Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


தமிழ்நாட்டின் ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேக்கர் அவர்களே, டாக்டர் எல். முருகன் அவர்களே, திரு ராஜ்மோகன் அவர்களே, திரு நயினார் நாகேந்திரன் அவர்களே, டாக்டர் கிரிஜா சேஷாத்ரி அம்மா அவர்களே, திரு ஆர்.ஆர்.கோபால்ஜி அவர்களே, என் இளம் நண்பர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே, தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளே, வணக்கம்.

நண்பர்களே,

இன்று நவராத்திரியின் முதல் நாள். சிவபெருமானுக்கும் அன்னை பராசக்திக்கும் உரிய புனித பூமியான தமிழ்நாட்டிற்கு வரும் நல்வாய்ப்பும், அன்னை சரஸ்வதியின் பக்தர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்திருப்பதன் மூலம், எனக்கு இந்த நவராத்திரியின் துவக்கம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. எனது இளம் நண்பர்களின் உற்சாகத்தையும் என்னால் காண முடிகிறது. அந்த நேர்மறையான ஆற்றலையும், உத்வேகத்தையும் என்னால் உணர முடிகிறது. உங்கள் கண்களில் இந்தியாவின் எதிர்காலத்தை நான் காண்கிறேன்.

நான் இன்று திட்டமிட்ட நேரத்திற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே சென்னை வந்தடைந்துவிட்டேன் என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். இருப்பினும், நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்ட விதத்தாலும், தவிர்க்க முடியாத சில தாமதங்களாலும், உங்களை வந்து சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டது. நான் எதிர்பார்த்ததை விடத் தாமதமாக வந்தடைந்ததால் உங்கள் அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டது. அதற்காக நான் உங்கள் அனைவரிடமும் மனதார மன்னிப்பு கோருகிறேன்.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையின் பின்னணியில் உள்ள சக்தியாகத் திகழ இன்றைய இளைஞர்கள் விரும்புகின்றனர். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்குத் தேவையான புதிய யோசனைகளும் தீர்வுகளும் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், உலகின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பவையாக அமையும்.

இன்று உலகம் தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. அந்தத் தீர்வுகளை வழங்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது.

நண்பர்களே,

இன்று, இந்தியா அளவற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. ஒவ்வொரு இளைஞரும் அந்தப் பரந்த தளத்தில் தங்கள் எதிர்காலத்தைக் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில், இது உங்களுக்கான காலம். இது உங்களுடைய தருணம். இது உங்களுக்கான வாய்ப்பு. இந்தக் கனவை நாம் நிச்சயம் நனவாக்குவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாம் அனைவரும் இணைந்து இதைச் சாதிப்போம்!

நாம் அனைவரும் இணைந்து இதை நிறைவேற்றுவோம்!

நாம் அனைவரும் இணைந்து இதை நிறைவேற்றுவோம்!

நாம் அனைவரும் இணைந்து இதை நிறைவேற்றுவோம்!

நண்பர்களே,

இன்று நான் இங்கு வந்திருப்பதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான உத்வேகமும் உள்ளது. சில மாதங்களுக்கு முன், நாகர்கோவிலில் கிரிஜா அம்மா சில குழந்தைகளுடன் என்னைச் சந்தித்தார். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, தன்னம்பிக்கை, நாட்டின் எதிர்காலம் குறித்த ஈடுபாடு ஆகியவை என் மனதில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின. அந்தச் சந்திப்பின்போது, இந்தப் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அவர் எனக்கு அழைப்பு விடுத்தார். அவர் என் மீது கொண்டிருந்த அன்பினாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிறுவனத்தின் மீது எனக்கு இருந்த மரியாதையாலும், நிச்சயமாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் என்று அப்போதே நான் முடிவு செய்தேன். ஐம்பது ஆண்டுகால இந்தச் சிறப்பான பயணத்திற்காக, விஸ்வ இந்து வித்யா கேந்திரா மற்றும் ஒட்டுமொத்த இந்து வித்யாலயா குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று, விஸ்வ இந்து வித்யா கேந்திரா தனது பொன்விழாவைக் கொண்டாடுகிறது. இது ஒரு மகத்தான மைல்கல். அதே சமயம், இதன் பயணமும் மிகுந்த ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. 1975-ல், இந்நிறுவனம் சென்னையின் மேற்கு மாம்பலத்தில் ஒரு சிறிய பள்ளியாகத் தொடங்கப்பட்டது. அக்காலத்தில், இதில் ஏழு மாணவர்கள் மட்டுமே பயின்றனர். இன்றுள்ள வசதிகள் எதுவும் அப்போது இல்லை. நிரந்தரக் கட்டிடம் கூட அப்போது இருக்கவில்லை. வளங்கள் குறைவாகவே இருந்தன. ஆனால், உறுதியான தீர்மானமும் தளராத சேவை மனப்பான்மையும் இருந்தன. அதனால்தான், எத்தகைய சவால்களையும் மீறி இந்த நிறுவனம் தொடர்ந்து முன்னேறிச் சென்றது. காலப்போக்கில், இந்தச் சிறிய முயற்சி ஒரு பெரும் கல்வி இயக்கமாக வளர்ந்தது. இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உங்களது பதினைந்து கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

நண்பர்களே,

இந்தத் தருணத்தில், ஸ்ரீ ஜெய்கோபால் கரோடியா அவர்களின் பங்களிப்பையும் நான் நினைவுகூர்கிறேன். பள்ளியின் கட்டுமானத்தில் அவர் முக்கிய பங்காற்றினார். இன்று, இந்து வித்யாலயாவின் பயணத்தின் வெற்றிக்கு வித்திட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐம்பது ஆண்டுகால அர்ப்பணிப்பு. ஐம்பது ஆண்டுகால உறுதிப்பாடு. ஐம்பது ஆண்டுகளாக இளம் மனங்களை நல்வழிப்படுத்தும் பணி.

நண்பர்களே,

கல்வி கற்பிப்பதுடன், தேசபக்தி மிக்க குடிமக்களையும் ஒரு கல்வி நிறுவனம் எவ்வாறு உருவாக்குகிறது என்பதற்கு இந்த நிறுவனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எனது  மனதின் குரல் நிகழ்ச்சியிலும் நான் இதைக் குறிப்பிட்டிருந்தேன். கிரிஜா அம்மா, குழந்தைகளுக்கு ஒரு எளிய யோசனையை வழங்கினார்: ஒவ்வொரு குழந்தையும் தினமும் ஒரு ரூபாயைச் சேமித்து, அதை நாட்டின் வீரர்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதே அது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்த உறுதிமொழியில் இணைந்தபோது, சுமார் நாற்பது லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது. உண்மையில், இது எவ்வளவு ஊக்கமளிக்கும் ஒரு முன்னுதாரணம்!

நண்பர்களே,

சிறிய பங்களிப்புகள் கூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு சிறிய முயற்சி கூட மாபெரும்  தாக்கத்தை உருவாக்க வல்லது. பேரிடர் காலங்களில் உதவுவது, தூய்மைப் பணிகளில் பங்கேற்பது என எதுவாக இருந்தாலும், இத்தகைய மாண்புகள்தான் இந்து வித்யாலயா குடும்பத்தின் உன்னதமான பாரம்பரியமாகத் திகழ்கின்றன.

நண்பர்களே,

இந்தச் சந்தர்ப்பத்தில், ஐயன் திருவள்ளுவரை நான் நினைவுகூர விழைகிறேன். அவருடைய போதனைகள் அனைத்து மாணவர்களுக்கும் மிக முக்கியமானவை. அண்மையில், ரஷ்ய அதிபர் புதின் அவர்களிடம் திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் திருக்குறள் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது. ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வது மட்டும் போதாது, அதை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதும் மிக முக்கியம் என்று ஒரு புகழ்பெற்ற குறள் மூலம் திருவள்ளுவர் நமக்குக் கற்பிக்கிறார். இது மாணவர்களாகிய உங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த பாடமாகும்.

நண்பர்களே,

நீங்கள் அனைவரும் மகாகவி பாரதியாரின் படைப்புகளை விரிவாகப் படித்திருப்பீர்கள். அவரது வாழ்வில் காசி நகரமும் மிக முக்கியப் பங்காற்றியது. காசியின் சூழலில் நிறைந்திருந்த ஆன்மீக மற்றும் தேசிய விழிப்புணர்வு, அவரது சிந்தனையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

நண்பர்களே,

நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர். காசி மக்கள் மகாகவி பாரதியாரை இன்றும் நினைவுகூர்கிறார்கள். “அச்சமில்லை, அச்சமில்லை” என்ற அவரது வார்த்தைகள், துணிச்சலுடன் வாழ நம்மை ஊக்குவிக்கின்றன. எனவே, இங்கே கூடியிருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: எந்தவித அச்சமுமின்றி உங்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்களைச் செயல்படுத்திப் பாருங்கள். பெரிய கனவுகளைக் காணுங்கள். வித்தியாசமாகச் சிந்தியுங்கள். மேலும், துணிச்சல்மிக்கவர்களாகத் திகழுங்கள்.

நண்பர்களே,

இந்தியாவைப் பற்றிய எனது புரிதல், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நான் மேற்கொண்ட பயணங்கள், அங்கு நான் சந்தித்த மக்களிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990-களின் தொடக்கத்தில், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடைபெற்ற ஏக்தா யாத்திரையிலும் நான் பங்கேற்றேன். அந்தப் பயணத்தின்போதுதான் கிரிஜா அம்மாவை முதன்முதலில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  அன்றிலிருந்து எங்கள் தொடர்பு தொடர்கிறது.

நண்பர்களே,

எனது பயணங்கள், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்தன. தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் மீதான எனது அன்பும் அந்த அனுபவங்களிலிருந்தே உருவானது.

நண்பர்களே,

அதனால்தான், இந்தியாவை அறிந்துகொள்ளுமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் எங்கு சென்றாலும், தமிழ்ப் பண்பாட்டைத் தவறாமல் பின்பற்றுங்கள். தமிழ்க் கவிதைகள், கதைகள், பாரம்பரியங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களிலிருந்து மாறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுடன் நட்பு கொள்ளுங்கள். நீங்கள் உருவாக்கும் நட்புகளே நம் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துகின்றன.

நண்பர்களே,

இன்றைய புதிய தலைமுறையினர் தங்கள் கனவுகளை நனவாக்கிக்கொள்ள முன்னெப்போதும் இல்லாத வகையிலான வாய்ப்புகளைப் பெறுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்தக் கல்விச் சூழல் இன்று எவ்வாறு மாறி வருகிறது என்பதைப் பாருங்கள். 2014-ல் இந்தியாவில் சுமார் 750 பல்கலைக்கழகங்கள் இருந்தன. இன்று இந்த எண்ணிக்கை 1,300-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. கல்லூரிகளின் எண்ணிக்கையும் சுமார் 38,000-லிருந்து 52,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. சமீப காலமாக, நாட்டில் பல புதிய ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி மற்றும் எய்ம்ஸ் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

புதிய கல்விக் கொள்கை, இன்று, நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்தி வருகிறது. இந்தியக் கல்வி நிறுவனங்களுக்கான உலகளாவிய அங்கீகாரமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2015-ம் ஆண்டின் கியூஎஸ் தரவரிசையில், இந்தியாவின் 14 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போதைய தரவரிசையில் அந்த எண்ணிக்கை 52-ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்கள் உணர்த்தும் செய்தி: அதிக கல்வி நிறுவனங்கள், கூடுதல் தேர்வுகள், உங்களுக்கு அதிக வாய்ப்புகள்.

நண்பர்களே,

ஒவ்வொரு இளைஞரிடமும் வெவ்வேறு கனவுகளும் தனித்துவமான திறமைகளும் உள்ளன. உதாரணமாக, உங்களில் பலர் விளையாட்டைத் தங்கள் வாழ்க்கைத்தொழிலாக அமைத்துக்கொள்ள விரும்பலாம். எனவே, விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்குடன் மட்டும் நின்றுவிடாமல் இருப்பதை நாடு உறுதிசெய்து வருகிறது. அதனால்தான் இன்று இந்தியா முழுவதும் புதிய விளையாட்டு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இளம் விளையாட்டு வீரர்கள் சிறந்த பயிற்சியையும் ஆதரவையும் பெற்று வருகின்றனர். மேலும், சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவின் மதிப்பும் உயர்ந்து வருகிறது.

நண்பர்களே,

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா தயாராகி வருகிறது. அதேவேளையில், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கனவுடனும்  நாம் முன்னேறிச் செல்கிறோம். வரும் ஆண்டுகளில் இந்தியாவில் முக்கிய உலகளாவிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது, நமது இளைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான களமும் வாய்ப்பும் கிடைக்கும். எனவே, இந்திய இளைஞர்களிடம் இப்போது அதற்கான களமும், திறனும், ஆதரவும் உள்ளன. அதாவது, எல்லையற்ற வாய்ப்புகள் உள்ளன. விளையாட்டுத் துறையிலும் உங்கள் தலைமுறை இந்தியாவை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நண்பர்களே,

இன்று உங்கள் அனைவரிடையேயும் இருந்து உங்கள் கனவுகளை உணர்ந்த பிறகு, எனது நம்பிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது. இந்தியாவின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். அந்த எதிர்காலத்தின் மிகப்பெரிய நாயகர்கள் நீங்கள்தான். உங்கள் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்கள் தன்னம்பிக்கை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்கள் ஆற்றல் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, இன்று உங்கள் அனைவருடனும் இணைந்து சில முக்கிய உறுதிமொழிகளை மீண்டும் கூற விரும்புகிறேன். நான் சொல்வதைத் தொடர்ந்து நீங்களும் சொல்ல வேண்டும்: “நாம் அதைச் செய்வோம்!” இவ்வாறு சொல்வீர்களா?

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைதல் – நாம் அதைச் செய்வோம்!

என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்: நாம் அதைச் செய்வோம்!

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைதல்- நாம் அதைச் செய்வோம்!

உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்தல் – நாம் அதைச் செய்வோம்!

தற்சார்பு இந்தியா – நாம் அதைச் செய்வோம்!

உலகளாவிய உற்பத்தி மையம் – நாம் அதைச் செய்வோம்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துதல் – நாம் அதைச் செய்வோம்!

நிலவில் ஒரு இந்தியர் – நாம் அதைச் செய்வோம்!

ஆம், நாம் அதைச் செய்வோம்! நாம் அதைச் செய்வோம்!

வளர்ச்சியடைந்த தமிழ்நாடு – நாம் அதைச் செய்வோம்!

வளர்ச்சியடைந்த தமிழ்நாடு – நாம் அதைச் செய்வோம்!

வளர்ச்சியடைந்த இந்தியா – நாம் அதைச் செய்வோம்!

மிக்க நன்றி. வணக்கம்

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார். 

***

(Release ID: 2321998)

TV/BK/GS