பி.எம்.இந்தியா
தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புப் பயிற்சிக் கல்லூரிக்கும், வங்க தேசம் டாக்கா தேசிய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரிக்கும் இடையில் ஆசிரியர்களி்ன் சேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக கையெழுத்தான உடன்பாட்டுக்கு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை உடனடி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உடன்பாட்டின் நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் வழக்கமான கல்வித் திட்டங்களைப் பகிர்ந்து கொள்வதும், நீடித்த வழிமுறைகளை நிலைநாட்டுவதும் ஆகும். அத்துடன் தேசப் பாதுகாப்பு, அபிவிருத்தி, ராஜீய உறவுகள் குறித்த ஆய்வுகள் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த உடன்பாடு வகை செய்யும்.
இரு நாடுகளுக்கும் இடையில் புவியியல், கலாசார நெருக்கம் இருப்பதால், பயங்கரவாதத்தை முறியடிப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்ள பொதுவான நடவடிக்கை தேவையாகிறது. எனவே, இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கும் இடையில் சிறந்த ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அவசியம். இந்நிலையில், ஆயுதப் படைகளின் திறன்களில் ஒத்திசைவுக்கு இந்தப் பாதுகாப்புக் கல்லூரிகளின் ஆசிரியர் பரிமாற்றம் பெரும் துணை புரியும். பொதுவான அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு சிறந்த முறையில் சமாளிக்கவும் கல்லூரி ஆசிரியர் பரிமாற்றம் உதவும்.
ராஜீய மற்றும் செயல்பாட்டு ஆய்வுகள் தொடர்பான ராணுவக் கல்வித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பை இந்த உடன்பாடு நிலைநிறுத்தும்.
***