Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நியூயார்க் நகரில் தொடங்கிய ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக அமைப்பின் 70வது ஆண்டு விழாவில் வீடியோ வழியாக, பிரதமர் உரை.

நியூயார்க் நகரில் தொடங்கிய ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக அமைப்பின் 70வது ஆண்டு விழாவில் வீடியோ வழியாக, பிரதமர் உரை.


நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக அமைப்பின் (ஈகோசாக்) 70வது ஆண்டு விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வீடியோ வழியாக உரையாற்றினார்.

பிரதமர் ஆற்றிய உரை, பின்வருமாறு :

ஈகோசாக் அமைப்பின் தலைவர் அவர்களே, அவையோர்களே,

ஈகோசாக் அமைப்பின் 70வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் என்னை பேச அழைத்தமைக்காக ஈகோசாக் அமைப்பின் தலைவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில், ஐக்கிய நாடுகள் அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் அவர்களே, மேதகு அதிபர்களே, ஐக்கிய நாடுகள் அவை அமைப்பின் முக்கிய தூண்களில் ஒன்றாக ஈகோசாக் அமைப்பு விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு முக்கிய பிரிவாக ஈகோசாக் அமைப்பை உருவாக்கியது, ஐக்கிய நாடுகள் அமைப்பை உருவாக்கிய நமது முன்னோர்களின் தீர்க்கதரிசனம் தெரிகிறது.

அமைதியான மற்றும் வளமான உலகத்தை உருவாக்க, மனித நிலையை மேம்படுத்தி, வறுமையையும் பசியையும் ஒழித்து, சமூக பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை நாம் விரைந்து உருவாக்க வேண்டும்.

மேதகு தலைவர்களே,

இந்த அமைப்பின் தொடக்கத்திலேயே இந்தியா இதில் பெருமையோடு பங்கேற்றிருக்கிறது. இந்தியாவின் முக்கிய குடிமகன்களில் ஒருவரான ஆற்காடு ராமசாமி முதலியார், ஈகோசாக் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். 1946ல் இந்த அமைப்பின் தொடக்க விழாவில் அவர் இவ்வமைப்பின் தலைவராக கலந்து கொண்டார்.

அவரது தொடக்க உரையில், ராமசாமி அவர்கள், வரக்கூடிய ஆண்டுகளில் ஈகோசாக் அமைப்பின் பங்கு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்தார்.

அவர் பங்கு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்தார்.

அவர் பேசுகையில் “இந்த அமைப்பின் செயல்பாடுகளிலும், பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் முறையிலுமே, ஒரு பாதுகாப்பான மற்றும் அமைதியான உலகத்துக்கான எதிர்காலம் அடங்கியிருக்கிறது” என்று கூறினார். ஈகோசாக் அமைப்பு மனித குலத்தின் நிலையை மேம்படுத்தி, அனைவருக்கும் கவுரவமான வாழ்க்கையை உறுதி செய்வதில்தான், ஐக்கிய நாடுகள் அவையின் நோக்கமே அடங்கியிருக்கிறது.

இந்த அமைப்பு உருவாகி 70 ஆண்டுகள் கடந்து விட்டது. 21ம் நூற்றாண்டில் நாம் 15 ஆண்டுகளை கடந்து விட்டோம். ஆனால், ஈகோசாக் அமைப்பு அதை உருவாக்கிய முன்னோர்களின் நோக்கங்களை அடைந்து விட்டதா ?

இந்த 70 ஆண்டுகளில் நாம் எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், வறுமை ஒழிப்பு 20ம் நூற்றாண்டில் நிறைவேறாத ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் நிறைவேறாத நோக்கமாக இருந்து வருகிறது.

மேதகு அதிபர்களே,

ஈகோசாக் அமைப்பின் 70வது ஆண்டு விழா, இதை விட சிறப்பான தருணத்தில் வந்திருக்க முடியாது. சர்வதேச சமூகம் தற்போதுதான் வளர்ச்சிக்கான ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. 2030க்கான நிலையான வளர்ச்சித் திட்டம், ஐக்கிய நாடுகள் அவை தனது பங்கை மேம்படுத்திக் கொள்ளவும், இன்னும் சிறப்பாக செயல்படவும் வழி செய்துள்ளது. இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்வதும் இந்த சவாலை எதிர்கொள்வதும், ஈகோசாக் அமைப்பின் பொறுப்பாகும்.

2030 திட்டம், வளரும் நாடுகள் சந்திக்கும் சவால்களுக்கான அளவுகோல். வளரும் நாடுகளாகிய நாம், நமது நாட்டு மக்களின் வறுமையையும் பசியையும் ஒழித்து, நமது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் மட்டுமல்ல, அதை இந்த பூமிக்கு ஏற்ற வகையிலும், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையிலும் செய்ய வேண்டியது நமது கடமை.

வளர்ந்த நாடுகள், தங்களது பொருளாதாரத்தை ஒரு நிலையான பாதைக்கு மாற்றி, நிலையான வாழ்க்கை முறைக்கு மாறி, வளரும் நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் செய்ய வேண்டிய கடமையில் இருக்கின்றன. அதே நேரத்தில் நம்மிடத்தில் ஏராளமான வளங்கள் உள்ளன. இன்றைய தொழில்நுட்பம் கடந்த காலத்தில் நினைத்துப் பார்த்திர முடியாதவற்றை செய்ய வழி செய்துள்ளது. இருக்கும் வளங்களை வைத்து, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நம்முடைய சிக்கல்களை தீர்ப்பதே நம் முன் உள்ள சவால்.

இந்த அமைப்பை ஸ்திரப்படுத்தி, செயல்படத்தக்க வகையிலும், கொள்கை சார்ந்த வகையிலும், மக்களின் தேவைக்கேற்ற வகையிலும் மாற்ற இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அவ்வாறு செய்கையில், ஈகோசாக் அமைப்பின் அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டியது, ஏழை மக்களின் நலனே. அல்லது இந்தியாவின் சிந்தனையின்படி, “அந்த்யோதயா”.

உலகின் வறுமை உள்ளவரை, எந்த நாடுகளில் இருந்தாலும், நமது மக்கள் அடிப்படை வசதிகளின்றியும், சுதந்திரம், உரிமை மற்றும் வாய்ப்புகள் இன்றியும் இருக்கும் வரை, இந்த அமைப்பின் பணி முடிவடையாது.

ஈகோசாக் அமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் கனவுகளின்படி இந்த அமைப்பு செயல்படும் என்று நம்புகிறேன்.

நன்றி.

***