பி.எம்.இந்தியா
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் அமெரிக்கவின் ஃபெடரல் காப்பீட்டு அலுவலகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது.
தாக்கம்:
இரு நாடுகளின் ஆணையங்களின் மேற்பார்வை மற்றும் இதர சட்டரீதியான பொறுப்புகளுக்கு ஏற்ப தகவல் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி உதவிகளை அளிப்பது உட்பட ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு கட்டமைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அளிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு வரன்முறை செயல்பாடுகளில் இரு நாடுகளும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பயிற்சி செயல்பாடுகள் உள்ளிட்ட பரஸ்பர உதவிகளை அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் ஆரோக்கியமான நெறிமுறைகள் மூலம் சர்வதேச தரத்தில் பணிகளை மேற்கொள்ளவும் நுகர்வோர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைக்கவும், நிதி நிலைப்புத் தன்மையை உறுதி செய்யவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
பின்னணி:
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டம் 1999ன் கீழ் இந்தியாவில் காப்பீடு மற்றும் மறு காப்பீட்டு வர்த்தகம் ஒழுங்கான முறையில் செயல்படுவதற்காக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டது. இதேபோல் அமெரிக்காவில் ஃபெடரல் காப்பீட்டு அலுவலகம் காப்பீட்டு துறையின் அனைத்து அம்சங்களையும் கண்காணிக்கவும் சர்வதேச காப்பீட்டு அம்சங்களில் பிரதிநிதியாகவும் இருந்து வருகிறது.
இந்தியாவும் அமெரிக்காவும் வலிமையான வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதுடன், இருநாடுகளும் அரசியல் மற்றும் அதிகார மட்டங்களில் ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இருநாடுகளுக்கும் இடையிலான பல்துறை விஷயங்களில் விரிவான ஒத்துழைப்புக்களையும், வலுவான இருதரப்பு உறவுகளையும் மேற்கொள்வதற்கான நுணுக்கங்களை இருநாடுகளும் பின்பற்றி வருகின்றன.
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டில் பெரும் பங்களிப்பை அளித்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்வதுடன் அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு காப்பீடு நிறுவனங்கள் கூட்டு நிறுவனங்களை தொடங்கி உள்ளன. அந்நிய முதலீடு 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த துறையில் அந்நிய முதலீடுகள் மேலும், அதிகரிக்க குறிப்பாக அமெரிக்காவில் இருந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த புரிந்துணர்வு ஒப்பதம் இரு நாடுகளுக்கும் ஏராளமான வாய்ப்புக்களை அளிப்பதாக உள்ளது.
***