Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜுன்ஜுனுவில் தேசிய ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் இயக்கத்தின் விரிவாக்கத்தையும் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

ஜுன்ஜுனுவில் தேசிய ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் இயக்கத்தின் விரிவாக்கத்தையும் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

ஜுன்ஜுனுவில் தேசிய ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் இயக்கத்தின் விரிவாக்கத்தையும் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

ஜுன்ஜுனுவில் தேசிய ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் இயக்கத்தின் விரிவாக்கத்தையும் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை


தாய்மார்களே, சகோதரிகளே, சகோதரர்களே, இங்கு திரளாக கூடியிருக்கும் எனது இளம் நண்பர்களே,

இன்று மார்ச் 8 ஆம் நாள். கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதுமே இந்த நாளை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடி வருகிறது. எனினும் இன்று நாடு முழுவதுமே ஜுன் ஜுனுவோடு இணைந்திருக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஜுன் ஜுனுவில் நடைபெறும் இன்றைய நிகழ்ச்சியின் வண்ணமயமான காட்சி நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்று அடைகிறது.

நான் அதற்காக மட்டும் இங்கு வரவில்லை. நிறையவே அலசி ஆராய்ந்த பிறகே நான் இங்கே வந்தேன். இன்னும் சொல்லப் போனால் நீங்கள்தான் என்னை இங்கு கவர்ந்திழுத்து வந்தீர்கள். இங்கு வரவேண்டிய கட்டாயத்திற்கு என்னை ஆளாக்கினீர்கள். அதற்கான காரணம் பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் இந்த மாவட்டம் பாராட்டத்தகுந்த ஒரு செயல்பாட்டை நிகழ்த்தியுள்ளது என்பதே ஆகும். இந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமுமே பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளது. எனவே இயற்கையாகவே அத்தகைய ஜுன் ஜுனு மண்ணுக்கு வருகை தர வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்ட்து.

இந்த மண் மிகப்பெரும் வீரர்களின் மண் என்று சற்று நேரத்திற்கு முன் வசுந்தரா ஜி கூறிக் கொண்டிருந்தார். இந்த மண்ணின் வலிமையைப் பற்றியே அவர் கூறினார். சமூக சேவை, கல்வி, அறம் சார்ந்த செயல்பாடுகள் அல்லது நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்தல் என ஒவ்வொரு துறையிலுமே ஜுன் ஜுனு பகுதி தன் சிறப்பை நிரூபித்து வந்துள்ளது. அது எப்போதுமே தோல்வியை ஒப்புக் கொண்டதில்லை. யுத்தமாக இருந்தாலும் சரி, வறட்சியாக இருந்தாலும் சரி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது இந்த மண்ணுக்குத் தெரியும். எனவே ஜுன் ஜுனு பகுதி நிறைவேற்றிய பணியில் இருந்து புதிய வலிமையையும் ஊக்கத்தையும் நாடு பெறுகிறது.

பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற இயக்கத்தின் வெற்றி என்பது ஏற்கனவே இருந்து வந்த நிலைமையில் ஒரு மேம்பாடு ஏற்பட்டுள்ளது என்ற  ஒருவகையான திருப்தி உணர்வைத் தருகிறது. எனினும் மகத்தான சாஸ்திரங்கள், கலாச்ச்சாரம், விவேகானந்தரைப் போன்ற மகத்தான மனிதர்களுக்குப் பெயர் பெற்ற இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்து வேண்டுகோள்களை எழுப்பி, பட்ஜெட்டுகளில் தொகைகளை ஒதுக்கி, இத்தகைய திட்டங்களின் மூலம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் நாம் ஆட்படுகிறோம். ஆழமாக வேரூன்றியுள்ள இந்த சமூகத்தீமைக்கான காரணம்தான் என்ன?

எந்தவொரு சமூகத்திற்கும் இதை விட பெரிய வலி எதுவும் இருக்க முடியாது. கடந்த பல பத்தாண்டுகளாகவே இத்தகைய சமூகத் தீமையினாலும், தவறான மனப்போக்கினாலும் நமது பெண் குழந்தைகளை நாம் கைவிடுவது அல்லது  தியாகம் செய்வது என்ற போக்கை நாம் மேற்கொண்டு வந்துள்ளோம். 1000 ஆண்களுக்கு 800, 850 அல்லது 900 பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதை கேள்விப்படும்போதெல்லாம் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமநிலை நிலவினால்தான் சமூகத்தினால் செயல்பட முடியும்.

கடந்த பல பத்தாண்டுகளாக பெண் சிசுக்களை கொல்வது என்பதன் விளைவாக சமூகத்தில் சமநிலையற்ற ஒரு சூழல் நிலவி வந்தது. கடந்த நான்கு-ஐந்து தலைமுறைகளின் தவறுகள் இப்போது ஒன்று சேர்ந்துள்ளன. பழைய இழப்புகளை சரிகட்ட நேரம் பிடிக்கும். எனினும் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு சமமான எண்ணிக்கையில் பெண் குழந்தைகளும் பிறப்பதை உறுதி செய்வதை நோக்கி நாம் நகருவதற்கு இதுவே சரியான நேரமாகும். இப்போது ஆண்-பெண் குழந்தைகள் சமமான அளவில் வளர்க்கப்படுவார்கள். ஆண்-பெண் குழந்தைகளின் சமத்துவம் என்ற கோஷத்துடன் நாம் முன்னோக்கிச் செல்வோமானால், அடுத்த இரண்டு மூன்று தலைமுறைகளில் கடந்த நான்கு ஐந்து தலைமுறைகளில் நிகழ்ந்த தவறுகளை நம்மால் சரிசெய்ய முடியும். எனினும் அதிலும் ஒரு நிபந்தனை இருக்கிறது. இப்போது பிறக்கின்ற ஆண்-பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் சம நிலையற்ற ஒரு சூழலை நாம் உருவாக்க கூடாது என்பதே அந்த நிபந்தனை ஆகும்.

இன்று பாராட்டப்படவிருக்கின்ற பத்து மாவட்டங்கள் இந்தக் கடமையை மிகச் சிறப்பாகச் செய்துள்ளன என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்டங்கள், பிறக்கிற ஆண்-பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை சமப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன. இந்தப் புனிதமான கடமைக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டமைக்காக விருதுபெற்ற மாநிலங்கள், மாவட்டங்கள், குழுக்கள் அனைத்திற்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இயக்கத்தைப் பரந்துபட்டதொரு இயக்கமாக மாற்ற வேண்டுமென நாட்டின் அனைத்து அதிகாரிகளையும், நமது அரசு அதிகாரிகளையும் மாநில அரசுகளையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு குடும்பமும் இதில் இணைந்து கொள்ளாமல் போனாலோ, மாமியார்கள் இதற்கான தலைமையை ஏற்றுக் கொள்ளாமல் போனாலோ இந்த வேலை முடிவதற்கு இன்னும் நீண்ட நாட்கள் பிடிக்கும். எனினும் மாமியார்கள் எவ்வளவு விரைவாக இந்தக் கடமையை எடுத்துக் கொண்டு, வீட்டில் ஒரு பெண் இருக்க வேண்டும் என்பதையும், அந்தப் பெண்ணுக்கு உலகில் உள்ள எவரும் தீங்கிழைக்க முடியாது என்பதையும் உறுதிப் படுத்த வேண்டும். எனவே ஒரு சமூக ரீதியான இயக்கத்தை, பரந்துபட்ட மக்களின் இயக்கத்தை நாம் உருவாக்க வேண்டும்.

அந்தச் சவாலை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கவலை தரத்தக்க சூழ்நிலையில் இருந்த ஹரியானா மாநிலத்தில் ஒரு திட்டத்தை தொடங்கியது. ஹரியானா மாநிலத்தில் இதை விளக்குவதே கடினமாக இருந்தது. அவர்கள் அங்கே சென்றால் நிலைமை மேலும் மோசமாகக் கூடும் என்று எனது அதிகாரிகள் கூறினர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்துதான் நான் தொடங்குவேன் என்று நான் கூறினேன். இன்று நான் ஹரியானாவைப் பாராட்டுகிறேன். இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் நிலைமையை மிக வேகமாக மேம்படுத்தியுள்ளனர்.

பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது புதியதொரு நம்பிக்கையையும் புதியதொரு ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் அடைந்துள்ள வெற்றியை கணக்கில் எடுக்கும்போது சர்வதேச மகளிர் தினமான, மார்ச் 8-ம் தேதியான இன்று 160-161 மாவட்டங்கள் என்பதிலிருந்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தை இந்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. இது நிலைமையை மேம்படுத்தும். எனினும் இந்த நிலைமையை மேலும் உயர்த்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்தத் திசைவழியில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

நமது பெண்குழந்தைகள் சில நேரங்களில் (பெற்றோர்களுக்கு) சுமையாக கருதப்படுகின்றனர் என்ற காலங்காலமான கருத்தோட்டத்தின் நம்பகத்தன்மை குறித்து நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நமது பெண்குழந்தைகள் சுமைகள் அல்ல; மாறாக குடும்பம் முழுவதன் பெருமையே அவர்கள்தான் என்பதையே இன்றைய அனுபவங்களும் நிகழ்வுகளும் நமக்குத் தெரிவிக்கின்றன.

விண்கலங்களை விண்ணில் ஏவுதல் அல்லது செவ்வாய் கிரகத்தை நோக்கிய மங்கல்யான் இயக்கம் போன்ற இந்தியாவின் சாதனைகளைப் பற்றிக் கேள்விப்படும்போது விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் இத்தகைய வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த மூன்று வானியல் விஞ்ஞானிகளை நாம் அறிந்து கொள்கிறோம். நமது பெண்களின் வலிமையையே இது சுட்டிக் காட்டுகிறது. ஜுன் ஜுனு பகுதியில் இருந்து ஒரு பெண் போர் விமானியை நாம் பார்க்கும்போதுதான் நமது பெண் குழந்தைகளின் வலிமையை நாம் உணர்கிறோம். நமது பெண் குழந்தைகள் தங்கப் பதக்கங்களை அள்ளிக் கொண்டு வரும்போதும் அல்லது ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஏதாவதொரு பதக்கத்தை பெறும்போதும் நமது நாடு முழுவதுமே பெருமை கொள்கிறது.

தங்களின் முதுமைக்காலத்தில் மகன் ஆதரவாக இருப்பான் என்று சிலர் நினைக்கிறார்கள். எனினும் நிலைமை இன்று வேறு வகையாகவே உள்ளது. தங்களுக்கே சொந்தமாக பங்களாவும் சொகுசுக் காரையும் வைத்துள்ள நான்கு மகன்களைக் கொண்ட இது போன்ற குடும்பங்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களின் பெற்றோர்களோ தங்களின் முதுமைக் காலத்தில் முதியோர் இல்லங்களில் வசித்து வருகிறார்கள். மறுபுறத்திலோ, ஒரே ஒரு பெண்ணை மட்டுமே கொண்ட குடும்பங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அங்கே அந்தப் பெண் தன் பெற்றோர்களை கவனமாக பார்த்துக் கொள்வதோடு, அவர்களுக்கான வருவாய் ஈட்ட கடினமாக உழைக்கவும் செய்கிறார். பல நேரங்களில் தன் பெற்றோரை பார்த்துக் கொள்வதற்காகவே, அவர்கள் துன்பப்படக் கூடாது என்பதற்காகவே திருமணம் கூட செய்து கொள்ளாமலும் இருக்கின்றனர்.

எனவே இந்த குறுக்குப் புத்தியில் இருந்து நாம் வெளிவர வேண்டும். இந்த சமூக இயக்கம் என்பது நம் அனைவரின் கடமை ஆகும். அதன் தோல்விக்கு சிலர் அரசாங்கத்தையும் குறை கூறுவார்கள். ஆனால் அதன் வெற்றியோ ஒவ்வொரு குடும்பத்தின் மன உறுதியை பொறுத்ததே ஆகும். எனவே மகனையும் மகளையும் சமமானவர்களாக நாம் கருதாத வரையில் தங்கள் தாய்மார்களின் மடியிலேயே மகள்கள் கொல்லப்பட்டுக் கொண்டேதான் இருப்பார்கள்.

18-ம் நூற்றாண்டில் ஒரு வழக்கம் இருந்தது. பால் நிரம்பிய பாத்திரத்தில் பெண் குழந்தைகள் மூழ்கடிக்கப்பட்டனர். என்றாலும் 21-ம் நூற்றாண்டு மக்களாகிய நாம் 18-ம் நூற்றாண்டு மனிதர்களை விட மோசமானவர்களாகவே இருக்கிறோம் என்பதாகவே சில நேரங்களில் எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் 18-ம் நூற்றாண்டில் குறைந்தபட்சம் பெண் குழந்தைகள் பிறக்கவும், தங்கள் தாய்மாரின் முகத்தைக் காணவும், இந்த உலகத்தில் சில காலம் இருந்து மூச்சு விடவும் வாய்ப்பு கிடைத்தவர்களாக இருந்தனர். அதன் பிறகே மிகப்பெரும் சமூக ரீதியான குற்றத்தினால் அவள் பாதிக்கப்பட்டாள்.

ஆனால் இன்று அந்தக் குற்றம் அதைவிட மோசமானதாக இருக்கிறது. தாயின் கருவறையிலேயே அவள் கொல்லப்படுகிறாள். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தாயின் கருவறைக்கு உள்ளேயே மகள் கொல்லப்படுகிறாள். உலகத்தில் இதைவிட மிக மோசமான குற்றம் என்பது இருக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். நமது பெருமைக்குரியவர்களாக நமது பெண் குழந்தைகளை கருதாத வரையில் இந்த சமூகத் தீமையை நம்மால் அழித்தொழிக்க முடியாது.

பெண் குழந்தைகள் பிறந்துள்ள குடும்பங்களையும் தாய்மார்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இன்று கிடைத்தது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தனர். பெண்குழந்தைகள் பிறந்தபோது இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது பற்றி அவர்களுக்குத் தெரியுமா? என்று நான் அவர்களிடம் கேட்டேன். தாங்கள் பிறந்தபோது எப்படி என்று தெரியாது; ஆனாலும் தங்களுக்கு பெண் குழந்தைகள் பிறந்தபோது தாங்களே அந்தப் பகுதி முழுவதற்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

நிலைமையை நாம் மாற்ற வேண்டும். அந்த வகையில் இந்த திட்டத்தை நாடு முழுவதிலும் விரிவுபடுத்தும் திசையில் அரசு செயல்பட்டு வருகிறது.

மற்றொரு திட்டமும் இன்று தொடங்கப்படுகிறது. அரசின் ஊட்டச் சத்து இயக்கம். இப்போது பிரதமரை எப்போதெல்லாம் விமர்சிக்க வேண்டுமென்று விரும்பினாலும், அல்லது பிரதமரைப் பற்றி புகார் கூற வேண்டும் என்று விரும்பினாலும், பிரதமர் என்ற வார்த்தையை நீங்கள் எதிர்கொள்ளும்போது நரேந்திர மோடியை நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது. மாறாக ஊட்டச் சத்து இயக்கத்தையே நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தத் திட்டம் ஒவ்வொரு வீட்டிலும் பரவியுள்ளது.

சில நேரங்களில் குழந்தையின் – அது பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, உடல் வளர்ச்சி என்பது அப்படியே நின்று போகிறது. சில நேரங்களில் பிறந்த குழந்தையின் எடையும் கூட சராசரிக்கும் குறைவாகவே உள்ளது. இத்தகைய நேரங்களில் போதிய விழிப்புணர்ச்சி இல்லாததே இதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தப் பிரச்சனையில் இருந்து நாம் வெளிவர வேண்டும். இது அரசின் வேலை மட்டுமே அல்ல என்பதை நான் மீண்டும் ஒரு முறை வலியுறுத்த விரும்புகிறேன். பரந்துபட்ட மக்களின் இயக்கமாக அது மாறும்போது, மக்களுக்கு கற்பிக்கப்படும்போது தான் நிலைமைகளில் மாற்றம் வரும்.

ஊட்டச்சத்துக் குறைவிற்கு எதிராக போராட்டத்தில்  நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு அரசும் ஏதாவது ஒரு திட்டத்தை  கொண்டுவந்துள்ளது. எனினும், சரியான அளவிலான கலோரி சத்து, முறையான உணவு ஆகியவையே ஊட்டச் சத்துக் குறைவை எதிர்த்துப் போராடப் போதுமானது என பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர் என்பதும் தெரிய வந்தது. எனினும் சுற்றுச்சூழல் முழுவதுமே சரிப்படுத்தப்பட வேண்டும் என்பதையே நமக்குக் கிடைத்த அனுபவங்கள் தெரிவித்தன. குடிநீர் மோசமான தரத்துடன் இருக்குமானால், தேவைப்படும் ஊட்டச்சத்து எப்போதுமே முறையானதாக இருக்க முடியாது.

குழந்தை மணம் என்பதும் ஊட்டச் சத்துக் குறைவிற்கான காரணங்களில் ஒன்று என்பது ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மையாகும். உடலமைப்பு சரியாக அமைவதற்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதும், குழந்தை பெறுவதும் மோசமான ஊட்டச்சத்து மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலமைப்பு வளர்ச்சி சரியாக இல்லாத நிலை ஆகியவற்றுக்கு வழிவகுக்கின்றன. எனவே வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சரியான நேரத்தில் சரியான விஷயங்களை, அதாவது உடல்நலமில்லாதபோது முறையாக மருந்துகளை உட்கொள்வது; குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்துவது போன்ற விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும். எனினும் குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்ற தவறான கருத்து இங்கு நிலவுகிறது. இது நாம் செய்யும் தவறு. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கப்படுமானால் உடல் வளர்ச்சி சரியாக இருப்பதற்குத் தேவையான ஊட்டச் சத்தை அது பெறுகிறது. வாழ்க்கையில் பின்னர் அது உடல்நலக் குறைவு குறித்த பிரச்சனைகளை எதிர்கொள்வதில்லை. இதுதான் தாய்ப்பாலின் வலிமை. ஆனால் நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை. எனவே தாயின் பெருமையை நாம் உணர்ந்து கொண்டோமானால், அவளை போற்றினோமானால், பாதுகாத்தோமானால், அவளின் மடியில் இருக்கும் குழந்தையும் கூட ஊட்டச் சத்துக் குறைவிலிருந்து விடுபட்டதாக இருக்கும்.

ஊட்டச்சத்து என்பது ஒரு அம்சம்தான். சில நேரங்களில் அரசு தடுப்பூசி திட்டத்தை நடத்துகிறது. ஆனால் மக்கள் நல மையங்கள் வழங்கும் வசதிகளை நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை. இதற்கெனவே நிலையான பட்ஜெட், அதிகாரிகள், மக்கள் ஆகியோர் உள்ளனர். இதன் விளைவாக ஏதாவதொரு நோயினால் மக்கள் அவதியுறுகின்றனர்.

சாப்பிடுவதற்கு முன்பாக கைகழுவாமல் இருப்பது போன்ற தூய்மையற்ற பழக்கத்தின் விளைவாக 30 முதல் 40 சதவீத குழந்தைகளுக்கு நோய்கள் வருகின்றன என்பதையும் அவற்றால் அவை இறந்து போகின்றன என்பதையும் இப்போது நாம் பார்த்த திரைப்படம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. குழந்தைக்கு உணவூட்டுவதற்கு முன்பாக தங்களின் கைகளை அவசியம் கழுவ வேண்டும் என்பதை தாய்மார்களுக்கு கற்றுக் கொடுத்து அதை ஒரு பழக்கமாகவே மாற்றுவதற்கு யார் முன்வருவார்கள்? சில நேரங்களில் குழந்தை ஏதாவதொன்றை வாயில் போட்டுக் கொண்டு விடும். குழந்தையின் கைகளும் கூட கழுவிவிடப்பட வேண்டும் என யார் அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்?

இதுதான் நமது குழந்தைகளின் முன்பாக உள்ள சிறப்பான எதிர்காலம் ஆகும். நமது குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது நமது ஒட்டுமொத்தக் கடமையாகும். எனவேதான் குடிநீர் பிரச்சனைகள், மருந்து போன்று ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் திட்டங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து இத்திட்டத்தை ஓர் இயக்க வடிவில் நாம் அமலாக்கி வருகிறோம். குறிப்பிட்ட ஒரு வயதுக்குப் பின்பு குழந்தை பள்ளிக்குச் செல்லும்போது ஒருவித தாழ்வு மனப்பான்மை அதற்கு உருவாவதை நாம் பார்த்திருப்போம். அதற்குக் காரணம் என்ன? அங்கே ஐந்து உயரமான குழந்தைகள் இருப்பார்கள். மற்றவர்கள் குள்ளமாக இருப்பார்கள். அந்த உயரமான குழந்தைகளைப் போன்று அதே உயரத்திற்கு வளர வேண்டும் என்று குள்ளமான குழந்தைகள் விரும்புவார்கள். அதுவே அவர்களின் தீராத தாகமாக இருக்கும். உங்கள் உயரத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பலரும் மரக்கிளைகளை பிடித்துக் கொண்டு தொங்கியிருப்பீர்கள். என்றாலும் இந்த விஷயங்களில் நாம் அறிவியல் ரீதியாக செயல்படுவதில்லை.

இன்று ஒவ்வொரு குறிப்பிட்ட வயதுப் பிரிவினருக்கும் குறிப்பிட்ட உயரம் வரையறுக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் நமது நாடு மிகவும் பின்தங்கியிருக்கிறது. இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் 2022-ம் ஆண்டிற்குள் நாம் நமது குழந்தைகளை நலமிக்கவர்களாக, சரியான எடையுடன், சரியான உயரத்துடன் முழுமையான வகையில் வளர்த்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும். அதன் மூலம் ஊட்டச் சத்துப் பிரிவில் நாம் அடைந்துள்ள வெற்றியை உலகத்திற்கு முன்பாக பெருமையுடன் வெளிப்படுத்த வேண்டும். எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி மிக்க குழந்தைகளை காணும் வகையிலான ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

இந்த திட்டத்திற்காக நாம் சுமார் ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட தர அளவீடுகள், பொதுச் சுகாதார செயல்வீரர்கள், தன்னார்வத் தொண்டர்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிராம அளவில் இருப்பார்கள். தொடர்ச்சியான வகையில் அவர்கள் புள்ளிவிவரங்களை சேகரிப்பார்கள். அதில் ஏற்படும் சிறு மாற்றமும் கூட மேலதிகாரிகளிடமிருந்து உடனடி தலையீட்டை கொண்டு வரும். பிரச்சனைகள் உன்னிப்பாக அலசப்பட்டு, தீர்வுகளை தேடுவோம். சில நேரங்களில் ஒரு குழந்தையின் வளர்ச்சி 8 மாதங்களுக்கு மிக நன்றாகவே இருந்து, எனினும் திடீரென்று ஒரு மழைக்காலத்தில் அந்தக் குழந்தை உடல் நலமில்லாமல் போனால் கடந்த 8 மாத காலத்தில் அது பெற்ற வளர்ச்சி பயனற்றதாகப் போய்விடும். எனவே இந்த சவால் மிக்க கடமையை நிறைவேற்றும் கடமையே நமக்கு முன்பாக உள்ள சவால் ஆகும். நமது உறுதி மொழிகளை நிறைவேற்ற முடியும் என்றே நான் நம்புகிறேன்.

இந்திரதனுஷ் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலைகள் துரிதப்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டின் முடிவிற்குள் தடுப்பூசி போடும் இயக்கத்தில் 90 சதவீதத்தை எட்டி விட முயற்சித்து வருகிறோம். பிரதமரின் தாய்மார்களைப் போற்றும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் அரசு ரூ. 6,000 வழங்குகிறது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் சுமார் 23 லட்சம் பெண்கள் இதில் பயனடைந்துள்ளனர்.

அதைப் போலவே, தங்கள் வீடுகளில் விறகு எரிப்பதில் வெளியாகும் புகையை சுவாசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நமது தாய்மார்கள் ஆளாகின்றனர். இது நாளொன்றுக்கு 400 சிகரெட்டுக்களைப் புகைத்தால் வெளியாகும் அளவுக்கான புகை ஆகும். இந்தப் பிரச்சனையில் இருந்து தாய்மார்களை விடுவிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பிரதமர் எரிசக்தி திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை நாங்கள் வழங்கத் தொடங்கியுள்ளோம். இன்று சுமார் மூன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வரும்நாட்களில் இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நமது நாட்டை சுகாதாரமுள்ளதாக நாம் மாற்ற வேண்டும். இன்று தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  நமது குழந்தைகள் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்களெனில், நமது நாடும் தானாகவே அதிகாரம் பெற்றதாக மாறிவிடும்.

இத்தகைய உறுதிப்பாட்டுடன் இந்த இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இது மனித குலத்திற்கான, எதிர்கால தலைமுறைகளுக்கான, நமது நாட்டின் எதிர்காலத்திற்கான நடவடிக்கையில் பங்கு கொள்ளுமாறு எனது சக குடிமக்களை கேட்டுக் கொள்கிறேன். எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்.

இப்போது என்னோடு சேர்ந்து உரக்க குரலெழுப்புங்கள்:

இந்திய தாய் நாட்டிற்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

மிக்க நன்றி!