Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லியில் சுமார் ரூ. 33,500 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

தில்லியில் சுமார்   ரூ. 33,500 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் சுமார் 33,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று (08.03.2026) தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இன்று, தில்லியின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்க நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம் என்று கூறினார்.

இந்த திட்டங்களின் நோக்கம் விரிவானது எனவும், மெட்ரோ கட்டமைப்பின் வளர்ச்சியிலிருந்து ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கான நவீன குடியிருப்பு வளாகங்களை நிறுவுதல் வரை பல திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தில்லி மக்கள், புதிய நம்பிக்கையுடனும், புதிய உறுதியுடனும், ஒரு வருடத்திற்கு முன்பு இரட்டை இன்ஜின் அரசை அமைக்க வகை செய்ததாக அவர் குறிப்பிட்டார். அதன் விளைவு இன்று இந்த வளர்ச்சிப் பணிகளில் தெரிவதாக திரு நரேந்திர மோடி கூறினார்.

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் சூழலில், பெண்கள் பெருமளவில் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதைப் பாராட்டிய பிரதமர், அரசின் வெற்றிகரமான முயற்சிகளால் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சியை பெண்கள் இயக்குவதாக எடுத்துரைத்தார். அரசியல், நிர்வாகம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை என எதுவாக இருந்தாலும், இந்தியாவின் மகளிர் சக்தி ஒவ்வொரு துறையிலும் புதிய ஆற்றலுடன் முன்னேறி வருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

இந்திய ஜனநாயகத்தின் உலகளாவிய அடையாளம், ஆற்றல் ஆகியவற்றின் சின்னமாக தில்லி உள்ளது என்பதை எடுத்துரைத்த பிரதமர், நமோ பாரத் ரயில், மெட்ரோ கட்டமைப்பின் விரிவாக்கம் போன்ற தலைநகரின் உள்கட்டமைப்புகள், இந்தியாவின் நம்பிக்கையை உலகிற்கு வெளிப்படுத்தும் என்று குறிப்பிட்டார். தில்லி எந்த அளவு நவீனமாக சிறப்பாக இணைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு இந்தியாவின் தன்னம்பிக்கை உலகிற்குத் தெரியும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இரட்டை இன்ஜின் நிர்வாக மாதிரியின் கீழ், தேசிய தலைநகரில் உள்ள பேருந்து சேவைகள் முறையாக மேம்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். மத்திய அரசால் வழங்கப்பட்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் கூடுதலாக 1,800 புதிய பேருந்துகள் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தேசிய தலைநகரமான தில்லி எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை நிவர்த்தி செய்வதற்கு அரசு தற்போது ஒரு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். யமுனை நதியைப் புத்துயிர் பெறச் செய்வதற்கான ஒரு பெரிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது எனவும் அதன் தூய்மையை உறுதி செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களில் ஏற்கனவே பணிகள் நடந்து வருகின்றன என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

தலைநகரில் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை பிரதமர் குறிப்பிட்டார். குறிப்பாக கடந்த ஆண்டு பல ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் நிறுவப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். தில்லியில் ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் இருவரும் இப்போது இலவச மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். செயல்திறனின் புதிய சகாப்தத்தை எடுத்துக்காட்டும் வகையில், தற்போதைய வளர்ச்சி மாதிரி உடனடி நடவடிக்கையிலும் உறுதியான முடிவுகளிலும் கவனம் செலுத்துகிறது என அவர் கூறினார். அனைத்து திட்டங்களும், திட்டமிடலில் இருந்து அடிமட்ட நிலை வரை செயல்படுத்தல் கட்டத்துக்கு விரைவாக மாறுவது உறுதி செய்யப்படுகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

இந்த நிகழ்விற்கு முன்னதாக சரோஜினி நகருக்குத் தமது வருகையைப் பற்றி நினைவுகூர்ந்த பிரதமர், அரசு ஊழியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன குடியிருப்பு வளாகங்களைத் திறந்து வைத்ததை எடுத்துரைத்தார். நாட்டின் தீர்மானங்களை நிறைவேற்ற அயராது உழைப்பவர்கள், பாதுகாப்பான, சுத்தமான, வசதியான வாழ்க்கை நிலைமைகளைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார். இதுவே இந்த புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு உந்து சக்தியாகும் என்று பிரதமர் கூறினார். இன்று பயனாளிகளிடம் ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த நவீன வீடுகள் நாட்டின் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் தமது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை, ஏழைக் குடும்பங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பயனடையும் வகையில், நலத்திட்டங்கள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டத்தின் தாக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். தில்லியில் மட்டும், கிட்டத்தட்ட 2 லட்சம் சாலையோர வியாபாரிகள் 350 கோடிக்கும் அதிகமான நிதி உதவியைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இதனால் வியாபாரிகள், அதிக வட்டிக்கு முறைசாரா கடன்களிலிருந்து விடுபட்டு, முறையான வங்கிச் சேவையை நோக்கிச் சென்றுள்ளனர் என்று அவர் கூறினார். நிதி உள்ளடக்கத்தில் ஒரு வரலாற்று மாற்றத்தைக் குறிக்கும் வகையில், ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த கடன் அட்டை வசதிகள், இப்போது சாலையோர வியாபாரிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு, அவர்களின் சிறு வணிகங்களை மேம்படுத்துகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். ஸ்வநிதி கடன் அட்டை ஏழைகளுக்கு சுயமரியாதை அளிக்கும் ஒரு புதிய அம்சமாக மாறி வருகிறது எனவும் ஒரு காலத்தில் பின் தங்கி இருந்தவர்கள் இப்போது நவீன நிதி அம்சங்களால் அதிகாரம் பெறுவது உறுதி செய்யப்படுகிறது என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

சர்வதேச மகளிர் தினம் குறித்துப் பேசிய அவர், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் திட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ள மைல்கல் சாதனையைப் பகிர்ந்து கொண்டார். சுய உதவிக்குழுக்கள் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இப்போது அதிகாரம் பெற்றுள்ளனர் என்பதை இது எடுத்துரைப்பதாக அவர் கூறினார். பெண்களுக்கு மூலதனம், வங்கி அமைப்புகள், சிறப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படுவதன் மூலம், அவர்கள் நிதி சுதந்திரத்தை அடையவும், கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அரசு உதவியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். நமது சகோதரிகளின் வெற்றி, மேலும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதற்கான புதிய தீர்மானத்தை ஊக்குவித்துள்ளது எனவும் நமது மகளிர் சக்தியின் ஆசீர்வாதத்துடன் இந்த இலக்கு அடையப்படும் என்று நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பாரம்பரிய சந்தால் பழங்குடி விழாவிற்குச் சென்றபோது, அவருக்கு மாநில அரசு அவமரியாதை செய்த்தாகக் கூறப்படும் புகார் குறித்துத் தமது வருத்தத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார்இதுபோன்ற அரசியல் இறுதியில் மாநில மக்களால் நிராகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தில்லி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் என்றும், தற்போது புதிய தன்னம்பிக்கையால் இது மாற்றத்தைக் காண்கிறது என்றும் விவரித்தார். தேசிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக அனைத்து மக்களும் கூட்டாக பாடுபட வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்களுக்காக மக்களுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, தில்லியில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் சிறந்த, வளமான வாழ்க்கையைப் பெறும் என்று கூறித் தமது உரையை நிறைவு செய்தார்.

***

(Release ID: 2236572)

TV/PLM/RJ