பி.எம்.இந்தியா
நேபாள நாட்டின் பிரதமர் சுசில் கொய்ராலாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
நேபாள நாட்டில் நடந்த வன்முறை சம்பவங்களில் உயிர்கள் பலியானது குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நேபாள நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
நேபாள நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் சோகம் மறைவதற்கு முன்னர் அரசியல் மற்றும் சமூக நிலையின்மை இதை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கவலைத் தெரிவித்தார்.
அமைதி மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவை மீண்டும் அங்கு நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சமூக ஒற்றுமையை பாதுகாக்க வன்முறையை அரசியல் கட்சிகளும் நேபாள மக்களும் கைவிட வேண்டும் என்று நேபாள அரசை அவர் கேட்டுக் கொண்டார்.
அரசியல் சாசனத்தை உருவாக்குவது மற்றும் அமைதி திரும்புவதற்காக நேபாள அரசு மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தை பிரதமர் பாராட்டினார். ஆலோசனைகளின் அடிப்படையிலும், பேச்சுவார்த்தைகள் மூலமும் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சினைகளை தீர்க்க நேபாள அரசியல் தலைமை முயல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சமூகத்தின் எல்லா பிரிவுகளிலும் உள்ள மக்களிடம் நம்பிக்கை ஏற்படும் சூழ்நிலையை வலுப்படுத்த அந்நாட்டு மக்களிடையேயும் ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என்றார். நேபாளத்தில் அமைதி, ஒற்றுமை, நிலையான தன்மை ஆகியவை ஏற்படவும், மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றார்.
நேபாள நாட்டின் பாதுகாப்புக்கு அண்டை நாடான இந்தியா எல்லா உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அப்போது தெரிவித்தார்.
சமூகத்தில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் வளமையான ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டுள்ள நேபாள நாடு, ஜனநாயகம், நிலைத் தன்மை, அமைதி, ஆகியவற்றுடன் கூடிய வளத்தை காண வேண்டும் என்ற இந்தியாவின் ஒரே விருப்பத்தை நேபாள பிரதமர் கொய்ராலாவிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நேபாள மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்தியா அந்நாட்டிற்கு எல்லாவிதமான ஆதரவையும் அளிக்கும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.