Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் உயர் தொழில்நுட்ப கல்லூரிக்கும், இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனத்துக்கும் 2011-ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும், அதனை புதுப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனத்துக்கும் (ICAI), ஐக்கிய அரசு எமிரேட்டுகளின் உயர் தொழில்நுட்ப கல்லூரிக்கும் (HCT) இடையே கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் உயர் தொழில்நுட்பக் கல்லூரியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், கீழ்க்காணும் வரைமுறைகளின் அடிப்படையில், புதுப்பிக்கப்படுகிறது:-

1. கணக்குப்பதிவு மற்றும் நிதி தொடர்பான உயர் தொழில்நுட்ப கல்லூரியின் தற்போதைய பாடத் திட்டத்தை மறுஆய்வு செய்து, உயர் தொழில்நுட்ப கல்லூரிக்கு தொழில்நுட்ப உதவிகளை இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம் வழங்கும்.

2. உயர் தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனத்தில் உறுப்பினராகும் நோக்கில், இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனத்தின் தொழில்நுட்ப தொழில்சார்ந்த தேர்வுகளை எழுத உதவும் வகையில், புதிய மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்ய இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம் பரிந்துரை செய்யும்.

3. தேர்ச்சிபெற்ற உயர் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்களுக்காக இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனத்தின் தொழில்சார்ந்த தேர்வுகளை நடத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம் அளிக்கும்.

4. உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் பணிமனைகளை நடத்துவதற்காக அந்தக் கல்லூரியுடன் இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம் இணைந்து செயல்படும்.

5. பரஸ்பரம் ஏற்றுக் கொள்வதன் அடிப்படையில், நிபுணத்துவம் பெற்ற பொருத்தமான ஆசிரியர்களை இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் நிறுவனம் வழங்கும்.

6. உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக சான்றிதழ் வகுப்புகளை இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் நிறுவனம் நடத்தும்.

7. இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனத்தின் தொழில்சார்ந்த மற்றும் தொழில்நுட்பத் தேர்வுகளை நடத்துவதற்கான இடங்களை உயர் தொழில்நுட்பக் கல்லூரி வழங்கும்.

8. ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்களை உயர் தொழில்நுட்பக் கல்லூரியும், இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனமும் ஊக்குவிக்கும்.

9. ஐக்கிய அரசு எமிரேட்சில் உள்ள பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்த உயர் தொழில்நுட்பக் கல்லூரியும், இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனமும் இணைந்து செயல்படும். இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான இடத்தை உயர் தொழில்நுட்பக் கல்லூரி வழங்கும். மேலும், இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு தங்களது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும்.

10. ஐக்கிய அரபு எமிரேட்சில் உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் உயர்சிறப்பு பயன்நோக்கு ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தில், கணக்குப்பதிவு, நிதி மற்றும் தணிக்கை தொடர்பான குறுகியகால தொழில்சார்ந்த பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு உயர் தொழில்நுட்பக் கல்லூரியும், இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனமும் இணைந்து செயல்படும்.

இந்தத் திட்டம் சமத்துவம், பொது நம்பகத்தன்மை மற்றும் புத்தாக்க இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல வலியுறுத்துகிறது.

பின்னணி:

இந்தியாவில் உள்ள கணக்கு தணிக்கையாளர் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட கணக்கு தணிக்கையாளர்கள் சட்டம், 1949-ன் மூலம், உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வமான அமைப்பு இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம். ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 23,000-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 2 ஆயிரம் ஆசிரியர்களும் உள்ளனர். இந்த அமைப்பின் கீழ், அபுதாபி, அல் அயின், துபாய், புஜைரா, மதினாத் ஜாயேத், ரஸ் அல் கைமா, ருவைஸ், சார்ஜா ஆகிய பகுதிகளில் அதிநவீன தொழிநுட்பங்கள் அடிப்படையில் 17 கல்லூரிகள் உள்ளன. இதன்மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில், மிகப்பெரிய உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது. மாணவர்களுக்கு உயர் தரமான தொழில்சார்ந்த மற்றும் தொழில்நுட்ப பாடத் திட்டங்களை அனைத்து நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு உரிய மதிப்பளித்து வழங்குவதற்காக உயர் தொழில்நுட்பக் கல்லூரி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்சார்ந்த மேல் நிலைக் கல்வியை வழங்குவதே இதன் கனவு. நவீன தேசத்தை கட்டமைக்கும் கல்வியின் அடிப்படை தூணாக தாங்கள் இருக்க வேண்டும் என்பதே உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் இலக்கு.

இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனத்துக்கும், ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம் விரும்புகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் கணக்குப்பதிவு, நிதி மற்றும் தணிக்கை அறிவை வலுப்படுத்துவதற்காக, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளது. உயர் தொழில்நுட்பக் கல்லூரியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜனவரி 4, 2011-ல் கையெழுத்தானது. 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

****