பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பொது இடங்கள் (சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றுதல்) சட்டம் 1971 (பொது இடங்களில் வெளியேற்றுதல் சட்டம், 1971)-ல் பிரிவு 2 மற்றும் பிரிவு 3-ல் திருத்தங்களை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, இந்த சட்டத்தின் 2-வது பிரிவில் “குடியிருப்புப் பகுதியில் தங்கியிருத்தல்” என்ற வரையறை சேர்க்கப்படுகிறது. மேலும், சட்டத்தின் 3-வது பிரிவில், துணைப் பிரிவான 3ஏ-க்கு கீழ், 3பி என்ற துணைப் பிரிவை சேர்த்து, அதில், “குடியிருப்புப் பகுதியில் தங்கியிருப்பவர்களை” வெளியேற்றும் வழிவகைகள் சேர்க்கப்படுகிறது.
இந்தத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், குறிப்பிட்ட காலம் அல்லது அலுவலகப் பணியில் இருக்கும் வரையில் உரிமம் அடிப்படையில், குடியிருப்பு வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள், அந்த குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகும் தங்கியிருந்தால், அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை சொத்து அதிகாரி மேற்கொள்ள முடியும். இந்தக் குடியிருப்புகளை காலி செய்யாமல் இருப்பதால், புதிதாக வருபவர்களுக்கு வீடு கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
எனவே, தற்போது, இதுபோன்ற சூழ்நிலைகளில் விரைந்து செயல்பட வேண்டுமா என்பது குறித்து சொத்து அதிகாரி விசாரணை நடத்த முடியும். சட்டத்தின் பிரிவு 4, 5 மற்றும் 7-ல் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இனிமேல், புதிய பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, குடியிருப்பவர்களை வெளியேறுமாறு சொத்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த உத்தரவின்படி, செயல்படுவதற்கு மறுத்தாலோ, செயல்படாமல் இருந்தாலோ, அந்த குடியிருப்பிலிருந்து அவர்களை சொத்து அதிகாரி வெளியேற்றி, அந்தக் குடியிருப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். இந்த நடவடிக்கைகளுக்காக தேவைப்பட்டால், பலத்தையும் பயன்படுத்தலாம்.
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம், அரசு குடியிருப்புகளில் அங்கீகாரமில்லாமல் தங்கியிருப்பவர்களை எளிதாகவும், விரைந்தும் வெளியேற்ற முடியும்.
இந்தத் திருத்தங்களால், அரசு குடியிருப்புகளில் அங்கீகாரமில்லாமல் குடியிருப்பவர்களை விரைவாகவும், எளிதான முறையிலும் வெளியேற்றுவதை இந்திய அரசு உறுதிப்படுத்த முடியும். காலி செய்யப்படும் குடியிருப்புகள், தகுதிவாய்ந்த அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். எனவே, காத்திருக்கும் காலம் குறைகிறது.
சட்டத் திருத்தத்தால், அரசு குடியிருப்புகளில் அங்கீகாரமில்லாமல் குடியிருப்பவர்களை விரைவாகவும், எளிதாகவும் வெளியேற்ற முடிகிறது. வீடுகளை உரிய காலத்தில் காலிசெய்யாமல் இருப்பதால், புதிதாக வருபவர்களுக்கு வீடுகள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. புதிய சட்டத்திருத்தத்தால், குடியிருப்பு வீடுகளின் இருப்பு அதிகரித்து, காத்திருக்கும் நபர்கள் பயனடைவார்கள்.
சட்டத் திருத்தத்தால், மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில், பொது தொகுப்பு குடியிருப்பு வீடுகள் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ள மற்றும் தங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்காக காத்திருக்கும் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
பின்னணி:
அரசு குடியிருப்புகளில் அங்கீகாரமில்லாமல் தங்கியிருப்பவர்களை பொது சொத்துக்களிலிருந்து வெளியேற்றுதல் சட்டம் 1971-ன் கீழ் இந்திய அரசு வெளியேற்ற வேண்டும். எனினும், வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் நீண்டகாலம் எடுத்துக் கொள்கிறது. இதனால், புதிய ஊழியர்களுக்கு அரசு குடியிருப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது.