Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜூலை 16, 2017-ல் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

ஜூலை 16, 2017-ல் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

ஜூலை 16, 2017-ல் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


மழைக்கால கூட்டத் தொடர் : நேரம், வளங்களையும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் மதிப்போம்

• நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் கிடைக்கும் நேரத்தை அதிகபட்ச அளவுக்கு பயன்படுத்துவதை நாம் உறுதி செய்ய வேண்டியது இப்போது காலத்தின் கட்டாயமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், குறிப்பிட்ட சில நேர்வுகளைத் தவிர, நாடாளுமன்றத்தின் செயல்பாட்டுத் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

• இந்த கூட்டத் தொடரில் அமர்வுகளுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் சிறப்பான வகையில் பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். நாடாளுமன்ற செயல்பாட்டுத் திறனில் வரலாறு படைக்கப்படும் என்றும் நம்புகிறேன். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

• நேரம், ஆதாரவளம் மற்றும் அவையின் கண்ணியத்தை மனதில் கொண்டு அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்பதன் மூலம் நம்முடைய பொறுப்புகளை நம்மால் நிறைவேற்ற முடியும்.

ஜி.எஸ்.டி.க்காக நன்றி

• ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதற்காக அனைவரும் கைகோர்த்தமைக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

• 15 நாட்களாக ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 15 நாட்களிலும் நாம் சாதகமான விளைவுகளைக் கண்டு வருகிறோம். பல மாநிலங்களின் எல்லைகளில் சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. சரக்கு வாகனங்களின் போக்குவரத்து எளிதாகிவிட்டது.

• இன்னும் ஜி.எஸ்.டி. தளத்தில் பதிவு செய்யாத வர்த்தகர்களை, மிக விரைவில் பதிவு செய்ய வைத்து இதில் சேர்ப்பதற்கு மாநிலங்களுடன் மத்திய அரசு நெருக்கமாக பணியாற்றி வருகிறது.

பட்ஜெட் தொடரின் பயன்

• ஒரு மாதத்துக்கு முன்பு பட்ஜெட் கூட்டத் தொடர் கூட்டப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளித்தன. பட்ஜெட் தொடரால் கிடைத்த சாதகமான விளைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.

• பல்வேறு திட்டங்களுக்காக, பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மழைக்காலத்துக்கு முன்னதாக சென்று சேர வேண்டும் என்பதற்காக பட்ஜெட் நடைமுறை ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்கப்பட்டது. முன்பு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நிதி சென்று சேருவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆனது. மழைக்கால பருவத்தால், இதன் அமலாக்கம் தாமதமானது. இந்த முறை அப்படி நடக்கவில்லை. மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்த தாமதமும் ஏற்படவில்லை. கட்டமைப்புத் திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு கூடுதலாக மூன்று மாதங்கள் அவகாசத்தையும் அது அளித்துள்ளது.

• இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் செலவிடப்பட்ட தொகை, முந்தைய ஆண்டில் இதே காலத்தில் இருந்ததைவிட 30% அதிகமாக உள்ளது என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

• கட்டமைப்பு தொடர்பான திட்டங்களில் மூலதனச் செலவு முந்தைய ஆண்டுகளைவிட 48% அதிகரித்துள்ளது.

• ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, ஆண்டு முழுக்க சமச்சீரான முறையில் செலவிடப்படும் என்பதை செலவினத்தின் போக்கு காட்டுகிறது. முன்பு, மழைக்காலத்துக்குப் பிறகு செலவிடுதல் தொடங்கி, மார்ச் மாதத்துக்குள் பணத்தை செலவிட வேண்டும் என்று தேவையற்ற அழுத்தம் ஏற்படும். திட்ட செயலாக்கத்தில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று.

வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம்

• நாட்டின் பல பகுதிகளில் பெய்த தொடர் மழையும், வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளமும் கவலையை ஏற்படுத்துகின்றன. மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. நிலைமையை நெருக்கமாக கவனித்து வருகிறோம். வெள்ள மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் மத்திய அரசின் பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. எந்த உதவி தேவைப்பட்டாலும் அவசரமாக தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை

• அமர்நாத் யாத்ரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட யாத்ரிகர்களுக்கு இதயபூர்வ இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். துயரமான இந்த நேரத்தில் அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.

• ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலை நாட்டவும், அந்த மாநிலத்தில் இருந்து தேசவிரோத சக்திகளை ஒழிக்கவும் நாம் முழுமையாக உறுதிபூண்டிருக்கிறோம். அடல் ஜி வகுத்துக் கொடுத்த பாதையில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையை தூண்டுவோர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

• பசு பாதுகாப்பு என்ற பெயரில் சில சமூக விரோத சக்திகள் வன்முறையைத் தூண்டியுள்ளன. நாட்டில் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

• தேசத்தின் மதிப்பை அது பாதித்துள்ளது. இதுபோன்ற சமூக விரோத சக்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

. • நாட்டின் தாயைப் போல பசு மதிக்கப்படுகிறது. பசுவுடன் மக்களின் உணர்வுகள் ஒன்றியுள்ளன. இருந்தபோதிலும், பசுவைப் பாதுகாக்க சட்டம் இருக்கிறது என்பதையும், சட்டத்தை மீறுவது அதற்கு மாற்றாக இருக்காது என்பதையும் மக்கள் அறிந்திட வேண்டும்.

• சட்டம், ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும், மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிலர் சொந்த பகையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதையும் மாநில அரசுகள் கவனிக்க வேண்டும்.

• பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் இந்த ரவுடித்தனத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிராக செயல்படுதல்

• நம்மில் சில தலைவர்களின் செயல்பாடுகள் காரணமாக அரசியல் தலைமையின் மதிப்பு கடந்த சில பத்தாண்டுகளாக கேள்விக்குறியாக இருந்தது. எல்லா தலைவர்களும் கறைபடிந்தவர்கள் அல்ல, எல்லா தலைவர்களும் பணத்திற்காக அலைபவர்கள் அல்ல என்ற எண்ணத்தை மக்களிடம் நாம் உருவாக்க வேண்டியுள்ளது.

• நமது பொதுவாழ்வில் நாம் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது மட்டுமின்றி, ஊழல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய தேவையாக உள்ளது.

• தங்கள் மத்தியில் உள்ள அதுபோன்ற தலைவர்களை அரசியல் கட்சிகள் அடையாளம் கண்டு, அவர்களின் அரசியல் பயணத்தில் இருந்து தனிமைபடுத்தப்பட வேண்டும் என்பதில்தான் முக்கியத்துவம் இருக்கிறது.

• சட்டம் தன் கடமையை செய்யும்போது, அரசியல் சதி என்ற பிரச்சினையை எழுப்பி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்பவர்களின் சவால்களை முறியடிக்க நாம் கைகோர்த்திட வேண்டும்.

• நாட்டைக் கொள்ளையடித்தவர்களின் பக்கம் நிற்பதால் தேசத்துக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை.

• வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா ஆகஸ்ட் 9 ஆம் தேதி வருகிறது. அதை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும்.

• ஒருமித்த கருத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தபோதிலும், தேர்தல் பிரச்சாரம் கண்ணியமாக அமைந்திருந்தது என்பது மனநிறைவாகவும், பெருமைக்குரியதாகவும் உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் பாராட்டப்பட வேண்டும். ஒரு வாக்குகூட வீணடிக்கப்படாத வகையில் தங்களின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அனைத்து கட்சிகளும் பயிற்சி அளிக்க வேண்டும்.

****