Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நகரத்தில் உள்ள குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நகரங்களில் உள்ள குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பதற்கான கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.

இந்தக் கொள்கையின்படி, குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பதற்காக ஒரு டன்னுக்கு ரூபாய் 1500 வரை ஊக்கத்தொகை அளிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை, இவ்வாறு தயாரிக்கப்படும் உரங்களின் விலையை குறைக்கும். குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் உரம் மண்ணுக்கு கார்பன் மற்றும் இதர சத்துக்களை வழங்குவதோடு, நகரங்களை தூய்மையாக வைத்திருக்கவும் உதவும். இவ்வாறு தயாரிக்கப்படும் உரங்களுக்கான சுற்றுச்சூழல் சான்று, சுற்றுச்சூழலுக்கு ஏதுவான ஒரு உரம் விவசாயிகளுக்கு கிடைக்க உதவும்.

குப்பைகளை ஒரு இடத்தில் கொட்டுவதற்கு பதிலாக, அவற்றை உரமாக மாற்றுவது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான மீத்தேன் போன்ற வாயுக்கள் உற்பத்தியாவதை தடுத்து, நிலத்தடி நீரும் சுற்றுச்சூழலும் மாசுபடுவதை இது தடுக்கும். நகரக் கழிவுகளில் இருந்து உருவாகும் குப்பை, நகர்ப்புரங்களில் வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.

உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், நகரக் குப்பைகளில் இருந்து உருவாகும் உரங்களை தங்களின் இதர உரங்களோடு சேர்த்து விற்பனை செய்யலாம். இந்நிறுவனங்கள், இந்த உரத்தை பயன்படுத்துவதற்காக கிராமங்களையும் தத்தெடுக்கலாம். அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தங்களின் தோட்டங்களுக்காக, இந்த உரத்தை பயன்படுத்தலாம்.

சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள், குப்பையிலிருந்து தயாராகும் உரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதர மாநிலங்களிலும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். இந்திய விவசாய ஆராய்ச்சி அமைப்பும், அதன் துணை அமைப்புகளும் இணைந்து இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். விவசாய பல்கலைக்கழகங்கள் மற்றும் விவசாய அமைப்புகள், குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் உரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயல வேண்டும். விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசாயிகளின் நலன் துறை, இதற்கான இலக்குகளை ஏற்படுத்தித் தரும்.

மத்திய உரத் துறை, மத்திய நகர்ப்புர வளர்ச்சித் துறை, மற்றும் விவசாயத் துறை இணைந்து, போதுமான குப்பை உரம் இருக்கும்படி, உர நிறுவனங்கள் மற்றும் குப்பை உரத் தயாரிப்பாளர்களிடையே இணைப்பை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக எழும் சிக்கல்களை தீர்க்கவும் அவற்றுக்கு அதிகாரம் உண்டு.

தொடக்க காலத்தில், நகரக் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் உரங்களை சந்தைப்படுத்த, தற்போது உள்ள உரத் தயாரிப்பு நிறுவனங்களின் உதவி நாடப்படும். நாளடைவில், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட குப்பை உரத் தயாரிப்பாளர்கள், மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், ஆகியவை இணைந்து உரத்துறையின் அனுமதியோடு, குப்பை உரத்தை சந்தைப்படுத்தும் பணிகளை செய்யலாம். எந்த நிறுவனம் உர விற்பனையை சந்தைப்படுத்துகிறதோ, அதன் மூலம் உதவிகள் வழங்கப்படும்.

*****