Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தின் சோம்நாத்தில், சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

குஜராத்தின் சோம்நாத்தில், சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்


குஜராத்தின் சோம்நாத்தில் இன்று (11.01.2026) நடைபெற்ற சோம்நாத் ஸ்வாபிமான் பர்வ் எனப்படும் சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தச் சூழலும், இந்த கொண்டாட்டமும் அசாதாரணமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒருபுறம் பகவான் மகாதேவரின் அருளும், மறுபுறம் சூரியனின் கதிர்களும், மந்திரங்களின் எதிரொலியும், பக்தியின் எழுச்சியும் இணைந்திருப்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த தெய்வீக சூழல் இந்த நிகழ்வை மேலும் அதிக தெய்வீகமாகவும், பிரமாண்டமாகவும் ஆக்குகிறது என்று அவர் கூறினார். சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக, சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவில் தீவிரமாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதை ஒரு பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த கொண்டாட்டம் பெருமை, மரியாதை, கண்ணியம் மற்றும் அறிவு, மகத்துவம், பாரம்பரியம், ஆன்மீகம், உணர்தல், அனுபவம், மகிழ்ச்சி, நெருக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று பிரதமர் எடுத்துரைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, இது மகாதேவரின் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் சூழ்நிலை எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் தனது மனதில் மீண்டும் மீண்டும் எழுவதாக அவர் குறிப்பிட்டார். நமது மூதாதையர்கள், தங்கள் நம்பிக்கைக்காகவும், தங்கள் கடவுள் மகாதேவருக்காகவும், தங்களிடம் இருந்த அனைத்தையும் தியாகம் செய்து தங்கள் உயிரைப் பணயம் வைத்ததாக அவர் எடுத்துரைத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, படையெடுப்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றதாக நம்பினர் எனவும் ஆனால் இப்போது, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், சோம்நாத் மகாதேவ் கோவிலின் மேல் உள்ள கொடி பறப்பதாகவும் அது இந்தியாவின் வலிமையையும் திறனையும் பறைசாற்றுகிறது என்றும் அவர் கூறினார். சோம்நாத்தின் பாதுகாப்பு மற்றும் மறுகட்டமைப்பிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் தலைவணங்குவதாகவும் பிரதமர் கூறினார்.

 

சோம்நாத் சுயமரியாதைப் பயணம் ஆயிரம் ஆண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையில், 1951-ல் இது மறுகட்டமைப்பு செய்யப்பட்டதாகவும் இப்போது எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவதாகவும் இது அதிர்ஷ்டவசமான தற்செயல் நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விழா  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அழிவின் நினைவாக மட்டுமல்லாமல், ஆயிரம் ஆண்டு உறுதியான பயணத்தின் கொண்டாட்டமாகவும், இந்தியாவின் பெருமையின் கொண்டாட்டமாகவும் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். சோம்நாத்தை அழிக்க எண்ணற்ற முயற்சிகள் நடந்ததைப் போலவே, அந்நிய படையெடுப்பாளர்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவை அழிக்க முயன்றனர் என அவர் தெரிவித்தார். இருப்பினும், சோம்நாத்தும் இந்தியாவும் உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கி.பி 1026-ம் ஆண்டு, கஜினி முகமது சோம்நாத் கோயிலைத் தாக்கிய வரலாற்றை ஒருவர் கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்குள் சோம்நாத் கோவில் மீண்டும் கட்டப்பட்டதாகவும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் மன்னர் குமாரபாலர் பிரமாண்டமான மறுசீரமைப்பை மேற்கொண்டதாகவும் அவர் எடுத்துரைத்தார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அலாவுதீன் கில்ஜி மீண்டும் சோம்நாத்தைத் தாக்க முயன்றதாகவும், பதினான்காம் நூற்றாண்டில் முசாபர் கான் சோம்நாத்தைத் தாக்கினார் எனவும் பிரதமர் கூறினர். ஆனால் அவர்களது முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் பிரதமர் கூறினார். பதினைந்தாம் நூற்றாண்டில் சுல்தான் அகமது ஷா கோயிலை தாக்க முயன்றதாகவும், அவரது பேரன் சுல்தான் முகமது பெகடா அதை ஒரு மசூதியாக மாற்ற முயன்றதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆனால் மகாதேவரின் பக்தர்களின் முயற்சியால் கோயில் மீண்டும் புத்துயிர் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில், ஔரங்கசீப் சோம்நாத்தை சேதப்படுத்தி மீண்டும் ஒரு மசூதியாக மாற்ற முயன்றதாகவும் ஆனால் அஹில்யாபாய் ஹோல்கர் சோம்நாத்தை மீண்டும் உயிர்ப்பித்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சோம்நாத்தின் வரலாறு அழிவு மற்றும் தோல்வியின் வரலாறு அல்ல எனவும் மாறாக வெற்றி மற்றும் மீண்டு எழும் மறுகட்டமைப்பின் வரலாறு என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.  படையெடுப்பாளர்கள் தொடர்ந்த நிலையில், மத பயங்கரவாதத்தின் புதிய தாக்குதல்கள் நடந்த சூழலில், ஒவ்வொரு சகாப்தத்திலும் சோம்நாத் மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகள் நீடித்த போராட்டம், இவ்வளவு நீடித்த எதிர்ப்பு, இவ்வளவு அபரிமிதமான பொறுமை, படைப்பாற்றல், மறுகட்டமைப்பில் மீள்தன்மை, கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான இவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கை உலக வரலாற்றில் ஈடு இணையற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

நமது முன்னோர்களின் வீரத்தை நாம் நினைவில் கொண்டு, அவர்கள் காட்டிய துணிச்சலில் இருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். நமது முன்னோர்களின் தியாகங்களும் துணிச்சலும் நம் மனதில் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைவரையும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

சோம்நாத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகவான் மகாதேவரின் பெயர்களில் ஒன்று மிருத்யுஞ்சய் என்றும், அவர் மரணத்தை வென்றவர் என்றும், அவரே காலத்தின் உருவகமானவர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சோமநாதத்தை அழிக்க முயன்ற படையெடுப்பாளர்கள் காலச் சுழற்சியில் வரலாற்றின் சில பக்கங்களாகக் குறைத்துவிட்டனர் என்றும், ஆனால் இந்தக் கோயில் இன்னும் உயர்ந்து நிற்கிறது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

சில வரலாற்றாசிரியர்களும் அரசியல்வாதிகளும் படையெடுப்புகளின் வரலாற்றை மறைக்க முயற்சித்ததாகவும், உண்மையை மறைக்கும் வகையில் புத்தகங்களை எழுதியதாகவும் பிரதமர் விமர்சித்தார்.  சர்தார் படேல் சோம்நாத்தை மீண்டும் கட்டியெழுப்ப உறுதிமொழி எடுத்தபோது, அதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், 1951-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் சோம்நாத்துக்கு வந்தபோது கூட ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.

துரதிர்ஷ்டவசமாக, சோம்நாத்தின் மறுகட்டமைப்பை எதிர்க்கும் சக்திகள் இன்றும் நாட்டில் தீவிரமாக உள்ளன என்று கூறிய திரு நரேந்திர மோடி, தற்போது இந்தியாவிற்கு எதிரான சதித்திட்டங்கள் வாள்களுக்குப் பதிலாக பிற வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். விழிப்புணர்வு, வலிமை, ஒற்றுமை போன்றவற்றின் மூலம் பிரிவினை சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்று பிரதமர திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213388&reg=3&lang=1

***

TV/PLM/RK