Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மையே சேவை இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

தூய்மையே சேவை இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

தூய்மையே சேவை இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


 

நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்து வந்துள்ள தூய்மைக்காகப் பாடுபடும் “ஸ்வச்சாகிரஹிகள்” அனைவருக்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து வரவேற்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள், செப்டம்பர் 15 வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். இது வரலாற்று சிறப்புமிக்கது ஏன் என்றால், இந்தக் காலை நேரம் புதிய உறுதியையும், ஆர்வத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வந்துள்ளது. இன்று நீங்களும், நானும் 125 கோடி இந்தியர்களும் “தூய்மையே உண்மையான சேவை” என்ற தீர்மானத்தை வலியுறுத்துகிறோம். இன்று தொடங்கி மதிப்புக்குரிய பாபுஜியின் பிறந்தநாளான அக்டோபர் 2 வரை இந்தியாவைத் தூய்மையாகப் பராமரிக்க புதிய உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் நமது பங்களிப்பை செலுத்துவதற்கு நாம் அனைவரும் ‘உழைப்பு தானம்’ செய்வோம்.

மற்ற நாட்களில் வீடுகளை முற்றிலும் தூய்மையாக வைத்துக் கொள்ளாததை  நாம் கண்டிருப்போம். ஆனால், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தூய்மை செய்ய முயற்சி செய்கிறோம். அதேபோல், நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் தூய்மை செய்ய நாம் பாடுபடுவோம். இந்த நற்செயல், ஒவ்வொரு மாதமும் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நீடிக்க வேண்டும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட தூய்மைப் பிரச்சாரம் அல்லது இயக்கம் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பகுதியினரும், ஒவ்வொரு சமயத்தினரும், ஒவ்வொரு சாதியினரும், பல்வேறு வயதுடைய எனது நண்பர்களும் இந்தப் பேரியக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதை நான் பெருமையோடு கூறமுடியும். இந்த இயக்கத்தால் தொடப்படாத ஒரு கிராமமோ, தெருவோ, நகரோ இல்லை.

2014-ல் இந்தியாவின் தூய்மைத் தன்மை வெறும் 40 சதவீதமாக இருந்தது. உங்களின் கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாக அது 90 சதவீதத்திற்கும் அதிகமாகியுள்ளது. கடந்த 60 -65 ஆண்டுகளில் செய்ய முடியாத ஒன்றான பெரும்பகுதி தூய்மை என்பதை வெறும் நான்கு ஆண்டுகளில் செய்துவிடமுடியும் என்று ஒரு வேளை நாம் எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்கலாம். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 9 கோடி கழிப்பறைகள் கட்ட முடியும் என்று நம்மில் யாராவது நினைத்திருப்போமா? கடந்த நான்காண்டுகளில் சுமார் 4.5 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாறும் என்று நம்மில் யாராவது கற்பனை செய்து பார்த்திருப்போமா? கடந்த நான்காண்டுகளில் 450 மாவட்டங்களுக்கு மேல் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாறும் என்று நாம் நினைத்திருப்போமா? கடந்த நான்காண்டுகளில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாதவையாக மாறும் என்று நம்மில் யாராவது எண்ணியிருப்போமா?

இதுதான் இந்தியாவின், ஸ்வச்சாகிரஹிகளான இந்தியர்களின் பலமாகும். இவ்வளவு தூரம் மாற்றத்தை அரசால் மட்டுமே கொண்டு வந்திருக்க முடியாது. மக்கள் வாழ்க்கையில் சுகாதாரத்தையும், செல்வத்தையும் மேம்படுத்த தூய்மை என்பது முக்கியமான பங்களிப்பைச் செய்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு மதிப்பீட்டின்படி 3 லட்சம் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க தூய்மை குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. மற்றொரு ஆய்வின்படி, தூய்மை என்பது 30 சதவீத அளவிற்கு வயிற்றுப்போக்கு நோயைக் குறைத்துள்ளது.

சகோதர, சகோதரிகளே, கழிப்பறைகள் கட்டுவது மட்டுமே இந்தியாவின் தூய்மையை உறுதி செய்துவிடாது, கழிப்பறைகள், குப்பைத் தொட்டிகள், குப்பை அழிப்பு என்பது போன்ற நடவடிக்கைகள் வெறுமனே ஒரு வழிமுறைதான். தூய்மை என்பதை ஒரு குணாம்சமாக வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், தங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்வதற்கான குணாம்ச மாற்றத்திற்கு இது ஒரு யாகமாகும்.

தூய்மை இந்தியா இயக்கம் தொடர்பான உங்களின் அனுபவங்களைக் கேட்பதற்கு நான் முயற்சிகளை  செய்திருக்கிறேன். உங்களிடமிருந்து கற்றுக்கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்பு தானம் செய்வோம். நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பயணம் செய்வதற்கான வாய்ப்பை இன்று நாம் பெற்றிருக்கிறோம். இங்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் கூட நாம் பெற்றிருக்கிறோம்.

ஸ்வச்சாகிரஹிகளின் அர்ப்பணிப்பும், பங்களிப்பும், அனுபவமும், ஒத்துழைப்பும் மெச்சத்தக்கவை என்பதை எனது நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒருமுறை சொல்ல நான் விரும்புகிறேன். இந்த இயக்கத்தில் பங்கேற்க நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொரு நாளும் தங்களின் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கினார்கள். தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒட்டுமொத்த உலகத்தின் முன்னால் இந்த இயக்கத்தை 125 கோடி இந்தியர்களும் முன்னெடுத்துச் சென்ற விதத்தைச் சித்தரித்தார்கள்.

எதிர்காலத்தில் இந்த இயக்கம் பற்றி ஏதாவது படிக்கும்போது, அல்லது எழுதும்போது, அனைத்து ஸ்வச்சாகிரஹிகளின் பெயர்களும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். விடுதலைப் போராட்ட தியாகிகள் இன்று மதித்து கவுரவிக்கப்படுவதுபோல், உங்களின் பங்களிப்பும் அதே மதிப்போடும், கவுரவத்தோடும் நினைவுகூரப்படும் என்று நான் நம்புகிறேன். மதிப்புக்குரிய பாபுவின் உண்மையான வாரிசுகளாக நீங்கள் கருதப்படுவீர்கள். ஏனென்றால் தேசத்தின் கட்டுமானத்தில் போர் வீரர்களாகவும், ஏழை, எளிய மக்களைப் பாதுகாப்பவராகவும் விளங்கும் உங்களுக்கு, உலகத்தின் முன்னால் நாட்டின் பெருமிதத்தை நிறுவிய பெருமையும் சேரும். 125 கோடி இந்தியர்களின் பலம் தடையற்றது, எல்லையற்றது. நமது ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நமது நம்பிக்கை அதன் உச்சத்தில் உள்ளது. நமது முடிவுகள் செயல்பாட்டிற்கு தயாராக உள்ளன. நீங்கள் அனைவரும் உழைப்பு தானம் செய்ய தயாராக இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். ஏதாவது ஒரு இடத்தில் உங்களோடு உழைப்பு தானத்தில் நானும் இணைந்து கொள்ளும் வகையில் உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன்.

உங்களின் ஈடுபாட்டிற்காகவும், கடும் உழைப்பிற்காகவும், மீண்டும் எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான மனிதர்கள் அனைவரையும் வணங்குவதோடு  எனது உரையை நான் நிறைவு செய்கிறேன். மிக்க நன்றி.

                                *****