Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சபஹார் துறைமுக மேம்பாட்டிற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு 150 மில்லியன் டாலர் கடன் ஏற்பாடுகளைச் செய்ய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் சபஹார் துறைமுக மேம்பாட்டிற்காக எக்ஸிம் வங்கியிலிருந்து ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதியை ஏற்பாடு செய்து அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் முன்வடிவிற்கு ஒப்புதல் அளித்தது.

ஈரான் நாட்டில் பாரசீக வளைகுடாவிற்கு வெளியே அமைந்துள்ள இந்த சபஹார் துறைமுகம் இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கான வர்த்தகத்தை விரிவுபடுத்த உதவி செய்வதாக அமையும். இப்பகுதியில் வளர்ந்து வரும் வர்த்தகம், முதலீடு ஆகியவற்றிற்கு வழியமைக்கும் வகையிலும், இப்பகுதியில் இந்திய நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், ஈரானுடனும், இதர நாடுகளுடனும், குறிப்பாக ஆப்கானிஸ்தானுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்கள் கடந்த 06.05.2015 அன்று ஈரானின் தனது சக அமைச்சருடன் இணைந்து இதுகுறித்த ஈரானுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சபஹார் துறைமுக வளர்ச்சியின் முதல் கட்டத்தில் இந்தியா இரண்டு கப்பல் தளங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். 85.21 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்படும் இந்த இரண்டு தளங்களையும் பத்தாண்டு கால குத்தகையின்படி ஆண்டொன்றுக்கு வருடாந்திர வருவாய் செலவாக 22.95 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா ஈரானுக்கு வழங்கும். இந்த பத்தாண்டு குத்தகை காலத்திற்குப் பிறகோ அல்லது இரு நாடுகளின் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீட்டிக்கப்படும் குத்தகைக் காலம் முடிந்த பிறகோ இந்த கப்பல் தளங்களின் தளவாடங்கள் ஈரானுக்கு மாற்றிக் கொடுக்கப்படும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 150 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்வசதிக்கு ஏற்பாடு செய்யுமாறு ஈரான் இந்தியாவை கேட்டுக் கொண்டிருந்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி முறையான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அதிகபட்சம் 18 மாதங்களுக்குள் இரண்டு கப்பல் தளங்களும் செயல்பாட்டுக்கு வரும்.

இந்த இரு கப்பல் தளங்களையும் மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இரு முக்கிய துறைமுகங்களான ஜவஹர்லால் நேரு துறைமுகக் கழகம் மற்றும் கண்ட்லா துறைமுகக் கழகம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இந்தியன் போர்ட்ஸ் க்ளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்படுத்தும்.

இந்தத் திட்டத்திற்கான இறுதி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கவும், இத்திட்ட அமலாக்க காலத்தில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணவும் உதவும் வகையில் மத்திய நிதியமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவை இப்போது அதிகாரம் வழங்கியுள்ளது.

சபஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அது தொடர்பான செயல்களை அமலாக்குவதற்காக ஈரான் நாட்டில் ஒரு நிறுவனத்தை உருவாக்கிக் கொள்ளவும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திற்கு மத்திய அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.

***