பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 5.12.2016ம் தேதி காலமான செல்வி ஜெ. ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்தது.
அவரது நினைவாக அமைச்சரவை இரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. அதன் விவரம் வருமாறு:
“சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் 5.12.2016ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் சோகமான மறைவு குறித்து மத்திய அமைச்சரவை ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவின் மூலம் நாடு “அம்மா” என்று அன்போடு அழைக்கப்படும் மூத்த, மரியாதைக்குரிய தலைவரை இழந்துவிட்டது.
மைசூரில் 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பிறந்த செல்வி ஜெ. ஜெயலலிதா பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் சென்னையில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் சர்ச் பார்க் பள்ளியிலும் கல்வி பயின்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். அத்துடன், பரதநாட்டியம், மோகினியாட்டம், கதக், மணிப்புரி ஆகிய சாஸ்திரீய நாட்டியங்களிலும் தனது முத்திரையைப் பதித்தார். 1972ம் ஆண்டு அவர் தமிழ்நாடு அரசின் “கலைமாமணி” விருதினையும் பெற்றார்.
செல்வி ஜெ. ஜெயலலிதா 1982ம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க.கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து அரசியலில் நுழைந்தார். 1984ம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார். 1984ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். 1989ம் ஆண்டில் தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டட முதல் பெண்ணாகத் திகழ்ந்தார். 1991ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக அவர் பதவியேற்றார். 1991ம் ஆண்டு ஜூன் தொடங்கி, 1996ம் ஆண்டு மே வரையிலும், 2001ம் ஆண்டு மே முதல் அதே ஆண்டு செப்டம்பர் வரையிலும், 2002ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2006ம் ஆண்டு மே வரையிலும், 2011ம் ஆண்டு மே மாதம் முதல் 2014ம் ஆண்டு செப்டம்பர் வரையிலும், 2015ம் ஆண்டு முதல் 5.12.2016ம் தேதி வரையிலும் தமிழகத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழக மக்கள் தங்களது செல்வாக்கு மிக்க தலைவரை இழந்துவிட்டனர். மத்திய அரசின் சார்பிலும் ஒட்டுமொத்த தேசத்தின் சார்பிலும் மத்திய அமைச்சரவைக் குழு நெஞ்சார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.