Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காணொளிக் காட்சியின் மூலம் கோழிக்கோடு ஐஐஎம்-இல் பிரதமர் நிகழ்த்திய உரை


பெருமரியாதைக்குரிய விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே, நண்பர்களே,
ஐஐஎம் கோழிக்கோடு போன்ற பெருமைமிகு நிறுவனத்தில் நடைபெறும் இந்திய சிந்தனையை உலகமயமாக்குவது குறித்த கருத்தரங்கில் உரையாற்றுவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற விஷயங்களில் புகழ்பெற்ற அறிவுமையங்கள் கவனம் செலுத்துவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். இந்திய சிந்தனையை உலகமயமாக்கல் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலை சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பது என்பது தற்செயலான ஒன்றல்ல. இந்தியச் சிந்தனையை உலக மயமாக்குவதில் சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பை யாரால் தான் மறக்க முடியும்? பல ஆண்டுகளுக்கு முன்னால், 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று சிகாகோ நகரில் நிகழ்த்திய தனது தனித்துவமான உரையின்போது சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் நெறி குறித்து கோடிட்டுக் காட்டியிருந்தார். “அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகளே, சகோதரர்களே!” என்று அவர் தனது உரையைத் தொடங்கிய உடனேயே உரத்த கரவொலிகள் எழத்தொடங்கின. அது ஒரு மாயத் தோற்றமாகவே இருந்தது. அந்த மாயம் வார்த்தைகளைக் கொண்டதல்ல. அனைவரையும் உறவினர்களாக நேசிக்கும் சகோதரத்துவ உணர்வு குறித்த இந்தியாவின் ஆழ்ந்த நம்பிக்கை, பற்றுறுதி ஆகியவையே அங்கு வெளிப்பட்டன.

நண்பர்களே,

இந்திய சிந்தனை என்பது உயிரோட்டமானது; பன்முகத் தன்மை கொண்டது. அது தொடர்ந்து தன்னை உருமாற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு உரையிலோ அல்லது ஒரு கருத்தரங்கிலோ அல்லது புத்தகங்களினால் மட்டுமே அடைத்து விடமுடியாத அளவிற்கு அது பரந்து விரிந்த ஒன்றாகும். எனினும், பொதுவாகவும் விரிவாகவும் கூறவேண்டுமெனில், ஒரு சில குறிப்பிட்ட குறிக்கோள்கள் இந்திய மதிப்பீடுகளின் மையமாக தொடர்ந்து நீடித்து வருகின்றன. கருணை, நல்லிணக்கம், சேவை, வெளிப்படைத் தன்மை ஆகியவையே அவை.

நண்பர்களே,

உலகத்தை இந்தியாவை நோக்கி கவர்ந்திழுக்கும் விஷயத்தைப் பற்றி நான் பேச விழைகிறேன். முதலாவதாகவும் முக்கியமானதாகவும் எனக்குத் தோன்றுவது என்னவெனில் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவ உணர்வு ஆகிய மதிப்பீடுகளே ஆகும். பல மாநிலங்கள், பல மொழிகள், பல வட்டார மொழிகள், பல நம்பிக்கைகள், பல சடங்குகள், பல பாரம்பரியங்கள், பலவிதமான உணவுப் பழக்கங்கள், பலவிதமான வாழ்க்கை முறைகள், பலவகையான உடை உடுத்தல்கள் இருந்தபோதிலும் பல நூற்றாண்டுகளாகவே நாம் அமைதியோடு வாழ்ந்து வந்துள்ளோம். பல நூற்றாண்டுகளாகவே உலகத்தை நமது நாட்டிற்கு நாம் வரவேற்று வந்துள்ளோம். இதர பல நாகரீகங்களால் முடியாத போதிலும் நமது நாகரீகம் செழித்தோங்கி வந்துள்ளது. அதற்கு என்ன காரணம்? ஏனெனில், இங்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் எவரொருவராலும் காண முடியும்.

நண்பர்களே,

எளிமையான, ஒன்றுக்கொன்று தொடர்புடைய செயல்முறைகளால் வழிகாட்டப்படும் உயிரோட்டமான பாரம்பரியங்களாகவே நமது சிந்தனைகள் மாறியுள்ளதே நமது வலிமையாக உள்ளது. இந்த செயல்முறைகள் கடுமையானதோ அல்லது பலவகைப்பட்டதோ அல்ல. வெவ்வேறு விதமாகவும் அதை செயல்படுத்த முடியும் என்பதுதான் அதில் உறைந்துள்ள அழகு ஆகும்.

நண்பர்களே,

இந்து மதம், பவுத்த மதம், சமண மதம், சீக்கியமதம் என உயிரோட்டமான பல மதங்களை உலகிற்கு வழங்கியது நமது மண்தான். இவையனைத்திற்கும் அடிநாதமாக விளங்குவது அகிம்சையாகும். 20-ஆம் நூற்றாண்டில் இந்த நோக்கங்களையே மகாத்மா காந்தி முன்னெடுத்துச் செயல்பட்டார். அதுவே இந்தியாவின் விடுதலைக்கு வழிகோலியது. அதே நேரத்தில் இவை இந்தியாவிற்கு வெளியே இருந்த பல லட்சக்கணக்கானவர்களுக்கும் வலுவூட்டுவதாக விளங்கின. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியராக இருந்தாலும் சரி, அல்லது நெல்சன் மண்டேலாவாக இருந்தாலும் சரி அல்லது ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் நடந்த விடுதலைப் போராட்டங்களாக இருந்தாலும் சரி இவர்கள் அனைவருமே காந்திஜியிடம் இருந்துதான் ஊக்கம் பெற்றனர். நடைபெற்ற இரண்டு உலகப் போர்களிலுமே எண்ணற்ற இந்திய சிப்பாய்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். இந்தப் போர்களில் இந்தியாவிற்கு எவ்வித பலனும் இல்லாதபோதிலும் கூட அவர்கள் வீரத்தோடு போரிட்டனர். வேறு எவருடைய நிலத்தையும் ஆதார வளங்களையும் நாம் எப்போதுமே விரும்புவதில்லை. இருந்தாலும் நமது சிப்பாய்கள் அமைதிக்காகப் போராடினர். கடந்த பல ஆண்டுகளாகவே உலக அளவில் நடைபெறும் அமைதியை நிலைநாட்டுவதற்கான ஐநா சபையின் முயற்சிகளுக்கு மிகப்பெரும் பங்களிப்பு செய்யும் நாடாக இந்தியா தொடர்ந்து விளங்கி வருகிறது.

மோதல்கள் நிரம்பிய ஏதாவதொரு பகுதி அமைதியாக சுவாசிக்கிறது என்று சொன்னால் அதில் நமது சிப்பாய்களும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர். அறிவுக்கு ஒவ்வாத வெறுப்புணர்வு, வன்முறை, மோதல், பயங்கரவாதம் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கு விழையும் உலகத்தில் இந்தியாவின் வாழ்க்கை நெறிமுறை நம்பிக்கை தருவதாக அமைகின்றது. மோதலை தவிர்ப்பதற்கான இந்திய வழி என்பது வன்முறையைக் கைக்கொண்டதாக இல்லாமல் கலந்துரையாடலின் வலிமையைக் கொண்டதாகவே அமைகிறது.

நண்பர்களே,

அமைதியையும் நல்லிணக்கத்தையுமே இந்தியா நம்புகிறது என்று நான் சொல்லும்போது நமது பூமித்தாய், நமது சுற்றுச்சூழல் ஆகியவற்றுடனான நல்லிணக்கமும் அதில் அடங்கியுள்ளது.

நமது ஞானிகள் தவம் இயற்றும் பூமித்தாய்தான் அனைத்தையும் வழங்குபவர்; அதை நம்பியே அனைத்து உயிரினங்களும் வாழ்கின்றன. என்பதையே நமது வேதம் கூறுகிறது.

பூமியை நம் தாயாகப் பாவிக்கும் பாரம்பரியம் நமக்குண்டு. இந்தியாவில் தெய்வீகத்தன்மையுடன் கூடிய பல விலங்குகள் உண்டு. தாவரங்களையும் விலங்கினங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து கவுடில்யர் விரிவாக எழுதியிருக்கிறார். இன்று நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பலவற்றிலும் இந்த உணர்வின் மிச்ச சொச்சங்களை நம்மால் காண முடியும்.

தூய்மையானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சூரிய ஒளியைப் பயன்படுத்துவதற்கென, சூரிய ஒளிக்கான ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்தது. மறுசுழற்சி செய்யப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்துவதை அதிகரிப்பதாகவே நமது முயற்சிகள் அனைத்தும் இருந்து வருகின்றன. எல் இ டி பல்புகளை பயன்படுத்துவதற்கான இந்தியாவின் வெகுஜன இயக்கம் கணிசமான அளவிற்கு மின்சாரம் சேமிக்கப்படுவதில் பங்களிப்பு செய்துள்ளது. இதுவரையில் 36 கோடி எல் இ டி பல்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஒரு கோடி தெருவிளக்குகள் எல் இ டி விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக ரூ. 25,000 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது. நான்கு கோடி டன்களுக்கும் மேலான கார்பன் டை ஆக்ஸைடு வெளியாவது குறைக்கப்பட்டுள்ளது. மின்சார சேமிப்பும் அதே அளவிற்கு பிரம்மாண்டமானதாக உள்ளது.

மதிப்பிற்குரிய விருந்தினர்களே,

2006-ம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 2970 புலிகள் வாழும் இடமாக இந்தியா இன்று மாறியுள்ளது. உலகத்தில் உள்ள மொத்த புலிகளில் நான்கில் மூன்று பங்கு புலிகள் இந்தியாவில்தான் உள்ளன. உலகத்திலேயே மிகப் பாதுகாப்பான புலிகள் வாழ்விடங்களைக் கொண்ட நாடாக நமது நாடு உள்ளது. 2022க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என 2010-ம் ஆண்டில் உலகம் ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால் நாம் அதற்கு முன்பாகவே அந்த இலக்கை அடைந்து விட்டோம்!

அதைப் போலவே இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கையும் 2010க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டில் நாட்டில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 411 ஆகும். இன்று அது 600க்கும் மேல் என என்னிடம் கூறப்பட்டது.

நண்பர்களே,

இந்தியாவின் வனப்பகுதியும் கூட அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2014-ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் அளவும் 692ஆக இருந்தது. அது இப்போது 2019- ஆம் ஆண்டில் 860க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் மக்களால் பாதுகாக்கப்பட்ட 43 பகுதிகள் இருந்தன. இப்போது அது 100 ஆக அதிகரித்துள்ளது. இத்தகைய விவரங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விலங்குகளின் நண்பர்களை இந்தியாவை நோக்கி கவர்ந்திழுத்துள்ளன. மனிதனும் விலங்கும் நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தியா குறித்த ஆர்வத்தை அந்த நிகழ்ச்சி எழுப்பியுள்ளது.

நண்பர்களே,

திருப்தியோடு வாழ்வது; உடல்நலத்தின் மீது கவனம் செலுத்திய வகையில் உணவு உண்பது; பல்வேறு வகையான உடற்பயிற்சி ஏற்பாடுகள் ஆகியவை இன்று கணிசமான கவனம் பெற்றுள்ளன. இன்று உலகில் புகழ்பெற்று விளங்கும் பல உடல்நலம் குறித்த செயல்முறைகளின் ஆணிவேரை நீங்கள் இந்தியாவில் பார்க்க முடியும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் இருந்த முனிவர்கள் யோகக் கலையை செய்து வந்தனர். அவர்கள்தான் உலகிற்கு ஆயுர்வேதம் என்ற மருத்துவ அறிவைத் தந்தனர். யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல; அது அதைவிட பெரியதாகும். யோகா எனில் செயல்திறன் மிக்க உடல் மற்றும் உடல் நலம் என்பதாகும். இதுவே செயல்திறன்மிக்க உடலையும் செழுமைமிக்க மனதையும் பெற வழிவகுக்கிறது. ஐஐஎம் மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள் மட்டுமல்ல; மிகவும் செயல்துடிப்புடன் இருப்பவர்களும் ஆவர். எதிர்காலத்தில் மிகச் சிறந்த வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதோடு கூடவே அழுத்தம் மிக்க செயல்பாடுகளும் உள்ளன. யோகாவிற்கு சற்று நேரத்தை ஒதுக்குங்கள் என்று அவர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். அது கொண்டுவரும் சாதகமான மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

நண்பர்களே,

இந்த நாட்டின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக இருப்பது பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதையும், முக்கியத்துவமும், பெருமையுமே ஆகும். பெண் என்பவள் தெய்வத்தன்மை கொண்டவள். இந்தியாவின் சிந்தனையாளர்கள் பலரும் கடந்த பல நூற்றாண்டுகளாகவே பெண்களுக்கு வலுவூட்டுவது குறித்து குரலெழுப்பி வந்தனர். இந்தியாவில் பக்தியை பரப்பிய பெருமக்களை யாரால் மறக்க முடியும்? ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்ற மகத்தானவர்களின் பங்களிப்பை யாரால் மறக்க முடியும்? மகாத்மா பூலே, சாவித்திரிபாய் பூலே ஆகியோரின் முயற்சிகளை யாரால் எளிதாக மறந்துவிட முடியும்?

பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் பல பத்தாண்டுகளை எடுத்துக் கொண்டன. ஆனால் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் அது செயலுக்கு வந்த முதல் நாளில் இருந்தே பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதை உறுதிப்படுத்தினர்.

இன்று முத்ரா கடன் பெறுவோரில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் ஆவர். நமது ராணுவப் படைகளிலும் பெண்கள் தீவிர பங்களிப்பை வழங்கி வருகின்றனர். கடற்படையைச் சேர்ந்த பெண்கள் குழு ஒன்று உலகம் முழுவதையும் படகில் சுற்றி வந்தது! அது வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையும் கூட.

இன்று அதிகமான எண்ணிக்கையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் வாக்களித்தனர்.

நண்பர்களே,

வெளிப்படைத் தன்மையைப் போற்றுகிறது இந்தியா.

மகாத்மா காந்தி இதை மிகத் தெளிவாகவே குறிப்பிட்டார். அவர் கூறினார்: “எனது வீடு நான்கு பக்கங்களிலும் சுவர்களால் சூழப்பட்டதாக, சன்னல்களால் அடைக்கப்பட்டதாக இருப்பதை நான் விரும்பவில்லை. அனைத்து நாடுகளின் பண்பாடும் சுதந்திரமாக எனது வீட்டிற்குள் வந்து வீச வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். என்றாலும் அதில் எந்தவொரு காற்றும் என்னை நிலைகுலையச் செய்ய முயல்வதை நான் மறுதலிக்கிறேன்.”

நமது பண்பாடு குறித்து பெருமைப்படவும் அதே நேரத்தில் மற்ற பண்பாடுகளை வரவேற்கவும் அவற்றோடு இணைக்கமாக இருக்கவும் முடியும் என்பதை காந்திஜி நிரூபித்துக் காட்டினார்.

பாரத தீர்த்தா என்ற தனது நூலில் குருதேவ் தாகூர் இந்தியா பற்றி எழுதியிருந்தார்:

“அனைவரும் கொடுப்பவர்களாக, எடுத்துக் கொள்பவர்களாக, இணைபவர்களாக, இணைந்து செயல்படுபவர்களாக இருக்க வேண்டும்; பாரத நாட்டின் இந்த மாபெரும் மனிதக் கடலின் கரையிலிருந்து யாரும் மனக் கசப்புடன் வெளியேறக் கூடாது.”
நண்பர்களே,

வெளிப்படைத் தன்மையும், பல்வேறு வகையான கருத்துக்களுக்கு மரியாதையும் இருக்கும்போது புதிய உருவாக்கங்கள் என்பது இயற்கையான ஒன்றாகவே இருக்கும். இந்தியர்களின் இந்த புதிய உருவாக்கங்களுக்கான ஊக்கம் என்பது உலகத்தை இந்தியாவை நோக்கிக் கவர்ந்திழுக்கிறது. நம் நாட்டில் பிறந்த பூஜ்யம் என்ற கருத்து அனைவருக்குமான, புதுமையான ஒரு கருத்தாகும். கணிதவியலைப் பயில்வதில் ஒரு தலைகீழ் மாற்றத்தையே அது கொண்டு வந்தது. உயிரோட்டமான இளம் தலைமுறையைக் கொண்ட ஒரு நாடாக நாம் இருக்கிறோம். நமது மக்கள் தொகையின் இத்தகைய சிறப்பியல்பு முதலீடுகளை காந்தமென கவர்ந்திழுக்கிறது. இன்று ஒவ்வொருவருமே இந்தியாவில் இருக்க விரும்புகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நமது மென்பொருள் தொழில்துறையும் இன்று நமது புதிய முனைவுகளுக்கான ஏற்பாடுகளும் இந்திய இளைஞர்களின் வலிமையையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

நண்பர்களே,

உலகமயமாக்கல், இந்திய சிந்தனை என்பதைப் பற்றி நாம் பேசும்போது அதை செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதும் மிக முக்கியமானதாகும். இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லும்போது இந்தியாவின் அமைப்புகள், பாரம்பரியங்களில் வேர்பிடித்து நிற்பது குறித்து நம் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ள வைக்கும். நிதிசார் இணைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இந்தியா கொண்டு வந்துள்ளதில் இதை உங்களால் காண முடியும். உலகத்தின் மிகப்பெரும் சுகாதார திட்டத்தை நாம் எவ்வாறு கொண்டு வந்தோம் என்பதிலும் அது தெரிய வரும். அல்லது பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு புகையற்ற சமையல் அறைகளை இந்தியா வழங்கியுள்ளதில் இருந்து அது தெரியவரும். பரம ஏழைகளுக்கு என பல லட்சக்கணக்கான வீடுகள் உருவாக்கப்பட்டன.

நமது தேர்தல் செயல்முறையையே பார்க்கலாம். பல லட்சக்கணக்கான மக்கள் அமைதியாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். தொலை தூரப் பகுதிகளில் ஒரே ஒரு வாக்காளர் இருந்தால் கூட அங்கெல்லாம் வாக்குப்பதிவு மையங்கள் நிறுவப்பட்டன. உலக அளவில் இந்தியாவின் நிலை அதிகரித்துக் கொண்டே வருவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

நண்பர்களே,

இந்திய சிந்தனை என்பது உலகத்திற்கு ஏராளமாகத் தந்துள்ளது. அதை விட மேலும் அதிகமாகவே தரக்கூடிய திறனும் அதற்கு உள்ளது. நமது பூமிப் பந்து இன்று சந்தித்துவரும் மிக முக்கியமான சவால்களுக்கு தீர்வு காணும் திறனும் அதற்கு உள்ளது.

சிறுவயதில் இருந்தே நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது இதுதான்:

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். எல்லோரும் நோய்களில் இருந்து விடுபட்டவர்களாக இருக்கட்டும். எல்லோரும் நல்லதையே எப்போதும் காணட்டும். துயரம் என்பதே இல்லாத நிலை நிலவட்டும்.

இவற்றில் எதுவுமே இந்தியா, இந்தியர்களை மட்டுமே குறிப்பவை அல்ல.

அவை உலகத்தை குறிப்பவை.

இந்தியா முன்னேறும்போது உலகமும் முன்னேறும் என்றே இந்தியா நம்புகிறது. உலகம் செழிப்படையும்போது இந்தியாவும் அதனால் பலன் அடையும். இந்திய சிந்தனையின் பல போக்குகளையும் பரவலாக மக்களிடையே அறியச் செய்வதில் இத்தகைய கருத்தரங்குகள் பயன்படும் என்றே நான் நம்புகிறேன்.

எனது உரையை இத்தோடு நிறைவு செய்வதோடு கோழிக்கோடு ஐஐஎம் நிறுவனத்திற்கு எனது மனமுவந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

மிக்க நன்றி!!

*****