Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் அக்ரிகோலா பதக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது

ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் அக்ரிகோலா பதக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது


ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் 2026-ம் ஆண்டிற்கான மதிப்பு வாய்ந்த அக்ரிகோலா பதக்கம்  பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு  ரோம் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் இன்று (21.05.2026) வழங்கப்பட்டது. இந்திய மற்றும் உலக அளவில் உணவுப் பாதுகாப்பு, நீடித்த வேளாண்மை, ஊரக வளர்ச்சி, ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய சிறப்பான தலைமைத்துவத்தை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதை உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் கியூ டோங்யூ-யிடமிருந்து  பிரதமர் பெற்றுக் கொண்டார். இந்த உயர்ந்த அங்கீகாரத்தை இந்திய விவசாயிகளுக்கும் இந்திய வேளாண் அறிவியல் சமூகத்திற்கும் சமர்ப்பிப்பதாக அவர் கூறினார். இந்தியர்களுக்கும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பையும் ஊட்டச்சத்தையும் உறுதி செய்ய அவர்கள் அயராது பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். இந்த அங்கீகாரம், மனித நலன், உணவுப் பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டுக்குக் கிடைத்த மரியாதை என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் வேளாண் வாழ்வின் முக்கியத்துவத்தைக்  குறிப்பிட்ட பிரதமர், வேளாண் என்பது பூமித்தாய்க்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான புனிதமான பிணைப்பு என்று கூறினார்.

வேளாண்மையில், இந்தியாவின் அறிவியல் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை ஒரு நீடித்த, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு சூழல் அமைப்பை வளர்த்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த முன்முயற்சியில், ஒரு சொட்டு நீரில், அதிக பயிர் போன்ற நடைமுறைகளும், நுண்பாசனம், துல்லிய வேளாண்மைக்கான அடிப்படையிலான அணுகுமுறைகளும் இந்திய வேளாண்  கொள்கைகளுக்கு வழிகாட்டுவதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் தீர்வுகள் குறித்து விரிவாக உரையாற்றிய அவர், டிஜிட்டல் பொதுகட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஆலோசனை அமைப்புகள், ட்ரோன்கள், தொலைஉணர்வு தொழில்நுட்பங்கள், சென்சார் அடிப்படையிலான எந்திரங்கள் ஆகியவை இந்திய விவசாயிகள் நல்ல விளைச்சலையும், அதிக பண்ணை வருவாயையும் பெற உதவுவதாக  குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய சுமார் 3,000 பயிர்வகைகளை உருவாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் அறிவியல் ரீதியிலான வேளாண்மை குறிப்பாக உலகளாவிய தென்பகுதி நாடுகளில்  உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக பிரதமர் கூறினார்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையில்  உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நீடித்த வேளாண்மை மற்றும் பசியில்லாத உலகை உருவாக்குவதற்காக அந்த அமைப்புடன் இணைந்து செயலாற்றுவதை இந்தியா பெருமையாக கருதுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

சர்வதேச சிறுதானிய ஆண்டைக் கொண்டாடுவதன் மூலம் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை ஊக்குவிக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றியதற்காக அவர் உணவு மற்றும் வேளாண் அமைப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263509&reg=3&lang=1

***

TV/IR/KPG/SE