால நடவடிக்கை குழுவுக்கும் இங்கிலாந்து அமைச்சரவை அலுவலக அமைச்சகத்துக்கும் (இங்கிலாந்தின் கணிணி வலைதள பாதுகாப்பு குறித்த அமைச்சரவை அலுவலக பிரிவான இங்கிலாந்து கணிணி அவசரகால நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதி பங்கேற்ற) இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே பாதுகாப்புத் தொடர்பான சம்பவங்களைக் கண்டுபிடித்தல், தீர்வு காணல், நிகழாமல் தவிர்த்தல் ஆகிய துறைகளில் அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் நெருங்கிய ஒத்துழைப்பை உருவாக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
2015 நவம்பர் மாதம் பிரதமர் இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டபோது கணிணி வலைதளப் பாதுகாப்பு முக்கியமான ஒரு விவாதப் பொருளாக இடம் பெற்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து கணிணி வலைதளங்கள் தாக்கப்படுவது, கணிணி வலைதள பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களுக்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் இவற்றுக்கு எதிர் நடவடிக்கை எடுத்து தீர்வு காணுதல் ஆகியவை தொடர்பான தொழில்நுட்பத் தகவல்கள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும். தற்போதுள்ள கணிணி வலைதள பாதுகாப்புக் கொள்கைகள், இத்துறையில் சிறந்த நடைமுறைகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் இயலும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் கணிணி வலைதள உறவுகளை வலுப்படுத்தவும், திறன் மேம்பாட்டுக்கும், இருதரப்பு உறவு மேம்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கும்.
முன்னதாக இந்திய கணிணி வலைதள அவசரகால நடவடிக்கைக் குழு கொரியா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய 7 நாடுகளின் இத்தகைய அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகமும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்புடன் கணிணி வலைதள பாதுகாப்பை ஒரு அம்சமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்கனவே செய்து கொண்டுள்ளது.