பி.எம்.இந்தியா
சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துகள் தொடர்பாக மத்திய அரசின் 28.09.2015 தேதியிட்ட மத்திய ஆணைகள், பருப்புகள் தொடர்பான ஆணை எண் 2857 (E) 18.10.2015 தேதியிட்ட மத்திய அரசு ஆணை ஆகியவற்றின் செல்லுபடிக் காலத்தை 01.10.2016 முதல் 30.09.2017 வரை மேலும் ஓராண்டுக்கு நீடிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன் முக்கிய நோக்கம், எண்ணெய்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளின் இருப்பு அளவு, தேவை உரிமம் ஆகியவை மீது மாநில அரசுகள் எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது மத்திய அரசிடமிருந்து முன் இசைவு பெற்று கட்டுப்பாட்டு ஆணைகளைப் பிறப்பித்துக்கொள்ள வகை செய்வதே ஆகும்.
இந்தப் பண்டங்கள் பொதுமக்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்படுவோருக்குக் கிடைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மேம்படுத்தவும், பதுக்குவது, கொள்ளை லாபம் அடிப்பது ஆகிய போக்கைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி:
15.2.2002 தேதியிட்ட மத்திய அரசின் ஆணைப்படி, சில உணவுப் பொருட்களுக்கு உரிமம், இருப்பு அளவு, எடுத்துச் செல்வதில் உள்ள கட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதன் பின் அவ்வப்போது, மத்திய அரசு அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து, 2002 ஆம் ஆண்டு ஆணையில் திருத்தத்தைக் கொண்டுவந்தும், சில செயல்பாடுகளை நிறுத்திவைத்தும் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. எப்போதெல்லாம் குறிப்பிட்ட உணவுப் பண்டங்களின் விலை குறிப்பிட்ட காலத்துக்கு அபரிமிதமாக உயர்கிறதோ, அப்போதெல்லாம் இவ்வாறு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன.
பருப்பு வகைகளின் மீதான கட்டுப்பாடு முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பிறப்பிக்கப்பட்டு, அது அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது. தற்போதைய ஆணை செல்லுபடிக்காலம் செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைகிறது. தற்போது நிலவும் சூழ்நிலையை அடுத்து, அதற்கு மேலும் கால நீடிப்பு பெறப்படுகிறது.