பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கீழ்க்காணும் முடிவுகளுக்கு செயல்பாட்டுக்குப் பிந்தைய ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
1. கூட்டுறவு வங்கிகளுக்கு 4.5% வட்டியில் கடன் வழங்குவதற்காக தற்போதைய சந்தை மதிப்பிலான வட்டியில், சராசரியாக ரூ.20,000 கோடியை குறுகிய கால கடனாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) வாங்கும்.
2. இந்த நோக்கத்துக்காக மத்திய அரசின் பட்ஜெட் மூலம், நபார்டு-க்கு கூடுதலாக ரூ.2,000 கோடி மூலதனம் வழங்கப்படும். இதன் தொடக்கமாக, நபார்டுக்கு 2016-17-ம் நிதியாண்டிலேயே ரூ.500 கோடி கூடுதல் மூலதனம் வழங்கப்படும்.
3. வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் (DAC&FW) துறையின் திட்டத்தின் கீழ், 1.8% வட்டி மானியமும், நபார்டின் நிர்வாக செலவுகளுக்காக 0.2%-ம் வழங்கப்படும். நபார்டு வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதத்தைப் பொறுத்து, வட்டி மானியத்தின் அளவு அதிகரிக்கப்படும்.
4. செயல்பாட்டில் உள்ள விவசாயிகள் கடன் அட்டைகளை ரூபே அட்டைகளாக அல்லது ஏடிஎம் அடிப்படையிலான விவசாயிகள் கடன் அட்டைகளாக கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகள் மாற்றுவதற்கு தேவையான ஒருங்கிணைப்பை நபார்டு அளிக்கும்.
பருவமழை சிறப்பாக இருக்கும் நிலையில், கடனுக்கான தேவை அதிகரிக்கும் என்பதாலும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு உதவி தேவைப்படும். எனவே, விவசாயப் பணிகளை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு அவர்களது வீடுகளுக்கே கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைக்கும்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலால், கூட்டுறவு வங்கிகள் மூலம், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில், குறுகியகால பயிர்க்கடன்கள் அதிக அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். செயல்பாட்டில் உள்ள விவசாயிகள் கடன் அட்டைகளை ரூபே அல்லது ஏ.டி.எம். அடிப்படையிலான விவசாயிகள் கடன் அட்டைகளாக மாற்றுவதன் மூலம், விவசாயிகளுக்கு தடையில்லாத மற்றும் எளிதான கடன் கிடைக்கும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்மூலம், விவசாயிகளுக்கு டிஜிட்டல் மற்றும் ரொக்கமற்ற பரிவர்த்தனைகளுக்கு வழி ஏற்படும்.