பி.எம்.இந்தியா
உயிரி தொழில்நுட்பத் துறையில் இந்தியா-கியூபா மற்றும் இந்தியா-கொரியா இடையே கையெழுத்தான இரண்டு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறையே கியூபாவின் ஹவானாவில் 2018 ஜுன் 22-ஆம் தேதியும், புதுதில்லியில் 2018 ஜுலை 9-ஆம் தேதியும் கையெழுத்தாகின. கியூபா மற்றும் கொரியாவுடன் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தங்கள்.
முக்கிய தாக்கம்
இந்தியா – கியூபா மற்றும் இந்தியா – கொரிய குடியரசு ஆகியவற்றுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், அறிவியல் தொழில்நுட்ப தூதரக உறவுகள் ஒத்துழைப்புக்காகவும் கையெழுத்திடப்பட்டன. உயிரி தொழில்நுட்பக் கல்வி, பயிற்சி, ஆராய்ச்சியில் முக்கியமான திட்டங்களை உருவாக்கவும், இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன. இந்த திட்டத்தினால், 50-க்கும் மேற்பட்ட உயிரியல் பட்ட மேற்படிப்பு பயின்றோர் மற்றும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரையில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பின்னணி
இந்தியா-கியூபா ஒத்துழைப்பு
குடியரசுத் தலைவர் 2018, ஜுன் 22-ஆம் தேதி கியூபா நாட்டின் ஹவானாவில் பயணம் மேற்கொண்ட போது, இருநாடுகளுக்கும் இடையே உயிரி தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியா-கொரிய குடியரசு ஒத்துழைப்பு
இந்தியாவும், கொரியாவும் உயிரி தொழில்நுட்பம், உயிரி பொருளாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
*******
விகீ/சிஜே/க