Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெர்மனியில் நடைபெற்ற வர்த்தகர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை (மே 30, 2017)

ஜெர்மனியில் நடைபெற்ற வர்த்தகர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை (மே 30, 2017)


மேதகு டாக்டர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்களே,

உலக வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களே,

மகளிர் மற்றும் ஆண்களே!

உங்கள் அனைவரையும் சந்திப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மெர்க்கல் போன்ற தெளிவான ஞானம் பெற்றவர்கள் முன்னிலையில் உங்களிடம் பேசுவது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையில், அவரை சந்திப்பதற்கான எந்த வாய்ப்பையும் நான் தவறவிடுவதில்லை. குறிப்பாக, ஏப்ரல் 2015-ல் நடைபெற்ற ஹனோவர் கண்காட்சியை பார்வையிட வந்தபோது, அவரை நான் சந்தித்துப் பேசியதை நினைவுகூர்கிறேன். அந்தக் கண்காட்சியை நடத்திய கூட்டு நாடாக இந்தியா இருந்தது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2015-ல் இந்தியாவுக்கு பிரதமர் மெர்க்கல் பயணம் மேற்கொண்டார். நாங்கள் இருவரும் இணைந்து, ஜெர்மனி மற்றும் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். மீண்டும் இன்று, இந்த அரங்கில் அதிக அளவில் சக்தி மற்றும் ஆர்வம் மிகுந்து காணப்படுவதை நான் காண்கிறேன். இங்கு ஏராளமான இந்திய தலைமை செயல் அதிகாரிகளும் கூடியிருப்பதை காண்கிறேன்.

நண்பர்களே!

இருதரப்பு அளவிலும், சர்வதேச சூழ்நிலையிலும், இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடுகளில் ஒன்றாக ஜெர்மனி உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில், ஜெர்மன் நிறுவனங்களின் பங்களிப்பை பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல, ஜெர்மனியிலும் இந்திய நிறுவனங்கள் தங்களது பங்களிப்பதை செய்வதைப் பார்ப்பது இதயத்துக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாடுகளில் 7-வது இடத்தில் ஜெர்மனி இடம்பிடித்துள்ளது. ஜெர்மனியிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் இந்தியாவின் மிகப்பெரும் துறைகளாக பொறியியல், ரசாயனம் மற்றும் சேவைத் துறைகள் உள்ளன. இந்தியாவில் தற்போது இந்தியா-ஜெர்மனி இடையேயான 600 கூட்டுத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம், சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், இந்தியா-ஜெர்மனி பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நமது பொருளாதார ஒத்துழைப்பானது, இன்னும் முழுத் திறனையும் பயன்படுத்தவில்லை. இதனை அதிகரிப்பதற்காக, நாங்கள், ஜெர்மனி நிறுவனங்களை இந்தியாவுக்கு திறந்த கைகளுடன் வரவேற்கத் தயாராக உள்ளோம். ஜெர்மனி நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, விரைவான செயல்பாட்டு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறோம். இந்த வழிமுறையின் மூலம், ஏராளமான விவகாரங்களுக்கு ஏற்கனவே தீர்வுகாணப்பட்டுள்ளது. இதனை நாங்கள் மனப்பூர்வமாக செய்து வருகிறோம். ஏனெனில், ஜெர்மனியுடனான நட்புறவுக்கு நாங்கள் அதிக அளவில் மதிப்பளிக்கிறோம்.

நண்பர்களே!

இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்றும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவில் உற்பத்திக்காக சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பு ஏற்கனவே உள்ளது. இந்தியாவில் கீழ்க்கண்ட வசதிகள் ஏற்கனவே உள்ளன:

• சர்வதேச அளவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்வதற்கான சுற்றுச்சூழல் அமைப்பு

• அறிவுப் புலமை மற்றும் சக்தியுடன் கூடிய திறன்பெற்ற வல்லுநர்கள் அதிக அளவில் உள்ளனர்

• மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதால், உள்நாட்டு சந்தையில் வளர்ச்சிக்கான மேலும் வாய்ப்புகள் உள்ளன.

• உலக அளவில் மிகவும் தாராளமான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது

• தொழில் செய்வதற்கான சூழலை மேலும் எளிதாக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்த பலங்களைக் கொண்டிருப்பதால், உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் 6-வது இடத்தை இந்தியா பிடித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாட்டு அமைப்பு (UNIDO) தெரிவித்துள்ளது. இதனை மேலும் சிறப்பாக்க, பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற நமது முயற்சியின் மூலம், இந்தியாவை சர்வதேச இணைப்பில் மிகப்பெரும் நாடாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், சமூகத்தில் செல்வந்தர்களுக்கும், அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதே எங்களது முக்கிய இலக்கு. இந்தியாவில் தயாரிப்போம் முயற்சி, ஏற்கனவே வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம் முயற்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் ஜெர்மனி தனது பங்களிப்பை செய்து வருகிறது. குறிப்பாக, ஹனோவர் கண்காட்சியை நடத்தும் கூட்டாளி நாடாக இந்தியா பங்கேற்றது, இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்புக்கு மிகப்பெரும் ஊக்குவிப்பை அளித்தது. ஹனோவர் நிகழ்ச்சியின்போது, ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான துறைகள் குறித்து பரஸ்பரம் கண்டறியப்பட்டது. இதில், உற்பத்தி, திறன் மேம்பாடு, ரயில்வே, ஆறுகளை தூய்மையாக்குதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். இதனோடு, செப்டம்பர் 2015 முதல், பாதுகாப்பு சந்தை நுழைவு ஆதரவுத் திட்டத்தை நாம் செயல்படுத்தி வருகிறோம். இதனை MIIM (Make in India Mittelstand) என்று அழைக்கிறோம். இந்திய சந்தையில் ஜெர்மனியைச் சேர்ந்த மிடில்ஸ்டேன்ட் நிறுவனங்கள் நுழைவதற்கு உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

MIIM திட்டமானது, பல்வேறு வகையான தொழில் ஆதரவு சேவைகளை (business support Services) வழங்கி வருகிறது. இந்த முயற்சியின் மூலம், இந்தியாவில் முதலீடு செய்வதில் ஜெர்மனி நிறுவனங்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்த நடவடிக்கையால், குறுகிய காலத்தில் கீழ்க்கண்ட பலன்கள் கிடைத்துள்ளன:

• இந்தத் திட்டத்தில் சேர 83 நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

• அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக 73 நிறுவனங்கள் பதிவுசெய்துள்ளன.

• இந்தியாவில் முதலீடு செய்வதில் 47 நிறுவனங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இந்தியா-ஜெர்மனி இடையே செயல்படுத்தப்படும் மற்றொரு மற்றும் மிகவும் வெற்றிபெற்ற திட்டம், இந்தியா-ஜெர்மனி மேலாளர்கள் பயிற்சி திட்டம். தொழில் துறை பிரதிநிதிகள், குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அதிநவீன பயிற்சி அளிப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பலன்களைப் பார்ப்போம்.

• முதலீடுகள் அதிகரிப்பு, புதிய கூட்டுத் திட்டங்கள் உருவாக்கம், இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகர்களுக்குள் தொடர்பு அதிகரிப்பு

• இதுவரை 500-க்கும் மேற்பட்ட இந்திய பிரதிநிதிகள் பலனடைந்துள்ளனர்.

இதனோடு, ஏற்கனவே நல்ல சூழல் நிலவிவருகிறது. இதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

• போஷ் (Bosch), பி.ஏ.எஸ்.எஃப்., எஸ்.ஏ.பி. ஆகிய நிறுவனங்கள், இந்தியாவுக்கு என தனிப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தொடங்கியுள்ளன.

• மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், தனது இரண்டாவது உற்பத்தி மையத்தை சக்கன் பகுதியில் ஜூலை 2015-ல் தொடங்கியுள்ளது. இதன்மூலம், உற்பத்தித் திறன் இரண்டு மடங்காக அதாவது ஆண்டுக்கு 20 ஆயிரம் யூனிட்டுகளாக அதிகரிக்கும்.

நமது முயற்சிகளுக்காக, உலக அளவில் சிறப்பான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். அதில், சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.

• உலக அளவில் பொருளாதார வல்லமை கொண்ட நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் நீடிக்கிறது.

• கடந்த 3 ஆண்டுகளாக 7%-க்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியுடன், அதிவேகமாக வளரும் மிகப்பெரும் நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது.

• உலக பொருளாதார கூட்டமைப்பின் (World Economic Forum) சர்வதேச போட்டி குறியீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் 32 இடங்கள் முன்னேறியுள்ளோம். இது வேறு எந்த நாட்டையும் விட மிக உயர்ந்தபட்சமாகும்.

• உலக வங்கியின் 2016-ம் ஆண்டுக்கான தளவாடங்கள் செயல்பாடுகள் குறியீட்டில் இந்தியா 19 இடங்கள் முன்னேறியுள்ளது.

• உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) 2016-ம் ஆண்டுக்கான உலக புத்தாக்க குறியீட்டில் நாம் 16 இடங்கள் முன்னேறியுள்ளோம்.

• அந்நிய நேரடி முதலீட்டில் சிறந்த 10 நாடுகள் குறித்து வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐநா அமைப்பு (UNCTAD) வெளியிட்ட பட்டியலில் நாம் மூன்றாவது இடத்தில் உள்ளோம்.

இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. அரசைக் குறைத்து ஆளுமையை அதிகரிப்பதே எங்களது நோக்கம். இதற்கு சில உதாரணங்களைக் கூற நான் விரும்புகிறேன்:

• டிஜிட்டல் பொருளாதாரமாக மாறுவதற்கு மிகவும் வேகமாக பணியாற்றி வருகிறோம்.

• இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகவும் வரலாற்றுப்பூர்வமான நடவடிக்கைகளில் ஒன்று ஜி.எஸ்.டி. இது அடுத்த மாதம் அமல்படுத்தப்பட உள்ளது.

• கடந்த இரண்டு ஆண்டுகளில், தனிநபர் அடிப்படையிலும், தொழில் நிறுவனங்கள் அடிப்படையிலும் குறைந்த வரிவிதிப்பு முறைக்கு மாறியுள்ளோம்.

• தொழில் வரியை 30%-லிருந்து 25%-ஆகக் குறைத்துள்ளோம். குறிப்பாக புதிய முதலீடுகள் மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு.
• திவாலாவது, கடனை செலுத்த முடியாதது மற்றும் ஐபிஆர், சமரசம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக புதிய சட்டங்கள் மற்றும் அமைப்புகளை தற்போது செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளோம்.

• தொழில் செய்வதை எளிதாக்குவதற்காக 7,000-க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளோம்.
• வெள்ளை தொழில் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத 36 வகையான நிறுவனங்களை, சுற்றுச்சூழல் அனுமதிபெறுவதை கட்டாயமாக்கும் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளோம்.

• இதேபோல, பாதுகாப்பு பட்டியலிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன.

• தொழில் நிறுவனங்கள் பெறும் உரிமங்களின் செல்லத்தக்க கால அளவை 15 ஆண்டுகள் வரை நீட்டித்துள்ளோம்.

• 19 துறைமுகங்கள் மற்றும் 17 விமான சரக்கு முனையங்களில் சுங்க அனுமதியானது 24 மணிநேரமும் வழங்கப்படுகிறது.

• நிறுவனங்களை அமைக்கவும், DIN, PAN, TAN, CIN ஆகியவற்றைப் பெறுவதும் ஒரே நாளில் முடிகிறது.

• 15 நாட்களுக்குள் மின்சார இணைப்பு வழங்கப்படுகிறது.

• உலக வங்கியின் “மின்சாரம் பெறுவதற்கான” அளவீட்டில் இந்தியா தற்போது 111 இடங்கள் முன்னேறியுள்ளது.

மேற்கண்ட உதாரணங்கள், மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான சீர்திருத்தங்களுடன் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டவை ஆகும். மத்திய அரசுடன் இணைந்து மாநிலங்களும் அந்த சீர்திருத்தங்களைச் செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதற்கு சில உதாரணங்களை நான் தருகிறேன்:

• இங்கு நான் சில மாநிலங்கள் குறித்து குறிப்பிடுகிறேன். எனினும், போட்டி நிறைந்த சூழலில், சீர்திருத்த நடவடிக்கைகள், அனைத்து மாநிலங்களுக்கும் வேகமாக பரவிவருகின்றன.

• மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களில்

• பணம் செலுத்தவும், ஒப்புதல் அளிக்கவும் 16 மாநிலங்களில் 100% அளவுக்கு ஒற்றைச்சாளர முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

• வருமானவரி கணக்குகளை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதை 13 மாநிலங்கள் 100% அமல்படுத்தியுள்ளன.

• 13 மாநிலங்களில் தானியங்கி ஆன்லைன் கட்டுமான திட்ட ஒப்புதல் வழங்கப்படுகிறது.

• வர்த்தக பிரச்சினைகளுக்கு மின்னணு முறையில் புகார் தெரிவிக்கும் வசதி, 11 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

• 13 மாநிலங்களில் மாவட்ட அளவில் சிறப்புவாய்ந்த வணிக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே!

தற்போது, உலக அளவில் மிகவும் தாராள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 90 சதவீதத்துக்கும் அதிகமான அந்நிய முதலீடுகள், தானியங்கி வழியிலேயே வருகின்றன. அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களை ஆய்வுசெய்வதற்காக 1990-களில் அமைக்கப்பட்ட அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தை கலைத்து விடுவது என கடந்த வாரத்தில் முறைப்படி முடிவுசெய்துள்ளோம். இந்தியப் பொருளாதாரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். இந்த செயல்பாடுகள் மூலம், நமது அந்நிய நேரடி முதலீடு குறித்த பார்வைக்கு, பல்வேறு சர்வதேச மதிப்பீட்டு அமைப்புகளும் உயர்ந்த மதிப்பீட்டை அளித்துள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து, சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. இது 2016-17-ம் ஆண்டில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

நண்பர்களே!

இந்தியா ஒரு மிகப் பெரும் நாடு. வளர்ச்சி என்று வரும்போது, எதுவுமே போதாது. நமக்கு ஏராளமான கனவுகள் உள்ளன. இந்தக் கனவுகள் மிகப்பெரியவை. ஆனால், குறுகிய காலமே உள்ளது. மேலும், இது உங்களுக்கான வாய்ப்புகள்.

இந்த வாய்ப்புகள் என்பது, லட்சக்கணக்கான வீடுகளைக் கட்டுவது முதல் நூற்றுக்கணக்கான பொலிவுறு நகரங்களை உருவாக்குவது வரை; ரயில்வே கட்டமைப்புகள் மற்றும் நிலையங்களை நவீனப்படுத்துவது முதல் அதிகவேக ரயில் முனையங்களை அமைப்பது வரை; புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்குவது முதல் மின் பகிர்மான கட்டமைப்புகளை கட்டுவது வரை உள்ளன. இதற்கும் மேலாக, இதுவரை இல்லாத வகையில், தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், மக்களுக்கான நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் திறன் பயிற்சி மையங்கள் ஆகியவற்றையும் அமைக்க வேண்டியுள்ளது.

டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா போன்ற நமது பிரச்சாரங்கள் மூலம், மக்களை மேம்பாடு அடையச் செய்து, இதற்கான திறன் நம்மிடம் இருப்பதை மக்களை உணரச் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இளைஞர்களின் சக்தியை முழுமையாக பயன்படுத்துவதற்காக இந்தியாவில் தொடங்குவோம், இந்தியாவை நிலைநிறுத்துவோம் (Start up India and Stand up India) பிரச்சாரங்களை தொடங்கியுள்ளோம்.

பிரதமர் மெர்க்கல் மற்றும் நண்பர்களே!

ஏப்ரல் 2015-ல் நான் பேசியபோது, நமது சீர்திருத்த நடவடிக்கைகள் என்பது வெறும் தொடக்கமாக இருந்தது. தற்போது, அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முடித்துவிட்டோம் என்று என்னால் உறுதியாக கூற முடியும். இருந்தாலும், இன்னும் அதிக அளவில் வேகமாகவும், சிறப்பான முறையிலும் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளோம். இந்த சீர்திருத்தங்களை புரிந்துகொள்ளச் செய்யவும், செயல்படுத்தவும் அமைப்புசார்ந்த கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று நான் வலிமையாக நம்புகிறேன். நமது இரு நாடுகளின் பொருளாதார திறனை சமன் செய்ய இது அவசியமானது. இறுதியாக, அதிக அளவில் ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

நமது பாதை, விருப்பம், கனவு ஆகியவை அதிக அளவில் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இதுவரை இல்லாத வகையில், வர்த்தகத்துக்கு மிக அதிக அளவில் இந்தியா தயாராக உள்ளது. நாங்கள் பயணத்தை தொடங்கும் நிலையில் உள்ளோம். மேலும், எங்களது ஜனநாயக மதிப்பு மற்றும் எச்சரிக்கையான நீதித்துறை அமைப்பு ஆகியவை உங்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பை உறுதிசெய்யும்.

உங்களது முயற்சிகளை வெற்றிபெறச் செய்வதற்காக உங்களுடன் நாங்கள் கைகோர்த்து செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறேன்.
நன்றி!

***