பி.எம்.இந்தியா
இந்தியாவின் எக்ஸிம் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் ஈரானின் தலைமையிலான ஈரான் நாட்டு வங்கிகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட விரிவான ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து ஈரானுக்கு வாங்கப்படும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான நிதியை ரூ.900 கோடியில் இருந்து ரூ.3000 கோடியாக அதிகரிக்க, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதியானது, ஏற்றுமதி வளர்ச்சி நிதியிலிருந்து (இ.டி.எப்.) பயன்படுத்திக் கொள்ளப்படும். இந்த பரிந்துரை மூலம், ஏற்கனவே ஏற்றுமதி வளர்ச்சி நிதியின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட சபாஹர் துறைமுக மேம்பாட்டு திட்டம் மற்றும் அரசு வர்த்தக கழகம் மூலம் ரயில் இரும்பு ஏற்றுமதி ஆகிய 2 ஒப்பந்தங்களுக்கு தேவையான நிதி வழங்கப்படும்.
இந்த பரிந்துரையானது, ஈரானுடனான நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும். மேலும், இந்தியாவின் முக்கிய கூட்டாளியான ஈரானுடனான உறவை மென்மேலும் ஆழப்படுத்தும்.
பின்னணி:
ஏற்றுமதி வளர்ச்சி நிதியின் கீழ், இந்தியாவிலிருந்து ஈரானுக்கு ஏற்றுமதி ஆகும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான நிதியை ரூ.900 கோடியிலிருந்து உயர்த்துவது தொடர்பாக விரிவான ஒப்பந்தம் குறித்து கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்ட்ரல் பாங்க் ஆப் ஈரான் தலைமையிலான ஈரான் நாட்டை சேர்ந்த 7 வங்கிளுக்கும், இந்தியாவில் எக்ஸிம் வங்கிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள ரூ.3000 கோடி நிதியின் மூலம், எக்ஸிம் வங்கியானது, இந்தியாவில் இருந்து சரக்குகள் மற்றும் சேவைகளை வாங்கும் ஈரான் நிறுவனத்தினருக்கு, ஈரான் அரசிடமிருந்து இறையாண்மை உத்தரவாத்துடனான பாதுகாப்புடன், கடன் வசதி வழங்க முடியும். மேலும், இந்திய நிறுவனங்கள் ஈரானில் தங்களின் காலடி தடத்தை ஆழமாக பதிக்கவும் விஸ்தரிக்கவும், ஈரானுடன் வர்த்தகம் மற்றும் முதலீடு வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் ஒரு வாய்ப்பாகவும் இது அமையும்.
இதுதவிர, இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் மற்றும் வளர்ச்சிக்கான துணை நடவடிக்கைகளுக்கும் இது உதவி புரியும்.