Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

நாட்டில் உள்ள இளையோரின் விரிவான தொலைநோக்குப் பார்வையையும், துணிச்சலான மன உறுதியையும் அவர் பாராட்டினார்.

இந்திய இளைஞர்களின் சிந்திக்கும் விதமும், முன்னேற்றத்திற்கான அவர்களது தன்னம்பிக்கையும், உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு நடைபெற்ற மாநாட்டில் தாம் பங்கேற்றதை நினைவு கூர்ந்த அவர், கடந்த பத்தாண்டுகளில், புதிய இந்தியாவிற்கான நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார். இந்த புதிய மனநிலை, அசல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும், உலகளவில் புதிய வழிகளை அமைப்பதையும், சர்வதேச அளவில் சவால்களுக்குத் தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கும், அவற்றை மற்ற நாடுகளுக்கு வழங்குவதற்கும், உள்நாட்டிலேயே கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசிகளை உருவாக்கியதையும், முதல் முயற்சியிலேயே இந்தியா செவ்வாய் கிரகத்தை அடைந்ததையும், இதுவரை ஆய்வு செய்யப்படாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதையும் மேற்கோள் காட்டிய பிரதமர், நாட்டிற்கான ஒரு துணிச்சலான தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார். இந்தியா எதிர்காலத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், துணிச்சலுடன் புதுமைகளைப் புகுத்த வேண்டும், மேலும் அவற்றை உருவாக்குவதில் உலகிற்கு முன்னோடி நாடாகத் திகழ வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தினார்.

பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு, எண் முறை முதல் வானியல் வரை இந்தியாவின் வளமான கண்டுபிடிப்புப் பாரம்பரியத்தை எடுத்துரைத்த அவர், கடந்த ஆண்டில், பல சாதனைகள் மூலம் இவை நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த அறிவியல் பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் இந்தியா முன்னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டார். அக்டோபர் 30 அன்று டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் பிறந்த தினத்தை நாடு கொண்டாடவுள்ள நிலையில், அவர் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்த தனது ஆய்வை அணுசக்தித் துறையிலிருந்து தொடங்கத் தேர்ந்தெடுத்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், எனவே, அணுசக்தியிலிருந்து தொடங்குவோம், என்று கூறினார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கு  மிகப்பெரிய அணுசக்தித் திறன் தேவைப்படுகிறது என்றும், இறக்குமதி செய்யப்படும் அணு எரிபொருளைச் சார்ந்திருப்பது எரிசக்திப் பாதுகாப்பிற்கு சவாலாக அமைகிறது என்றும் அவர் கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு, நாடு தனது அதிவேக ஈனுலை (ஃபாஸ்ட் ப்ரீடர் ரியாக்டர்) தொழில்நுட்பத்தை விரைவாக மேம்படுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். சில மாதங்களுக்கு முன்பு, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 500 மெகாவாட் முன்மாதிரி ஃபாஸ்ட் ப்ரீடர் ரியாக்டர், முதல் நிலை ஆற்றலை வெற்றிகரமாக அடைந்தது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். அணுசக்தித் துறையில் நாட்டின் நீண்டகால வலிமையை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளில் இது ஒரு முக்கிய நடவடிக்கை  என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

முன்னதாக இன்று காலை புத்தொழில் நிறுவனர்களுடன்  கலந்துரையாடினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2329164&reg=3&lang=1

(Release ID: 2329164)

****

TV/SV/SH