பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை மின்னணுத் துறையில் முதலீட்டிற்கு மேலும் ஊக்கமளிக்கவும், 2020ஆம் ஆண்டிற்குள் மின்னணுத் துறையில் ‘இறக்குமதியே இல்லாத’ நிலை என்ற இலக்கை நோக்கிச் செல்லவும் வழியேற்படுத்த திருத்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை முறையில் திருத்தம் கொண்டு வருவதற்கான ஒப்புதலை வழங்கியது.
இந்தியாவில் மின்னணு முறையிலான வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் முதலீட்டை விரைவுபடுத்துவது மட்டுமின்றி, இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றுக்கும் இந்தத் திருத்தம் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை முறையின் கீழ் ஏற்கனவே பெறப்பட்டுள்ள திட்டங்கள் (நேரடியாகவும், மறைமுகமாகவும்) 10 லட்சம் வரையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் பெற்றவையாகும்.
இந்தக் கொள்கை அனைத்து மாநிலங்களையும், மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகும். இவை மின்னணு ரீதியான உற்பத்தித் துறையில் முதலீடுகளைக் கவர்வதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 243 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் ரூ. 17,997 கோடி மதிப்புள்ள முதலீட்டை உள்ளடக்கிய 75 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின் முக்கிய அம்சங்களாவன:
அ) 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அல்லது உறுதியளிக்கப்பட்ட ஊக்கத்தொகை அளவான ரூ. 10,000 கோடி என்ற அளவை எட்டும் வரையில் இதில் எது முந்தைய காலப்பகுதியோ அதுவரையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்படும். உறுதியளிக்கப்பட்ட ஊக்கத்தொகை அளவான ரூ. 10,000 கோடியை நெருங்கியதும், மேலும் நிதி ரீதியான உறுதியளிப்பதை உறுதிப்படுத்த பரிசீலனை மேற்கொள்ளப்படும்.
ஆ) புதிய அனுமதிகளைப் பொறுத்தவரையில், ஊக்கத்தொகை அத்திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்தே கிடைக்குமே தவிர இதற்கான விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து அல்ல.
இ) திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் செய்யப்படும் முதலீடுகளுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஈ) முழுமையான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் தகுதியுடைய விண்ணப்பங்கள் மீது ஒப்புதல் வழங்கப்படும்.
உ) இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறும் நிறுவனம் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு வர்த்தகரீதியான உற்பத்தியை தொடர்வதாக உறுதிமொழி வழங்க வேண்டும்.
ஊ) இத்திட்டத்திற்கான ஒப்புதலை வழங்க பரிந்துரை செய்யும் மதிப்பீட்டுக் குழுவிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் செயலாளர் தலைமை வகிப்பார்.
எ) ரூ. 6850 கோடி (1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவிற்கும் அதிகமாக முதலீடு செய்யவிருக்கும் பெரிய திட்டங்களைப் பொறுத்தவரையில், நிதி ஆயோக்-இன் தலைமை செயல் அலுவலர், நிதி அமைச்சகத்தின் செலவுத் துறைச் செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோரை உள்ளடக்கி தனி குழு ஒன்று அமைச்சரவை செயலாளரின் தலைமையில் செயல்படும்.
பின்னணி:
மின்னணு முறையிலான வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் பெருமளவில் உற்பத்தியை வளர்த்தெடுக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையை வழங்குவதற்கென திருத்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் ஒன்றுக்கு 2012 ஜூலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இத்திட்டம் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மூலதனச் செலவில் 20 சதவீதமும், அதல்லாத இதர பகுதிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மூலதனச் செலவில் 25 சதவீதமும் ஊக்கத்தொகையாக வழங்குவதாக அமைந்திருந்தது. இதை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு மற்றும் நடைமுறையை எளிமைப்படுத்துவது ஆகியவற்றுக்காக 2015 ஆகஸ்ட் மாதத்தில் இத்திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. மின்னணு முறையிலான வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் ரூ. 1,26,838 கோடி அளவிற்கான முதலீட்டை இத்திட்டம் கவர்ந்துள்ளது. இதில் சுமார் ரூ. 17,997 கோடி முதலீடுகளுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மின்னணுத் துறையில் முதலீடு செய்வதற்கான சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த இந்தத் திருத்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தால் முடிந்துள்ளது.