பி.எம்.இந்தியா
சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த இருப்பு வைக்கும் அளவை வரையறுத்துக் கட்டுப்படுத்துவதற்கு மாநிலங்களுக்கு உரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சர்க்கரை பெருவணிகர்களுக்கு இருப்பு வைப்பதற்கான அளவைக் வரையறை செய்யும் நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. சர்க்கரை விலை சமீபத்தில் உயர்ந்து வரும் போக்கை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகளில் போதுமான கையிருப்பு இருக்கும் நிலையிலும் மொத்த மற்றும் சில்லரை விற்பனை விலை திடீரென உயர்ந்திருப்பதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
நாடெங்கும் சர்க்கரை இருப்பு நிலை, சந்தைகளில் சர்க்கரை விலை உயர்வுக்கு காரணமான விஷயங்கள் ஆகியவற்றை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டது. சர்க்கரை தொடர்பான பணவீக்கப் போக்கை கட்டுப்படுத்தவும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் சர்க்கரையைப் பதிக்க வைப்பதை தடுக்கவும் சர்க்கரையின் இருப்பு வைக்கும் வரம்பைக் கட்டுப்படுத்துவது உடனடி அவசியம் என அரசு கருதியது. இந்த முடிவை அடுத்து சர்க்கரைக்கு இருப்பு வைக்கும் அளவை நிர்ணயிக்கவும் அது வழங்கப்படுவது, அதன் விநியோகம், அதனைச் சேமித்து வைப்பது, அதன் வர்த்தகம் ஆகியவற்றை வரைமுறைப் படுத்தவும் மாநில மத்திய அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. சுயநல நோக்க வர்த்தகத்தை் கட்டுப்படுத்தி சர்க்கரை விலையை நியாயமான அளவில் நிலைநிறுத்தவும் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.