Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு

சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு


குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் மிக உயரமான சிலையான ‘ஒற்றுமைச் சிலையை‘ உருவாக்குவதில் நாடு தழுவிய அளவில் மக்கள் ஒன்றிணைந்து பங்கேற்றதையும், அந்த இடத்திற்கே உரிய தனித்துவமான சூழலையும், ‘ஒற்றுமை தினத்தின்‘ ஊக்கமளிக்கும் ஆற்றலையும் சுட்டிக்காட்டினார்.

ஒற்றுமை தினம் என்பது வெறும் சடங்கு சார்ந்த நிகழ்வுகளைத் தாண்டி, மக்கள் பங்கேற்பால் முன்னெடுக்கப்படும் ஒரு பெருமித விழாவாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். “தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; சர்தார் வல்லபாய் படேலின் பாதங்களை பணிவுடன் தலைவணங்குகிறேன்” என்று திரு மோடி கூறினார். சர்தார் படேலை ஒரு மிகச்சிறந்த வரலாற்று ஆளுமை என்று வர்ணித்த பிரதமர், அவரைத் தவிர்த்துவிட்டு நவீன இந்தியாவை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது என்று குறிப்பிட்டார்.

நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து ஒற்றுமை தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த குடும்பங்களை வரவேற்று, அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அமைதிக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினருக்கு அஞ்சலி செலுத்தினார். “நாட்டின் இந்தப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டத் தங்கள் உயிரையே தியாகம் செய்த அந்த அனைத்து வீரமிக்க படைவீரர்களையும் நான் தலைவணங்குகிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

போர்கள், பொருளாதார நெருக்கடிகள், வளப் பற்றாக்குறைகள். சிதைந்த விநியோகச் சங்கிலிகள் என, பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உலகமே கொந்தளிப்பான சூழலில் இருக்கும் இக்காலகட்டத்தில், தேசிய ஒற்றுமையே நிலைத்தன்மையையும் வெற்றியையும் உறுதி செய்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். மேலும், எந்தவொரு உலகளாவிய சவாலையும் எதிர்கொள்வதற்கு இந்தியர்களின் ஒற்றுமையே நாட்டின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சில குறிப்பிட்ட போக்குகளை குடிமக்கள் அடையாளம் காணுமாறு பிரதமர் வலியுறுத்தினார். அவற்றுள், ரகசியமான வெளிநாட்டுச் சந்திப்புகள், இந்திய எதிர்ப்பு சக்திகளின் வெளிப்படையான ஆதரவு, நாட்டின் எதிரிகளின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையிலான பேச்சுக்கள் ஆகியவை அடங்கும். “தொலைதூரப் பகுதிகளில் நக்சலிசத்தை நாம் ஒழித்துவிட்டோம்; ஆனால், கருத்தியல் ரீதியான தீவிரவாதிகளால் ஏற்படும் ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே, இத்தகைய அமைப்புகளுக்கு எதிராக நாடு எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று திரு மோடி எச்சரித்தார். முக்கியத் தீர்மானங்களும் துணிச்சலான முடிவுகளும் தவிர்க்க முடியாதபடி தடைகளையும் புயல்களையும் சந்திக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஒரே பாரதம், உன்னத பாரதம், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தனது அசைக்க முடியாத உறுதியிலிருந்து தேசம் பின்வாங்காது என்றும், 2047-ம் ஆண்டு இலக்கை நோக்கி அயராது உழைக்கும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331033&reg=3&lang=1

***

SK/BR/GS