Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பயங்கரவாதம் / இனப்பிரச்சினை / இடதுசாரித் தீவிர வாத வன்முறைகள் மற்றும் எல்லைக்கு அப்பால் இருந்துவரும் இந்தியப்பகுதியில் ஏற்படும் துப்பாக்கிச்சூடு, கண்ணிவெடி, கையால் தயாரிக்கப்பட்ட குண்டுவெடிப்பு ஆகியவற்றில் உயிரிழந்த சிவிலியன் மக்களின் உதவிக்கான மத்தியத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்.


பயங்கரவாதம் / இனப்பிரச்சினை / இடதுசாரித் தீவிர வாத வன்முறைகள் மற்றும் எல்லைக்கு அப்பால் இருந்துவரும் இந்தியப்பகுதியில் ஏற்படும் துப்பாக்கிச்சூடு, கண்ணிவெடி, கையால் தயாரிக்கப்பட்ட நாட்டுவெடி குண்டு வெடிப்பு ஆகியவற்றில் உயிரிழந்த சிவிலியன் மக்களின் உதவிக்கான மத்தியத் திட்டம் என்றழைக்கப்படும் திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட சிவிலியன் மக்களுக்கு உதவித் தொகையை ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ 5 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. முதல் முறையாக எல்லைக்கப்பால் இருந்து இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்படும் சிவிலியன் மக்களுக்கு பயங்கரவாதம் அல்லது இடதுசாரி தீவிரவாத வன்முறை பாதித்தோருக்கு வழங்கப்படுவது போன்று ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.

2. எல்லைக்கப்பால் இருந்து வரும் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் முடிவும், பயங்கரவாதம் அல்லது இடதுசாரித் தீவரவாத வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தும் முடிவும் மத்திய அரசால் புதன் கிழமை எடுக்கப்பட்டது.

3.இப்போதிருந்து நாட்டின் எந்தப் பகுதியில் ஆனாலும் பயங்கரவாதத் தாக்குதல், இடதுசாரித் தீவிரவாத வன்முறைகள், எல்லைக்கப்பால் இருந்து வரும் துப்பாக்கிச் சூடு, குண்டுத் தாக்குதல் அல்லது கையால் தயாரிக்கப்பட்ட நாட்டுவெடி குண்டு வெடிப்பு ஆகியவற்றில் பாதிக்கப்பட்டோருக்கு ஒரே சீராக ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இந்த தொகை வழங்கப்படும்.

4. இதே காரணங்களுக்காக 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான உடல் ஊனம் அல்லது உறுப்பு இழப்பு ஏற்பட்டோருக்கும் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

5. உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசோ, மாநில அரசுகளோ வேலைவாய்ப்பு ஏதும் வழங்காத நிலையில் மட்டுமே இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

6. 2008 – க்குப் பிறகு பயங்கரவாதம், இனப்பிரச்சினை, நக்சலைட் வன்முறை ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட சிவிலியன் மக்களுக்கான மத்திய அரசு உதவித் திட்டத்தின்படி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கோ அல்லது நிரந்தர உறுப்பு இழப்பு ஏற்பட்டவர்களுக்கும் ரூ 3 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. உயிரிழந்தோர் குடும்பத்தினர் இதர உதவிகளை கருணைத் தொகை அல்லது அரசின் இதர வகை உதவிகள் அல்லது வேறு ஆதாரங்களிலிருந்து உதவிகள் பெற்றாலும் கூட இந்த திட்டத்தின்படி உதவி பெற தகுதி உடையவர்கள் ஆவர். மத்திய அரசு இதே மாதிரியான திட்டத்தை ஏற்கனவே அமல்படுத்துவது மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்த்து. இத்திட்டம் தொடங்கப்பட்ட 2008 – க்குப் பிறகு பாதிக்கப்பட்ட சிவிலியன் மக்களுக்கு அரசு மொத்தம் ரூ 35.89 கோடி இழப்பீடாக வழங்கியுள்ளது.

பின்னணி:

பிரதமர் 23.10.2014 அன்று ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொண்டபோது எல்லைக்கு அப்பால் இருந்துவரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் பிரச்சினை எழுப்பப்பட்டது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப்ப பிறகு முதல்முறையாக எல்லைப் பகுதியில் வசிக்கும் இந்திய மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அரசு அவர்களது நிலைமையை ஆராய்ந்தது. அடிக்கடி மீறப்படும் சண்டை நிறுத்தங்கள் காரணமாக குறிப்பாக ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான் எல்லையில் வடகிழக்குப் பகுதியில் இவர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஆராய்ந்தது. சுமார் 770 கிமீ எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி, சுமார் 220 கிமீ சர்வதேச எல்லைப் பகுதி ஆகியவற்றில் 1990 – க்குப் பிறகு பயங்கரவாதிகள் ஊடுருவுவதும், சண்டை நிறுத்தம் அடிக்கடி மீறப்படுவதும் நடைபெற்று வருகிறது. 2015 வரை மொத்தம் 13,921 சிவிலியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இங்குள்ள சிவிலியன் மக்கள் எதிர் கொள்ளும் கடுமையான நிலவரத்தைக் கருத்தில் கொண்டு எல்லைக்கப்பால் இருந்து வரும் துப்பாக்கிச் சூடு போன்ற நிகழ்வுகளில் உயிரிழந்த சிவிலியன் மக்களையும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவர அரசு முடிவெடுத்தது.