Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற ‘தேசிய இளைஞர் தினம்’ மற்றும் ‘சர்வ தர்ம சபா’ நிகழ்வின்போது காணொளிக் காட்சியின் மூலம் பிரதமர் ஆற்றிய உரை


விவேகானந்தரின் பிறந்த தினம், தேசிய இளைஞர் தினம் ஆகியவற்றை ஒட்டி உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெலகாவியில் இன்று நான் காணும் மகத்தான காட்சி அங்குள்ள ஒவ்வொருவருமே விவேகானந்தரின் சிந்தனையோடு ஒன்றிப் போனவர்களாக மாறிவிட்டார்கள் என்ற தோற்றத்தையே எனக்குத் தருகிறது. அனைத்து மதங்களின் மாநாடு ஒன்றும் இன்று அங்கு நடத்தப்படுகிறது. அதற்காகவும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே நான் காண்கின்ற உற்சாகம் என்பது ஒவ்வொருவரது மனத்தையும் உணர்வையும் ஒன்றாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கானோரின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதன் மூலம் இன்று ஓர் உலக சாதனையும் நிகழ்த்தப்படுகிறது.
பெருமதிப்பிற்குரிய சித்தலிங்க மகராஜ் ஜி, யல்லாலிங் பிரபு ஜி, சித்த ராமேஷ்வர் மகாஸ்வாமி ஜி ஆகியோரின் ஆசிகளுடன்தான் இவை அனைத்தும் சாத்தியமாகி உள்ளது. அவர்களது ஆசிகளின் ஜீவசக்தி உங்களின் முகங்களில் எதிரொலிக்கிறது. அந்த ஜீவசக்தியையும் ஆசியையும் என்னாலும் கூட உணர முடிகிறது. சகோதர, சகோதரிகளே, பெலகாவி நகருக்கு வருகை தருவதென்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சிகரமான ஓர் அனுபவமாகவே இருந்து வந்துள்ளது. இதில் ஒரே இந்தியா மகத்தான இந்தியா என்ற இந்தியாவின் பிரம்மாண்டமான தோற்றத்தையும் ஒருவரால் காண முடியும்.

இதுபோன்ற சிறியதொரு பகுதியில் ஐந்து வெவ்வேறான மொழிகள் பேசக்கூடிய பகுதியை நாட்டின் வேறெந்தப் பகுதியிலும் மிக அரிதாகவே காணமுடியும். இதற்காக உங்களுக்கும் பெலகாவி நிலப்பரப்பிற்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பகுதி பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய கிட்டூர் ராணி சென்னம்மா, மகத்தான போர்வீரரான சங்கோலி ராயண்ணா ஆகியோர் வாழ்ந்து மறைந்த பகுதியாகும். சுவாமி விவேகானந்தரும் கூட பெலகாவியில் பத்து நாட்கள் தங்கியிருந்திருக்கிறார். புகழ்பெற்ற மைசூர் அரண்மனையிலும் கூட அவர் தங்கியிருந்திருக்கிறார். மைசூரில் இருந்து அவர் கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பயணம் செய்தார். கன்னியாகுமரி முனையில்தான் அவருக்கு புதியதொரு உத்வேகம் கிடைத்தது. அந்த உத்வேகம்தான் அவரை சிக்காகோ நகரை நோக்கி உந்தித் தள்ளி அங்கு உலகம் முழுவதன் பேரன்பை வெல்ல வைத்தது

 

இந்த ஆண்டு சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சிக்காகோ உரையின் 125 ஆண்டுகளைக் குறிப்பதாக அமைகிறது. அந்த உரை நிகழ்த்தப்பட்டு 100 ஆண்டுகள் முடிவடைந்த தருணத்தில் நான் குறிப்பாக சிக்காகோ நகருக்குச் சென்றிருந்தேன். அந்த மகத்தான உரையை அவர் ஆற்றி பல ஆண்டுகள் கடந்துவிட்டன. நமது பிரச்சனைகள் சிலவற்றுக்கான தீர்வை நாம் தேடும்போது நாம் நினைப்பதுண்டு: “ஆஹா! சுவாமி விவேகானந்தர் கூட இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்! அது எவ்வளவு சரியானதாக இருக்கிறது!” என்று. விவேகானந்தரை நாம் நினைவு கூர வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நமது சிந்தனைகளில் அவர் எப்போதும் இருக்கிறார்.

 

ஓர் இந்தியன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான வலிமை மிக்கதொரு மந்திரத்தை சுவாமி விவேகானந்தர் நமக்கு வழங்கியிருக்கிறார். நாடே முதன்மையானது என்பதே அந்த மந்திரம். அந்த மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லுமே ஜீவசக்தி நிரம்பியதாகவும் உற்சாகம் ததும்பியதாகவும் உள்ளன. அவர் சொன்னார்: “ இந்தியாவே! உனது வாழ்க்கை தனிப்பட்ட இன்பங்களுக்கான வாழ்க்கை அல்ல என்பதை நீ மறந்துவிடாதே! துணிவுமிக்கவர்களே! பெருமையோடு சொல்லுங்கள். நான் ஓர் இந்தியன். இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரும் எனது சகோதரர்கள். இந்தியா எனது வாழ்க்கை. இந்தியா என்ற இந்த பூமிதான் எனது சொர்க்கம். இந்தியாவின் நலனே எனது நலன் என்று சொல்லுங்கள்” அப்படிப்பட்டவர்தான் விவேகானந்தர். இந்தியா என்ற உணர்வால் தூண்டப்பட்டவர்தான் அவர். நாட்டோடு அவர் முழுமையாக ஒன்றிணைந்திருக்கிறார். இந்தியாவின் மகிழ்ச்சியும் துயரமும் தனதென்று அவர் கருதினார். ஒவ்வொரு தீமையையும் அவர் எதிர்த்துப் போராடினார். இந்தியா என்பது பாம்பாட்டிகளின், மந்திரஜால வித்தைக்காரர்களின் நாடு என்று வெளிநாடுகளில் நிலவி வந்த பிரச்சாரத்தை அவர் உடைத்து நொறுக்கினார். உலகில் இந்தியாவின் பெருமையை அவர் மேலும் உயர்த்தினார். அறிவு, அறிவியல், மொழி, சமூக சீர்திருத்தம், முற்போக்கானதோர் உலகு என்பவற்றோடு ஒன்றியைந்து அதை முன்னெடுத்துச் செல்லும் துணிவுமிக்கவராகவும் அவர் திகழ்ந்தார்.

 

தீண்டாமை, பாரபட்சம், போலித்தனம் போன்ற சமூகத்தை ஆட்டிப் படைத்து வரும் சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராடும் போராளியாக அவர் இருந்தார். இந்தப் போராட்ட உணர்வுதான் அவரை ஒரு வீரத் துறவியாக மாற்றியது. கொழும்புவிலிருந்து அல்மோராவிற்கு அவர் பயணம் செய்தபோதுதான் சாதி அடிப்படையிலான பாரபட்சத்திற்கு எதிராக சுவாமி விவேகானந்தர் தனது குரலை எழுப்பினார். அவர் மிகவும் பட்டவர்த்தனமாகவே கூறினார்: “அறிவு, தத்துவம் ஆகிய விஷயங்களில் உங்களை விடச் சிறந்தவராக வேறு யாருமே இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் நடத்தையைப் போல மிகக் கீழ்த்தரமாக வேறு யாரும் இருக்க மாட்டார்கள். இது போன்ற உங்களது நடத்தை மிகவும் கடுமையாகக் கண்டிக்கத் தக்கது.” 100-125 ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வளவு வெளிப்படையாக அவர் சொன்னதைப் போல இந்த விஷயங்களைச் சொல்வதற்கு இன்றும் கூட யாருமே துணிய மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

நண்பர்களே, இந்தச் சூழலை, இந்த மனப்பாங்கை நாம் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். விவேகானந்தரை நாம் பின்பற்ற வேண்டுமானால் சாதி அடிப்படையிலான பாரபட்சம், ஓரவஞ்சனை ஆகியவற்றிலிருந்து நாம் விடுபட்டு அதற்கு முடிவு கட்ட வேண்டும். இதற்கு முந்தைய பல பத்தாண்டுகளில் உங்கள் மடமும் கூட சித்தலிங்க மகராஜ் ஜியின் உபதேசங்களால் தூண்டப்பட்டு சாதி அடிப்படையிலான அனைத்து வகையான பாரபட்சங்களையும் துடைத்தெறியப் பாடுபட்டு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் சாதியைப் பற்றிக் கவலைப்படாமல் சமூகத்தின் நலிந்த, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பிரிவினருக்குத் தேவையான உதவிகளை நீங்கள் செய்து வந்துள்ளீர்கள். உங்கள் மடத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தின்போது கிராமம் கிராமமாகச் சென்று நிவாரணம் வழங்கினர். ஏழைகளுக்கு இலவசமாக மருந்துகளை வழங்கியபோதும், இலவச மருத்துவ முகாம்களை நடத்தியபோதும், உணவு, உடைகளை வழங்கியபோதும் சாதியைப் பற்றிக் கவலைப்பட்டோமா என்ன? இல்லவே இல்லை.

 

கடந்த பல பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக, சாதி என்ற விலங்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் நிலைக்கு நமது நாடு மிகுந்த சிரமத்துடன் முன்னேறிக் கொண்டு வருகிறது. எனினும் சமூக விரோத சக்திகள் சிலர் தங்களது கெட்டப் பார்வையை உங்களைப் போன்ற லட்சோப லட்சக் கணக்கானவர்களின் இதயங்களின் மீது செலுத்துகின்றனர். சாதியின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்த அவர்கள் மீண்டும் சதி செய்கின்றனர். எனினும் இன்றைய இளம் தலைமுறையினர் அவர்களுக்கு சரியாக பதிலளித்து வருகின்றனர். விரல்விட்டு எண்ணத்தக்க நபர்களால் இந்திய இளைஞர்களை ஏமாற்றி விட முடியாது. சாதியத்தையும் தீய சமூகப் பழக்க வழக்கங்களையும் மூட நம்பிக்கைகளையும் நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என விவேகானந்தரைப் போலவே இந்த இளைஞர்களும் உறுதி பூண்டுள்ளனர். இவர்கள்தான் இந்தியாவின் புதிய, துணிவுமிக்க, வீரஞ்செறிந்த, முன்னேற்றத்தையே நோக்கமாகக் கொண்டவர்களின் முகமாக விளங்குகின்றனர்.

 

நாட்டு உருவாக்கத்தில் தன் கடமையை ஆற்றுகின்ற, புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றச் செயல்படுகின்ற ஒவ்வொரு இளைஞருமே ஒரு விவேகானந்தர்தான். ஏதோ ஒரு விவசாய நிலத்தில், ஏதோ ஒரு தொழிற்சாலையில் அல்லது பள்ளியில் அல்லது கல்லூரியில் அல்லது நீங்கள் வசிக்கும் ஏதோ ஒரு சந்தில் அல்லது பகுதியில் நாட்டிற்கான தனது கடமையை நிறைவேற்றுகின்ற ஒவ்வொருவருமே ஒரு விவேகானந்தர்தான்.

 

தூய்மையான இந்தியாவிற்கான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கின்ற, கிராமம் கிராமமாகச் சென்று கணினி மூலமான அறிவை வழங்குகின்ற ஒவ்வொருவரும் விவேகானந்தர்தான். ஒடுக்கப்பட்டவர்களுக்காக, சுரண்டப்படுபவர்களுக்காக, கொடுமைக்கு ஆளாகுவோருக்காக, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக பாடுபடுகின்றவரும் ஒரு விவேகானந்தர்தான். தன் சக்தியையும் கருத்துக்களையும் கண்டுபிடிப்புகளையும் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்துகின்றவர்களும் விவேகானந்தர்தான்.

 

நண்பர்களே, கடந்த ஆண்டில் அறிவுத் திறன் மிக்க இந்தியாவிற்கான ஒரு போட்டி நடத்தப்பட்டது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க முன்வந்ததோடு, நாடு எதிர்நோக்கி வரும் 600 பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கணினி மூலமாக வழங்கினர். என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் அனைவருமே விவேகானந்தர்தான். இந்திய மண்ணின் வாசனையை தம்மோடு சேர்த்துக் கொண்டுள்ள, புதிய இந்தியாவை உருவாக்குபவர்களான லட்சோப லட்சக் கணக்கான சாதாரண மக்களும்கூட இந்த நவீன காலத்து விவேகானந்தர்கள்தான். அவர்களை நான் வணங்குகிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு விவேகானந்தரையும் நான் வணங்குகிறேன். நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு விவேகானந்தரையும் நான் வணங்குகிறேன்.

 

சகோதர, சகோதரிகளே, பல்லாயிரக்கணக்கான வருட வரலாற்றைக் கொண்ட நமது நாடு காலப்போக்கில் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் தனிநபர்களிடமும் ஏற்பட்டுள்ளது; சமூகத்திலும் ஏற்பட்டுள்ளது. எனினும் போகிற போக்கில் ஒரு சில தீயவைகளும் நம் சமூகத்தில் ஊடுருவி விட்டன.

 

இத்தகைய தீமைகள் சமூகத்தில் ஊடுருவும்போதெல்லாம் அந்த சமூகத்தில் இருக்கும் ஒருவராலேயே அத்தகைய சமூகத்தை சீர்திருத்துவதற்கான பணி துவங்கப்பட்டு விடுகிறது என்பதுதான் நமது சமூகத்தின் தனிச்சிறப்பாக அமைகிறது. இத்தகைய மகத்தான சமூக சீர்திருத்தவாதிகள் தங்கள் நடவடிக்கைகளின் மையமாக பொதுச் சேவையையே வைக்கின்றனர்.

 

தங்கள் உணர்வு, உரைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் சமூகத்திற்கு அவர்கள் கற்பிப்பது மட்டுமின்றி மக்களுக்குச் சேவை செய்வதற்கும் முன்னுரிமை அளிக்கின்றனர். தனக்கேயுரிய எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு இந்த விஷயங்களை அவர்கள் புரிய வைக்கின்றனர்.

 

இது ஒரு வகையான மக்கள் இயக்கமே ஆகும். கடந்த பல நூற்றாண்டுகளில் இது விரிவடைந்து கொண்டே வந்ததையும் நம்மால் காண முடியும். தெற்கில் மாதவாச்சார்யா, நிம்பர்காச்சார்யா, வல்லபாச்சார்யா, ராமானுஜாச்சார்யா, மேற்கில் மீரா பாய், ஏக்நாத், துக்காராம், ராமதாஸ், நாஸி மேத்தா, வடக்கில் ராமானந்த், கபீர்தாஸ், கோஸ்வாமி, துளசிதாஸ், சூர் தாஸ், குருநானக் தேவ், சந்த் ராய் தாஸ், கிழக்கில் சைதன்ய மகாப்பிரபு, சங்கர்தேவ் போன்றவர்களின் கருத்துக்களின் மூலம் இந்த இயக்கம் வலுப்பெற்றது. இவை எதுவுமே மத ரீதியான இயக்கங்களோடு எப்போதுமே ஒப்பிட்டுப் பார்க்கப்படவில்லை என்பதும் கூட நமது நாட்டின் தனிச்சிறப்பு மிக்க வலிமை ஆகும். அறிவு, பக்தி, செயல் இவை மூன்றுக்கும் இடையிலான சமநிலை என்பது நமது நாட்டில் எப்போதுமே ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. அறிவின் அடிப்படையில் ‘உண்மையில் நான் யார்?’ என்ற அடிப்படையான கேள்விக்கான விடையைத்தான் இந்த ஞானிகள் தேடிக் கொண்டிருந்தனர்.

 

பக்தி என்பது அர்ப்பணிப்பின் மற்றொரு பெயரே ஆகும். செயல்கள் என்பவை கடமையாற்றுவதை முற்றிலும் அடிப்படையாகக் கொண்டவை ஆகும். எண்ணற்ற இடையூறுகளை சந்தித்த வேளையிலும் நமது நாடு முன்னேறிச் செல்ல முடிந்ததற்கு இது போன்ற எண்ணற்ற ஞானிகளின் செல்வாக்குதான் காரணமாக இருந்திருக்கிறது. அந்தக் காலப்பகுதியில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், பிரதேசத்திலும், திசையிலும் கோயில்களிலிருந்தும் மடாலயங்களிலிருந்தும் வெளியே வந்து ஒரு சமூக விழிப்புணர்ச்சிக்கு புத்துயிர் ஊட்ட நமது ஞானிகள் முயன்றுள்ளனர். இந்தியாவிற்கு இத்தகைய பாரம்பரியம் உண்டு. இது போன்ற ஞானிகள், பிரச்சாரகர்கள் இருந்துள்ளனர். நாட்டை உருவாக்குவதற்காக தங்கள் அறிவையும் தவத்தையும் அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதையும் நம்மால் பெருமிதத்துடன் கூற முடியும்.

 

இந்த வரிசையில் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன் ராய், ஜோதிபா பூலே, மகாத்மா காந்தி, பாபா சாஹேப் அம்பேத்கர், பாபா ஆம்டே, பாண்டுரங்க சாஸ்திரி அத்தவாலே, வினோபா பாவே போன்ற கணக்கற்ற மகத்தான மனிதர்கள் இருந்தனர். இவர்கள் சேவையையே தங்களது செயல்பாட்டின் மையமாக வைத்திருந்ததோடு சமூக சீர்திருத்தங்களையும் நிறைவேற்றினர். சமூகத்தின் நலனுக்காக அவர்கள் எத்தகைய உறுதிமொழிகளையும் எடுத்தார்கள். அவற்றை நிறைவேற்றவும் செய்தார்கள்.

 

நண்பர்களே, உங்களது மடாலயமும் கூட துறவு, சேவை என்ற இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றியே வந்துள்ளது. எதனோடும் சேராத துறவிகளின் மடாலயம் என்பதாகத் தான் உங்களின் மடாலயம் பெயர் எடுத்துள்ளது. எதனோடும் சேராத எனில் எந்தவிதமான புறவுலக் பந்தங்களோடும் சேராத, அவற்றிலிருந்து விடுபட்டவர்கள் என்பதுதான் அதன் பொருள். பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் உங்களது மடாலயங்கள் உணவு தானியங்களை வழங்குவதென்ற பாதையை பின்பற்றி வருகின்றன. அவை ஏழைகளுக்கும் பசித்தவர்களுக்கும் உணவளிக்கின்றன எனில் நிச்சயமாக அதுவே பூமித் தாய்க்கும் மனித குலத்திற்கும் செய்கின்ற மிகச்சிறந்த சேவை ஆகும்.

 

‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதற்கான மிகச் சிறந்த உதாரணமாக இது விளங்குகிறது. சேவை என்பதும் சேவை செய்யும் உணர்வு என்பதுமே நமது நாட்டின் வரலாறாக இருந்து வந்துள்ளது. ஏழைகளுக்கு உணவும் உறைவிடமும் அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே நமது பாரம்பரியம். நமது துறவிகள், ஞானிகளின் ஆசியோடு சாதாரண மக்களால்தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பல்வேறு கிராமங்களிலும் நகரங்களிலும் இந்தப் பாரம்பரியம் இன்றும்கூட உயிர்ப்போடு இருக்கிறது. அது வளர்ந்தும் வருகிறது.

 

சகோதர, சகோதரிகளே, மனித நேயம், ஜனநாயகம், நல்லாட்சி, அஹிம்சை ஆகிய செய்திகளை இந்தியா எப்போதுமே உலகம் முழுவதற்கும் பரப்பி வந்துள்ளது. இந்தியா ஜனநயக மதிப்பீடுகளை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, ஜனநாயகத்தை புதியதொரு அணுகுமுறையாக உலகத்தின் சிறந்த அறிஞர்களும் வசதி படைத்த நாடுகளும் காண்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நிர்வாக முறையக தனக்குள் ஏற்றுக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது.

 

12-ம் நூற்றாண்டிலேயே பசவேஸ்வரா ஜனநாயகம், சமத்துவம் என்ற கருத்தோட்டத்தை உலகிற்கு அளித்திருந்தார். ‘அனுபவ மண்டபம்’ என்ற ஒரு முறையை அவர் உருவாக்கியிருந்தார். இதன்படி ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், துன்புறுத்தப்பட்டோர், தனிமைப்படுத்தப்பட்டோர் என அனைத்து வகைப்பட்ட மக்களும் தங்கள் கருத்துக்களை அங்கு எடுத்துக் கூறலாம். அங்கு ஒவ்வொருவருமே சமமானவர்கள்தான். 2015-ம் ஆண்டில் பிரிட்டனுக்கு சென்றபோது அங்கு பசவேஸ்வராவின் சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

 

அச்சமயத்தில் பிரிட்டிஷ் பிரதமர் ‘மகா சாசனம்’ பற்றிக் குறிப்பிட்டார். ஆனால் ஒருவகையில் அந்த மகா சாசனம் வருவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே முதல் நாடாளுமன்றத்தை பசவேஸ்வரா நமக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

 

பசவேஸ்வரா கூறினார்: “கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவில்லை எனில், நியாயமான விவாதம் என்பது இல்லாமல் இருந்தால் அனுபவ கோஸ்தி என்பது பொருத்தமானதாக இருக்காது. இத்தகைய நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் கடவுள் இருக்க மாட்டார்.” இத்தகைய கருத்துப் பரிமாற்றங்களையும் விவாதங்களையும் அவர் வலிமையானதாகக் கருதியதோடு கடவுளுக்கும் அவசியமானது என்றும் அவர் கூறினார். இத்தகைய அனுபவ மண்டபத்தில் வெளிப்படையாகப் பேசுவதற்கான அனுமதியும் பெண்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.

 

சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த பெண்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அவர்களில் சிலர் அந்தக் காலத்தில் நிலவிய நாகரீகமான சமூகத்தின் முனவருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாத காலம் அது. எனினும் அத்தகைய பெண்களும்கூட அனுபவ மண்டபத்திற்கு வந்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் இது பெண்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு முயற்சியாகும். கடந்த ஆண்டில்தான் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பசவேஸ்வராவின் கருத்துக்களைக் கொண்ட நூல்களை நான் வெளியிட்டு மக்களுக்கு அர்ப்பணித்தேன் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.

 

பசவேஸ்வராவின் செய்தியை சாதாரண மக்களுக்குக் கொண்டு செல்வதில் இவை பேருதவியாக இருக்கும் என்றே நம்புகிறேன். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத்தலைவரா திரு. பி.டி. ஜாட்டி அவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பதோடு பசவா குழுவிற்கு அவரது பங்களிப்பையும் இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன். திரு. அரவிந்த் ஜாட்டியையும் குறிப்பாகச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

 

நண்பர்களே, இந்த அனுபவ மண்டபத்தை மீண்டும் துவங்க மரியாதைக்குரிய சித்த ராமேஷ்வர் மகாஸ்வாமி ஜி அவர்கள் முடிவெடுத்ததாக என்னிடம் கூறினார்கள். இந்த மடத்திலேயே அதை நிறுவவே அவர் விரும்பினார். அவரது கனவு திரு. முருக ராஜேந்திர மகாஸ்வாமியின் தலைமையின் கீழ் நிறைவேற இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்கு உரியதாகும். இந்த அனுபவ மண்டபத்தின் மூலம் சமத்துவம் குறித்த செய்தி நாடு முழுவதிலும் பரவும். இந்த நிகழ்விற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். “எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்!” என்ற தாரக மந்திரத்தை தொடர்ந்து பின்பற்றும் வகையில் அனைவரும் மகிழ்ச்சி பெறட்டும் எனவும் வாழ்த்துகிறேன்.

 

நண்பர்களே, 2022-ம் ஆண்டில் நமது நாடு விடுதலை பெற்ற 75வது ஆண்டைக் கொண்டாடும்போது நமது நாட்டிற்குள்ளேயே இருக்கும் தீய சக்திகளையும் நாம் கொண்டாடப் போகிறோமா? இல்லை. புதியதொரு இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் ஏற்றிருக்கிறோம். இந்த தீர்மானத்தை செயல்படுத்துவதற்கான பயணத்தை உங்களது பங்களிப்பு எளிதாக்கும். பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது என்ற துறையிலோ அல்லது இளைஞர்களின் தனித்திறனை மேம்படுத்துவது என்ற துறையிலோ அல்லது தூய்மை என்ற துறையிலோ அல்லது கணினி மயமான கல்வியறிவைப் பரப்புவது என்ற துறையிலோ அல்லது சூரிய ஒளியின் சக்தியை பயன்படுத்துவது என்ற துறையிலோ நீங்கள் உறுதி மேற்கொள்ளலாம்.

 

இதுபோன்ற துறைகளில் நீங்கள் ஏற்கனவே பணி செய்து வருகிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். எனினும் ஓர் இலக்கை நிர்ணயிப்பதன் மூலம் ஓர் உறுதிமொழியை மேற்கொள்ளலாம் அல்லவா? உதாரணமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு அல்லது ஐந்தாயிரம் கிராமங்களில் பொது இடங்களில் காலைக் கடனைக் கழிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கு உதவி செய்வோம் என்ற உறுதிமொழியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? உங்களால் அடையாளம் காணப்பட்ட ஐந்தாயிரம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் எல் இ டி விளக்குகள் மட்டுமே அடுத்த இரண்டு ஆண்டுகளில் இருக்கும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

 

நண்பர்களே, இத்துறைகள் அனைத்திலுமே அரசு செயல்பட்டு வருகிறது. எனினும் இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களைத் தூண்டிவிடுவதில் உங்களுக்கு முக்கியமான பங்குள்ளது. நீங்கள் முன்வந்தால் உங்களது உறுதிமொழிகளை நிறைவேற்ற பல லட்சக்கணக்கான விவேகானந்தர்களின் சக்தி உதவி புரியும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.
தற்போது பெலகாவியில் 10,000 விவேகானந்தர்கள் கூடியுள்ளனர். பின்பு பல லட்சக்கணக்கானோர் ஒன்று திரள்வார்கள். உங்கள் பணி வெற்றி பெறும்போது நமது சமூக அமைப்பு மேலும் வலுப்படும். ஒரே இந்தியா, தனிச்சிறப்பான இந்தியா என்ற கனவும் வெற்றி பெறும். அப்போது சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட வலிமையான இந்தியா என்பதும் நனவாகும்.

 

இந்த வார்த்தைகளுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். மேடையில் வீற்றிருக்கும் அனைத்து பெருமக்களுக்கும் மீண்டும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய இளைஞர் தினம், அனைத்து மதங்களின் மாநாடு ஆகிய நிகழ்வுகளை ஒட்டி உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.

*******